Tuesday, October 4, 2016

சைக்கிள் கமலாவின் தங்கை

Image result for ஞானக்கூத்தன்

”சைக்கிள் கமலாவின் தங்கை” இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எஸ்.ராவின் semi-fictional சிறுகதை. இதில் ஞானக்கூத்தன் நேரடியாகவே வருகிறார். அவர் கா.ந.சு பற்றி பேசுகிறார். ஞானக்கூத்தனின் கவிதையில் இருந்து சைக்கிள் ஓட்டும் பெண் பாத்திரமான கமலாவின் தங்கையும் வருகிறார். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் நடுவிலானது இக்கதை. கிட்டத்தட்ட அஞ்சலிக்குறிப்பு. சிறுகதைக்கும் அஞ்சலிக்கும் இடையிலான இந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது.

 எஸ்.ராவின் ஆரம்ப கால கதைகளில் கதை என ஒன்றும் இருக்காது. ஒரு மனநிலையை துலக்கமாய் வெளிப்படுவதில் மட்டுமே குறியாய் இருப்பார். அதன் பின்னர், குறிப்பாய் கடந்த ஏழெட்டு வருடங்களில் அவர் துவக்கம், வளர்ச்சி, திருப்பம் கொண்ட முடிவு ஆகியன கொண்ட “கதைகளை” எழுதத் துவங்கினார். மேற்சொன்ன கதை அவரது ஆரம்ப கால கதைகளின் கவித்துவ செறிவு, துல்லியம், கதைத்தன்மையை விடுத்து மனநிலையை பேசுவது ஆகிய தன்மைகளை கொண்டிருக்கிறது.
இக்கதையின் மையம் சிறுபத்திரிகை வாசகர்கள், எழுத்தாளர்களின் மனநிலை. இவர்கள் எதார்த்தத்தின் விளிம்பில் எப்போதும் இருக்கிறார்கள். அன்றாட வாழ்வின் அலுப்பை, வெறுமையை சுலபத்தில் தம் இலக்கிய திளைப்புகள் மூலம் கடந்து போகிறார்கள். சகபாடிகளுடனான உரையாடல்களின் போதும் அவர்கள் தமக்குள்ளே ஊறித் திளைக்கிறார்கள். ஞானக்கூத்தனை இக்கதையின் பிரதான பாத்திரமான இளைஞன் ஒருவன் சந்தித்து பேசுகிறான். பார்த்த அடுத்த நிமிடமே ஞானக்கூத்தன் அவனிடம் அணுக்கம் பாராட்டி கவிதை குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். கடற்கரைக்கு அழைத்து போகிறார். அங்கும் கவிதை பற்றி லயித்து பேசுகிறார். அவர் போன பிறகு அவர் தனது பெயர், வேலை பார்க்கும் இடம் ஆகிய விபரங்களை கேட்கவில்லையே என அவனுக்கு தோன்றுகிறது.
ஏன் கேட்கவில்லை? ஏனென்றால் அவருக்கு அவனது அந்த எதார்த்த அடையாளம் முக்கியமில்லை. ஞானக்கூத்தனின் மிகை எதார்த்த இலக்கிய உலகில் மனிதர்களுக்கு பெயர், வேலை அவசியம் இல்லை. அது ஒரு மிதக்கும் உலகம். அங்கு ஆர்வலர்களுக்கு உடனடி அனுமதியும் உறுப்பினர் பதவியும் கிடைக்கும். இந்த அடையாளமற்ற, எதார்த்த பிடிப்பற்ற திளைப்பு அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் தன் அன்றாட வாழ்வின் வேர்களில் இருந்து விடுபட தவித்துக் கொண்டிருக்கிறான். தன்னை மற்றொருவராய் காண துடிக்கிறான். அவனது தப்பிக்கும் மனநிலையும் ஒரு சிறுபத்திரிகை உளவியல் கூறு தான்.
இக்கதையில் இரண்டே பிரதான சம்பவங்கள் தாம். ஒன்று, ஞானக்கூத்தனின் வீட்டை தேடி அலையும் போது அவரது கவிதையில் மட்டுமே உள்ள கமலா எனும் பாத்திரத்தின் தங்கை தோன்றுகிறாள். கமலா சைக்கிள் ஓட்டும் சுதந்திரப் பெண். நவீன காலத்தின் பிரதிநிதி. அவளின் தங்கையும் அக்காவை பின்பற்றி சைக்கிள் விட முயல்கிறாள். ஆனால் சைக்கிள் அவளுக்கு இன்னும் பழகவில்லை. சுவரில் போய் மோதுகிறாள். ஆனால் தவறு தன்னுடையது அல்ல, சைக்கிளுக்கு தான் ஓடத் தெரியவில்லை என அதை பழிக்கிறாள். இந்த சுட்டியான வேடிக்கையான பாத்திரத்தில் உள்ள பகடியை ரசித்தேன். இவள் தான் ஞானக்கூத்தனின் வீட்டை இளைஞனுக்கு காண்பிக்கிறாள். ஞானக்கூத்தனிடம் பிற்பாடு அவளைப் பற்றி அவன் வினவ அப்படி ஒரு பெண்ணே தன் தெருவில் இல்லை என்கிறார். ஆனால் கமலா எனும் பெண் தன் ஊரில் இருந்ததாய் சொல்கிறார். அவள் உண்மை பெயர் கமலா அல்ல. கமலம் – தாமரை – சரஸ்வதி எனும் பொருளில் தான் அப்படி பெயரளித்ததாய் ஞானக்கூத்தன் சொல்கிறார். அப்படி என்றால் கமலம் உண்மையில் இருக்கிறாரா? ”இருக்கலாம்” என ஞானக்கூத்தன் பதிலளிக்கிறார். இப்படி அவரது கவிதை பாத்திரங்களும் அவரும் எதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் நடுவில் இருக்கிறார்கள்.
இளைஞனுக்கு கோபால் என ஒரு நண்பன். அவன் தான் சிறுபத்திரிகை இலக்கியத்தை இவனுக்கு அறிமுகம் செய்தவன். அவன் முழுக்க தீவிர இலக்கிய விவாதங்களில் சிலநேரம் மூழ்கி விடுவான். ஆனால் தன்னுடன் உரையாடுபவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அவனுக்கு அக்கறையில்லை. உணர்ச்சிகரமாய், நடைமுறை சார்ந்து மனிதர்களுடன் அணுக மாட்டான். இலக்கியம் சார்ந்த லட்சியவாதம் எனும் உணர்வு தான் அவனை பிற மனிதர்களுடன் இணைக்கிறது. அதைத் தாண்டி அவன் யாருடனும் ஒட்டாமல் இருக்கிறான். இளைஞனுக்கு அவன் சிலநேரம் உணவு வாங்கி வருவான். அவன் துணிகளை துவைத்து தருவான் என ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் இந்த செயல்களில் ஒரு தனிமை உள்ளது. சிறுபத்திரிகையாளர்களால் என்றுமே மீற முடியாத ஒரு தனிமை அது.
இப்படி கதையில் ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரும் தன்னிலை சிறையில் இருக்கிறார்கள். ஞானக்கூத்தன் கதையில் முதலில் தோன்றும் போது ஒரு தெருவோர புத்தகக்கடையில் கண்களை மேய விட்டபடி இருக்கிறார். தன் அருகில் உள்ளவர்களிடம் பேச அவர் தலைப்படுவதில்லை. புத்தகங்களில் மட்டுமே முழு அக்கறை. புத்தகத்தை தேடி எடுத்து அதனை ஒரு குழந்தை போல் கையில் வாங்கி அதனுடன் பேசியபடி அங்கிருந்து அகல்கிறார்.
ஞானக்கூத்தனை இளைஞன் தேடி பின்னால் செல்கிறான். அவரிடம் பேச ஆசை. ஆனால் ஒரு தயக்கம். வீடு வரை அவர் பின்னால் சென்று விட்டு திரும்பி விடுகிறான். (சு.ராவை தான் இவ்வாறு தேடி வீடு வரை சென்று சந்திக்காமல் மீண்டது பற்றி எஸ்.ரா முன்பு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.) அவன் ஏன் அப்படி இருக்கிறான்? ஏன் எனில் நிஜ ஞானக்கூத்தனை விட அவரது பிம்பம் அவனுக்கு பிடித்திருக்கிறது. அதன் பின்னால் திரிவதில் அவனுக்கு ஒரு தனி கிளர்ச்சி. அது கலையக் கூடாது என நினைக்கிறான்.
இப்படி சிறுபத்திரிகை உலகின் உளவியல் பற்றி பல நுணுக்கமான அவதானிப்புகள் இக்கதையில் உள்ளன.
 கதை முடிவில் ஞானக்கூத்தனிடம் உரையாடி விட்டு கிளம்பும் போது அந்த இளைஞன் மனக்கிளர்ச்சியில் ஒரு பசுமாட்டிடம் ஞானக்கூத்தனின் கவிதை ஒன்றை ஒப்பிக்கிறான். அது அசமந்தமாய் வாலாட்டியபடி தலையை ஆட்டுகிறது. இந்த இடத்தில் அதுவரையிலான லட்சியவாத சிலாக்கியம் மீது ஒரு பகடி தோன்றுகிறது. இதுவும் ஞானக்கூத்தன் கவிதையில் உள்ள அம்சம் தான். அதாவது ஞானக்கூத்தனே ஒரு லட்சிய வடிவமாகவும் அதன் பகடி வடிவமாகவும் இக்கதையில் வருகிறார். இது போல் இக்கதையில் சில அழகான முரணான உபபிரதிகள் உள்ளன. சைக்கிள் கமலா ஒரு லட்சிய வடிவம் என்றால் சைக்கிள் விட முயன்று விழும், அதற்கு சைக்கிளையே வையும் அவள் தங்கை அந்த லட்சிய வடிவம் மீதான பகடி. இந்த தங்கையை சமகால பெண்ணியவாதிகள் என கருதிக் கொண்டால் இதன் முழு நகைச்சுவையும் புலப்படும்.

No comments: