Saturday, November 12, 2016

லட்சியவாதிகள் ஏன் தீக்குளிக்கிறார்கள்?


Image result for தீக்குளிப்பு

காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது விக்னேஷ் எனும் இளைஞர் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். நம் வரலாற்றில் ஏற்கனவே அவரைப் போன்ற இளைஞர்கள் பலர் தம்மை தீயில் மாய்த்துள்ளனர். உலகம் பூரா இது போன்ற தீக்குளிப்பு அவலங்கள் நிகழ்கின்றன. ஏன்? இதன் உளவியல், சமூக அடிப்படைகள் என்ன?
தீக்குளிப்பை மூன்று விதங்களில் பார்க்கலாம்.
1)   உரிமை மறுக்கப்பட்டவனின், குரல் மறுக்கப்பட்டவனின் ஒரு அரசியல் பிரகடனம். இந்த பார்வையில் தீக்குளிப்பு ஒரு தர்க்கரீதியான முடிவு.
2)   மிதமிஞ்சிய லட்சியவாத்தின் விளைவு – சமூக பொருளாதார, நடைமுறை பிரச்சனைகள், போதாமைகளை இன / மொழி வெறுப்பாய் சுருக்கி கொள்வது.
3)   தன்னுடலை உள்ளூர வெறுக்கும் அ-பௌதிகவாதத்தின் ஆழ்மன வெளிப்பாடு.

தீக்குளிப்புகள் கடந்த கால் நூற்றாண்டில் வளரும் நாடுகளிலும், அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நாடுகளிலும் அதிகம் நடைபெறுகிறது. அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிரான, பெண்ணுரிமைக்கான போராட்டங்களில் சில தீக்குளிப்புகள் நடந்திருக்கின்றன. மற்றபடி மேற்கை பொறுத்தமட்டில் சிறு நாடுகள் மீதான பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீக்குளிப்பு நடந்திருக்கிறது. இந்தியா, திபத்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீக்குளிப்புகள் அதிகம் மட்டுமல்ல, இங்குள்ள மரபும் மதமும் தீக்குளிப்புக்கு ஒரு உளவியல் நியாயத்தை அளிக்கின்றன.
ஒரு சமூகம் பொருளாதார ரீதியாய் வளர்ந்து தன்னிறைவை அடைந்து, வேலைகள் கணிசமாய் எந்திரமயமாகி முழுக்க நவீனமான பின் ஒரு முக்கிய மாற்றம் மனதளவில் நடக்கும். மனிதர்கள் தம்மை தனிமனிதர்களாய் காணும் போக்கு வலுப்படும். இத்தகைய மனிதர்கள் ஒரு சமூக பிரச்சனைக்காய் உணர்ச்சிவயப்பட்டு தம்மை அழிக்க மாட்டார்கள். என்றாவது ரிலையன்ஸ் போன்ற ஒரு பெரும் வணிக நிறுவனத்தின் வாரிசு தன்னை தீவிரவாத குழுவில் இணைத்துக் கொண்டதாய் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆனால் அப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஏழைகள் அவ்வாறு இணைகிறார்கள். அதே போல் மரபான பின்னணியில் வளர்ந்து படித்து வசதியான வேலையில் அமரும் இளைஞர்கள் ஒருநாள் தமது அரசியல், அடையாள உரிமைகள் சமூகத்தால் மறுக்கப்படுவதாய் உணர்ந்து தீவிரவாதம் நோக்கி செல்வார்கள். அதாவது பணம் இருந்தாலும் அரசியல், கலாச்சார அதிகாரம் இல்லாததால் அதை வேண்டி தீவிரவாதம் நோக்கி செல்வார்கள். (தீவிரவாதமும் ஒருவித சுய-அழிப்பு செயல் என்பதாலே அதை தீக்குளிப்புடன் ஒப்பிடுகிறேன். மேலும் இரண்டுக்குமே அடிப்படை மிதமிஞ்சிய லட்சியவாதம்: அதாவது உடல், உடைமை, பணம், வசதி, காமம், உணவு அனைத்தையும் விட ஒரு கருத்து தான் மேலானது எனும் மிகை எண்ணம். இறுதியாய், நான் தீவிரவாதிகளை வெறும் வெறியர்களாய் கருதவில்லை. அவர்களும் வன்முறையை கையில் எடுத்துள்ள சமூக நலனை பிரதானப்படுத்தும் லட்சியவாதிகளே.)
இந்து மதம், சமணம், கிறுத்துவம், இஸ்லாம் என கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே சிறிய அல்லது பெரிய அளவுகளில் உடலை வருத்துவதை ஊக்குவிக்கின்றன பொருளாதார ரீதியாக முழுக்க ஸ்திரப்படாத சமூகங்களில் மனிதர்களின் ஆழ்மனதில் பலி கொடுக்கும், தன்னை அழிக்கும் ஒரு விழைவு புகைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு லட்சிய நியாயத்தை அவர்களின் மரபு அளிக்கிறது. ஆக திலீபன், முத்துக்குமாரில் இருந்து இன்றைய விக்னேஷ் போன்ற அரசியல் உயிர் தியாயங்கள் வரை சமூக விடுதலைக்காக, உரிமைக்காக நடந்தாலும் அவற்றுக்கு நிச்சயம் மதரீதியான ஒரு தொடர்பு உள்ளது.
இந்த மூன்று விசயங்களும் – உரிமையும், அடையாளமும் மறுக்கப்படும் கைவிடப்பட்ட உணர்வு, பொருளை விட கருத்தே மேலானது என நம்பும் லட்சியவாதம், உடலையும் பௌதிக வசதிகளையும் உள்ளூர வெறுக்கும் மதரீதியான நம்பிக்கைகள் – தீக்குளிப்புக்கு அடிப்படைகள். 
விக்னேஷின் எளிமைப்படுத்தல்
விக்னேஷ் தன் தீக்குளிப்புக்கு முன்பு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோருகிறார்:
”காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.
என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.
 எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.”
முக்கியமான பிரச்சனைகள் தாம் இவை. ஆனால் விக்னேஷ் தன்னை பற்ற வைத்துக் கொண்டதால் இவை தீர்ந்து விடுமா? முத்துக்குமாரின் தீக்குளிப்பு இங்கு சமூக மாற்றத்தை கொண்டு வரவில்லை; ஈழப்பிரச்சனைக்கும் தீர்வளிக்கவில்லை. இங்கு ஒரு பரபரப்பை, மீடியா கவனத்தை ஏற்படுத்தியது. அதைக் கொண்டு மே 17 போன்ற அமைப்பினர் வளர்ந்தார்கள். சாராய ஆலை, எரிவாயு குழாய் போன்ற பிரச்சனைகளை தனிமனித போராட்டங்களால் தீர்க்க முடியாது. இதை முன்வைத்து ஒரு கட்சி போராடி தேர்தலில் வென்று மெல்ல மெல்ல தான் இவற்றை முடிவுக்கு கொண்டு வர இயலும். ஏனென்றால் இப்பிரச்சனைகளில் கோடிக்கணக்கான பணம் சம்மந்தப்பட்டிருக்கிறது. கர்நாடக நதிநீர் பிரச்சனையில் தேர்தல் அரசியல், விவசாயம், குடிநீர் தட்டுப்பாடு, நீர்நிலைகளின் அழிவு, ரியல் எஸ்டேட் மாபியா ஆகியவை சம்மந்தப்பட்டிருக்கின்றன. இவை பெரும் அரசியல் அதிகார கட்டமைப்புகளால் உருவாக்கப்படும் சிக்கல்கள். இந்த சக்திகளுக்கு இணையான அதிகார கட்டுமானங்களை உருவாக்கி, அரசியலில் வென்றும், அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுமே தீர்க்க முடிகிற சிக்கல்கள் இவை. தீக்குளிப்புகள் தீர்வுகளுக்கான தூண்டுகோலாய் அமைய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தீக்குளிப்பினால் மக்கள் தூண்டப்பட்டு திரண்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் அண்டை மாநில அரசியல் சக்திகளை முறியடிக்கும் அளவுக்கு இவை எளிமையான விசயங்கள் அல்ல. (அது முருகதாஸ் படங்களில் மட்டுமே சாத்தியம்)
 ஐம்பது, அறுபதுகளில் தமிழ் தேசியவாதத்தை மையமிட்டு இங்கு திமுக தோன்றி வளர்வதற்கு சமூக பொருளாதார சூழல் இருந்தது. இன்று அது இல்லை. சமூகம் இன்று முழுக்க வேறொரு பாதையில் செல்கிறது. அதன் தேவைகள் இன்று முழுக்க வேறானது. விக்னேஷ் போன்றவர்கள் இதை புரிந்து கொள்வதில்லை.
தமிழ் உண்மையில் ஏன் அழிகிறது?
விக்னேஷ் மற்றொரு நோக்கத்தையும் முன்வைக்கிறார். அது சமிஸ்கிருத எதிர்ப்பு. தமிழ் அழிவதற்கு சமிஸ்கிருதமே காரணம் என அவர் நினைக்கிறார்.
“இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்.”
தமிழுக்கு போதுமான மரியாதை இல்லாததற்கு காரணம் இந்தியோ சமிஸ்கிருதமோ அல்ல என விக்னேஷுக்கு புரிந்திருக்கவில்லை. தமிழ் பின்னடைவை பெற்றதற்கு பண்பாட்டு ரீதியான, உலகமயமாக்கல் போன்ற பௌதிக, பொருளாதார ரீதியான காரணங்கள் உள்ளன.
ஆங்கிலம் படித்தால் பொருளாதார ரீதியாய் முன்னேறலாம், உயர்தட்டுகளுக்கு இணையான அந்தஸ்தை பெறலாம் எனும் நம்பிக்கையே தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம். இதை உண்மை என நிரூபிக்கும் வண்ணம் நடைமுறையில் ஆங்கிலம் அறிந்தவர்கள் அறிவுத்துறைகளில், ஊடகங்களில் முன்னேறினார்கள், வேலை வாய்ப்புகள் அதிகம் பெற்று மேம்பட்டார்கள். உலகமயமாக்கலின் விளைவாய் தோன்றின இந்த சமூக எதார்த்தத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு பின்னால் நல்ல உணவு, ஆடைகள், வீடு, ஸ்திரமான வாழ்க்கை, அந்தஸ்து ஆகிய பிரதிபலன்கள் இருந்தன. வெறும் தமிழ் உணர்வை பொங்கி சாப்பிட்டு வாழ முடியாது என மக்கள் அறிந்திருந்தனர்.
ஆனால் லட்சியவாதிகள் இந்த நடைமுறை தேவைகளை கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாய் சமிஸ்கிருதமும் தம் மொழியை அழிக்க புறப்பட்டு வருகிறது என கற்பனை செய்து கொண்டு கொதிப்படைவார்கள். வயிற்றை நிரப்ப உதவும் என்றால் மக்கள் சமிஸ்கிருதம் என்ன சீன மொழி கூட கற்பார்கள். இதில் என்ன பிரச்சனை? எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. (மக்கள் தாம் மொழியை தம் வயிற்றுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். வயிற்றை விட மொழி பெரிதல்ல.)
மொழிப்போர்கள் ஏன் நடக்கின்றன?
 முதலாளித்துவம் தனக்கு அனுசரணையான கலாச்சார கருத்துக்களை, வடிவங்களை ஒடுக்கப்பட்டோர் மீது திணித்து மேலும் ஒடுக்கும் என ஆரம்ப கால மார்க்ஸியவாதிகள் நம்பினார்கள். அறுபதுகளின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் ”வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” ஆகிய கோஷங்களில் வடக்கை முதலாளித்துவமாகவும் தெற்கை பாட்டாளியாகவும் பார்க்கிற பார்வை இருந்தது. ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரை இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மட்டுமே 500க்கும் அதிகமான தமிழர்கள் இறந்தனர் என்கிறது. இந்தி மட்டுமே இந்தியாவில் ஆட்சி மொழியாக இருக்க கூடாது என கோரி1964இல் சின்னச்சாமி என்பவர் திருச்சி ரயில் நிலையம் முன்பு தீக்குளித்து மாண்டார். இதை அடுத்து சிவலிங்கம், அரங்கநாதன் ஆகியோரும் தீக்குளித்தனர். கீரனூரை சேர்ந்த முத்து என்பவர் விஷம் அருந்தி உயிர் நீத்தார்.
இந்த போராளிகளின் குடும்பங்கள் இப்போது வறுமையில் வாடுகின்றன என ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. ஆனால் தொண்ணூறுகளுக்கு பிறகு தமிழகம் சில வடமாநிலங்களை விட வெகுவாக வளர்ந்தது. இது இந்தி எதிர்ப்பினால் விளைந்ததா?
 அல்ல! கல்வி வளர்ச்சி, சமூக நீதிக் கொள்கைகள், அமைதியான சமூக சூழல், உலகமயமாக்கல் போன்ற பௌதிகமான அம்சங்களே இன்றைய வளர்ச்சியின் அடித்தளம். இது உண்மையானால் அன்று ”தெற்கு தேய்ந்ததற்கும்” வடக்கின் சதித்திட்டங்களும் ஒடுக்குமுறைகளும் காரணமாக முடியாதே! இன்று இந்தியில் படித்தால் மட்டுமே மத்திய அரசு வேலை கிடைக்கும் என்றால் கூட மக்களுக்கு அது பொருட்டல்ல. இன்று அதை விட நல்ல வருமானமும் வசதியும் தருகிற வேறு வேலைகள் மக்களுக்கு ஆயிரம் உள்ளன. அன்று மொழி தான் வாழ்க்கை என நம்பி உயிர் நீத்தவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த வளர்ச்சியை கண்டு குழம்பி போயிருப்பார்கள். இன்று கணிசமான வட இந்தியர்கள் சென்னையை நாடி வேலைக்கு வருகிறார்கள். சிலர் தமிழ் பேசவும் செய்கிறார்கள். இங்கு வாழ்கிறார்கள். படிக்கிறார்கள். தம் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். நம்மவர்கள் வடக்கே செல்வது ஒப்பிடுகையில் குறைவு. இந்தி தெரியாது என்பது மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நமக்கு அதன் அவசியம் குறைவு.
 அன்று இத்தகைய வாய்ப்புகள் இல்லாததும் வறுமையுமே பிரச்சனைகள். அன்றைய அரசால் போதுமான வேலை வாய்ப்புகளை, தொழில் வளர்ச்சியை உருவாக்க முடியாதது, அறிவியல் ரீதியிலான விவசாய முறைகள், நீர் பயன்பாடு ஆகியவற்றை நிலுவையில் கொண்டு வர முடியாததே மைய பிரச்சனை. இந்திய விடுதலைப்போர் காலத்தில் காந்தியை மையமிட்டு தோன்றிய தேசியவாதம் ஐம்பத்களில் பட்டுப் போனது. இதன் அடுத்த கட்டமாக இங்கு தமிழ் தேசியவாதம் தோன்றியது. சாதிய வேறுபாடுகள், வர்க்க பிரிவினகள், வறுமை ஆகியவற்றின் மீதான கசப்பு மொழி சார்ந்த தேசியவாத பிரேமையாக வேறு வடிவம் கொண்டு மேலெழுந்தது. நமது பௌதிக போதாமைகள் மீதான கோபம் அன்று இந்தி எதிர்ப்பாய் திரண்டது.
இன்று மக்கள் சமூக பொருளாதார அளவுகளில் மேம்பட்ட பின் தமிழுக்காய் உணர்ச்சிவயப்படுவதில்லை. இதுவே தமிழக மொழி அரசியல் போராட்டங்கள் அக்காலத்தைய பொருளாதார அழுத்தம் ஏற்படுத்திய துயரங்களுக்கான வடிகால் மட்டுமே என்பதற்கு சிறந்த சான்று. இன்று நதிநீர் பங்கீடு எனும் வயிற்றை அடிக்கும் பிரச்சனை தலை தூக்கும் போது நாம் மீண்டும் மொழி அரசியல் வழி நம் கோபத்தை வெளிப்படுத்த நினைக்கிறோம். எப்படி ஒரு காலத்தில் வடக்கு நமக்கு எதிரியாக கற்பிக்கப்பட்டதோ இன்று கர்நாடகா அப்படி முன்வைக்கப்படுகிறது.
உண்மை பிரச்சனை வேறு
 உண்மையில் பிரச்சனை வேறு. இரு மாநிலங்களுமே தம் நீர்நிலைகளை போதுமானபடி பாதுகாக்கவில்லை. இது சூழலியல் மற்றும் நீர் மேலாண்மை தளங்களில் நிகழ்ந்த தோல்விகளால் விளைந்த பிரச்சனை. ஆனால் நம் அரசியல்வாதிகளும் சூழலை சுரண்டும் வியாபாரிகளும் உண்மை பிரச்சனையை நோக்கி மக்கள் உணர்ச்சிகள் குவிவதை விட வேற்று மொழிக்காரன் மீதான வன்மமாய் அதை மாற்றுவதையே விரும்புகிறார்கள். பிரச்சனைகளின் நடைமுறை மதிப்பை உணராமல் இளைஞர்கள் உயிரை மாய்க்கையில் அவர்களை மொழிப்போர் தியாகிகளாக அல்ல லட்சியவாத பலிகடாக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தீக்குளிப்பு போராளிகளின் ஒற்றைபட்டையான பார்வை
விக்னேஷின் தீக்குளிப்பு என்பது காவிரி நீருக்காக என நான் கருதவில்லை. தமிழர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன எனும் நம்பிக்கை, அது ஏற்படுத்தும் கொந்தளிப்பு, தமிழர் உரிமைகளே உலகில் வேறு எல்லாவற்றையும் விட பிரதானம் எனும் லட்சியம் – இது தான் அவரது தீக்குளிப்பின் மையம்.
ஆனால் இங்கு தமிழர்களுக்கு மட்டுமே உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா? உரிமைகள் மறுக்கப்படுவதென்ன ஒருவேளை சோறு கூட மறுக்கப்படுவது, நல்ல ஆரோக்கியம் மறுக்கப்படுவது, மரியாதையான வேலை மறுக்கப்படுவது (காலங்காலமாய் முடியை மழிப்பது, மலம் அள்ளுவது, குப்பையை சுத்தம் பண்ணுவது, கல் மண் சுமப்பது என ஒருவித வாழ்க்கைமுறைக்குள் தள்ளப்படுவது) என அடிப்படை உரிமை மறுப்புகள் எல்லா ஊர்களிலும், மாநிலங்களிலும், தேசங்களிலும் நடக்கின்றன. அவற்றுக்கு ஒரு முடிவே இல்லை. இது ஒரு பரந்துபட்ட பார்வை – அதாவது எந்த பிரச்சனையும் ஒரு தனி ஊரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது எல்லா ஊர்களையும் எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒரு வரலாற்று பிரச்சனை. வரலாற்றை நம்மால் மாற்ற முடியாது. அது தானே மாறும். அதற்கு நம்மைப் போன்ற தனிமனிதர்களை முயலலாம். இம்முயற்சிகள் வரலாற்றை மாற்ற உதவலாம். உதவாமலும் போகலாம். இந்த புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில் தீக்குளிக்கும் விழைவு குறையும்.
அதிகாரமும் மைய பாதையும்
 அடுத்ததாய், உரிமை மறுப்பு, ஒடுக்குமுறை என்பது பணம் மற்றும் அதிகாரம் சம்மந்தப்பட்ட விசயமே. அதற்கும் லட்சியங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மக்கள் எழுச்சியினால் இந்த பிரச்சனைகளை களைய முடியாது. உலக வரலாற்றில், ஏன் தமிழக வரலாற்றில் கூட, அப்படி நடந்த தடம் இல்லை. கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம் மூலமாய் முன்னேறுவது, அடுத்து அரசியல் ரீதியாய் ஒன்று பட்டு அதிகாரத்தை கைப்பற்றுவது ஆகியவையே ஒடுக்கப்படும் மக்களுக்கான தீர்வு. இது புரிந்தால் தீக்குளிப்பின் அபத்தம் விளங்கி விடும். அதாவது முத்துக்குமாரின் வழியை விடுத்து அண்ணா, கலைஞர், திருமாவளவன் ஆகியோரின் வழியை பின்பற்றுவது.
 முத்துக்குமார் லட்சியங்களே வாழ்க்கை என நினைத்தார். அண்ணாவும் திருமாவும் கலைஞரும் வாழ்க்கையில் பொருள், பணம், கட்சி எனும் சமூக கட்டமைப்பு, அது தரும் அதிகாரம் ஆகியவையும் முக்கியம் என புரிந்து கொண்டார்கள். அவர்கள் சரியான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் தம் உயிரை மட்டுமல்ல தம் உடைமைகளையும் மாய்க்கவில்லை. எதையும் விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் போராடி ஒரு இடத்தை அடைந்த பின் அதை தக்க வைக்கிறார்கள். ”விடுகதையா இந்த வாழ்க்கை” என பதவியை அவர்கள் தூக்கியெறிந்து போவதில்லை. யோகா செய்கிறார்கள். நடைபயிற்சி செய்கிறார்கள். நான் இதை ஒரு சீரழிவாக பார்க்கவில்லை. இது தான் எதார்த்த வாழ்க்கை என உணர்ந்து அவர்கள் கொண்டார்கள். தாம் யாரென அறிந்து கொண்டார்கள், தம் உடலே தம் மையம் என புரிந்து கொண்டார்கள். தம் லட்சியங்களுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளும் சமூக பொருளாதார வடிவை அளித்தார்கள்.
தீக்குளிப்பின் வைதிக, தன் மறுப்பு அரசியல்
தீக்குளிப்பு போராளிகள் வாழ்க்கையை ஒற்றைபட்டையாய் புரிந்து கொள்வது தான் முக்கிய பிரச்சனை. பொருளின்றி அமையாது உலகம் எனும் வள்ளுவன் வாக்கை மக்களுக்கு சரிவர புரிய வைத்தாலே தன்னழிப்பு அரசியலை பெருமளவில் குறைக்கலாம். அதாவது உடலை வெறுக்கும், அதை ஒரு கருத்துக்காக விட்டுக்கொடுக்க, அழிக்க நொடியில் துணியும் ’வைதிக’ பார்வையை முறியடித்து, உடலையும் பொருண்மை உலகையும் பிரதானமாய், அனைத்தின் மையமாய் கருதும், சுயவளர்ச்சியும், சுய தக்கவைத்தலுமே பிரதானம் என நம்பும் ’அ-வைதிக’ பார்வையை நாம் முன்னெடுக்க வேண்டும்.
அப்படி என்றால் அரசியலில் லட்சியவாதத்துக்கு இடம் இல்லையா? அரசியலில் லட்சியவாதம் என்பது மக்களின் உணர்வுகளை வடிவமைத்து அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு mobilization கருவி மட்டுமே. சில நேரம் மக்கள் தம்மைத் தாமே ஒருங்கிணைத்து ஒரு மாற்றத்துக்காக போராடவும் லட்சியவாதத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் லட்சியவாதம் என்றுமே இறுதி இலக்கு அல்ல.
நீதி என்பது இலக்கு அல்ல
 நீதி, சமத்துவம் ஆகிய கருத்துக்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றை கைப்பற்றுவதற்கான கருவிகள் மட்டுமே. அதனால் தான் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த சமூகத்தினர் நாற்காலிகளை கைப்பற்றினாலும் அநீதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் நீதி – அநீதி என்பவை வெறும் சொற்கள் மட்டுமே. பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் தம்மை நிரூபிக்க இன்னொருவரை ஒடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அநீதி இதில் இருந்து தான் தோன்றுகிறது. மனிதன் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கி செல்கிற வரையில் அநீதி குரங்கின் வால் போல் அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மற்றபடி நீதி, அநீதி ஆகிய சொற்களுக்கு நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை.
 நீதி ஒரு தேங்காய் துருவி என்றால் அதிகாரம் தான் தேங்காய். முத்துக்குமார், விக்னேஷ் ஆகியோர் இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு துயரம்.
தீக்குளிப்பின் ரொமாண்டிஸிஸம்
தீக்குளிப்புக்கு பின்னால் ஒரு ரொமாண்டிஸிஸம் உள்ளது. தீக்குளிப்புக்கு பின்னால் பசியை பொருட்படுத்தாத ஒரு கற்பனாவாதம் உள்ளது. சமூக கட்டமைப்புகளின் சிக்கலை, பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ளாத மிகைப்படுத்தல் உள்ளது.

தீக்குளிப்பின் சிக்கல் இந்த லட்சியவாத ரொமாண்டிஸிஸம் தான், அதன் தன்மறுப்பு, உடல் வெறுப்பு பார்வை தான். மற்றபடி போராட்டங்கள் அவசியமானவை தாம்.

No comments: