Sunday, October 23, 2016

ஸ்வாதியும் ராம்குமாரும்: ஸ்காட்லாந்த் யார்டில் இருந்து குவாண்டநாமோ வரை

  
Image result for ராம்குமார்
-   
(அக்டோபர் 2016 உயிர்மையில் வெளியான கட்டுரை)

ஜூன் 24 அன்று கொல்லப்பட்ட ஸ்வாதியின் வழக்கு இந்தியாவில் மிகவும் புதிராக்கப்பட்ட வழக்குகளில் ஒன்று. இதற்கு இணையாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை தான் குறிப்பிட முடியும். ராஜீவ் படுகொலையை புலிகள் ஏன் செய்தார்கள், இந்தியாவில் அவர்களுக்கு அடைக்கலமும் உதவியும் அளித்த பிரமுகர்கள் யார், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச சக்திகள் யார் போன்ற கேள்விகளுக்கு சி.பி.ஐ கடைசி வரை பதில் அளிக்கவில்லை. ஒரு பேட்டரி வாங்கி அளித்த பேரறிவாளனும், ராஜீவ் கொலையாளிகளுடன் பயணம் செய்தது அல்லாமல் வேறு குற்றங்களை செய்யாத நளினியும் 25 வருடங்களுக்கு மேலாய் சிறையில் இருக்கிறார்கள். அந்த வழக்கில் முழு உண்மையும் வெளிவரக் கூடாது என்பதில் தான் சி.பி.ஐயும் நம் அரசும் மிக உன்னிப்பாக இருந்தன. சொல்லப்போனால் ஆட்சியாளர்கள் ஏதேனும் வகையில் சம்மந்தப்படும் வழக்குகளில் புலனாய்வாளர்களுக்கு அளிக்கப்படும் முதல் ஆணையே யாரையெல்லாம், எப்படியெல்லாம் விசாரிக்கக் கூடாது என்பது தான். இது எப்போதும் குற்றத்தை ஏவியவர்களுக்கு வரப்பிரசாதமாகி விடுகிறது. ஸ்வாதி கொலை வழக்கிலும் காவல் துறை தொடர்ந்து தகவல்களை மறைக்கவும் கட்டுக்கதையை உருவாக்கி பரப்பவுமே முனைப்பு காட்டியது.


பதிலற்ற கேள்விகள்

இது போன்ற போலீஸ் திரைக்கதைகளை நீதிமன்றங்கள் B, C செண்டர் ரசிகர்களை போல கண்ணை நம்பி ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் தர்க்கரீதியாய் அணுகினால் இக்குற்றபத்திரிகைகள் பல்லிளித்து போகின்றன. சி.பி.ஐ: “புலிகள் ராஜீவை கொன்றனர்”. ஏன்? “இந்திய பாதுகாப்பு படையினர் இலங்கையில் நிகழ்த்திய வன்முறைக்கு பழிவாங்க.” இக்கொலை தமக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியை, இந்தியாவின் தீர்க்கமுடியாத பகைமையை ஏற்படுத்தும் என தெரிந்துமா இதை புலிகள் செய்வார்கள்? இக்கேள்விக்கு சி.பி.ஐயிடம் பதில் இல்லை.
 தமிழக போலீஸ்: “ஸ்வாதி எனும் இன்போஸிஸ் பொறியாளரை மீனாட்சிபுரம் எனும் கிராமத்தை சேர்ந்த கல்லூரிப்படிப்பை கூட முடிக்காத ராம்குமார் கொன்றார்.”
”ஏன்?”
 “ஸ்வாதி தன் காதலை ஏற்க வில்லை என்பதால்”.
 எந்த சம்மந்தமும் இல்லாத இரண்டு சமூக நிலையை சேர்ந்த, நிலப்பரப்பை சேர்ந்த இருவர் எப்படி பரிச்சயம் கொண்டு சந்தித்து, அங்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்க முடியும்? உடனே அதற்கு போலீஸ் ”பேஸ்புக் நட்பு” என்றது. ஆனால் ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை பார்த்தால் அதில் அவர் பேஸ்புக்கை பரவலாய் பயன்படுத்திய அறிகுறி இல்லை. அவர் தன் போனில் உள்ள தொலைபேசி தொடர்புகளை பேஸ்புக்கோடு இணைத்திருக்கிறார். இப்படி செய்தால் போனில் உள்ள எண்கள் பேஸ்புக் நண்பர்கள் பட்டியலோடு கலந்து விடும். பேஸ்புக்கில் தேடியே ராம்குமாரின் தொலைபேசி தொடர்புகளை அறிய முடியும். ராம்குமாரின் வக்கீல் அளித்த கடவுச்சொல் கொண்டு அவ்வாறு ராம்குமாரின் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்த நண்பர் ஒருவர் அதில் ஸ்வாதியின் எண் இல்லை என்கிறார்.
 ராம்குமார் சென்னைக்கு வந்தது ஸ்வாதியை சந்திக்க என காவல்துறையினர் முதலில் கூறினர். அவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார் என்றனர். ஆனால் ராம்குமாரின் வக்கீல் அது உண்மையல்ல என்கிறார். ராம்குமார் சினிமாவில் பணி செய்ய விரும்பி சூளைமேட்டில் அறையெடுத்து தங்கினார். அப்பகுதியை சேர்ந்த ஸ்வாதியை எதேச்சையாய் கோயிலில் பார்த்து (”குணா” கமல் போல் !) காதல் வயப்பட்டதாய் மற்றொரு போலீஸ் தரப்பு சொல்கிறது. பேஸ்புக்கில் ஸ்வாதியின் பல தெளிவான புகைப்படங்கள் உள்ளன. அவற்றை பார்த்து காதலில் விழாத ராம்குமார் கோயிலில் வந்து தான் மனதை பறிகொடுத்தாரா? அதே போல் ராம்குமாரின் படங்களும் பேஸ்புக்கில் காணக்கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து அவர் தோற்றம் குறித்து மதிப்பிட முடியாத ஸ்வாதி நேரில் பார்த்து “நீ தேவாங்கு போலிருக்கிறாய்” என ஏன் நேரில் பார்த்த போது கரித்து கொட்ட வேண்டும்?
 சரி, ஸ்வாதியை பேஸ்புக்கில் பார்த்து கவரப்பட்டு அவருடன் பழகும் பொருட்டு ராம்குமார் சென்னை வந்தார் என்பதை ஏற்றுக் கொண்டாலும் வேலையில்லாத, சரியான பொருளாதார வசதி இல்லாத அவர் எப்படி ஒரு மேன்சனில் வாடகை கொடுத்து தங்கி பிற செலவுகளையும் சமாளிக்க இயலும்? ராம்குமாரை அறிந்த மேன்சன் காவலாளி அவர் பகலில் தன் அறையில் புத்தகங்களோடு முடங்கி கிடப்பார் என்கிறார். வேலைக்கு போகிறவர் ஏன் அறையில் பகலில் இருக்க வேண்டும்? அவர் கடைசியாக உண்ட மெஸ்ஸில் கடன் வைத்திருக்கிறார். தன் அப்பாவுக்கு போன் செய்து பணம் அனுப்ப கேட்டிருக்கிறார். வேலை செய்கிறவர்களுக்கு எப்படி இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வேண்டும். இன்னொரு பக்கம், ராம்குமாரின் குடும்பத்தினர் அவர் தன் அரியர்ஸ் பாடங்களுக்காக படிக்கவே சென்னை சென்றார், அரசுத் தேர்வுக்காக தயாரிக்க சென்றார் என வேறு காரணங்கள் சொல்கிறார்கள். பரீட்சைக்கு படிக்க ஏன் இவ்வளவு செலவு செய்து சென்னைக்கு செல்ல வேண்டும்? ஊரில் இருந்தே படிக்கலாமே! ஒருவேளை அவர் ஸ்வாதியுடன் சந்தித்து காதலை தெரிவிக்க சென்னைக்கு வந்திருந்தாலும் அதற்கு ஒரு மாதத்திற்கு மேல் தேவையில்லை.
ராம்குமார் ஏன் சென்னை வந்தார் என்பதே ஏன் இவ்வளவு குழப்பமாக உள்ளது? ஏனென்றால் போலீசும் ராம்குமார் குடும்பத்தினரும் தங்கள் தேவைக்கேற்ப கொலை நோக்கத்தை மறைக்க முயல்கிறார்கள். நீங்கள் நோக்கத்தை திரிப்பதானால் இடம், நேரம் உள்ளிட்ட பல தகவல்களை திரிக்க வேண்டும். அப்போது மாறுபட்ட முரண்பாடான தகவல்கள் கசியும். வழக்கு பலவீனமாகும். ராம்குமார் வழக்கில் போலீஸ் இவ்வாறு வழக்கின் நோக்கத்தை திரிக்கும் நோக்கத்தில் வழக்கையே பலவீனமாக ஜோடித்து பின்னர் வழக்கு தோற்கும் அவமானத்தில் இருந்து தப்பிப்பது எப்படி எனும் நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்த வழக்கின் வேறு பலவீனங்களை பார்ப்போம்.
பொதுவாக உணர்வுவயப்பட்டு குற்றங்களை செய்கிறவர்கள் ஆயுதம், தடயங்களை மறைக்கும் நிதானத்தில் இருக்க மாட்டார்கள். உதாரணமாய், நாவரசன் கொலை வழக்கில் ஜான் டேவிட் பிணத்தின் ஒரு பகுதியை கல்லூரி வளாகத்தின் அருகிலேயே மறைக்க முயன்றார். மிச்ச பாகங்களை ஊருக்கு ரயிலில் போகிற வழியில் வீசி சென்றிருக்கிறார். ஒரு தொழில்முறை குற்றவாளி இவ்வாறு தான் வசிக்கும் இடத்தின் அருகே, தான் பயணிக்கும் தடங்களில் தடயங்களை விட்டு செல்ல மாட்டான். ஆனால் ஸ்வாதி கொலை வழக்கை இப்படியான நிதானமற்ற குழப்படிகளை காண இயலாது. இக்கொலை மிக வேகமாய் தொழில்முறை கச்சிதத்துடன் நடந்து முடிந்தது. பாதி வெட்டப்பட்ட நிலையில் தப்பிக்கும் பட்சத்தில் கத்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ கூடாது என வாடகை கொலையாளிகள் பொதுவாக வாயில் வெட்டுவார்கள். அதே போல் கொலைக்கருவியில் தடயத்தை துடைத்து விட்டு கொலை களத்திலேயே விட்டு செல்வார்கள். குற்றவாளிகள் குற்றம் நடப்பதற்கு முன்பே தப்பி செல்லும் வழியை அறிந்து வைத்திருப்பார்கள். ஸ்வாதி கொலையின் போது இந்த் விசயங்கள் துல்லியமாய் நடந்திருக்கின்றன. இது வாடகைக் கொலையாக இருக்கலாம் என பலரும் ஐயப்பட காரணங்கள் இவை தான். ஸ்வாதியை கொலையாளி பல நாட்களாய் பின் தொடர்ந்தது கூட உணர்ச்சிகர கொலைகளில் நடக்கிற காரியம் அல்ல. ஏனென்றால் பரிச்சயமுள்ளோருக்கு வேவுபார்த்து வழி அறிய வேண்டிய அவசியம் இருப்பதில்லை.
அடுத்து தடயங்கள். கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய கடைகளில் உள்ள சி.சி டிவி காமிராவை ஆய்வு செய்த போலீசார் கொலையாளி என ஐயப்படுவதாய் கூறி வெளியிட்ட படங்களுக்கு இடையில் பல வித்தியாசங்கள் இருந்தன. ஒன்றில் கொலையாளி முழுக்கை சட்டையுடனும் இன்னொன்றில் அரைக்கை சட்டையுடனும் இருந்தார். ராம்குமார் கைதான பின் அவரது படத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட சி.சி டிவி படங்களை ஒப்பிட்டால் சரியாக பொருந்தவில்லை. ராம்குமார் ஒடிந்து விழுகிறார் போலவும் படத்தில் உள்ள நபர் திடகாத்திரமாகவும் தோன்றுகிறார்.
ஸ்வாதி ரயில் நிலைய இருக்கையில் இருந்திருக்கும் போது ஒருவர் வந்து அவருடன் சர்ச்சையில் ஈடுபடுகிறார், அவர் கத்தி பேசும் அரவம் கேட்டதாய் சாட்சிகள் கூறுகிறார்கள். அடுத்து ஸ்வாதி கொல்லப்படுகிறார். இருக்கையில் இருந்து அவர் ஓடி தப்பி செல்லவில்லை. வெட்டப்பட்ட இடத்திலே விழுந்து மரிக்கிறார். கொலையாளி ஆயுதத்தை தூக்கும் போது ஏன் அவர் சில அடிகள் கூட ஓட முயலவில்லை? வெட்டு பின்னால் இருந்து தாடையில் விழுந்திருப்பதாய் ஒரு மீடியா அறிக்கை கூறுகிறது? முன்னால் வந்து நின்று பேசியவர் எப்படி பின்னால் வந்து வெட்டினார்? ஒருவர் மட்டுமே தாக்கியிருக்கும் பட்சத்தில் ஸ்வாதி ஓட முயன்றிருப்பார். வெட்டுப்பட்ட பின்னும் அவர் தொடர்ந்து நகர்ந்திருப்பார். தலை வெட்டப்பட்ட முண்டங்களே சில வினாடிகள் தலையின்றி ஓடும் என கூறுகிறார்கள். ஆக ஒருவர் பிடிக்க இன்னொருவர் வெட்டியிருக்காத பட்சத்தில் ஸ்வாதியை இவ்வளவு வேகமாய் சுலபமாய் அவள் அதிக தூரம் நகர்ந்து விடாதபடி கச்சிதமாய் கொன்றிருக்க முடியாது.
 சி.சி டிவி படம் ஒன்றில் ஸ்வாதி தன் அப்பாவுடன் பைக்கில் செல்லும் போது அவர்களை பின் தொடரும் பைக்கில் இருவர் இருக்கிறார்கள். இவர்கள் யார்? ஸ்வாதியை தொடர்ந்து பல நாட்கள் பின் தொடர ராம்குமாருக்கு பைக் எங்கிருந்து கிடைத்தது? ஸ்வாதி கொலையில் ஒருவர் மட்டுமே சம்மந்தப்பட்டிருக்கவில்லை எனும் ஐயம் இங்கிருந்து தான் வலுவாய் எழுகிறது.
அடுத்து கொலை நடந்த நாள் முழுக்க ராம்குமார் தன் மேன்சன் அறையிலேயே இருக்கிறார். அவர் குற்றவாளி என்றால் ஏன் உடனடியாய் தப்பிக்க முயலவில்லை? ஆனால் அவரோ இரவு வரை காத்திருந்து ரயிலேறி பொறுமையாய் ஊருக்கு சென்றிருக்கிறார். தன்னுடைய படத்தை போலீசார் வெளியிட்ட பின் ராம்குமார் ஏன் தொடர்ந்து ஊரிலேயே இருந்தார்? ராம்குமாரை அவரது ஊரில் காவல்துறை கைது செய்த போது ஸ்வாதியின் மொபைல் போன், லேப்டாப் மற்றும் அவளது ரத்தம் தோய்ந்த ராம்குமாரின் சட்டையை கண்டெடுத்ததாய் கூறுகிறார்கள். ஒரு வாரத்துக்கு மேல் ராம்குமார் இந்த ஆதாரங்களுடன் தன் அறையில் காத்திருந்தார் என்பது நம்பும்படியாய் இல்லை. இந்த ஆதாரங்களை போலிசார் சமைத்திருக்கவே வாய்ப்பதிகம். அதாவது சென்னையில் தாம் கைப்பற்றினவற்றை மீனாட்சிபுரத்தில் கிடைத்ததாய் கட்டமைத்திருக்கிறார்கள்.
 அதே போல் சி.சி டிவி படத்தில் உள்ள நபர் ஒரு தோள் பை அணிந்திருப்பார். அதையும் ஆதாரமாய் சேர்க்க ராம்குமாரின் சகோதரி அலுவலகத்துக்கு எடுத்து செல்லும் தோள் பையை ஒரு காவலர் வந்து வாங்கிப் போயிருக்கிறார்.
ராம்குமார் கைதாகி விசாரணைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு 90 நாட்கள் முடியும் நிலையில் அவர் மர்மமான முறையில் மரணமடைகிறார். இதற்கு காரணம் காவல்துறைக்கு குற்றபத்திரிகையை தாக்கல் செய்ய இருந்த நெருக்கடி தான் என்கிறார்கள். ஒன்று, ராம்குமாருக்கு எதிரான காவல்துறையின் ஆதாரங்கள் வலுவாக இல்லை. வழக்கு நிறைய தர்க்க பிழைகளும் குழப்படிகளும் நிறைந்ததாய் உள்ளது. அடுத்து ராம்குமாருக்கு பிணை கிடைக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. அவர் உயிருடன் இருந்திருக்கும் பட்சத்தில் 90% பிணையில் வெளியே வந்திருப்பார். வழக்கு விசாரணையின் போதும் சரியாக நிரூபிக்க இயலாமல் காவல்துறை மிகுந்த நெருக்கடியை சந்தித்திருக்கும். இதை தவிர்க்கவே ராம்குமார் சிறையில் என்கவுண்டர் செய்யப்பட்டதாய் ஆக்டிவிஸ்டுகளும் அவர் தரப்பினரும் ஐயம் எழுப்புகிறார்கள்.
இல்லாத சாட்சிகளும் இல்லாமல் ஆக்கப்படும் சாட்சிகளும்
ஸ்வாதி வழக்கில் போலீஸ் தரப்பின் முக்கிய பலவீனமே போதுமான ஆதாரங்கள் இல்லை என்பது. நாவரசன் மற்றும் ராஜீவ் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரும் கொல்லப்பட்டவர்களும் ஒரே இடத்தில் இருந்ததற்கு ஆதாரங்கள் தெளிவாய் உண்டு. ஆனால் ஸ்வாதி வழக்கில் ராம்குமாரின் மொபைல் போன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றி இருந்ததாய் போலீஸ் ஆதாரம் காட்டுகிறது. அதைத் தவிர வேறு எந்த உருப்படியான சாட்சியங்களும் இல்லை. அதாவது ராம்குமாரை ஸ்வாதி அருகே அன்று பார்த்த சாட்சிகள், ராம்குமாரின் கைத்தடம் பதிந்த ஆயுதம் ஆகிய பிரதான ஆதாரங்கள் இல்லை. கொலையாளியை பார்த்ததாய் ஒரு பள்ளி ஆசிரியர் துணிச்சலாய் வந்து சாட்சி சொல்லுகிறார். மீடியாவிடமும் பேசுகிறார். ஆனால் காவல்துறை சாட்சிகளின் அணிவகுப்பை நடத்திய போது இந்த ஆசிரியரை அழைக்கவில்லை. ஏன்? வெளிநாட்டை சேர்ந்த ஸ்வாதியின் தோழி ஒருவர் போலீசிடம் சில முக்கியமான தகவல்களை தருகிறார். உடனே சில வாடகை கொலையாளிகள் அருவாளுடன் அவரை சாலையில் பின் தொடர்கிறார்கள். காவலர்கள் இருக்கும் போதே இவர்களும் தென்படுகிறார்கள். ஸ்வாதியின் அப்பா இவரை அழைத்து “நீ ஏம்மா தேவையில்லாமல் இதில் தலையிடுகிறாய்?” என மிரட்டும் தொனியில் சொன்னதாய் பிரான்ஸை சேர்ந்த பெரியாரியவாதி தமிழச்சி கூறுகிறார். பயந்து போன அப்பெண் வெளிநாட்டுக்கு தப்பி போகிறார். அங்கிருந்து அவர் தமிழச்சியிடம் போனில் புலம்பியதன் ஒலிப்பதிவை தமிழச்சி பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதைக் கேட்கிற யாருக்கும் இவ்வழக்கில் ஆபத்தான வேறு பலர் சம்மந்தப்பட்டிருக்கிறார் என புரியும்.
 அப்பெண் காவல்துறையிடம் பேசினவுடன் எப்படி அவரை மிரட்டியவர்களுக்கு அத்தகவல் போனது? காவல்துறையினர் தான் தெரிவித்திருக்க வேண்டும். அப்பெண் தமிழகத்தில் உள்ள தன் குடும்பத்தினர் தாக்கப்படலாம் என அஞ்சுகிறார். தொலைபேசி உரையாடலில் இது குறித்த அவர் பதற்றம் தெளிவாகவே தெரிகிறது. “எனக்கு இவ்வழக்கு பற்றி ஒன்றும் புதுசாய் தெரியாது. ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். அதற்கே கத்தியுடன் என்னை மிரட்ட வருகிறார்கள் என்றால் என் சாட்சியத்தில் அவர்களுக்கு ஆபத்தான ஏதோ ஒன்று இருக்கிறது தானே அர்த்தம்?” என்று கேட்கிறார் அப்பெண்.
திலீபன் மகேந்திரன் ஒரு துடுக்கான இளைஞர். பெரியாரியவாதி. அவர் இவ்வழக்கின் இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்ச தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். வழக்கு கட்டமைக்கப்படுவதன் தர்க்க பிழைகளை தொடர்ந்து முன்வைத்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு. ராம்குமாரின் வக்கீல்களின் தொடர்பு மூலம் அவருக்கு ராம்குமாரின் பேஸ்புக் கடவுச்சொல் கிடைத்தது. அவர் அப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யத் துவங்க மீடியாவில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவரின் ஆடையில் ஒருவர் எழுந்து வந்தது போன்ற சம்பவம் இது.
 திலீபன் இப்போது காவல்துறையின் கண்காணிப்பு வந்தார். அடுத்து அவரும் தமிழச்சியும் பா.ஜ.க பிரமுகரான கருப்பு முருகானந்தத்தின் துணையுடன் இக்கொலை நடந்தது என ஒரு செய்தியை வெளியிட்டனர். இதை ஒட்டி கருப்பு முருகானந்தம் வழக்கு தொடுக்க திலீபன் கைது செய்யப்பட்டார். திலீபன் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்படுகிறார். நீதிபதி கேட்கிறார் “கருப்பு முருகானந்தம் தன் மீதுள்ள வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவில் இருக்கிறார். அவர் எப்படி ஒரு வழக்கு தொடுக்க முன்வந்தார்? அப்படி என்றால் அவரையும் கைது செய்திருக்கலாமே?” காவல்துறையினர் கைகளை பிசைகிறார்கள். உடனே அவர்கள் “இவர் கொடியை எரிச்சவன் ஐயா” என்கிறார்கள். (திலீபன் மீது அப்படியான ஒரு வழக்கு ஏற்கனவே உள்ளது.) நீதிபதி சரி எக்கேடோ கெட்டுப் போங்கள் என விசாரணையின் பட்சம் திலீபனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். இந்த வழக்கில் உடனடியாய் பிணை கிடைக்கும் என்றாலும் போலீசார் திலீபனுக்கு அதை தராமல் இழுத்தடிக்கிறார்கள். சிறையில் அவரை தாக்கி மிரட்டுகிறார்கள். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் அவரும் அவர் வக்கீல்களும் குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள். இப்போது திலீபன் ராம்குமார் பற்றி பேஸ்புக்கில் அமைதி காக்கிறார். அதாவது அமைதியாக்கப்பட்டுள்ளார்.
திலீபனுக்கு இணையாக இவ்வழக்கில் தகவல்களை வெளிப்படுத்தும் பிரான்ஸ் தமிழச்சிக்கு சரமாரியாய் வசைமொழிகள் கருப்பு முருகானந்தம் தரப்பினரிடம் இருந்து கிடைக்கின்றன. அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவரை பிரான்சுக்கு போய் கைது செய்து தாக்க முடியாது என்பதால் அவமானப்படுத்தி விரட்ட முயல்கிறார்கள். அவர் பிரான்ஸில் விபச்சாரம் செய்கிறவர், அவர் தமிழர் அல்ல தெலுங்கர், ஒரு கிறித்துவர் என்பது இந்த பேஸ்புக் குண்டர்கள் பரப்பும் அவதூறுகள்
ஏன் சாட்சி சொல்ல வருகிறவர்களும் வழக்கில் காவல்துறைக்கு மாறுபட்டு புது ஐயங்களை கிளப்புகிறவர்களும் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள்? இது முழுக்க ராம்குமாரின் ஒருதலைக் காதலினால் நேர்ந்த கொலை தான் என்றால் சாட்சிகளையும் ஆக்டிவிஸ்டுகளையும் ஒடுக்க குண்டர்கள் ஏன் ஏவப்படுகிறார்கள்? இவ்வழக்கில் வேறு பல சக்திகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்னும் சந்தேகத்தை இதுவே வலுவாக்குகிறது.

வெட்டப்படும் கழுத்துகளும் வாய்களும்

இவ்வழக்கின் சம்பவங்களில் ஒரு விசித்திரமான ஒற்றுமை எப்போதும் தாக்குதல் கழுத்து அல்லது வாய் நோக்கி நடக்கிறது என்பது. பொதுவாய் தொழில்முறை குற்றவாளிகள், சீரியல் கொலைகாரர்கள் ஒரே மாதிரியான தாக்குதல் பாணியை பின்பற்றுவார்கள் என்பார்கள். ஸ்வாதி வாயிலும் கழுத்திலும் வெட்டப்பட்டார். கைது செய்யப்படும் முன் ராம்குமாரும் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றதாய் போலிசார் கூறினர். பின்னர் கழுத்து வெட்டப்பட்ட விதம் கண்டால் தற்கொலை முயற்சியாக தெரியவில்லை என பலரும் கூறினார்கள். ராம்குமாரை மிரட்டி, அவர் வாயை மூடும் விதமே அவர் கழுத்தை வெட்டியதாய் கூறுகிறார்கள். அன்று போலிசாருடன் மப்டியில் வேறு சிலரும் வந்ததாய், அவரே தன் மகனின் கழுத்தை வெட்டியதாய் ராம்குமாரின் அப்பா குற்றம் சாட்டுகிறார். அன்று அவ்வாறு வந்தவர்கள் வாடகை கொலையாளிகள் என தமிழச்சி எழுதுகிறார். சிறையிலும் ராம்குமார் தான் கொல்லப்படுவோமோ எனும் அச்சத்தில் இருந்திருக்கிறார். அவரைச் சுற்றி போலிசார் சதா கண்காணித்தபடி இருக்கிறார்கள். வேறு கைதிகள் அவருடன் பேசக் கூடாது என உத்தரவு வழங்கப்பட்டதாயும், அதையும் மீறி அவருடன் பேசின கைதி ஒருவர் கடுமையாய் சிறைக்குள் தாக்கப்பட்டதாயும் ஒரு பத்திரிகை எழுதுகிறது. ராம்ராஜ் போன்ற தன் வக்கீல்களுடன் கூட மனம் திறந்து பேச ராம்குமார் தலைப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வழக்கு மிகவும் பலவீனமாகிய நிலையில் தன்னால் விடுபட முடியும் என நம்பிக்கை வந்த பிறகே ராம்குமார் சற்றே துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் தன் வக்கீலிடம் பேசுகிறார். தான் குற்றம் செய்யவில்லை என்றும் தன் எதிர்காலம் பற்றி பல கனவுகள் வைத்திருப்பதாகவும் உற்சாகமாய் தெரிவிக்கிறார். ஆனால் காவல்துறைக்கு வேறு திட்டங்கள் இருந்திருக்க வேண்டும். ராம்குமார் மின் கம்பியை கடித்து வாய் வழி மின்சாரம் பாய்ந்து இறந்ததாய் 
அவர்கள் தெரிவித்தனர்.

வழக்கு விவாதத்தில் நுழைந்த புது பாத்திரங்கள்: பெரியாரியவாதிகளும் இந்துத்துவாவினரும்

வேறு எந்த வழக்கையும் விட இந்த படுகொலையின் மீது பல கதையாடல்கள் புனையப்பட்டன. ஸ்வாதி கொலையுண்டதும் முதல் “டிரையலரை” வெளியிட்டவர்கள் இந்துத்துவர்கள். இது பிலால் மாலிக் எனும் இஸ்லாமியர் நிகழ்த்திய தீவிரவாத செயல் என குற்றம் சாட்டினர். ஆனால் இது ஒரு மதக்கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் என மக்கள் புரிந்து கொள்ள இந்துத்துவர்கள் பின்வாங்கினர். ஆனால் விரைவில் ஸ்வாதிக்கு முகமத் பிலால் என்றொரு நண்பர் / காதலன் உண்மையிலே இருப்பது தெரிய வந்தது. அவருடன் பங்களூருவில் ஸ்வாதி சேர்ந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டது. திருமாவளவன் ஒரு படி மேலே போய் ஸ்வாதி ரம்ஸானுக்காக நோன்பிருந்தார் என்றும், இது ஒரு கௌரவக் கொலை என்றும் குற்றம் சாட்டினார். இது உண்மையோ இல்லையோ, ஸ்வாதிக்கும் பிலாலுக்குமான தொடர்பு எப்படி இந்துத்துவர்களுக்கு தெரிய வந்தது? அதுவும் கொலை நடந்த சில தினங்களிலேயே? ஸ்வாதியின் சித்தப்பா ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், வலுவான தொடர்புகள் கொண்டவர். ஆக அவர் மூலமாய் இச்செய்தி ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்துக்கு கசிந்திருக்க கூடும் என்றும் கருதப்பட்டது. ஸ்வாதி பிராமணர் என்பதும், ஸ்வாதியின் தாயார் இரண்டாவது மணம் புரிந்தவர் தான் இப்போது அவருக்கு அப்பா என அறியப்படும் சந்தான கோபாலன் எனும் தகவலும் திருமாவின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் இன்றும் பல பிராமண குடும்பங்களில் சாதி / மதம் மீறிய திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு பிராமண பெற்றோர்கள் வன்முறை மூலம் எதிர்வினையாற்றியதாய் செய்திகளை அறியோம். அதாவது கௌரவக் கொலைக்கான சமூக பண்பாட்டு சூழல் இவ்வழக்கில் இல்லை.
இதன் பிறகு கசிந்த மற்றொரு முக்கியமான தகவல் இவ்வழக்கில் ஸ்வாதியின் குடும்பத்தினருக்கு அனுசரணையாக போக வேண்டும் என காவல்துறைக்கு முதல்வரிடம் இருந்து ஆணை வந்தது என்பது. ஸ்வாதி தரப்பினர் சார்பாய் சோ ராமசாமியே முதல்வரிடம் பரிந்துரைத்ததாய் கூறப்பட்டது. இந்த இடத்தில் தான் பெரியாரியவாதிகள் காலடி வைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பிராமணியம் vs தலித் என்பதாக இவ்வழக்கை அவர்கள் எதிர்கொண்டார்கள். பெரியாரியவாதிகளில் பிரான்ஸ் தமிழச்சியும் திலீபன் மகேந்திரனும் தொடர்ந்து ராம்குமாரை ஆர்.எஸ்.எஸ் பலியாடாக மாற்ற முனைவதாக கருதினர். அவர்கள் பா.ஜ.க பிரமுகரும் முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகளில் கொலை உட்பட்ட பல குற்றங்கள் சாட்டப்பட்ட கருப்பு முருகானந்தம் ஏற்பாடு செய்த வாடகை கொலையாளிகளே இக்குற்றத்தை செய்ததாக கூறினர்.
ஆனால் காவல்துறையை போன்றே பெரியாரியவாதிகளாலும் ஒரு கதையாடலை தான் முன்வைக்க முடிந்ததே அன்றி குற்றத்தின் நோக்கத்தை அவர்களால் தெளிவுபட நிறுவ முடியவில்லை. பெரியாரியவாதிகள் ஆரம்பத்தில் இது தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுவதற்காய் ஆர்.எஸ்.எஸ்ஸினரே நிகழ்த்திய படுகொலை என்றனர். ஆனால் அதற்கு ஒரு கோயிலில் குண்டு வைத்தாலோ பிள்ளையார் சதுர்த்தியின் போது இஸ்லாமியர் வன்முறையை தூண்டியதாய் பொய்ச் சித்திரத்தை புனைந்தாலே போதுமே. ஏன் ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண்ணை வெட்டிக் கொல்ல வேண்டும்?

 பெரியாரியவாதிகளுக்கு பதிலாக இந்துத்துவர்கள் மற்றொரு கொலைக்காரணத்தை இப்போது முன்வைத்தனர்: ஸ்வாதி பங்களூரில் பணி செய்யும் போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி, அவர்களுக்கு பணிந்து தேசிய பாதுகாப்புக்கு பாதகமான தகவல்களை தன் நிறுவன டேட்டேபேஸில் இருந்து திருடி அளித்தார் என்றும், இந்த ரகசியங்கள் வெளிவராமல் இருக்கும் பட்சத்திலே அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்றார்கள் இந்துத்துவர்கள்.
தீவிரவாதிகள் தகவல்களை பெறுவதற்காய் இவ்வளவு மெனக்கெட்டதாய் உலகளவில் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தியாவில் தாக்குதல் 
செலுத்த அவர்களுக்கு தேவை ஆள் பலமும் குண்டுகளும் தான்.

சதியாலோசனை கோட்பாடுகள்: புதையும் உண்மை

இந்தியாவில் பெண்கள் மூன்று நோக்கங்களுக்காக தான் கொல்லப்படுகிறார்கள். 1) செக்ஸ், 2) கௌரவம், 3) பணம். ஸ்வாதி விசயத்தில் அவர் பெற்றோர் தரப்பில் இருந்து கௌரவம் என்பது கொலை நோக்கமாக வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. மிச்சமுள்ளது செக்ஸும் பணமும்.
ஸ்வாதி ஒரு இணைய செக்ஸ் சாட் குழுமத்திலும், குழு புணர்ச்சி அமைப்புகளும் சம்மந்தப்பட்டிருந்ததாய் சிலர் கூறுகிறார்கள். அவர் மென்பொருளை திருடி விற்றதனால் கொல்லப்பட்டதாய் கூறப்படுகிறது. ஸ்வாதி மரிப்பதற்கு முன் ஒருநாள் ரயில் நிலையத்தில் ஒருவர் (ராம்குமார் அல்ல) அவரை சந்தித்து கன்னத்தில் தொடர்ந்து அறைந்ததாய் சாட்சிகள் கூறுகிறார்கள். (போலிசார் இந்த கோணத்தை விடாப்பிடியாய் தவிர்த்து விட்டனர்.) அதே போல் ஒருநாள் ஆட்டோவில் செல்லும் போது போனில் அவர் யாரிடமோ “நான் தான் லேப்டாப்பை கொடுத்திட்டேனே, என்னை விட்டுடுங்க” என அழுததாய் ஒரு ஆட்டோக்காரர் சொல்கிறார். வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்து வாக்குமூலம் வழங்கி பின்னர் குண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்ட ஸ்வாதியின் தோழியும் திலீபன் மகேந்திரனுடனான வாட்ஸ் ஆப் தொலைபேசி உரையாடலில் (பதிவு செய்து வெளியிடப்பட்டது) இதே சம்பவத்தை குறிப்பிடுகிறார்.
மற்றொரு கொலை நோக்கம் குறித்த ஊகமும் ஒரு பத்திரிகையில் வெளிவந்தது. சென்னையை சேர்ந்த ஒரு திரை பிரபலத்தின் மகனுடன் ஸ்வாதிக்கு உறவிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட கசப்பே படுகொலைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இவற்றுடன் திருமா, பெரியாரிஸ்டுகளின் பிராமண சதி, கௌரவக் கொலை, ஆர்.எஸ்.எஸ்ஸின் இஸ்லாமிய தீவிரவாத கதையாடல்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதுவரை ஸ்வாதி கொலை பற்றி முன்வைக்கப்படும் இவ்வாறான சதியாலோசனை கோட்பாடுகள் ஒன்றோரு ஒன்று முரண்படுபவையாகவும் சற்று மிகையாகவும் படுகின்றன. உண்மை இவற்றின் விளிம்பில் இருக்கலாம். அல்லது முழுக்க வேறாகவும் இருக்கலாம். ஆனால் இதை விட தீவிரமாய் அலசப்பட்ட ஆருஷி தல்வார் கொலைவழக்கில் கூட இவ்வளவு சதியாலோசனை கோட்பாடுகள் உருவாகவில்லை. ஸ்வாதியின் சித்தப்பாவின் ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் துவக்கி வைத்த சர்ச்சைகள் அப்பெண்ணை யாராலும் கட்டுடைக்க முடியாத அரசியல் தொன்மமாக மாற்றி விட்டன. ஒருவேளை இக்கொலைக்காக வாடகை கொலையாளிகளை சிலர் அமர்த்தியிருப்பார்கள் எனில் இத்தொன்மத்தில் மிக அதிகமாய் பயனடைந்தது அவர்களாகத் தான் இருக்கக் கூடும்.

காவல்துறையின் நெருக்கடிகள்: ஸ்காட்லாந்தினர் குவாண்டநாமோ வதையாளர்கள் ஆகிறார்கள்

இந்த கொலைவழக்கில் நம் போலிசார் மிக அதிகமாய் சிறுமைப்பட்டார்கள். மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம், நீதிமன்றம் உடனடியாய் வழக்கை முடிக்க விதித்த கெடு, பொதுமக்கள் மத்தியிலான பீதி அவர்களை ஒரு பலவீனமான வழக்கை புனைந்து, போதுமான ஆதாரங்கள் இன்றி ஒருவரை கைது செய்யவும், விசித்திரமாய் இவரே குற்றவாளி என விசாரணைக்கு முன்பே அறிவிக்கவும் தூண்டியது. ராம்குமாரின் கழுத்தை அறுத்தது, அவரை மீடியாவிடம் பேச அனுமதிக்காதது, சிறையில் அவரை முழுக்கட்டுப்பாட்டில் ஒரு மௌனியாக மாற்றி வைத்திருந்தது, சிறையிலே அவர் மின்சாரம் தாக்கி (அல்லது செலுத்தப்பட்டு) மரித்தபின் அவர் உடலை மீடியாவிடம் காட்ட மறுப்பது, அவரது பிரேத பரிசோதனையில் ராம்குமார் தரப்பில் இருந்து ஒரு தனியார் மருத்துவர் கலந்து கொள்வதை கடுமையாய் எதிர்த்தது என போலிசாரின் இதுவரையிலான நடவடிக்கைகளில் குற்றங்களை மறைக்கும் ஒரு கொடுங்கோலனின் பதற்றமும் மூர்க்கமுமே தெரிகிறது. துவக்கத்தில் இருந்து இறுதி வரை ராம்குமாரை ஒரு புதிராகவே வைத்திருந்ததில் போலிசார் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள். அஜ்மல் கசாப் கூட இதை விட கௌரவமான வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு தோற்கும் என பயம் ஏற்பட்டதும், ராம்குமார் பிணையில் வெளிவந்தால் அவர் உண்மையை பேசக் கூடும் எனும் சாத்தியமுமே அவரது சிறைக்கூட மரணத்துக்கு காரணம் என கூறுகிறார்கள். ஸ்காட்லாந்த் யார்டுடன் ஒப்பிடப்பட்ட தமிழக போலிசாரின் உண்மையான குணாதசியம் குவாண்டநாமோ சித்திரவதை முகாமின் வதை நிபுணர்களுடையவை தான் என தோன்றுகிறது.

தமிழக போலீசின் நோக்கங்கள்
எந்த ஒரு வழக்கிலும் உண்மையை காண்பதை விட தமிழக போலீசுக்கு வேறு நோக்கங்களே பிரதானம்:

 1) வழக்கை அரைகுறையாய் விரைந்து முடித்து பெயர் வாங்குவது;
 2) வழக்கில் முழுமையாய் சம்மந்தப்படாத ஒரு ஏவலாளை என்கவுண்டர் செய்து, அந்த உடலின் பிம்பத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்து போலீஸ் குறித்த ஒரு அச்சத்தை சமூகத்தில் விதைப்பது (ராம்குமாரின் கழுத்து வெட்டப்பட்ட படத்தை எடுத்து முதலில் வெளியிட்டது போலீஸ் தான்); வன்முறையை கண்டு ஒதுங்கிப் போகும் மத்திய வர்க்கத்திடம் வன்முறை மீது உள்ளார்ந்த ப்ரீதியும் மதிப்பும் உள்ளது. இதை உணர்ந்துள்ள போலீஸ் தமது சமூக மதிப்பை உயர்த்தவும் உறுதி செய்யவும் அடிக்கடி ஏதாவது ஒரு குற்றவாளியின் மீடியாவில் பிணத்தை காட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

 ராம்குமாரின் மரணம் ஒரு பக்கம் ஸ்வாதி கொலையில் அவர் மட்டுமே குற்றவாளி அல்ல என மக்களை நம்ப வைத்துள்ளது. அதாவது இதுவரையிலும் போலீசார் ஆடி வந்த ஆட்டத்தில் ராம்குமாரின் இந்த இறுதி கட்ட மரணம் எனும் நகர்வு மூலம் தோற்று விட்டனர். ஆனால் இன்னொரு பக்கம் ஸ்வாதியை கொன்றதைப் போன்றே அவளது கொலையாளியையும் போலிசார் கொன்றதை மத்தியவர்க்கத்தின் ஒரு பகுதியினர் ரசித்து பாராட்டி வருகிறார்கள்.


ராம்குமார் ஒருவேளை குற்றத்தை செய்திருக்கலாம். அல்லது வேறுவகையில் அதில் சம்மந்தப்பட்டிருக்கலாம். அது அல்ல பிரச்சனை. முறையான விசாரணையோ ஆதாரமோ இன்றி இவ்வளவு துணிச்சலாய் ஒரு இளைஞரை போலீசால் பலிகடா ஆக்க முடியும், தம் விருப்பப்படி வழக்கை சமைக்கவும், மீடியாவும் ஆக்டிவிஸ்டுகளும் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் தமக்கில்லை என தவிர்க்கவும் முடிகிற போலீசாரின் அணுகுமுறை தான் அதிக கவலையளிக்க கூடியது. இந்தியாவில் நடப்பது ஒரு போலி ஜனநாயகமோ எனும் ஐயம் வலுவாக எழுகிறது.

No comments: