Wednesday, December 28, 2016

சாதியை ஒழிப்பது ஏன் ஒரு அபத்தக் கனவாக இருக்கிறது?


SARI என்ற நிறுவனம் தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சாதி மீறிய திருமணங்கள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று இன்றைய ஹிந்துவில் நடுப்பக்கத்தில் வெளியாகி உள்ளது. பெரும்பாலானோர் (எதிர்பார்த்தது போல்) சாதி மீறிய திருமணங்களை எதிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தம் எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள். அடுத்து படித்தவர்கள் இன்னும் அதிகமாய் சாதியை ஆதரிப்பதாய் தெரிவிக்கிறார்கள். சாதி மீறிய திருமணங்களை தடை செய்யும் சட்டம் கொண்டு வரலாமா எனும் கேள்விக்கு கணிசமானோர் ”வேண்டும்” என பதில் கூறியிருக்கிறார்கள். நேற்று ஒரு அலுவலக நண்பரிடம் சாதி குறித்து உரையாடிய விசயங்களை இந்த கருத்துக்கணிப்பு எனக்கு நினைவுபடுத்தியது. சுதந்திரம் கிடைத்து அரைநூற்றாண்டு கடந்த நிலையில் நமது கருத்தாளர்கள் சாதி அமைப்பை எவ்வளவு அபத்தமாய் புரிந்து கொண்டு, “சாதி இரண்டன்றி வேறில்லை” என்றெல்லாம் பிதற்றி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த கருத்துக்கணிப்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதியை புரிந்து கொள்ளாமலே நாம் அதை அழிக்க வேண்டியிருக்கிறோம். கனவுகள் கண்டிருக்கிறோம். சாதிக்குள் வாழ்ந்தபடியே சாதியை சபித்துக் கொண்டு வந்திருக்கிறோம்.


என் நண்பர் முற்போக்கானவர். அவர் அப்பாவும் அவ்வாறே. தன் குடும்பத்தில் பல சாதி மீறிய திருமணங்கள் உண்டு என்றார் அவர். இன்று சாதியை வெளிப்படையாய் முன்வைப்பது – அதாவது சாதிப்பெயரை பெயருடன் இணைப்பது, சாதி சங்கங்கள் அமைத்து அவற்றை கட்சியாக வளர்த்தது, சாதிக்கூட்டங்கள் நடத்துவது – ஒரு அரசியலாக மாறி சமூகத்தை அழித்து விட்டது என அவர் கூறினார். நான் அவரிடம் கேட்டேன் “நீங்கள் முழுக்க உங்கள் சாதியில் இருந்து விலக முடியுமா?” அவர் “முடியும்” என்றார். ஆனால் அவர் சுயசாதியில் இருந்து தான் மணம் புரிந்திருந்தார். அவரது உறவினர்களான சொந்த சாதிக்காரர்களுடன் தான் உறவு கொண்டாடி வருகிறார். திருமணம் உள்ளிட்ட சடங்குகளை பின்பற்றுகிறார். ஊரில் பல்வேறு சாதிகள் மத்தியில் தன் இடம் என்ன என உணர்ந்து ஆனால் அதை வலியுறுத்தாமல் அதனுள் வாழ்ந்து வந்திருக்கிறார். சாதியில் இருந்து விலகுவது என்றால் சாதியை மறுப்பது அல்ல. சமூக ரீதியான அத்தனை சாதிய கட்டுமானங்களையும் உதறுவது; உறவுகளை, நம்பிக்கைகளை, குலசாமிகளை, அவர்களின் சடங்குகளை, தொன்மங்களை கைவிடுவது. அது அவரால் முடியாது. அவர் தன் உறவினர்களிடம் உறவாடும் வரையில் ”சாதிக்குள்” தான் இருந்தாக வேண்டும்.
சாதியையும் மதத்தையும் நான் வெறும் புற அடையாளங்களாக காணவில்லை. குளித்தால் போய் விடும் அழுக்கு அல்ல சாதி. சாதியை இருவிதங்களில் காணலாம்: 1) இனக்குழு அடையாளம் 2) கலாச்சார அதிகார அடையாளம்.
 பல்வேறு அடுக்குகளில் செயல்படும் சாதி ஒருவனுக்கு உடனடியான ஒரு ஆதரவை அளிக்கிறது. தனக்கான சமூக குழுவை ஒருவன் இங்கு அமைக்க தேவையில்லை. பிறக்கும் போதே அது அவனுக்காக தயாராக இருக்கிறது. இந்த ரெடிமேட் சமூக குழுவை விரும்பாதவர்கள் தாம் பின்னர் எழுத்து, வாசிப்பு, இசை, சமூக செயல்பாடு ஆகிய வழிகளில் மற்றொரு சமூக குழுவை தமக்காக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இந்த ரெடிமேட் சமூகக் குழுவினுள் இருக்கவே விரும்புகிறார்கள். ஒருவர் செட்டியாராக பிறந்தால் தமிழகம் முழுக்க உள்ள ஒரு வலையமைப்பின் பகுதியாக தன்னை உணரலாம். இது இல்லாவிட்டால் அவர் ஒரு பூச்சியை போல் தன்னை உணர்வார். தான் யார் என்றே அவருக்கு புரியாமல் ஆகும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது நம் முற்போக்கு தலைவர்கள் எவ்வாறு சாதி மீறிய திருமணங்கள் சாதியை அழிக்க உதவும் என நம்பியதாக ஹிந்து நடுப்பக்க கட்டுரை பேசுகிறது. ஆனால் அவர்களின் நம்பிக்கை தவறு. ஒருவர் மாற்று சாதியில் மணம் புரிந்தாலும் பின்னர் ஏதோ ஒரு சாதியின் அடையாளத்தை இருவரும் வரித்துக் கொள்கிறார்கள். அது பெரும்பாலும் “மேல்”சாதியாகவே இருக்கும். குழந்தையும் அவ்வாறே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும். ஆக இரண்டு சாதிகள் இணையும் போது அங்கு மற்றொரு சாதி தோன்றுவதில்லை. அழிவதில்லை. ஒரு கிளைநதி தாய் நதியில் இணைவது போல் சாதிகள் ஒன்றோடொன்று முயங்கிக் கொள்கின்றன. நம் தலைவர்கள் சாதியின் சமூக செயற்பாட்டை, அதன் உளவியல் தேவையை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மனிதனுக்கு அடையாளத்துக்கு அடுத்தபடியாய் அதிகாரம் மிக அவசியம். பணம் மட்டுமல்ல கலாச்சாரமும் ஒருவித அதிகாரத்தை தருகிறது. அதனால் தான் பணம் உள்ளவனும் தன்னை எழுத்தாளனாய், கலைஞனாய், சமூக செயல்பாட்டாளனாய், அறிவாளியாய், அரசியல்வாதியாய் காட்டிக் கொள்ள விரும்புகிறான். இந்த செயல்பாடுகள் அவனுக்கு ஒரு கலாச்சார அதிகாரத்தை வழங்குகின்றன. அதற்கான ஒரு மரியாதை, அங்கீகாரம் அவனுக்கு கிடைக்கிறது. சாதி இந்த கலாச்சார அடையாளத்தையும் ரெடிமேடாக வழங்குகிறது. உங்கள் சாதியின் சமூக சடங்குகளில் பங்குபெறுவது என்பது ஒரு பிரபல மேடைப்பேச்சாளனாய் முழங்கி சால்வை போர்த்தப்படுவதற்கு சமம். கலாச்சார அதிகாரத்துக்காக அதிகம் முனைய விரும்பாதவர்கள் சாதி மாநாட்டில் கலந்து கொள்வதன் வழி, கோயில் சடங்குகளில் பங்களிப்பதன் வழி அதை பெற்றுக் கொள்கிறார்கள்.
சாதி மீறிய திருமணம் என்பது சாதி எந்திரத்தின் ஓட்டத்தில் நேரும் சிறு தடங்கல். ஆனால் அந்த எந்திரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும். சாதி மீறிய திருமணங்கள் ஏன் இவ்வளவு வன்மத்துடன் எதிர்கொள்ளப்படுகின்றன? ஏன் இளவரசனின் பலியை இவ்வளவு தீவிரமான மௌனத்துடன் இந்த சமூகம் எதிர்கொண்டது? ஏன் காப் பஞ்சாயத்துகளை நம் மக்கள் ரகசியமாய் ஆதரிக்கிறார்கள்?
ஏனென்றால், அதிகாரத்தை நீங்கள் நிலைநிறுத்த அதை வெளிக்காட்ட வேண்டும். எப்படி வெளிக்காட்டுவது? அரசு எவ்வாறு தன் அதிகாரத்தை காட்டுகிறது? போலீஸ் மற்றும் ராணுவத்தின் மூலம். சாதியும் அதே போல் சமூகமும் சிலரது ரத்தத்தை சிந்துவதன் மூலம் தான் தன் அதிகாரத்தை காட்ட முடியும். சாதிய எந்திரத்தின் ஓட்டத்தில் ஒரு பிசிறு ஏற்படும் போது அது நமக்கு நம் சாதிய அதிகாரத்தை காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக மாறுகிறது. இளவரசன்கள் பலிகொடுக்கப்படுகிறார்கள். அதன் பிறகு மீண்டும் சாதிய எந்திரம் அமைதியான முணுமுணுப்புடன் ஓட்டத்தை தொடர்கிறது.
சாதியை திருமணம் மூலம் மீறலாம் என்பது போன்ற அபத்தம் வேறில்லை. கொசு இனத்தை அடித்தே கொன்று விடலாம் என கற்பனை செய்வது போன்றது அது.
சாதி அழிகிறது என்றால் இங்கு ஒரு மாற்று சமூக அமைப்பு உருவாக வேண்டும். அப்போது ஏற்படும் மிகப்பெரிய வெறுமை மற்றும் தனிமையில் இருந்து மனிதர்களுக்கு வேறு ஒரு தீர்வு, மீட்சி வேண்டும்.
சாதி ஒரு சமூக தீமை அல்ல. அது ஒரு உளவியல் நிலை. ஒரு சமூக எதார்த்தம். இந்தியர்கள் தம்மை “நாம்” என குழுவாக உணரும் வரை சாதி இருக்கும். “நான்” என தனித்தனியாக உணரும் போது சாதி தானாகவே காலாவதி ஆகும். ஆனால் தன்னை தனியனாக உணரும் மனிதனின் நெருக்கடி மிக மோசமானதாக இருக்கும். அவனுக்கு பைத்தியம் பிடிக்கும். அவன் போதையில் தன்னை இழப்பான. அவன் வன்முறையில் திளைப்பான்.
சாதியை நான் நியாயப்படுத்தவில்லை. சாதி இங்கு சமூக, உளவியல் ரீதியாய் ஒரு முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தும் வரை அது இருந்து கொண்டே இருக்கும் என்கிறேன். அதை பழிக்காமல், கண்டு வெட்கி ஒளியாமல், நேரடியாய் சந்திக்க வேண்டும். புரிந்து கொள்ள முயல வேண்டும்.
இறுதியாய் ஒரு கேள்வி: சாதியின் தேவை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உள்ளதா? நிச்சயமாய். இன்று தாழ்த்தப்பட்டோர் (எண்ணிக்கை குறைவாக எனிலும்) தம் சாதிப்பெயரை பின்னொட்டாய் அணிவதை பார்க்கிறோம். பல்வேறு அடுக்குகளில் சமூகமாக்கம் செய்து இணைந்து செயல்பட அவர்கள் சாதியை பயன்படுத்துகிறார்கள். தலித்துகளுக்குள் ஒரு சாதி மட்டுமே முன்னிலை பெறுவதாய் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிகள் மெல்ல மெல்ல மத்திய சாதியாவது ஒரு காலத்தில் நடக்கும். அப்போது அவர்கள் இடத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்ட சாதி ஒடுக்கப்படும். இது ஒரு சுழற்சி. இதை தாழ்த்தப்பட்டோர் உள்ளூர அறிவார்கள். அதனாலே அவர்கள் சாதி அமைப்பில் இருந்து வெளியேறாமல் அரசியல் ரீதியாய் தம் அதிகாரத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். கட்சிரீதியாய், சினிமாவில், மீடியாவில் ஒரு குழுவாக அதிகாரம் பெற முயல்கிறார்கள். வடக்கில் தலித்துகள் இந்துத்துவாவை ஆதரிக்கிறார்கள். பா.ஜ.கவின் முதுகெலும்பு ஆகிறார்கள். (தமிழகத்திலும் எதிர்காலத்தில் இது நடக்கலாம்)
இந்த இடத்தில் முற்போக்காளர்களின் நிலை தான் சங்கடமானது. அவர்கள் சாதியை மறைமுகமாய் ஏற்பது, ஆனால் அதன் வன்முறையை மட்டும் எதிர்ப்பது எனும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.
நம் முன் உள்ள தீர்வு என்ன?

நாம் சாதியை தூஷணை செய்யாமல் நம் சமூகம் ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் ஆனது என முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கனவுகள் காண்பதை நிறுத்த வேண்டும். நம் பண்பாடு ஏற்றத்தாழ்வை உடல் ரீதியாய் வலியுறுத்துகிறது. இந்த பிரச்சனையை ஒட்டுமொத்தமாய் பார்க்காமல், தனித்தனியாய் தத்தமது சிக்கல்களுக்கு ஏற்ப எதிர்கொள்வது உதவும். ஏனென்றால் இங்கு ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அதிகார அரசியலால் ஒடுக்கப்படுகிறோம். உங்கள் சாதி, மதம், மொழி, நிறம், தோற்றம், உடல் ஆரோக்கியம், பால் நிலை, பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்படுகிறோம். அதை நம் அளவில் எதிர்த்து ஒரு மாற்று அதிகாரத்தை உருவாக்கலாம். அப்போது இந்த அமைப்பு ஒரு ராட்சஸ மிருகத்தை போல் தன்னை உலுக்கி ஒரு முறை சமன் செய்து கொள்ளும். ஆனால் எப்போதுமே நாம் ஒரு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் தான் வாழ்ந்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கான இடத்தை, அதிகாரத்தை, சக்தியை, ஆயுதங்களை உறுதி செய்து கொள்வது மட்டுமே ஒரே தீர்வு.