காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?


 Image result for ப்ரியா தம்பி
இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண்களுக்கு பதினாறு வயதுக்கு மேல் செய்வதற்கு உருப்படியாய் ஒன்றும் இல்லாதது. நல்ல படிப்பு, வேலை ஆகிய வாய்ப்புகள் அமையும் போது பெண்களின் காதல் ஆர்வமும் குறைகிறது. இந்த கோணத்தில் இருந்து தான் ப்ரியா தம்பி எழுதுகிறார்.

எனக்கு இது முக்கியமான பார்வை எனப் படுகிறது. நகரங்களில் இன்றைய இளம் பெண்களில் பாதி பேர் பெற்றோர்களால் இருபது வயதில் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். சிலர் திருமணமானபின் கல்லூரிப் படிப்பை தொடர்கிறார்கள். மீதி பேரில் கொஞ்சம் பேர் படித்து சில வருடங்கள் வேலை செய்த பின் திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் பற்றி நிச்சயம் தயக்கம் இருக்கும். ஆனால் வற்புறுத்தல் காரணமாய் இணங்குவார்கள். இந்த இரண்டு வலைகளில் மாட்டாத பெண்கள் 26-28 வயது வரை பெற்றோர்களை டபாய்த்து தனிமனுஷியாய் வாழ்கிறார்கள். சம்பாதிக்கிற பணத்தில் நல்ல ஆடை, பை, செல்போன், சினிமா, துரித உணவு, ஊர் சுற்றல் என வாழ்க்கை பொறுப்பில்லாமல் ஜாலியாய் போகிறது. திருமணத்துடன் இவையெல்லாம் பறிபோகுமோ என அஞ்சுகிறார்கள். 28-30 ஒரு முக்கியமான கட்டம். இந்த கட்டத்தையும் கடந்து முப்பது வயதை கடந்து விட்டார்கள் என்றால் பெரும்பாலும் இவர்களுக்கு திருமணம் ஆகாது. ஆனால் 25-30 வரையிலான கட்டத்தில் தமக்கு தோதான ஆண்களை இவர்களின் மனம் தேடிக் கொண்டு தான் இருக்கும். சிலர் காதலிப்பார்கள். ஆனால் காதலை திருமணம் வரை கொண்டு சேர்க்க தயக்கம் இருக்கும். 28 வயதுக்கு மேலான பெண்களை மணம் செய்ய பெரும்பாலான ஆண்களுக்கும் விருப்பம் குறைவு. கொஞ்ச காலம் காதலித்து விட்டு கழன்று கொள்வார்கள். 30 வயதுக்கு மேல் இப்பெண்களுக்கு ஆண்கள் மீது ஒருவித அவநம்பிக்கையும், குழப்பமான ஆர்வமும் இருக்கும். 35 வயதை கடந்த பின் இவர்கள் திருமணம் இன்றியே நிம்மதியாய் வாழ்ந்து முடித்து விடலாம் என நம்பத் துவங்குவார்கள். ஆனாலும் இவர்களுக்கு குழந்தைகள் மீது ஆர்வம் இருக்கும். வெளியே குழந்தைகளை கண்டால் கொஞ்சாமல் போக மாட்டார்கள். தோழி அல்லது உறவுக்காரர்களின் குழந்தைகள் மீது தனி ப்ரியம் வைப்பார்கள். ஆங்கிலத்தில் இத்தகைய பெண்களை spinsters என்பார்கள். 40 வயதுக்கு மேல் நமக்கு உடலும் மனமும் தளரத் துவங்கும். அதுவரை அடைந்ததை தக்க வைத்தால் போதும், இனி எந்த ரிஸ்கும் சாகசங்களும் வேண்டாம் எனத் தோன்றும். Autipilotஇல் வாழ்க்கையை தொடர்வார்கள். “குறையொன்றும் இல்லை…” என தமக்குள் பாடிக் கொள்வார்கள். ஆனாலும் அலுப்பும் கசப்பும் இருந்து கொண்டிருக்கும். தனிமை அரிக்க துவங்கும்.
காதலித்து கண்மூடித்தனமாய் ஒருவன் கைபிடித்து தெரியாத இடத்துக்கு போய் வாழ்வது ஆபத்தானது இல்லையா? கொஞ்சம் பிராக்டிக்கலாய் இருக்கலாமே என ப்ரியா கேட்கிறார். இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு நிச்சயம் இக்கேள்வி உள்ளது. அவர்கள் ஆண்களுடன் சகஜமாய் பழகுகிறார்கள். ஆண்களிடம் எந்த ஆச்சரியமும் இல்லை என உணர்கிறார்கள். நம்பி ஓடிப் போக இவர்களிடம் அப்படி என்னத் தான் உள்ளது என யோசிக்கிறார்கள். இன்றைய ஆண்களும் இப்படித் தான் தமக்கும் கேட்கிறார்கள்.
இது சரியான பார்வை என ப்ரியா கூறுகிறார்.
ஆனால் இப்படி யோசிப்பது தான் ”ஆபத்தானது.” உறவுகளை இரண்டாக பிரிக்கலாம். Functional, Non-functional. அதாவது பயன்பாடு கருதிய நடைமுறை உறவுகள், நடைமுறை அர்த்தம் அற்ற உறவுகள். காதல், திருமணம் போன்றவற்றை நான் இரண்டாவது வகையில் தான் சேர்க்கிறேன். பெண்கள் திருமணம் செய்யும் முன் படித்து வேலைக்கு போக வேண்டும் என ப்ரியா சொல்வதை நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் காதலிலும் திருமணத்திலும் ஒரு கண்மூடித்தனமான பாய்ச்சல் அவசியம். இது என் அனுபவங்கள் எனக்கு கற்பித்தது. நீங்கள் எந்த சிறந்த திருமண ஜோடியையும் எடுத்துக் கொண்டு அவர்களை அணுகி அவதானியுங்கள். அவர்களிடம் ஆயிரம் பொருத்தமின்மைகள் இருக்கும். இவர்கள் ஏன் சேர்ந்து வாழ்கிறார்கள் என தோன்றும். ஆனால் அவர்களை ஏதோ ஒரு “மாயநதி” இணைத்துக் கொண்டிருக்கும். இது முக்கியம்.
விவாகரத்து ஆகி பிரியும் அளவுக்கு போகும், அல்லது பரஸ்பரம் கடுமையாய் வெறுக்கும் ஜோடிகளை எனக்குத் தெரியும். அவர்களுக்குள் நேரடியாய் பொருத்தமின்மைகள் இராது. பணம், அந்தஸ்து, மனப்பாங்கு என அனைத்திலும் ஒத்துப் போவார்கள். ஆனால் உறவுக்குள் ஈரம் இருக்காது. முட்டாள்தனமான அன்பு இருக்காது. பைத்தியக்காரத்தனமான பிரியம் இருக்காது. இந்த பிரியம் காரணமாகவே குடிகார கணவன்களை பாதுகாக்கும் மனைவிகளை எனக்குத் தெரியும். இதே காரணமாகவே தாம்பத்திய வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் தரும் மனைவியை ரசிக்கும் கணவர்களையும் தெரியும்.
 ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாத, நன்றாய் சம்பாதித்து, வீடு கட்டி, குழந்தை பெற்று, சமைத்து, ஊர் சுற்றி வாழும் ஜோடிகளும் இருக்கிறார்கள். கணவன் மீது மனைவிக்கோ மனைவி மீது கணவனுக்கோ நேரடியான புகார்கள் இருக்காது. ஆனால் இருவருக்கும் பரஸ்பரம் பேச பிடிக்காது. சேர்ந்து எதை செய்தாலும் ஆயிரம் ஊசிகளால் குத்துவது போல் இருக்கும். இது வெற்றிகரமான நடைமுறை தாம்பத்யம். இதற்கு புழல் சிறை மேல்.
பிராக்டிக்கலான அணுகுமுறை வேலையில், பேஸ்புக்கில் சந்திக்கும் functional உறவுகளுக்கு தான் தோதுபடும். காதல் மற்றும் திருமணத் தேர்வில் ஒரு கிறுக்குத்தனம் இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேலான பெண்கள் ரொம்பவே பிராக்டிக்கலாக யோசிப்பது தான் சிக்கல். அப்படியான ஒருவருடன் நீங்கள் ஐந்து, பத்து வருடங்கள் தினமும் சந்தித்து பழகினாலும் அவரது ஆளுமையில் 10% மேல் நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. ரொம்பவே தெரிந்தது போல் தோன்றும் ஆண்கள் கூட உண்மையில் அந்நியர்கள் தாம். என்ன தான் ஆராய்ச்சி செய்து மணம் செய்தாலும் அதில் ரிஸ்க் இருந்தே ஆகும். வேறு வழியில்லை. காதலும் திருமணமும் புலி வேட்டை. அங்கே ஆபத்து இருக்கும். ஆபத்து இருக்கும் இடத்தில் தான் மகிழ்ச்சியும் இருக்கும்.
பிராக்டிக்கலாய் கணக்கு போட்டு காத்திருந்தால் தோதான காலத்தில் ஒரு நல்ல காதல் அமையாதா என்ன என ப்ரியா கேட்கிறார். காத்திருக்கலாம் தான். ஆனால் உங்கள் இதயத்தை கவர்பவர்கள், கிறுக்கத்தனமாய் நேசிப்பவர்கள் அனைவரும் 20 வயதுக்குள் வந்து போய் விட்டால் என்ன செய்வீர்கள்? இதை நான் அனுபவத்தால் உணர்ந்து கொண்டேன். இந்த உலகில் நம்மை விரும்புபவர்கள் இருப்பார்கள். ஆனால் உங்களுக்காய் எதையும் விட்டுக் கொடுக்க துணிபவர்கள் மிக மிக அரிதாய் தான் கிடைப்பார்கள். அப்படி ஒருவர் கிடைத்தால் விட்டு விடக் கூடாது. அப்போது காலமும் சூழலும் அமைந்து வராவிட்டால் கூட. நான் அப்படித் தான் திருமணம் செய்தேன்.
ஒரு சின்ன வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுக்கும் அளவுக்கு தான் எங்களிடம் அப்போது சேமிப்பு இருந்தது. அந்த பணம் வந்ததும் திருமணம் செய்து கொண்டோம். ரெண்டு பேருக்கும் சமைக்க தெரியாது. நடைமுறை வாழ்க்கை பற்றி ஒன்றுமே தெரியாது. ஒருமுறை நாங்கள் சப்பாத்தி மாவு பிசைந்தோம். ஆனால் அதை தொட்டு தேய்த்து பரத்துவதற்கு மாவுப்பொடி மிச்சம் வைக்கம் வேண்டும் என தெரியாமல் மொத்த மாவையும் பிசைந்து விட்டோம். சரி அப்படியே பரத்தி பார்க்கலாம் என முயன்று சொதப்பலானது. இப்போது பத்து வருடங்களுக்கு பிறகு எப்போதெல்லாம் வீட்டில் சப்பாத்தி செய்கிறோமோ அப்போதெல்லாம் அதை நினைத்து சிரிப்போம். அது முதிராத பருவம் தான். நிறைய பிராக்டிக்கலான தப்புகள் செய்திருக்கிறோம். ஒருவேளை 30 வயதுக்கு மேல் திருமணம் செய்திருந்தால் இன்னும் நேர்த்தியாய் வாழ்க்கையை அமைத்திருப்போம். ஆனால் வாழ்க்கை அவ்வளவு குதூகலமாய், கொண்டாட்டமாய் இருந்திருக்காது. திருமண வாழ்வில் அந்த களங்கமற்ற காலகட்டம் முக்கியம்.
சரி, காதலிப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்து தான் ஆக வேண்டுமா என்று ப்ரியா கேட்கிறார். முக்கியமான கேள்வி. இன்றைய தலைமுறையினர் இப்படித் தான் குழம்புகிறார்கள். இந்த கேள்வி ஒருவித commitment phobiaவுக்குள் அவர்களை தள்ளுகிறது. நம் ஊரில் இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கான சிறந்த பாதுகாப்பையும் சூழலையும் அங்கீகாரத்தையும் திருமணம் தான் தருகிறது. இப்போதைக்கு வேறு வழியில்லை…

பின்குறிப்பு: ப்ரியா தம்பியின் இத்தொடர் நன்றாக உள்ளது. ஒரிஜினலான பார்வை, தன் அனுபவத்தை தயங்காமல் சொல்லும் பாணி, சமகாலத்தை கவனிக்கும் நோக்கு, எந்த கேள்வியையும் தன்னை முன்வைத்து உருவாக்கும் போக்கு ஆகியவை அவரிடம் நான் ரசிப்பவை. தொடரின் முதல் கட்டுரையில் மட்டும் எஸ்.ராவின் தாக்கம் இருந்தேன். ஆனால் அதை அடுத்த கட்டுரைகளில் அவர் தன் சொந்த ஸ்டைலுக்கு மீண்டு விட்டார்!

Comments

nallathorveenai said…
இக்கட்டுரை மட்டுமல்ல இவ்வாறு மிகச்சரியாக கூர்மையாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பலரையும் பார்த்து நான் இப்படி நினைத்திருக்கிறேன்.பெருங்காதலும் கொந்தளிப்பும் கொண்ட நேசத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே இதை எழுத இயலும் அபிலாஷ்.அந்தப் பிணைப்பை கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே.மிக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.