Tuesday, October 4, 2016

“ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக”


இம்மாத உயிர்மையில் வெளிவந்துள்ள “ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக” எனும் மனுஷ்யபுத்திரன் கவிதை நீண்ட நேரம் என் நினைவில் இருந்து நீங்க மறுத்தது. அதில் ஒரு இளம் பெண் சூப்பர் மார்க்கெட்டில் நீண்ட நேரமாய் அவஸ்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆணுறை ஒன்று வாங்க வேண்டும். ஆனால் யார் கண்ணிலும் படாமல் வாங்க வேண்டும். விலைப்பட்டியல் போடும் போது அது தனியாய் தெரியக் கூடாது என தேவையற்ற சில பொருட்களையும் சேர்த்து வாங்குகிறாள். அவளுக்கு ஒரு ஜோடி அரவணைத்து நிற்கும் படம் கொண்ட ஆணுறை பாக்கெட் வாங்க ஆசை. ஆனால் கூச்சப்பட்டு படம் இல்லாத பாக்கெட் ஒன்றை தேர்வு செய்கிறாள். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை போடும் பெண் ஆணுறை பாக்கெட்டை வேறு எல்லா பொருட்களையும் போன்று அக்கறையின்றி கையாள்கிறாள். அவள் கையில் பொருட்களின் பையுடன் அபரிதமான சுதந்திரத்துடன் வெளியே வீதியில் இறங்குகிறாள்.

 கவிதை இவ்வளவு தான். ஆனாலும் ஒரு அழுத்ததுக்காக, உணர்வுரீதியாய் வாசகனாய் ஒன்ற வைப்பதற்காக அப்பெண் பின்னாளில் தற்கொலை செய்வதாகவும் அவள் அம்மா அப்போது அவளது புத்தகத்தின் இடையே மகள் பயன்படுத்தாமல் வைத்திருந்த ஆணுறையை கண்டு அதிர்வதாகவும் மனுஷ்யபுத்திரன் எழுதுகிறார்.
அந்த பெண் ஏன் ஆணுறையை வாங்க வேண்டும்? அதுவும் பயன்பாட்டு நோக்கம் இல்லாதபட்சத்தில்? இது தான் கவிதையின் மையம்.
அவளுக்கு சமூக கண்காணிப்பை மீறி ஒரு செயலை செய்வதில் ஒரு த்ரில் உள்ளது. அவள் அபரிதமான சுதந்திரத்தை அச்செயல் வழி அடைகிறாள். இக்கவிதை சமூக கண்காணிப்பு பற்றினது. மீறல் வழி மனிதர்கள் அனுதினம் எவ்வாறு தம் சுதந்திரத்தை சிறுக சிறுக மீட்கிறார்கள் என அவதானிக்கிறது இக்கவிதை.
இக்கவிதையின் பிரதான உணர்வு கழிவிரக்கம். அதுவும் பலவீனமான ஒற்றை மனுஷியின் அவலமான மீறல், அவளது அபத்தம், தடுமாற்றம் மீதான நமது பரிவு.
சமீக காலமாய் மனுஷ்யபுத்திரன் 20 வருடங்களுக்கு முந்தைய தன் கவிதை பாணிக்கு திரும்புவதாய் எனக்கு தோன்றுகிறது. குறிப்பாய் அவரது “நீராலானது”, “என் படுக்கைறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” தொகுப்புகளின் பாணிக்கு. அப்போது அவர் தான் சொல்ல வரும் சிக்கல், அனுபவம், அபத்தம் எதுவென குறி வைத்து அதன் மீது லேசர் கதிர் பாய்ச்சுவது போல் எழுதுவார். ஸ்ருதி ஹாசன் போன்று கொழுப்பேயற்ற கவிதைகள் எழுதினார். அதன் பின்னர் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் குறிப்பாய் அவர் கவிதைகள் இன்னொரு தளத்திற்கு சென்றன. ஒரு நாவலின் அடர்த்தியான அத்தியாயம் ஒன்றிற்கு நிகரான கவிதைகள் எழுதினார். நிறைய அடுக்குகள், சம்பவங்கள், கேள்வி பதில்கள், நியாய தர்க்கங்கள் நிறைந்ததாய், சிதறலான சித்திரங்கள் கொண்டவையாய் கவிதைகளை மாற்றினார். ”பசித்த பொழுது”, “இதற்கு முன்பும் இதற்கு பிறகும்” ஆகிய தொகுப்புகளை இவ்வகை கவிதைகளின் உச்சம் எனலாம். இந்த முன்னகர்வின் மூலம் தன்னுடன் எழுத ஆரம்பித்த நவீனத்துவ எழுத்தாளர்களை அவர் நிச்சயம் தாண்டி சென்றார்.
ஆனாலும் எனக்கு அவரது “நீராலானது” காலத்துக்கு பாணி மீது ஒரு நினைவேக்க மயக்கம் உண்டு. மனுஷ்யபுத்திரனின் அக்காலத்துக்கு கவிதைகளில் ஒரு விசித்திரம், அந்நியத்தன்மை தூக்கலாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஐரோப்பிய தன்மை தனியாக தெரியும். இப்போது அவர் எழுதும் கவிதைகளில் மீண்டும் அந்த ஐரோப்பிய தன்மை தலைதூக்குகிறது. அதே போல் ஜிம்மில் இருந்து துள்ளி வெளியேறும் இளம்பெண்ணைப் போன்ற வடிவம் கொண்டவையாய் இவை உள்ளதும் சிறப்பு.
நான் குறிப்பிட்ட குணாதசியங்களுக்கு மேற்சொன்ன கவிதையே உதாரணம். அதில் வருகிற அந்நியமாதல், தனிமை ஐரோப்பிய கவிதைகளில் தோன்றுபவை. இந்திய கவிதை ஐரோப்பிய தன்மை கொண்டதாக இருக்கலாமா? ஆம் நிச்சயமாய். கவிதை எப்போதுமே எதார்த்தம் நோக்கி நகரத் தேவையில்லை. மலையாள சாயலில் எழுதப்படும் ஒரு தமிழ்க் கவிதை தமிழ் வாழ்வை பேசும் தமிழ்க்கவிதையை விட துலக்கமாய் தனித்தன்மை கொண்டதாய் இருக்கும். கவிதையில் இப்படி வேறொரு கலாச்சார புள்ளியில் இருந்து நம் உலகை பார்க்கும் தோரணை முக்கியமானது. நாம் நேரடியாய் பார்க்கும் தமிழ் வாழ்வை சிறுகதையில், நாவலில் சித்தரிக்கும் போது படிக்க பிடிக்கிறது. ஆனால் கவிதையில் அது அலுப்பூட்டும். கவிதையின் ஒரு தனித்துவமான பிரச்சனை இது. தமிழ் வாழ்வை எந்தளவு தமிழற்ற புலத்தில் இருந்து எழுதுகிறீர்களோ அந்தளவு அக்கவிதைகள் அபாரமாய் அமையும்.
இம்மாத உயிர்மை கவிதைகளில் மற்றொரு குட்டிக்கவிதையும் என்னை கவர்ந்தது. மேற்சொன்ன விசித்திரம், அபத்தம், எளிமை இக்கவிதையிலும் உள்ளது.
மீனாவின் சுயசரிதை

“மீனாவாக வாழ்வது
எவ்வளவு கஷ்டமென்று
மீனாவுக்கு தெரியும்”
என்றாள் மீனா

பிறகு எதையோ
யோசித்தவளாக
“மீனாவாக வாழ்வதைக் கூட
சகித்துக் கொள்ளலாம்
மீனாவுக்காக வாழ்வது
அதைவிட துயரமானது”
என்றாள் சிரித்துக் கொண்டே.


இக்கவிதையில் தனது நெருக்கடி ஏன் வருகிறது என மீனா யோசிக்கிறாள். தனது மிதமிஞ்சிய தன்னுணர்வே அதற்கு காரணம் என உணர்கிறாள். இதை உணர்ந்து கொண்டதும் அவள் தன்னை நோக்கி தானே நகைக்கிறாள். தனிமையில் தனக்குள் பேசிக் கொள்வது, சுயபிரக்ஞையுடன் தன்னை மதிப்பிட்டு பகடி செய்வது, அவள் தனது தன்னுணர்வு எனும் சிறைக்குள் தானே மாட்டி கொண்டிருப்பது ஆகியவற்றில் ஒரு ஐரோப்பிய தன்மை உள்ளது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் எழுதிய கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் மீனாவை ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக, உணர்ச்சிகரமானவளாய், நாடகீய சித்திரங்கள் நிரம்பியவளாய், சதா உடைந்து உருகி மன்றாடுகிறவளாய் மாற்றியிருப்பார். இக்கவிதை வழி இப்போது மீனா தன் ”ஆதிநிலைக்கு” மீள்கிறாள். எனக்கு இந்த மீனாவை பிடித்திருக்கிறது. இந்திய மீனா ரொம்ப எதார்த்தமாய் இருக்கிறாள் எனக்கு அவளை கவிதையில் பார்க்க “பிடிக்கவில்லை”.

No comments: