Saturday, November 5, 2016

ஜெயமோகன் பற்றின ஆவணப்படம்

ஜெயமோகன் பற்றி அவர் மகன் அஜிதன் எடுத்துள்ள ”நீர், நிலம்” ஆவணப்படம் எனக்குள் நிறைய நினைவுகளை தூண்டி விட்டது. பச்சைப் பசேலென்ற எங்கள் ஊரின் நிலச்சித்தரங்கள் – குளங்கள், தென்னைகள், வேளி மலை, பாறையில் அமர்ந்து தியானிக்கும் கொக்கு, பாரம்பரிய வீடுகள், சிதிலமான படிக்கட்டு, கோயில் மண்டபங்கள், இதனோடு ஜெயமோகனின் குரலும். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருபது வருடங்கள் பின்னால் பயணித்து விட்டேன். பத்மநாபபுரம் மேற்குத் தெருவில் ஜெயமோகன் 98இல் தங்கியிருந்த வீடும் வருகிறது. நான் அங்கு தான் அவரை முதலில் சந்தித்தேன். அந்த வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதே போல் தக்கலை தொலைபேசி நிலைய அலுவலகம். அங்கெல்லாம் அவருடன் ஓயாமல் பேச முயன்று முடியாமல் அவர் ஓயாமல் பேசுவதை என்னை மறந்து கேட்டிருக்கிறேன். இந்த ஆவணப்படத்தில் இந்த இரண்டுமே சிறப்புகள். நிலக்காட்சிகள், ஜெயமோகனின் நிலம் தொடாது வாள் சுழற்றும் பேச்சு.

அஜிதனின் சில பிம்பங்கள் மிக அழகாய்,, ஸ்டைலாய் உள்ளன. அவர் ஒரு நேர்த்தியான புகைப்பட கலைஞனாய் இருக்க வேண்டும். அவரது பிரேம்களில் ஒரு தேர்ந்த கலைஞன் தெரிகிறான். அதே போல் படத்தை வேகமாய் செல்லும் வண்ணம் அவர் வெட்டியிருப்பதும் நன்றாக இருந்தது. பொதுவாக ஆவணப்படங்கள் தாத்தா வெற்றிலை மெல்லுவது போல் செல்லும். இந்த படம் ஐஸ் துண்டு போல் வழுக்கி செல்கிறது.
ஜெயமோகன் நான் அவரை சந்திக்கும் காலத்திலேயே மிகத்திறமையான உரையாடல்காரர். அவரது உரையாடல் சு.ராவினுடையது போன்றது அல்ல. அது ஒருவித தன்–உரையாடல். ஒரு விசயத்தை ஆரம்பித்து அது சம்மந்தமான கேள்விகளை எழுப்பி, விவரித்து, உதாரணங்கள், குறுங்கதைகள் கூறி தன் தரப்பை வலுவாய் நிறுவும் பாணியிலானது அது. அவர் தனக்கே எதையோ சொல்லி உறுதிப்படுத்துவது போல் இருக்கும். எஸ்,ரா தன் பேச்சில் நிறைய தகவல்கள், அவதானிப்புகளை வழங்குவார். ரொம்ப பிரமிப்புடன் ஒரு ஆயிரம் பக்க விளக்கப்பட புத்தகத்தை புரட்டி மூடி வைத்தது போல் இருக்கும்.
 ஆனால் ஜெயமோகன் பேச்சு வாத-பிரதிவாத பேச்சு. ஒரு விசயம், அதற்கான நிரூபணங்கள், உதாரணங்கள் என போகும். எந்த சிறு விசயத்தையும் வரலாற்று, சமூகவியல் கோணத்தில் அலசுவது அவருக்கு பிடிக்கும். இந்த ஆவணப்படத்திலும் ஒரு கல்மண்டபத்தில் வந்து உட்கார்ந்து கோயில்களின் உலகை எப்படி தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்கினார்கள் என விமர்சிக்கிறார். ஆதிகேச பெருமாள் உறங்கும் கோயிலுக்கும் தன் மூதாதையருக்கும் உள்ள தொடர்பை விவர்க்கிறார். ஒவ்வொரு வாசகனுக்கு உள்ளும் இது போன்ற தெய்வங்கள் துயிலும், மரபின் கற்பனைகள் செறிந்த உலகம் இருக்கிறது. அதை தன் “விஷ்ணுபுரம்” கிளர்த்துகிறது என்கிறார். தொடர்ந்து இளம் வயதில் அங்கு கண்ட கதகளி நடனம், கர்ணனுக்கும் குந்திக்குமான சந்திப்பை கதகளி கலைஞர் ஒருவர் சித்தரித்த விதம், அதை தொடர்ந்து பி.கெ பாலகிருஷ்ணன், எம்.டி ஆகியோர் மகாபாரதத்தை எழுதிய விதம், அதன் குறைகள் என்ன, தன் “வெண் முரசு” எப்படி அக்குறையை நிவர்த்தி செய்கிறது என விவரிக்கிறார். சற்று நுணுகி கவனித்தால் இது ஒரு இடதுசாரி பாணி பேச்சு என புரியும். இடதுசாரியா? ஆம்.
என் பதின்வயதில் எனக்கு சில நல்ல இடதுசாரி நண்பர்கள் வாய்த்தார்கள். அவர்களின் அறிவார்ந்த உரையாடல்களை ரசித்து கேட்டிருக்கிறேன். தொடர்ந்து நான் ஜெயமோகனையும் சந்தித்து பேசிய போது அவரையும் மற்றொரு இடதுசாரி அறிவுஜீவியாகவே என் மனம் ஏற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இரு சாராருக்கும் எனக்கு பெரிய வேறுபாடு தெரியவில்லை. இரு தரப்புமே உரையாடலுக்கு அடிப்படையாய் எடுத்துக் கொள்வது ஹெகலின் இணை முரணியல் (dialectics) தான். இடதுசாரிகள் எதையும் முழுக்க மறுக்க மாட்டார்கள். எதிர்தரப்புடன் மோதி அதன் குறைகளை நிரப்பி அதையும் தனதாக்குவதே அவர்களின் பாணி. அதனாலே முதலாளித்துவ ஆதரவாளர்களை விட இடதுசாரிகளே அதிகமாய் முதலாளித்துவத்தை பற்றி பேசினார்கள், ஆய்வு செய்தார்கள். மாற்றுத்தரப்பை அப்படியே ஏற்பதை ஒரு ஆசிய மரபு எனலாம். மாற்றுத்தரப்புடன் தொடர்ந்து மோதி முரண்பட்டு தன்னை வளர்த்தெடுப்பது ஒரு ஐரோப்பிய ஹெகலிய பாணி. அதனால் தான் ஜெயமோகன் பல வருடங்களாய் எதையாவது விவாதித்தபடி இருக்கிறார். சர்ச்சை, மறுப்பு, சித்தாந்த அடிதடி என அவர் எழுத்து முழுக்க தழும்புகளுடன் இருப்பது இதனால் தான்.
நித்ய சைதன்ய யதி ஜெயமோகனிடம் ஒருமுறை “உன் மனம் ஆன்மீக பாதைக்கானது அல்ல” என வலியுறுத்தியதாக இந்த ஆவணப்படத்தில் வருகிறது. தன் மனதை ஜெயமோகன் எப்போதும் ஆடியபடி இருக்கும் ஆட்டின் வாலோடு ஒப்பிடுகிறார். இந்த வால் ஜெயமோகனின் தர்க்க மனம் தான். முரணியக்க தர்க்க வால். நித்ய சைதன்ய யதி போன்றோர்கள் வலியுறுத்துவது இதற்கு நேர் எதிரான ஒரு மனநிலை. நான் அவரது ஊட்டி ஆசிரமத்துக்கு ஒருமுறை சென்ற போது பத்து சாமியார்கள் வரவேற்பறையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் மௌனமாய் சும்மா இருந்து கொண்டிருந்தார்கள். நான் அதைக் கண்டு நடுங்கி விட்டேன். வாட்களுடன் பத்து பேர் என்னை சூழ நிற்பதை போல் இருந்தது. ஜெயமோகனின் மனம் இந்த மௌனத்தின் எதிர்தரப்பு.
ஜெயமோகன் கையெட்டும் தொலைவில் உள்ள எதைப்பற்றியும் ஒரு பின்னணி கூறுவார். இந்த படத்தில் அவர் தாழை புதர் அருகே இருக்கிறார். உடனே தாழைக்கும் கைதைக்கு வித்தியாசம் என்ன, தாழை எப்படி யானைக்கு பிரியமான உணவாக இருக்கிறது, பாம்புகளுக்கு தாழைப்புதர் ரொம்ப விருப்பமானது என பேசுகிறார். அவரை முதலில் சந்திக்கிறவர்களுக்கு இந்த மாதிரியான எதிர்பாராத நுண்தகவல் உதிர்ப்புகள் ரொம்ப சிலாக்கியமாக இருக்கும். ஒருமுறை ஊட்டியில் இருந்து நாகர்கோயிலுக்கான பேருந்து பயணத்தில் அவருடன் இருந்தேன். திடீரென மலையாளிகள் எப்படி எந்த ஊருக்கு போனாலும், உலகின் எந்த மூலையில் தேடினாலும் ஒரு தேநீர் கடை போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். ஆனால் தமிழர்கள் எங்கு சென்றாலும் மிகுந்த உச்சத்தை அடைவார்கள் என சமூக உளவியல் கோணத்தில் பேசத் துவங்கினார். இதை ஒருவர் தகவல்பூர்வமாய் மறுக்க முடியும். ஆனால் ஜெயமோகனுக்கு அது பொருட்டு அல்ல. அது அவர் அவதானிப்பு. அதை உணர்ச்சிகரமாய் ஏற்று நம்பி பிறரையும் நம்ப வைப்பார். இருபது வருடங்களுக்கு பிறகு அவர் மலையாள உளவியல் பற்றின இந்த அவதானிப்பை சிலமுறைகள் (இடதுசாரி தொழில்சங்க அரசியலை தாக்கும் சாயலில்) கட்டுரைகளாக எழுதினார்.
இந்த தீவிரம் எனக்கு ஜெயமோகனிடம் மிகவும் பிடித்த அம்சம். எங்கு எதைப் பற்றி பேசினாலும் அவர் தன் எழுத்துலகத்துக்கு அதை கொண்டு வந்து விடுகிறார். எறும்பு மும்முரமாய் எந்த உணவுத்துகள் கிடைத்தாலும் தன் புற்றுக்கு இழுத்து போவது போல. அவர் இந்த ஆட்கொள்ளலில் இருந்து வெளியே வர விரும்புவதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பும் இப்படியே தான் இருந்தார். நான் பார்த்த பெரும்பாலான எழுத்தாளர்களிடம் இந்தவித ஆட்கொள்ளலை நான் அதுவரை கண்டதில்லை. அவர்கள் எழுத்தை ஒரு செல்ல பிராணியாக கண்டார்கள். ஜெயமோகன் தன் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி தன்னையே ஒரு செல்ல பிராணியாக எழுத்திடம் ஒப்படைத்தவர். நான் அவரை சந்தித்ததும் வீட்டுக்கு வந்து இரவில் தனியாய் இருந்து ஒரே விசயத்தை எனக்குள் சொல்லிக் கொண்டேன்: “இவரைப் போல் நானும் எழுத்து மட்டுமே உலகமே என இருக்க வேண்டும்”. அதுவரை எனக்கு ”எழுத” ஆசை இருந்தது. ஜெயமோகனின் பிம்பம் எனக்குள் ”எழுத்தாளனாகும்” இச்சையொன்றை ஏற்படுத்தியது.
ஜெயமோகனின் பேச்சு நிறைய காட்சிபூர்வ சித்தரிப்புகள் அடங்கியது. அவரது பெரும் வசீகரம் அது. இந்த படத்தில் பேச்சினிடையே தன் அப்பா வீட்டு முகப்பில் போட்டிருந்த ஒரு பெரிய ஆட்டுரலை தளர்ந்து ஒழுங்கி படுத்திருக்கும் ஒரு யானையுடன் ஒப்பிடுகிறார். ஊரில் இருந்து நெல்லைக்கு விழாவில் பங்கேற்க அழைத்து செல்லப்படும் யானைகள் ஆரல்வாய்மொழி தாண்டியதும் சோர்ந்து தயங்குவதை அவர் சொல்லும் போது அந்த சித்திரம் நம் கண்முன் எழுகிறது. இதை அவர் சர்வ சாதாரணமாய் தன் உரையாடல்களில் கொண்டு வருவார்.
ஜெயமோகனின் வாய் சாமர்த்தியம் ஊரில் இலக்கிய நண்பர்களிடம் பிரபலம். ஒரு நண்பர் என்னிடம் முன்பு சொன்னார். “ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளை முதலில் சந்தித்து பேசுகிறார் என்றால் பத்தே நிமிடங்களில் தான் நினைப்பதை அவரை நம்ப வைத்து விடுவார். ஜெயமோகன் நினைப்பது ஜெயமோகனே உலகின் சிறந்த எழுத்தாளர் என்பது என்பதால் கேட்டுக் கொண்டிருப்பவர் அதை நம்பி மற்றொரு ஜெயமோகனாகி அங்கிருந்து வெளியேறுவார்.”
 இந்த அலாதியான பேச்சுத்திறன் அவர் எதிலும் முழுக்க மூழ்கி உணர்ச்சிகரமாய் ஒன்றை வலியுறுத்தி, தகவல்கள், கதைகள், உதாரணங்கள் என பேசுவதால் உருவாகிறது. ஜெயமோகன் பேசும் போது மற்றொரு நுணுக்கம் அவரது இடைவிடாத சொற்கள். பெரும்பாலானோர் பேச்சின் இடையே இடைவெளிகள் விடுவோம். யோசிப்பதற்கு, ஆறுதலுக்கு, தேவையான சொற்கள் அமையாமல் “ம்ஹ்ம்” “அதாவது” “என்ன சொல்ல வரேன்னா” என பல இணைப்புகளை பயன்படுத்துவோம். ஜெயமோகன் இதையெல்லாம் செய்வதில்லை. தன் பேச்சை அவர் தானே நம்பி தானே ரசிப்பதால் அவர் மனம் தளர்வதில்லை. சொற்கள் அவரில் இருந்து பீரிட்டபடியே இருக்கும். தான் சொல்வது அடுத்தவருக்கு புரிகிறதா எனும் குழப்பமும் அவருக்கு இல்லை. இதனால் அவருக்கு பேச்சில் வேகத்தடைகளே இல்லை. இந்த இடைவிடாத சரம் சரமான வாக்கிய பொழிவு ஒரு (தாலாட்டு, மந்திர உச்சாடனம் போன்ற) தாளகதியை கொண்டது. சொற்கள் சரிவர மனதில் நுழையாமல் இருந்தால் கூட அவை உருவாக்கும் தாளகதியில் கேட்பவர் மனம் சொக்கி விடும். இந்த இயல்புகளை – உணர்ச்சிவேகம், தீவிரமாய் ஒன்றை முன்வைப்பது, அதைப்பற்றி மட்டுமே உருவேற்றியபடி செல்வது, நிறைய உதாரணங்கள், சுவையான தகவல்களை தருவது என – நாம் ஓஷோ போன்ற ஹிப்னாட்டிக் பேச்சாளர்களிடம் காணலாம். இந்த ஆவணப்படத்தில் ஜெயமோகனின் குரல் ஆளுமை பெரிய வசீகரம்.
ஆவணப்படத்தில் தன் மகனிடம் நேரடியாய் உரையாடும் இடங்களில் அவர் இன்னும் இயல்பாய் இருக்கிறார். தன்னையே கேலி பண்ணி சிரிப்பது (அடுத்த நொடியே அப்படி சுயபகடி செய்வதால் தான் எவ்வளவு பெரிய ஆள் என நுட்பமாய் உணர வைப்பது), இடையிடையே மலையாளத்தில் பேசுவது ஆகிய இடங்களை ரசித்தேன்.
 தன் ஊரின் நிலப்பரப்பு எப்படி ரப்பரின் வரவால் சிதைவுற்றது என அவர் குறிப்பிடும் இடம் “ரப்பர்” நாவல் வாசகர்களுக்கு முக்கியம். ஜெயமோகன் இங்கு குறிப்பிடாத (ஆனால் நாவலில் பேசுகிற) விசயம் எப்படி ரப்பரின் வருகை நாடார் சமூகத்தின் பெரும் வளர்ச்சிக்கு உதவியது என்பது. சூம்பி வளைந்து நிற்கும் ஒரு தென்னை மரத்தை சுட்டிக் காட்டி அது தனக்கு எவ்வளவு வருத்தத்தை தருகிறது என சொல்கிறார். ரப்பர் மண்ணின் வளங்களையும் நீரையும் முழுக்க உறிஞ்சி விடுவதால் எப்படி தென்னை மரங்கள் நொடிந்து இறந்து போயின என கூறுகிறார். (”டார்த்தீனியம்” கதை நினைவு வருகிறது.) இந்த தென்னை மரம் குமரி மாவட்டத்து நாயர்களின் ஒரு குறியீடு.

1998 காலகட்டத்தில் நான் அஜிதனை சிறுவனாய் பலமுறை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் பெரிதாய், கொஞ்சம் கோணலாய் சிரித்தபடி, அலையும் பார்வையுடன், முடுக்கி விட்ட பொம்மை போன்ற ஆற்றலுடன் என் நினைவுகளில் இருக்கிறான். அவன் வளர்ந்து அழகாய் ஒரு படம் எடுத்திருக்கிறான் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு திரைக்கலைஞனாய் அவரது வளர்ச்சியை எதிர்நோக்குகிறேன். அஜிதனின் திறமைகள் முழுக்க மலரட்டும்!

No comments: