Sunday, November 6, 2016

கடவுள் இருக்கிறாரா?

Image result for prayer
-          கடவுள் ஏன் இருக்கக் கூடும் அல்லது இல்லை என்பதற்கான வாதங்கள் சுவாரஸ்யமானவை. அவை நமக்கு மனிதர்கள் எப்படி கடவுளை புரிந்து வைத்திருக்கிறார்கள் என காட்டுகின்றன. மனித நாகரிகம் தோன்றி பின்னர் புத்தொளிக் காலம், நவீன காலம், எந்திரமயமாக்கல் ஏற்பட்ட பின் கடவுளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் எப்படி மாறி வந்துள்ளது எனவும் காட்டுகின்றன.
ஏன் கடவுள் இருக்க முடியாது என்பதை விவாதிப்பதற்காய் அருண் ஷோரி ஒரு நூல் எழுதியிருக்கிறார். Does He Know a Mother’s Heart? “ஒரு அன்னையின் இதயத்தை அந்த ஆண்டவன் அறிய மாட்டானா?”. அருண் ஷோரியின் மகனுக்கு பிறந்த சில வருடங்களில் மூளை வளர்ச்சி குறைவு என தெரிய வருகிறது. எழுந்து நடக்க இயலாது சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போகிறான். எந்த குற்றமும் செய்யாத தன் மகன் ஏன் மீள முடியாத வியாதியில் பட்டு துயரப்பட வேண்டும் என அருண் ஷோரி மனம் வெதும்புகிறார். மகனின் அந்த நிலை எப்படி தன்னையும் மனைவியையும் குடும்பத்தினரையும் பல சமூக ஒடுக்குதல்களூக்கும் அவமானங்களுக்கும் ஆளாக்கியது என அந்நூலில் குறிப்பிடுகிறார். கடவுள் எப்படி தெரிந்தே இப்படி ஒரு குழந்தையை தந்து ஒரு அன்னையின் இதயத்தை காயப்படுத்த முடியும் என்பதே அவரது மைய கேள்வி. இதை ஒட்டி பக்கம் பக்கமாய் விவிலியம் மற்றும் பிற மத நூல்களில் இருந்து மேற்கோள்கள் தருகிறார். எந்தளவுக்கு என்றால் பாதி புத்தகம் படித்தாலே நீங்கள் அவர் மறுக்கிற மதங்களில் நிபுணர் ஆகி விடுவீர்கள்.

அருண் ஷோரி மீள மீள கேட்பது இது தான்: உலகின இவ்வளவு தீமைகளும் துயரங்களும் இழப்புகளும் நிகழ்கின்றன. இதற்கெல்லாம் அர்த்தம் என்ன? கடவுள் இருக்கிறார் என்றால் எப்படி அவர் இவ்வள்வு துன்பங்களையும் அநீதிகளையும் அனுமதிக்க முடியும்?
நியாயமான கேள்வி. பகத் சிங் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "நான் ஏன் ஒரு ஆத்திகன் ஆனேன்?". படிக்க வேண்டிய முக்கியமான பிரதி. அவரும் அருண் ஷோரியின் கேள்வியைத் தான் கேட்கிறார். கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் அவரே கொடுமைக்கார வெள்ளையர் அரசை அகற்றக் கூடாது? ஏன் (ஜாலியன் வாலாபாக் போன்ற) படுபாதக மக்கள் கூட்டக்கொலைகளை அனுமதிக்கிறார்?
ஆத்திகராகும் பலரும் இந்த கேள்வியுடனே ஆரம்பிப்பார்கள் என கருதுகிறேன்.
ஆனால் இந்த வாதம் அடிப்படையில் பிழையானது. எப்படி?
முதலில் இவர்கள் எல்லாருமே கடவுளை நல்லது கெட்டது பார்த்து பரிபாலனம் செய்கிற ஒரு நீதிவானாக, ஒரு " மக்கள் தலைவனாக", குடும்பத்தில் உள்ள அப்பாவாக, ராணுவ தளபதியாக, சினிமாவில் வரும் எம்.ஜி.ஆர், ரஜினியாக, சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட்மேனாக கற்பனை செய்கிறார்கள். கடவுள் மக்களுக்கு நல்லது செய்கிறவர், தீமையை ஒழிப்பவர் எனும் அடிப்படை நம்பிக்கையில் இருந்து தான் அவர் ஏன் அதையெல்லாம் செய்யவில்லை எனும் கேள்வி எழுகிறது. நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவர் கடவுளே அல்ல என கோபத்தில் முடிவு செய்கிறோம்.
 இங்கு சிக்கல் கடவுளை நாம் எப்படி ஏழை எளியோரை பாய்ந்து வந்து காப்பாற்றும் எம்.ஜி.ஆர் ரோலுக்குள் பொருத்தினோம் என்பதில் இருக்கிறது. கடவுளின் பணி அது என நமக்கு எப்படி தெரியும்? ஏன் கடவுள் நன்மை தீமை பற்றி அக்கறை அற்றவராக இருக்கக் கூடாது? ஏன் நன்மை, தீமை, நீதி, அநீதி ஆகியவை மனிதன் மட்டுமே புரிந்து கொள்ளும் கட்டமைப்புகளாக இருக்க கூடாது?

இன்னொரு கேள்வி: கடவுள் நம்மைப் போல் யோசிக்கும் ஜென்மம் என எப்படி முடிவு செய்கிறோம்? ஏன் கடவுள் மனமே அற்ற ஒரு இருப்பாக இருக்க கூடாது?
ஒரு அறிவியல் புனைகதையில் வேற்று கிரகம் ஒன்றிற்கு உயிரனங்களைத் தேடி ஒருவர் போகிறார். ஆனால் அங்கு உயிர் நடமாட்டமே இல்லை. ஆனால் எங்கும் கைவிடப்பட்ட நிறைய கட்டிடங்கள் தெரிகின்றன. ஒருவேளை அங்கு மனித குலம் வாழ்ந்து முற்றிலுமாய் அழிந்து போயிருக்கலாம் என அவருக்கு தோன்றுகிறது. அவர் தன் கண்டுபிடிப்பை பூமியில் உள்ள தன் மேலதிகாரிக்கு தெரிவிக்கிறார். சட்டென அவர் கண்முன்பு ஒரு கட்டிடம் நகர்ந்து மற்றொரு இடத்துக்கு போகிறது. கதை அங்கு முடிகிறது. உயிரினம் என்றால் கைகால் கண்ணுடன் தான் இருக்க வேண்டும்? ஏன் கட்டிடமாக இருக்கக் கூடாது? அதே போல் கடவுள் ஏன் நம்மால் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கக் கூடாது? ஏன் ஒரு கொண்டை ஊசியின் வடிவில் இருக்கக் கூடாது? ஏன் வேலை செய்ய விரும்பாத பொறுப்பற்ற சோம்பேறியாக இருக்கக் கூடாது?

கடவுளை மறுப்பவர்களின் கேள்விகள் கடவுள் குறித்த கற்பனையான எதிர்பார்ப்புகளில் இருந்து வருகிறது என்பது தான் சிக்கல்.
இது ஒரு நவீன பிரச்சனை. குறிப்பாய் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் ஏற்பட்ட புத்தொளி கால கட்டத்துடன் தோன்றிய பிரச்சனை. அப்போது மனிதன் முதன்முதலாய் தன்னை முன்வைத்து உலகை புரிந்து கொள்ள துவங்குகிறான். உலகில் எல்லாவற்றுக்கும் தர்க்கரீயான காரணம் இருக்கும் என நம்புகிறான். எல்லா நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்விகள் தொடுக்கிறான். அவனுக்கு உள்ள முதன்மையான கேள்வி வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் ஏன்? அநீதி ஏன்? பின்னர் இக்கேள்விக்கு விடையளிக்கும் முகமாக அரசியல் தத்துவத்தில் மார்க்ஸியமும், அறிவியலில் உளவியல், பரிணாமவியல் ஆகிய கோட்பாடுகள் தோன்றின. ஆனாலும் இத்துறையின் நிபுணர்களும் தொடர்ந்து கடவுள் ஏன் இருக்க முடியாது எனும் கேள்வியை முன்வைத்துக் கொண்டு தான் இருந்தனர். ஏனென்றால் இத்துறைகளாலும் உலகின் தீமையையும் குழப்பங்களையும் முழுக்க விளக்கவோ அவற்றுக்கு தீர்வு காணவோ இயலவில்லை.
சரி, புத்தொளி காலத்துக்கு முன்பு, நாம் நவீனப்படுவதற்கு முன்பு, நம் முன்னோர்கள் கடவுள் பற்றி எப்படி சிந்தித்தார்கள்? விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கடவுள் மனித குலம் மீது கோபம் கொண்டு விளைவிக்கும் பேரழிவுகள் பற்றி பல கதைகள் உண்டு. இவை குறித்து அருண் ஷோரி தன் நூலில் விரிவாக பேசுகிறார். கடவுளுக்கு மனிதனை தண்டிக்க வேண்டுமென்றால் ஏன் இவ்வளவு பேரை அழிக்க வேண்டும்? ஏன் அப்பாவிகளை துன்புறுத்த வேண்டும்? இப்படி குரூரமாய் தண்டிக்கிற ஒரு சர்வாதிகாரி எப்படி கடவுளாக இருக்க முடியும் எனக் கேட்கிறார். ஆனால் அருண் ஷோரி அக்காலத்துக்கு மக்கள் இயற்கை பேரிடர்களையும், போர் மற்றும் கொள்ளை நோய்களின் பேரழிவுகளையும் ஏன் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டார்கள் என யோசிக்க முனைவதில்லை.
பொதுவாக முற்போக்காளர்கள் நமது முன்னோர்கள் தீயையும் மின்னலையும் இடியையும் கண்டு பயந்து அதை கடவுளாக வணங்கினார்கள். அதனால் அவர்களின் புரிதலை பொருட்படுத்தலாகாது என்று புறமொதுக்குவார்கள். பகத்சிங்கும் தன் கட்டுரையில் கடவுள் நம்பிக்கையை இவ்வாறு தான் அறிவீனத்தின், அச்சத்தின் வெளிப்பாடாக பார்க்கிறார். ஆனால் நம் முன்னோர்கள் நம்மை விட முட்டாள்கள் அல்ல.
 ஆனால் அவர்கள் நம்மில் இருந்து மாறுபட்டு வாழ்வை பார்த்தார்கள். எரிக் புரோம் தனது Fear of Freedom நூலில் இதை வேறுவிதமாய் விளக்குகிறார். பழங்காலத்தில், அதாவது மனித குலம் “நாகரிகம் அடைவதற்கு” முன்பு, மனிதர்கள் தம்மை தமது குடியின், மன்னரின், இயற்கையின் ஒரு பகுதியாய் கருதினார்கள். இன்னும் கூட ”நான்” என்ற சொல் இல்லாத பழங்குடி மொழிகள் உள்ளன. அன்றைய மக்கள் தம்மை தனிமனிதர்களாய் கருதவில்லை. கூட்டு மனப்பான்மை நிலவியது. ஒரு பேரிடர் தாக்கும் போது அதை ஒருமித்து எதிர்கொண்டார்கள். துயரங்களை மனதளவில் தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். மன்னர் நோய் வாய்ப்பட்டால் அவரது குடிகளும் தம்மை நோய் தாக்கியதாய் கலங்கினார்கள்.
 சாலையில் நீங்கள் நடந்து போகும் போது மழை கொட்டுகிறது. சாலையில் உங்களுடன் நடந்து வரும் அத்தனை பேரும் மழையில் நனைகிறார்கள். அப்போது நீங்கள் “ஏன் இந்த மழை என்னை பழிவாங்குகிறது? ஏ தெய்வமே” என பொரும மாட்டீர்கள். ஆனால் மழை விசித்திரமாய் உங்கள் மீது மட்டும் பொழிகிறது, பிறர் ஈரம்படாமல் போகிறார்கள் என்றால் நீங்கள் குழப்பமடைவீர்கள். எரிச்சலாகி கோபப்படுவீர்கள். முற்காலத்தில் மக்கள் துயரங்களையும் அழிவுகளையும் மழையில் சேர்ந்து நனைவது போல் எதிர்கொண்டார்கள். அதனால் காரணம் தேட அவசியம் இருக்கவில்லை. அதே போன்று தம்மை கடவுள் காரணமின்றி தண்டிக்கலாம் என அம்மக்கள் நம்பினார்கள்.
 இது சுவாரஸ்யமானது. ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கடவுள் பெரும் கோபத்துடன் ஒரு சமூகத்தின் மீது இடர்களை ஏவுகிறார்கள். தீயால் பொசுக்குகிறார். வெள்ளத்தால் மூழ்கடிக்கிறார். பிறகு அதே கடவுள் பெருங்கருணையுடன் அவர்களை மீட்டு புதிய தேசத்தையும் புதிய வளமான நிம்மதியான வாழ்க்கையையும் அளிக்கிறார். விவிலியத்தில் “விலையின்றி அடிமை ஆக்கப்பட்டீர்; பணமின்றி மீட்கப்படுவீர்” என ஒரு வாசகம் வரும். எனக்கு இது மிகவும் பிடித்தமான வரி. அடிமைகளை எப்போதும் பணத்துக்காக தான் விற்பார்கள். ஆனால் இங்கே அடிமைகள் பணமில்லாமல் விற்கப்படுகிறார்கள். அதே போல் பணம் கொடுக்கப்படாமல் அவர்கள் விடுதலை பண்ணப்படுகிறார்கள். இதன் பொருள் துன்பங்களுக்கு தர்க்கமோ காரணமோ விளக்கமோ அர்த்தமோ இல்லை என்பது.
இந்த உலகின் சம்பவங்களுக்கு காரண காரிய விளக்கம் உண்டு என்பது ஒரு நம்பிக்கை தானே. அப்படி ஒருவர் நம்பும் போது எந்த நிகழ்வுக்கும் காரணமில்லை என்றும் ஒருவர் நம்பலாமே? அருண் ஷோரி தனது நூலில் இந்த முதல் நம்பிக்கையின் பால் தான் தன் முழுக்கோபத்தையும் காட்டுகிறார். அதெப்படி என் மகன் மூளை வளர்ச்சியில்லாமல் துன்பப்படுவதற்கு காரணம் இல்லாமல் போகும் என அவருக்குள் ஒரு கேள்வி நெருப்பாய் தகிக்கிறது. முழுக்க வேறொரு காலத்துக்கு மனிதர்கள் உலகை கண்ட விதத்தை வைத்து உருவான தொன்மக் கதைகளை அவர் இன்றைய நவீன சிந்தனையின் அளவுகோல்கள் கொண்டு மதிப்பிடுகிறார்.
ஆனால் அருண் ஷோரி மட்டும் அல்ல, விவிலியத்திற்கு பின்னர் விளக்கம் எழுதியவர்கள் புத்தொளி சிந்தனையின் போக்கிற்கு இணங்க காரணமற்ற சம்பவங்களுக்கு தர்க்க விளக்கங்கள் தரத் துவங்கினர். அப்படித் தான் free will கோட்பாடு உருவாகியது. இதன்படி கடவுள் மனிதனை துயரங்கள் தந்து சோதிக்கிறார். அப்போது மனிதன் முன் இரு வாய்ப்புகளை கடவுள் வைக்கிறார். அ) நன்மை, ஆ) தீமை. மனிதன் ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தலாம். நன்மையை தேர்ந்தால் அவன் சொர்க்கத்துக்கு போவான். தீமை என்றால் நரகம். கடவுள் முன்வைத்த முதல் தேர்வே ஏதன் தோட்டத்து ஆப்பிள் தான். ஏன் இவ்வளவு அழகான ஏதன் தோட்டத்தை உருவாக்கிய கடவுள் அங்கு தீமையின் ஆப்பிளை வைத்தார் என சிலர் கேள்வி கேட்க free will கோட்பாடு மூலம் இறையிலாளர்கள் விடை கூறினர்: கடவுள் நீங்கள் மீள்வதற்கும் வீழ்வதற்குமான சுதந்திரத்தை அளிக்கிறார் என்று விளக்கினார்கள்.
 ஆனால் ஏன் கடவுள் ஏதன் தோட்டத்தை காரணமற்று குருட்டுத்தனமாய் அமைத்திருக்கக் கூடாது? ஏன் கடவுள் ”கோன் பனேகா குரோர்பதியில்” வரும் அமிதாப் பச்சன் போன்றே செயல்பட வேண்டும்? பிற்காலத்தைய கிறித்தவர்களுக்கு நவீன சிந்தனைக்கு ஏற்ப கடவுளை வடிவமைக்க அவரை ரியாலிட்டி ஷோ ”கம்பியூட்டர் ஜி” போல காட்ட வேண்டிய கட்டாயம் கிறித்துவ இறையியலாளர்களுக்கு ஏற்பட்டது.
விவிலியத்தில் உள்ள ஒரு முக்கியமான் இலக்கிய பிரதி ஜோபின் புத்தகம். ஜோப் நாணயமானவன். விசுவாசி. பெரும் செல்வந்தன். ஒருநாள் சாத்தான் கடவுளிடம் ஒரு சவால் விடுகிறான். “ஜோபை நீ மகிழ்ச்சியாக செல்வந்தனாய் திருப்தியாய் வைத்திருக்கிறாய். அவனும் உனக்கு விசுவாசமாய் இருக்கிறான். அவனை மட்டும் ஏழையாக்கிப் பார், அவன் குடும்பத்தை அழித்து அவனை நிராதரவாக்கிப் பார். அவன் உன்னை சபிப்பான்”. கடவுள் சவாலை ஏற்கிறார். ஜோபை தாங்கவொண்ணாத துன்பங்களுக்கு ஆளாக்குகிறார். அவன் பணத்தையும் சொத்துகளையும் இழக்கிறான். அவன் குழந்தைகள் புயலில் இறக்கிறார்கள். அனாதையாகி தவிக்கிறான். அப்போதும் கடவுளை பழிக்க மறுக்கிறான். கடவுள் அவனுக்கு கொடும் நோய்களை அளிக்கிறார். அப்போதும் அவன் சொல்கிறான் “கடவுள் குற்றமற்றவர்களையும் தீயவர்களையும் ஒரே போன்று தான் தண்டிப்பார்”.
 இந்த வாக்கியம் முக்கியமானது. நமது முன்னோர்கள் உலகம் எவ்வளவு துக்கங்களால் நிறைந்தது, சமத்துவமற்றது என உணர ஆரம்பித்த போது “ஏன் நல்லவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்?” என யோசித்திருக்க கூடும். அவர்கள் கண்டறிந்த உண்மை: துக்கத்திற்கு, கடவுள் தரும் தண்டனைகளுக்கு நல்லவன் தீயவன் என வேறுபாடில்லை. கடவுளுக்கு தமக்கு தரும் துன்பங்களுக்கு காரணங்கள் கிடையாது. அதனை அப்படியே ஏற்க வேண்டும். மனிதனின் கண்ணீருக்கு அவனும் பொறுப்பல்ல; கடவுளும் பொறுப்பல்ல. அதனாலே ஜோப் இறுதிவரை கடவுளை பழிக்க மறுக்கிறான்.
ஜோபின் கதையை கடவுள் ஒரு பக்தனின் விசுவாசத்தை சோதித்த கதையாக இறையியலாளர்கள் விளக்க முயன்றார்கள். ஆனால் எல்லாம் தெரிந்த இறைவன் ஏன் ஜோபை சோதித்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. ஜோபின் மன முதிர்ச்சிக்காக கடவுள் அவனை சோதித்தார் என்றும் கூற இயலாது. ஏனென்றால் ஜோப் ஆரம்பித்தில் இருந்தே அதே மன முதிர்ச்சியுடன் தான் இருக்கிறான். பழங்குடி மக்களின் நம்பிக்கை ஏற்ப உருவான இது போன்ற கதைகளை நவீன காலத்துக்கு ஏற்ப சுலபத்தில் விளக்க இயலாது.
பழைய ஏற்பாட்டில் உள்ள அபிரகாமின் கதையில் அபிரகாம் கடவுளின் ஆணைக்கு இணங்க தன் மகன் ஐசாக்கை பலி கொடுக்க ஒரு மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான். அவன் மகனின் தலையை துண்டிப்பதற்கு சற்று முன்பு கடவுளின் பிரதிநிதியாக ஒரு தேவதை தோன்றி தடுத்து நிறுத்துகிறது. இது சிவபுராணத்தில் தன் அடியானை சிவன் பிள்ளைக்கறி தரக்கேட்டு சோதித்த கதைக்கு இணையானது. ஏன் கடவுள் இவ்வளவு குரூரமாய் பரீட்சை வைக்க வேண்டும்? பின்னர் இதற்கு பலவாறாக விளக்கங்கள் கூறப்பட்டன. குழந்தைகளை பலி கொடுக்கக் கூடாது என யூதர்களுக்கு கடவுள் பாடம் கற்பிக்க நினைத்தார், அதற்காகவே அபிரகாமை சோதித்து இறுதியில் தடுத்தார் என்பது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு அபிரகாமிடம் கடவுள் வெறும் பலி தான் கேட்டார், அவர் மகனை குறிப்பாய் கேட்கவில்லை, ஆனால் அபிரகாம் தவறாய் கடவுளின் ஆணையை கற்பனை பண்ணி பலி கொடுக்க முயன்றார் என்றனர். இன்னும் சிலர் அபிகரகாம் தன் மூத்த பையன் இஷ்மயிலை வீட்டை விட்டு துரத்தியதற்கான தண்டனை இது என்றனர். வேறு சிலர் அபிரகாமுக்கு கடவுள் எப்படியாவது தன் மகனை காப்பாற்றி விடுவார் என உள்ளுக்குள் தெரிந்திருந்தது என்கிறார்கள்.
ஆனால் இவையெல்லாமே நவீன மனதுக்கு ஏற்றபடி ஒரு பழங்குடிக் கதையை நாகரிக வண்ணமேற்றும் முயற்சிகளே. இக்கதை இஸ்லாத்திலும் உள்ளது. ஆனால் அங்கு தர்க்கரீதியாய் விளக்கம் தேடும் முயற்சிகள் இல்லை. இறைவனின் ஆணையை கேள்வின்றி ஏற்று பணிந்த அபிரகாமின் விசுவாசத்தை காட்டும் கதையாக மட்டுமே இஸ்லாம் இதை பார்க்கிறது. ஏனென்றால் இஸ்லாம் இன்றும் நவீனமாதலுக்கு வெளியே நிற்கிறது. இறைவன் முன் தனிமனிதனுக்கு மதிப்போ இடமோ இல்லை என்கிறது அம்மதம். இத்தொன்மக் கதையை அதன் தூய்மையான வடிவில் இஸ்லாத்தின் இறையியலாளர்கள் மட்டுமே காண்கிறார்கள்.
கடவுள் ஏன் ஒன்றை செய்கிறார் அல்லது செய்யவில்லை எனும் கேள்வி மனித குலத்தின் கேள்வி அல்ல; அது நாகரிகமடையும் சமூகத்தின், தனிமனிதனின் தர்க்க மனதின் கேள்வி மட்டுமே. மேற்குலகம் அபிரகாமின் குழந்தை பலியை, தன்னிலை மறுப்பை, கேள்வியற்ற சரணாகதியை ஏற்க முடியாமல் குழப்பமடையும் போது இஸ்லாம் அதை சிக்கலின்றி ஏற்கிறது.
 சரி, இக்கதையை நாம் ஏன் ஒரு குறியீடாக பார்க்கக் கூடாது? முற்காலத்தில் பத்து குழந்தைகளில் எட்டாவது கொள்ளை நோயிலும் விபத்திலும் தவறி விடும். பாடுபட்டு வளர்த்த குழந்தையை விதியின் கண்மூடித்தனத்துக்கு பலி கொடுத்த ஒரு தந்தையின் அல்லது தாயின் ஆற்றாமையின் வெளிப்பாடாக இக்கதை ஏன் தோன்றியிருக்கக் கூடாது? அபிரகாம் ஐசாக்கை பலிகொடுக்கும் முன் காப்பாற்றும் கடவுள் அதற்கு பதில் அவனுக்கு ஒரு ஆட்டை காட்டுகிறார். அதை அவன் கடவுளுக்கு பலியாக வெட்டுகிறான். வாழ்வின் புதிர்கள் முன்பு மண்டியிட்ட மனித குலம் இப்படித் தான் மிருக பலி கொடுப்பதன் மூலம் குறியீட்டு வடிவில் எதையாவது கடவுளுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஆட்டையும் கோழியையும் பலி கொடுக்காத போது பழனிக்கு சென்று தலையை மொட்டையிட்டது. மடிப்பிச்சை, மண்சோறு, அங்கபிரதட்சணம், விரதம் என தன்னை வருத்திக் கொண்டது. அடிப்படையில் துயரம் என்பது கண்மூடி ஏற்றுக் கொள்ள வேண்டிய இயற்கை சாபம் எனும் ஆதி மனதின் நம்பிக்கையை நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம் என்பதைத் தான் இவ்வழக்கங்கள் காட்டுகின்றன.
எனக்கு கடவுள், அநீதி, தீமை, துயரம் ஆகிய சொற்களை கேட்கும் போது அடிக்கடி நினைவு வரும் கவிதை ஜான் மில்டன் எனும் பதினேழாம் நூற்றாண்டு கவிஞரின் On His Blindness (அவனது பார்வையின்மை குறித்து). மில்டன் அவர் காலத்தின் பிரதான கவிஞர். பெரும் செல்வந்தர். அரசரோடு நெருங்கின தொடர்பு கொண்டவர். ஆனால் நாற்பது வயதுக்கு மேல் அவர் வாழ்க்கை தடம் புரண்டது. அரசுக்கு எதிரான உள்நாட்டு போரில் அவர் அரசவிரோதிகளை ஆதரித்தார். அரசர் கொல்லப்பட்டார். இடைக்கால ஆட்சி ஒன்றை புரட்சியாளர்கள் நிறுவினர். ஆனால் புரட்சியாளர்கள் ஒடுக்கப்பட்டு மீண்டும் அரசாட்சி திரும்பிய போது மில்டன் ராஜதுரோகி ஆனார். அப்போது அவர் தன் பார்வையை வேறு இழந்திருந்தார். சமூகத்தில் இருந்தும் வாழ்வில் இருந்தும் தனிமைப்பட்டார். வெறுக்கப்படும் ஒடுக்கப்படும் மனிதர் ஆனார். பார்வையற்ற கட்டத்தில் தான் அவர் தனது மிக பிரசித்தமான காவியங்களான Paradise Lost மற்றும் Paradise Regained எழுதினார். அப்போது அவர் எழுதினது தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கவிதை.
On His Blindness கவிதையில் மில்டன் தன் பார்வையை கடவுள் ஏன் பறித்திருக்க கூடும் எனும் கேள்வியை எழுப்புகிறார். அவரது மனதின் விம்மலை அந்த கவிதையின் வரிகள் இடையே கேட்கலாம்.
எழுத்து எனும் மதிப்பற்ற திறனை அளித்து விட்டு என்னை குருடாக்கியது ஏன் என மில்டன் கடவுளிடம் கேட்கிறார். இப்போது தன்னால் கண்ணில்லாமல் எழுத்தின் மூலம் கடவுளுக்கு பணி செய்ய முடியாமல் போயிற்றே என கலங்குகிறார். அவருக்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது. ”கடவுள் என் செயலின்மைக்காய் என் மீது கோபம் கொள்வாரா?” அவருக்கு உடனே தோன்றுகிறது: “என் ஒளியை பறித்து விட்டு தனக்காய் பணியும் ஆற்ற வேண்டும் என கடவுள் எதிர்பார்க்க மாட்டார்”. அதன் பிறகு தான் கவிதையின் மிக முக்கியமான் வரி வருகிறது: “கடவுளுக்கு மனிதனின் உழைப்போ பரிசுகளோ அவசியமில்லை/ யார் கடவுளின் எளிய சுமையை தன் தோளில் சுமக்கிறாரோ அவரே சிறந்த இறைப்பணி ஆற்றுகிறார்”. கடவுள் தன் சிறு சைகைக்காய் காத்து நிற்கும், தன் சுண்டு விரல் அசைந்ததும் பூமியையும் கடலையையும் தாண்டி பறந்து சென்று செயலாற்றும் கீழ் ஆயிரக்கணக்கான சேவகர்களை வைத்திருக்கிறார். ”அவர் என்னை நம்பி இல்லை” என மில்டன் அவதானிக்கிறார். தன்னால் அந்த சேவர்களை போல் பணியாற்ற முடியாமல் போகலாம். ஆனால் கடவுளின் அரண்மனையில் ஒரு வாயிற்காப்பாளனாக வெளியே நீண்ட காலம் பொறுமையாய் அவரால் காத்து நிற்க முடியும். அவ்வாறு கடவுளுக்கு சேவை செய்ய முடியும். அப்படி மிக எளிதான வகையில் மிக மிக கீழ்நிலை சேவகனாய் பணியாற்றுகிறவரே உன்னத சேவை செய்கிறவர் என அக்கவிதை முடிகிறது.
இக்கவிதையில் கடவுள் ஒரு குறியீடுதான். அடிப்படையில் மில்டன் வாழ்க்கையை நோக்கியே இக்கேள்விகளை எழுப்புகிறார். “எவ்வளவோ எழுத்துப்பணி மீதமிருக்கும் போது நான் ஏன் குருடனாக்கப்பட்டேன்?” என்பதே அவரது மைய வினா. “இனி என்னால் இந்த வாழ்க்கைக்கு சமூகத்துக்கு ஏதாவது பயனுண்டா?” எனவும் யோசிக்கிறார். அவர் இரண்டு விடைகளை கண்டறிகிறார். 1) துயரம் ஏன் ஏற்படுகிறது என கேட்பதில் அர்த்தமில்லை. துக்கம் என்பது நாம் சுமந்தாக வேண்டிய எளிய சிலுவை. 2) பார்வையற்ற நிலையிலும் அவருக்கு இங்கு ஆற்ற ஒரு முக்கிய பங்கு உள்ளது. அவர் எழுதும் ஒவ்வொரு வரியும் அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. இங்கு எளிய ”வாயிற்காப்பாளனும்” முக்கியமே!
கடவுளை பற்றி சிந்திப்பது வாழ்க்கையை பற்றி சிந்திப்பது தான். அப்போது தர்க்கமும் அகந்தையும் நம் பார்வையை உண்மையில் இருந்து மறைக்கிறது. அகந்தையை கைவிட்டாலே நமது துயரம் பற்றின மிகை கவலையும் தன்னிரக்கமும் விலகி விடும் என மில்டன் சுட்டுகிறார். இந்த வாழ்க்கை நமக்காக இல்லை; நாம் தான் வாழ்க்கைக்காக இருக்கிறோம் என நாத்திகவாதிகளுக்காக குறிப்பாய் சொல்கிறார்.
என் அப்பா ஒரு நாத்திகவாதி. கோயிலையும் கடவுளையும் அவர் பழிக்காத நாளில்லை. நான் பிறந்து ஆறு மாதத்தில் போலியோ தாக்கி கால் ஊனமானேன். அன்றில் இருந்தே தான் நாத்திகனானதாய் என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். இதில் விசித்திரம் என்னவென்றால் எனக்கு என்றும் கடவுள் மீது கோபம் இருந்ததில்லை. வாழ்க்கை கருணை நிரம்பியது. இங்கு எனக்கும் ஒரு “வாயிற் காப்பாளனாக” சிறு இடம் உண்டென அறிவேன்.
 ஆனால் என் அப்பா இறுதி வரை கடவுளை மன்னிக்கவே இல்லை. அவரது முக்கிய பிரச்சனை தன் மகனுக்கு நடந்த அநீதிக்கு யாரை பொறுப்பாக்குவது என்பது. தன்னை பொறுப்பாக இயலாது. அதனால் அவர் கடவுளை பொறுப்பாக்கினார். என் அப்பா என் காலை கடவுளின் வடிவமாய் பார்த்தார். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு கடவுள் மீது கோபம் பொங்கியது. நான் பணமின்றி என் வியாதிக்கு அடிமையாக்கப்பட்டேன். ஆனால் பின்னர் என் எழுத்தின் வழி விலையின்றி மீட்கப்பட்டேன். ஆனால் என் அப்பா மீட்கப்படவே இல்லை.

அபிரகாமுக்கும் ஜோபுக்கும் முடிந்த ஒன்று அருண் ஷோரிக்கும் என் அப்பாவுக்கும் சாத்தியப்படவே இல்லை.    

1 comment:

Antony Francis OMD said...

இந்து சமயத்தில் காணப்படும் 'கர்மா' என்னும் கோட்பாடு உலகின் பண்டைய சமயங்கள் எல்லாவற்றிலும் ஆழ வேரூன்றிய ஒன்றாகும். நன்மை செய்தால் நன்மை கிட்டும். தீமை செய்தால் தீமை கிட்டும். இதன் அறிவியல் வடிவம்தான் நியூட்டனின் மூன்றாம் விதி. மனித மனங்களில் கலந்து விட்ட இந்த உணர்வு அநேகமாக நமது மரபணு வழியில் கூட அடுத்த தலைமுறைக்குக் கடந்து விடும் அளவுக்கு நம்மில் இரண்டறக் கலந்துவிட்டது. பழைய ஏற்பாட்டில் பல கதைகள் இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே எழுந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் மனிதன் உட்கார்ந்து யோசித்தபோது, அவனுக்கு ஒன்று புலப்பட்டது. அப்பாவி மனிதர்கள், கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்கள், நாள் முழுவதும் கோவிலிலேயே பணி செய்பவர்கள், எந்த வகையிலும் யாருக்கும் தீங்கு நினையாதவர்கள் கூட வாழ்வில் பெருந்துன்பத்தையும், நோயினையும், விபத்தினையும், அநீதியையும் எதிர்கொண்டனர். இந்தப் புதிய பார்வையை விதமாகவே யோபு கதை வருகிறது. நாமும் இவ்வாவறான இக்கட்டான சூழ்நிலைகளை, மனிதர்களின் கையறு நிலையைப் பார்க்கும் போது, துன்பம் எல்லோருக்குமானது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. கடவுளை .இல்லையென்று சொல்பவர்கள்தான் கருணையான கடவுளையும் உலகிற்கு தங்களை அறியாமலேயே வெளிப்படுத்துகிறார்கள். துன்பம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மனிதன் கடவுள் என்ற ஒன்றைப் பற்றிய சிந்தனையற்றுதானே இருந்திருப்பான். அருமையானக் கட்டுரைக்கு நன்றி