Friday, November 11, 2016

விவியன் ரிச்சர்ட்ஸும் விராத் கோலியும்

Image result for kohli extra cover drive
கவர் டிரைவின் போது கோலியின் முன்னங்கால் பாதம் நேராக நடுவரை நோக்கி திரும்பி இருக்கிறது
Image result for rahul dravid cover drive
ஆனால் திராவின் முன்னங்கால் பாதம் கவர் பகுதியை நோக்கி இருக்கிறது
கோலி சமகால கிரிக்கெட் நட்சத்திரங்களில் வெகு உச்சத்தில் இருப்பவர். உலகின் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுவது சாதாரண விசயம் அல்ல. முன்பு சச்சின் அத்தகைய பெருமைக்குரியவராக இருந்தார். ஆனால் அவருடன் ஆடிய சிறந்த பேட்ஸ்மேன்களான லஷ்மண், கங்குலி, திராவிட் ஆகியோரால் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. சேவாக் கூட தன் பட்டாசு துவக்க ஆட்டத்துக்காக துணிச்சலுக்காக அறியப்பட்டார். ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அவரை யாரும் அழைத்ததில்லை.
டெஸ்ட் ஆட்டங்களில் கோலி பெரிதும் மதிக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் தான் அவர் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். எந்த ஆடுதளத்திலும் நெருக்கடியான நிலையிலும் அசராமல் ரிஸ்கே எடுக்காமல் 100 ஸ்டிரைக் ரேட்டில் அடித்தாட அவரால் முடிகிறது. சிக்ஸர்கள் அடிக்காமலே எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த முடிகிறது. எவ்வளவு டைட்டாக களத்தடுப்பை அமைத்தாலும் கோலியால் ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபத்தில் எடுக்க முடிவது அவரது மேதைமையை காட்டுகிறது. இந்த குணங்களால் தான் அவரால் இலக்கை துரத்தும் போது தொடர்ந்து சதங்களாய் குவிக்கவும் அணியை வெல்ல வைக்கவும் முடிகிறது.

சச்சினுக்கு பிறகு எதிரணியினர் ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்தினால் இந்தியாவை சுருட்டி விடலாம் என நம்புகிறார்கள் என்றால் அது கோலியைத் தான். 175 ஆட்டங்களில் 26 சதங்கள், 37 அரை சதங்கள். அதாவது தான் ஆடிய ஆட்டங்களில் மூன்றில் ஒன்றில் கோலி சதமோ அரைசதமோ அடித்து விடுகிறார். கோலிக்கு 27 வயதாகிறது. இன்னும் எட்டு வருடங்கள் ஆடுவார் என்றால் அவர் நிச்சயம் 50-60 சதங்கள் அடித்து விடுவார். அதாவது சச்சினின் சாதனையான 49 சதங்களை நிச்சயம் முறியடிக்கும் முதல் பேட்ஸ்மேனாக இருப்பார். கோலியின் உடல் தகுதி, ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டால் அவரால் 40 வயது வரை கூட ஆட முடியும் என ஊகிக்கலாம். அப்படி என்றால் அவர் பொறிக்கப் போகிற சாதனைகளை எண்ணினால் தலை கிறுகிறுக்கிறது.
ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. கோலியிடம் முக்கியமான ஒரு பலவீனம் உள்ளது. அவர் extra cover drive, square cut, back foot offside punch ஆகிய ஷாட்களை ஆடுவதில்லை. அவற்றை ஆடும் போது அவரது இடது கால் பந்தின் திசை நோக்கி சரியாக நகர்வதில்லை. விளைவாக offsideஇல் பந்து சற்றே வைடாகவோ ஷார்ட்டாகவோ வீசப்படும் போதும் அவரது இடுப்புக்கு கீழ் உடல் வேறுபக்கம் திரும்ப கைகள் மட்டும் எம்பி offsideஇல் பந்தை அடிக்கிறது. அது மட்டுமல்ல பந்தை அடிக்கும் போது அவரது இடது கால் பாதம் சற்றே நேராக (off side நோக்கி அல்லாமல்) திரும்புகிறது. இதனால் தான் பந்து சற்றே வைடாக வீசப்படும் போது அவர் ஸ்லிப்பிலோ கீப்பரிடமோ எட்ஜ் கொடுத்து அவுட் ஆகிறார்.
இந்த பலவீனம் கோலியிடம் ஆரம்பத்திலே இருந்தது தான். ஆனால் கடந்த இரு வருடங்களாகத் தான் எதிரணி பவுலர்கள் இதை விழித்துக் கொண்டு அவரது இந்த பிசிறை குறி வைக்கிறார்கள். அவர் ஆட வந்ததுமே மேற்சொன்ன பாணியில் அவரை வீழ்த்த முயல்கிறார்கள்.
 கோலி இரு விதங்களாய் பவுலர்களின் இந்த வியூகத்தை எதிர்கொள்கிறார். ஒன்று மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த பந்துகளை அடிக்காமல் தவிர்க்கிறார். நேராக வரும் பந்துகளை மட்டுமே ஒற்றை ஓட்டங்களுக்கு தட்டி விட்டு, அதிக நேரம் பவுலிங்கை சந்திக்காமல் தப்பிக்கிறார். இருபது, முப்பது பந்துகளை சந்தித்து தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமானதும் அடித்தாட ஆரம்பிக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் வைடாக வீச முடியாது, ஒரு சில பவுலர்களை கொண்டு தொடர்ந்து பேட்ஸ்மேனை தாக்க முடியாது என்பதாலும் கோலி அதிக சிக்கல்கள் இன்றி சமாளிக்கிறார்.
 இன்னொரு மார்க்கம் அடித்தாடுவது. கோலி சிலநேரம் தன்னை நோக்கி வைடாக வீசப்படும் பந்துகளை ஆவேசமாய் அடிக்க துவங்குவார். இந்த ஷாட்கள் ஒழுங்காய் அமையாவிட்டாலும் சில பவுண்டரிகள் வீசப்பட்டதும் எதிரணியினர் வியூகத்தை மாற்றி விடுவார்கள். அல்லது இவ்வாறு முயன்று கோலி அவுட்டாகி விடுவார். ஆனால் சமீபமாய் அவர் அதிகமாய் இந்த பாணியில் தான் அவுட் ஆகிறார். தனக்கு எதிராய் இந்த வியூகம் அமைக்கப்படுவதை ஒரு சவாலாக உணரும் அவர் இதனால் எரிச்சலாகிறார். எரிச்சல் கோபமாகிறது. கோபத்தில் தன் நிதானத்தை இழந்து அவுட் ஆகிறார்.
மூன்று விசயங்களை இங்கு முக்கியமாய் குறிப்பிட வேண்டும். 1) உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாய் அறியப்பட்ட யாருக்கும் இது போன்ற வெளிப்படையான ஒரு தொழில்நுட்ப பலவீனம் முன்பு இருந்ததில்லை. 2) இந்த பலவீனம் இருந்தும் கோலி தொடர்ந்து சதங்கள் விளாசுவது அவரது மனக்கட்டுப்பாடு, அபரித தன்னம்பிக்கைக்கு சான்று. 3) எதிர்காலத்தில் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து அறுபதுக்கும் மேற்பட்ட சதங்களை அடிப்பது இந்த தொழில்நுட்ப கோளாறை அவர் எவ்வளவு விரைவில் சரிசெய்ய போகிறார் என்பதைப் பொறுத்தது.
கால் பக்க ஆட்டம்
கோலியின் முக்கியமான பலம் அவரது கால் பக்க ஷாட்களை அவர் எவ்வளவு துல்லியமாய் களத்தடுப்பாளர்களை கடந்து place செய்கிறார், எவ்வளவு சரளமாய் டைமிங் செய்கிறார் என்பது. பந்து நேராய் வந்து விழும் முன்னரே அவரது கால்கள் ஷாட்டுக்கு தயாராகி விடும். அதே போல் அவரது மணிக்கட்டும் வலுவானது. சமீபத்தை நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் நேராக வந்த ஒரு பந்தை மணிக்கட்டை சுழற்றி midwicketக்கும் long onக்கும் நடுவில் அநாயசமாய் பவுண்டரி அடித்த ஸ்டைல் விவியன் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்தியது.
ஆனால் இந்த கால் பக்க ஆட்ட சிறப்பு தான் அவரது பிரச்சனைக்கான காரணமும். Off sideஇல் பந்து விழும் போதும் அவரது கால்கள் அதை கால் பக்கம் அடிக்க தயாராகின்றன.
தீர்வு என்ன?
Extra cover drive, square cut ஆகிய ஷாட்களை கோலி தன் உறையிலிருந்து வெளியே எடுப்பது தான் சிறந்த தீர்வு. எப்படி முடியும்? கோலி தனக்கு எதிரான இந்த வியூகத்தை நேர்மறையாக, ஆக்ரோசமாய் எதிர்கொள்ள வேண்டும். கோலியின் ஆட்டம் மேற்கிந்திய பேட்டிங் மேதை விவியன் ரிச்சர்ட்ஸின் மேதைமையுடன் ஒப்பிடப்படுகிறது. இம்ரான் கான் சொன்னார் “என் காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் இருந்தார். இப்போது அவர் இடத்தில் கோலி இருக்கிறார்”. ரிச்சர்ட்ஸ் கூட கோலி தனது ஆளுமையை, சுபாவத்தை தனக்கே நினைவுபடுத்துவதாய் சொல்கிறார். இதே ரிச்சர்ட்ஸுக்கும் இன்று கோலி சந்திக்கும் தொழில் நுட்ப சிக்கல் இருந்தது.
 ரிச்சர்ட்ஸ் கால் பக்கம் அபாரமாய் ஆடக் கூடியவர். இதை உணர்ந்த இங்கிலாந்தின் ஸிவிங் பவுலர்கள் பந்தை வைடாக off sideஇல் மட்டுமே தொடர்ந்து வீசினர். ஆரம்பத்தில் ரிச்சர்ட்ஸ் இந்த பொறியில் வீழ்ந்தார். ஆனால் விழித்துக் கொண்ட அவர் கால் பக்கம் ஆடுவதை தவிர்த்து off sideஇல் மட்டுமே பந்தை அடித்து நொறுக்க துவங்கினார். எது தனது பலவீனமோ அதையே பலமாக மாற்றினார்.

 கோலியின் அடுத்த எட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையின் எழுச்சி அவர் off sideஇல் ரிச்சர்ட்ஸின் எதிர்தாக்குதல் அஸ்திரத்தை கையில் எடுத்து வெற்றி காண்பாரா என்பதை பொறுத்தது! 
நன்றி: கல்கி

No comments: