Tuesday, October 4, 2016

நாளிதழ்களின் எதார்த்தம்

Image result for reporter cartoon

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திக்கட்டுரைகள், துணுக்குகள், புகைப்படங்கள், வாழ்க்கைத்தகவல்கள், ஆளுமைகள் தம் வாழ்வை பற்றி பேசும் பேட்டிகள். இவ்வளவையும் சுவாரஸ்யமாய் படித்து கடந்த பின் ஒரு ஜனநெரிசலான தெரு வழி நடந்து வீட்டுக்கு வந்தது போல் இருக்கிறது. ஒன்று கூட நினைவில் தங்குவதில்லை. ஆனால் நாம் உறங்கும் போதும் விழிக்கும் போதும் நாளிதழ்கள் எந்திரம் போல் தகவல்களை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஏன் பேட்டிகள், வாழ்க்கை குறிப்புகள், சமூக சித்திரங்கள் கூட நமக்கு உண்மையாய் தெரிவதில்லை? ஏன் மூவாயிரம் பேர் படிக்கும் சிறுபத்திரிகை கதை ஒன்று மனதுக்கு அவ்வளவு நெருக்கமாய் தோன்றுகிறது?
 காரணம் ஒன்று தான். தினப் பத்திரிகைகள் செய்தியை மிகவும் கராறாய் தர முயல்கின்றன. அப்போது அதில் உள்ள உண்மை செத்து விடுகிறது. உதாரணமாய், ஜாம்பஜார் சாலையில் உள்ள 42 குப்பைத் தொட்டிகளில் 31 எப்போதும் நிரம்பி வழிகிறது எனும் செய்தியில் தகவல் தான் இருக்கிறது. உண்மை இல்லை.


மாறாக சற்றே பெரிய செய்திக் குறிப்புகளில் இரண்டாவது மூன்றாவது பத்திகளில் இருந்து புனைவுத்தன்மை தலை தூக்குகிறது. ஒரு கொலை நடந்த இடம், பின்னணி, ஒரு அரசியல் பேரணியின் சூழல், அங்கு உருவான தோரணைகள் பற்றின சித்திரங்கள் வரும் போது ஒரு செய்திக்குறிப்பில் ஒரு flow அந்த ரிப்போர்ட்டருக்கே தெரியாமல் உருவாகிறது. அதில் நம் மனம் திளைக்கிறது. தந்தியின் செய்திக்குறிப்பில் இந்த புனைவுத்தன்மை சற்று முரட்டுத்தனமாய் இருந்தாலும் எனக்கு அது பிடிக்கும். நான் தினத்தந்தியில் சற்று காலம் பணி செய்தேன். ஒருமுறை ஒரு இளம் பெண் தன் தங்கையையும் அம்மாவையும் கொன்று விட்டாள். அவள் காதலனுடன் சேர பெற்றோர் தடுத்ததே காரணம். அவளது அப்பா ஒரு போலீஸ்காரர். அம்மாவை கொல்வதே அவளது முதல் நோக்கம். கொலை நடுவே தங்கையும் வர அவளை மொட்டைமாடி தண்ணீர் தொட்டியில் முக்கி கொல்கிறாள். பிறகு அவள் ரயில்வே தடத்தில் தனியே திரிந்து கொண்டிருக்கிறாள். கைதாகிறாள். இந்த செய்திகளை தொகுத்து மொழியாக்கித் தர என்னிடம் எடிட்டர் கேட்டார். அப்போது ஒரு கதையில் நுழையும் கிளர்ச்சி எனக்கு கிடைத்தது. நீண்ட காலம் ரயில்வே தடத்தில் தனியே திரியும் இளம்பெண்ணின் சித்திரம் என் மனதில் இருந்தது. எனக்கு கொல்லப்பட்டவர்களை விட அப்பெண்ணின் மீது தான் பரிதாபம் அதிகம் ஏற்பட்டது.

ஹிந்துவில் இன்னும் தளுக்கான நேர்த்தியான புனைவுத்தன்மை கொண்ட செய்திக் குறிப்புகள் வரும். ஒரு பெண் தன் குழந்தையை கிணற்றில் தூக்கி போட்டு தானும் குதிக்கிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டு விடுகிறாள். அவள் மீது கொலைவழக்கு. இந்த ஒற்றைவரியில் பல வருடங்களுக்கு முன்பு துலாபாரம் என ஒரு படம் வந்தது. ஆனால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தியை நான் ஒரு நாளிதழில் படித்தேன். இதில் வரும் சிறுசிறு உணர்ச்சியற்ற தகவல்கள் வழி சட்டென ஒரு முழுமையான சித்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது. இது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. (இந்த பாணியை தான் ஹெமிங்வே தன் கதைகளில் பயன்படுத்தினார்.)

சில பேட்டிகளில் துவக்கமாய் பேட்டி காணப்படுகிறவரின் தோற்றம், உடல் மொழி, சுபாவம், அவர்கள் சந்திக்கப் போகும் இடம் பற்றி ஒரு விவரிப்பு இருக்கும். ஆனால் ஒரு செய்திக்குறிப்பில் உள்ள புனைவுத்தன்மையை இதில் காண முடியாது. செய்திக்குறிப்பின் புனைவில் எந்த தோரணையும் பிரக்ஞையும் இராது. அது இன்னும் உண்மையாக இருக்கிறது.

எனக்கு இதனால் தான் நாவல் படிப்பதற்கு இணையான போதை செய்தித்தாள் படிப்பதில் உண்டு. அதுவும் முதல் மற்றும் நடுத்தாள்களுக்கு இடையிலான தாள்களில் தான் அந்த போதை மிகவும் அதிகம்.

No comments: