Sunday, December 25, 2016

லெஸ்பியன்களின் சமூக இணக்கம்

லெஸ்பியன்களை அண்மையில் கவனிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அப்போது நான் கவனித்தது என்னவென்றால் 1) ஹெட்டெரோசெக்‌ஷுவல் (ஆண்களை விரும்பும்) பெண்களை விட லெஸ்பியன்கள் தமக்குள் அதிக இணக்கமாக இருக்கிறார்கள். அதாவது, ஆண் விழைவு கொண்ட (ஹெட்டெரோசெக்ஷுவல்) பெண்கள் மத்தியில் சதா போட்டி, பொறாமை, வெறுப்புணர்வுகள் புகைவதை கவனித்திருக்கிறேன். நான்கு பேர் சேர்ந்திருந்தாலும் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசாமல் இருப்பதில்லை. நான்கில் ஒரு பெண் சற்று தொலைவில் இருந்தால் மூன்று பேரும் சேர்ந்து அவளைப் பற்றி பழிகூறுவார்கள். அதே போல் இவர்களின் உறவாடல் என்பது வெடிமருந்துக் கிடங்கில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காரியம் தான். எப்போது வெடிக்கும் என கணிக்க முடியாது. ஒரு நாளில் பல முறை முறைத்து வெறுத்து அடித்துக் கொள்வார்கள். பிறகு இணைவார்கள். ஆனால் லெஸ்பியன்கள் அப்படி இல்லை. அவர்களுக்குள் ஒரு அபாரமான இணக்கத்தை கவனிக்கிறேன். சொற்களில் கூர்மையில்லை, விஷம் இல்லை. கண்களில் பொறாமை இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உலகில் ஆண்கள் இல்லை என்பது.

 அவர்களுக்குள் அப்படி ஒரு நேசம். பார்த்ததும் லேசாய் தோளை தழுவிக் கொள்கிறார்கள். ஸ்பரிசம் பெற்றவர் லேசாய் இடையை வளைக்கிறார். கைகளைப் பற்றிக் கொண்டு முணுமுணுப்பாய் பேசுகிறார்கள். கண்களில் ஆசை வழிகிறது. ஏதோ சங்க கவிதை சித்திரத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
லெஸ்பியன் ஜோடிகளில் ஒருவர் ஆணின் இடத்தையும் மற்றொருவர் பெண்ணின் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்பெண்களுக்கு ஒரு புதுப்பெண்ணை பார்த்ததுமே உடல் மொழியில் யார் எந்த விதமானவர்கள் என தெரிந்து போகிறது. ஆண் வகையான லெஸ்பியன் பெண்கள் கொஞ்சம் முறுக்காக இருக்கிறார்கள். உடலை நேராக வைத்து நடக்கிறார்கள். ஆண்களிடம் உரையாடும் போது இஞ்சியை கடித்தது போல் ஆகிறார்கள். ஆனால் பெண் வகை லெஸ்பியன்கள் ஆண்களிடம் சற்று நெருக்கமாக இருப்பார்கள் என கணிக்கிறேன்.
Homoeroticism எனப்படும் இந்த சுயபால்விழைவு சமூக இணக்கத்துக்கு சிறப்பானது. அதாவது சுயபால் விழைவு கொண்டவர்கள் கூட்டாக இணைந்து செயல்படுவது எளிது. அவர்களுக்குள் போட்டியும் வெறுப்பும் “குறைவாக” இருக்கும். இதை நான் சொல்லவில்லை. பரிணாம உளவியல் சொல்கிறது.
ஏன் சுயபால்விழைவு மனித குலத்தில் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்த போது பரிணாம உளவியல் அதற்கு ஒரு விடை கண்டது. ஆதிமனிதர்கள் கூட்டாய் இணைந்து வேட்டையாடவும் பல்வேறு பணிகள் செய்யவும் சுயபால் விழைவு ஏற்படுத்தும் இணக்கமும் அன்பும் உதவியது. போட்டி பொறாமை இன்றி இணைந்திருக்க உதவியது. அப்படித் தான் சுயபால் விழைவு நம் மரபணுக்களில் கலந்தது. அதில் மனிதனுக்கு பயன் உண்டு என இயற்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் இரண்டு விசயங்களுக்காகத் தான் அடிப்படையில் அடித்துக் கொள்கிறான். 1) நிலம், 2) பெண்ணின் கருப்பை. இரண்டின் மீதான உரிமையின் மீது தான் தன் அதிகாரத்தை அவன் நிலைநிறுத்துகிறான். ஆனால் சுயபால் விழைவில் உடல் கராறாய் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவையற்றதாகிறது. உதாரணமாய்: இரு ஆண்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். மிகுந்த இணக்கமாய் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் சிக்கல் வரும். தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க நினைக்கும் போது, பெண் ஒருவள் குறுக்கே வரும் போது. இரு பெண்கள் இணைந்து பணி செய்யும் போது ஆண் சிக்கலானவன் ஆகிறான். ஆனால் சுயபால் விழைவு கொண்டவர்கள் மத்தியில் இந்த சிக்கல் ஏற்படுவதில்லை.
ஆனால் இந்த கோட்பாட்டு விளக்கம் கூட கச்சிதமானது அல்ல. லெஸ்பியன்களும் தமது ஜோடியின் விசுவாசம் பற்றி அக்கறை கொள்வார்கள், கட்டுப்படுத்த முயல்வார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் உடல் ரீதியாய் இருவரும் பெண்கள் என்றாலும், மனதளவில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்களிடத்து உள்ள அளவு பரஸ்பர வன்மமும் கசப்பும் இவர்களிடத்து இல்லை என அவதானிக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு குழுவில் லெஸ்பியன்கள் சிலர் இணையும் போது அங்கு ஒரு கனிவான சூழல் உருவாகிறதை கவனிக்கிறேன். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்கள் அதிகமான வேலையிடங்களில் எப்போதும் டைம் பாம் கடிகாரம் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதை எதிர்காலத்தில் மனிதவளத் துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும்.


No comments: