Monday, October 31, 2016

கபாலியின் மற்றொரு தொன்மம்

Image result for கபாலி

“கபாலி” குறித்த கட்டுரைகளில் சிறந்தது என டி.தருமராஜுடைய மூன்று பகுதி கட்டுரை தான். மூன்று விசயங்களை ரசித்தேன்.
1)   ரஜினி எனும் தொன்மம் எப்படி “கபாலியில்” புது நிறம் பெறுகிறது. ஆண்டைகளில் தொன்மமாக இருந்தவர் எப்படி சரேலென தலித் தொன்மமாக மாற எத்தனித்தார், அதன் வியாபார சாத்தியங்கள் என்ன என்பது குறித்து டி. தருமராஜ் எழுதியிருக்கிறார். அவர் ”தொன்மம்” என்பதற்கு பதில் “திரைக்கதைக்கு வெளியே இருக்கும் திரைக்கதை” என கூறுகிறார்.
ரஜினியை பற்றி பேசும் போது இந்த தொன்ம ஆய்வு முக்கியமானது. அவரது வெற்றிக்கும் சரி எம்.ஜி.ஆரின் முந்தைய வெற்றிக்கும் சரி அவர்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் தாம் உதவின. டி.தருமராஜ் தான் அருந்ததிய மக்கள் குடியிருப்பில் தான் கண்ட நாட்டுப்புற கூத்து ஒன்றை விவரிக்கிறார். அதில் தலித் ஒருவர் ஆக்ரோசமாய் தனக்கு மேல்சாதியாய் உள்ளவனை திரும்ப தாக்கும் இடத்தை தலித் மக்கள் எவ்வாறு திரும்ப திரும்ப நிகழ்த்துப்படி நிர்பந்தித்து பார்த்து ரசித்தார்கள் என சொல்கிறார். இந்த கூத்து நிகழ்வதற்கு சற்று முன் நாயக்கர் சாதியினர் சில அருந்ததிய இளைஞர்களை கூத்து நடக்கும் இடத்தில் இருந்தே அழைத்து சென்று தாக்குகிறார்கள். தலித் மக்கள் இதற்கான எதிர்வினையை கூத்து நாயகனின் ஹீரோயிசத்தை ரசித்து கொண்டாடுவதன் வழி வெளிப்படுத்துகிறார்களே அன்றி நேரடியான எதிர்நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இதன் பொருள் என்ன?


 ஒரு சினிமா தொன்மம் (தலித் போராளியாக இருந்தாலும்) மக்களை எழுச்சி கொண்டு போராட வைக்காது. மக்கள் தொன்ம நிகழ்த்தலின் ஒரு பகுதியாக மாறி லயிப்பார்களே அன்றி தொன்மத்தில் இருந்து நடைமுறைக்கு நகர மாட்டார்கள். அப்படி நிகழும் என நம்புவது ஒரு இடதுசாரி கற்பனை மட்டும் தான். “கபாலி” ஒரு புரட்சி படம் என தலித் போராளி நண்பர்களும் அது போல் நம்ப விரும்புகிறார்கள். ஆனால் அப்புரட்சி கதையாடலுக்குள் நிகழும் புரட்சி மட்டுமே.

தருமராஜ் மற்றொன்றையும் சுட்டிக் காட்டுகிறார். ரஞ்சித் உருவாக்கும் தலித் நாயகர்களில் பெரும்பான்மையான மத்திய சாதியினர் தம்மைத் தான் காண்கிறார்கள். தலித்தை அல்ல. தொன்ம / சினிமா கதையாடல்கள் இப்படித் தான் இருக்க முடியும். அதாவது தான் உத்தேசிக்கிற ஒன்றிக்கு நேர் எதிராகக் கூட.

2)   தலித்துகள் முதலில் தம்மை அரசியலில் தம்மை ஏதுமற்றவர்களாக, ஏதிலிகளாக முன்வைக்கிறார்கள். அதை நம்புகிறார்கள். இந்த ஏக்கம் அவர்களை தம் மீட்சிக்காக, விடுதலைக்காக போராட தூண்டுகிறது. இதன் அடுத்த கட்டத்தில் தமது (கலாச்சார, தொன்ம, அரசியல், தத்துவ) மரபை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். தமது முதாதைகளின் பெருமையை பேசுகிறார்கள். அதை மீட்டுருவாக்கம் பண்ண முயல்கிறார்கள். இதை நாம் தலித் அரசியல் எழுத்துக்களில் இருந்து என்.டி ராஜ்குமார், நட.சிவகுமாரின் கவிதைகள் வரை காண இயலும். தலித்துகள் தம்மை அரசியல், பொருளாதார ரீதியாய் தக்க வைக்கும் கட்டம் இது. இது ஆபத்தான போக்கு என தருமராஜ் எச்சரிக்கிறார்.

என்ன ஆபத்து? தமது மேல்நிலையாக்கம் பற்றி தலித்துகள் கவலைப்படும் போது தம் எழுச்சியை ஒட்டுமொத்த சமூக சமத்துவம் நோக்கிய நகர்வாக பார்க்க தவறுகிறார்கள் என்கிறார். எனக்கு இந்த பார்வையில் உடன்பாடில்லை.

சமத்துவம் என்பதே ஒரு நவீனத்துவ கருத்துருவாக்கம் தானே. அது கற்பனாவாத காலத்தில் பிரஞ்சு புரட்சியின் போது ஐரோப்பாவில் காலூன்றிய ஒரு நம்பிக்கை. ஆனால் “சமத்துவம்” என்பது மற்றொரு கற்பனை. மனிதன் தன் இடத்தை தக்க வைக்க இன்னொருவர் இடத்தை அடைய வேண்டும். இது தான் மனிதனின் அடிப்படை இயல்பு. அதிகாரம் என்ற ஒரு உரையாடல் மட்டுமே இன்று சாத்தியம். எனக்கான இடத்தை எவ்வளவு விட்டுத் தருவாய் என்று எதிர்தரப்பை நோக்கி பேரம் பேச மட்டுமே இன்றைய மனிதனுக்கு முடியும். அதனால் தான் தலித்துகளில் பறையர்கள் மேலெழும் போது அருந்ததியர் தம் இடம் அவர்களால் மறுக்கப்படுவதாய் கோபமுறுகிறார்கள். அருந்ததியர் மேலெழும் போது இன்னொரு கீழ்நிலை சாதி அங்கு உருவாகும். இதில் இருந்து தப்புதலே கிடையாது.

தருமராஜ் இதை அறிவார். அதனால் தான் அவர் சமத்துவம் எனும் கனவை முன்வைக்கிறார். ஆனால் கனவு என்பது தூங்கும் போது பார்த்து சுகிக்க மட்டும் தானே. அதற்கு எதார்த்தத்தில் எங்கே இடம்? நான் வாழ்க்கையில் மிகவும் வெறுக்கும் ஒரு சொல் “சமத்துவம்”. என் 36 வருட வாழ்வில் நான் ஒரு துளி கூட சமத்துவத்தை எங்கும் பார்த்ததில்லை. அது ஒரு கற்பனாவாத பொய். டி.தருமராஜுடன் நான் உடன்படாத இடம் இது மட்டும் தான்.

3)   டி. தருமராஜ் கட்டுரையில் இன்னொரு சுவாரஸ்யமான இடம் அவர் மேற்சொன்ன தலித் அரசியல் நெருக்கடிக்கு “கபாலியில்” காணும் மற்றொரு தொன்மம். தன் மனைவி, குழந்தையை தேடி புறப்படும் கபாலியை அவர் பழம் மரபை நாடி செல்லும் தலித்தாக புரிந்து கொள்கிறார்.

 ஆனால் இந்த ஒப்பீடு கொஞ்சம் நெருடலாய் உள்ளது. மரபின் பல்வேறு சாத்தியங்களை உணர்ந்து ஒரு தலித் தன் சுய அடையாளத்தை கட்டமைப்பது புது அனுபவங்களையும் புரிதல்களையும் அளிக்கும் மிக கிளர்ச்சியான ஒரு கட்டம். ஆனால் ஏற்கனவே நன்கு அறிந்த மனைவியை திரும்ப கண்டுபிடிப்பது பழைய காதல் நினைவுகளை உறுதிப்படுத்தும் செயலும், அன்பை காணும் வேட்கையும் தான். அயோத்திதாசர் நம் மரபிலக்கியத்தில் பௌத்த பிரதிகளை கண்ட போது அவர் அடைந்திருக்கும் மனவிரிவையும் கபாலி தன் மனைவியை திரும்ப பார்ப்பதையும் ஒப்பிட முடியாது. மனைவியை திரும்ப அடைவது ஒரு பழைய ஆடையை பெட்டியில் இருந்து திறந்து எடுத்து முகர்ந்து பார்ப்பது போன்றது மட்டுமே.
ஜெயிலில் இருக்கும் போது மனைவி பற்றி கபாலிக்கு பல கனவுகள் இருந்திருக்கும். அந்த கனவுகளில் உத்வேகத்திலேயே அவன் தன்னை தக்க வைத்திருப்பான். அந்த கனவுகள் ஒரு உள்ளுணர்வாக அவனுடனே உள்ளன. அந்த உள்ளுணர்வும் எதார்த்தமும் முரண்படுகின்றன என்கிறார் தருமராஜ். இதை சமத்துவ லட்சியத்திற்கும் சுய தக்கவைப்புக்கான சமகால தலித் அரசியலுக்குமான முரணாக அவர் பார்க்கிறார்.
இந்த விசயத்தில் நான் தருமராஜுடன் ஒத்துப் போகிறேன். வயது முதிர்ந்த மனைவியும் தலை நரைத்து முதியோர் இல்லத்தில் இருக்கும் “சமத்துவமும்” ஒன்று தான். J

எண்பது, தொண்ணூறுகளில் தான் இவ்வாறு ஒரு சினிமா அல்லது இலக்கிய கதையில் பெரும் தத்துவத்தை வைத்து விவரிக்கும் போக்கு இருந்தது. எனக்கு இக்கட்டுரைத் தொடர் அதை நினைவுபடுத்தியது.

No comments: