Tuesday, October 18, 2016

சாக்ரடீஸ் - காந்தி - இன்றைய வலதுசாரிகள்


வேலம்மாள் பொறியல் கல்லூரியின் விவாத போட்டிக்கு நடுவராக சென்ற போது எடுத்த படம் இது. விவாதத்தில் வெல்ல தர்க்கம் எவ்வளவு முக்கியம், தர்க்க ரீதியாய் எதிராளியை முறியடிக்க முடியாத போது என்னவெல்லாம் தந்திரங்கள் பிரயோகிக்கலாம், ஒரு விவாதத்தின் மைய தர்க்கம், இரண்டாம் நிலை தர்க்கங்கள் என்னென்ன என விளக்கினேன்.


முக்கியமாய் ஒரு விவாதத்தில் வெற்றி தோல்வி இறுதியானது அல்ல. அது தனிப்பட்ட வீழ்ச்சியோ எழுச்சியோ அல்ல. ஒரு விவாதத்தில் எதிர்தரப்பை முறியடிக்கும் போது அல்லது எதிர்தரப்பால் நாம் முறியடிக்கப்படும் போது ஒரு கருத்தியலோ தத்துவமோ மேலும் கூர்மையாகிறது, வலுப்பெறுகிறது.உதாரணத்திற்கு பிளேட்டோவின் Dialogoues புத்தகத்தில் இருந்து ஒரு கதையை எடுத்துக் காட்டினேன். சாக்ரடீஸ் ஒரு கருத்துமுதல்வாதி. மனிதனின் நன்மை, தீமை அவனது மனதில் இருந்துதான் வருகிறது என்றவர். ஆனால் பிளேட்டோவின் சகோதரர் குளோக்கன் மனிதனின் குணத்தை சமூக கட்டமைப்புகளே தீர்மானிக்கின்றன என நம்பியவர். அவர் சாக்ரடீஸிடம் ஒரு கேள்வி கேட்கிறார். கிரேக்க தொன்மத்தில் கைஜஸ் எனும் மன்னனின் மோதிரம் பற்றி ஒரு நம்பிக்கை உண்டு. அந்த மோதிரத்தை அணிந்தவர் பிறருக்கு புலப்பட மாட்டார். மாயமாகி விடுவார். அப்படியான மோதிரம் ஒன்று ஒருவருக்கு கிடைத்தால் அவர் சமூகம் தண்டிக்கும் எனும் பயம் இன்றி என்ன குற்றத்தை வேண்டுமெனிலும் செய்வார் இல்லையா? ஒரு பெண்ணிடம் போய் சில்மிஷம் பண்ணலாம். வங்கியில் பணத்தை திருடலாம். பிடிக்காதவரை அடிக்கலாம். கொல்லலாம். அவர் கிட்டத்தட்ட கடவுளாகி விடுவார். இந்த சூழலில் ஒருவர் மோதிரம் கைவசமான பின்னரும் நல்லவராக இருப்பாரா? இது தான் கேள்வி. நான் இதை மாணவர்களிடம் நேரடியாக கேட்டேன். அவர்கள் சிரித்தபடிவாய்ப்பே இல்லை. நிச்சயம் மோதிரத்தை கொண்டு துஷ்டகாரியங்கள் செய்வார்என்றார்கள்.


விவாதத்தில் இது ஒரு சிக்கலான இடம். இப்படியான வினாக்களை எதிரணி எழுப்பினால் அவர் பாணியில் போய் விடையளிக்க முயலக் கூடாது. அந்த கற்பனைக் கதையில் இருந்து வெளியே வந்து எதிர்தரப்பின் ஆதார நிலைப்பாடு என்னவென ஆராய வேண்டும். குளோக்கன் ஒரு சமூக கட்டமைப்பு நம்பிக்கையாளர். மனிதன் ஆதாரமாய் தன் உணர்வுகளுக்கு அடிமையானவன் என நம்புபவர். இதை உணரும் சாக்ரடீஸ் இப்படி பதிலளிக்கிறார்: “மோதிரம் கிடைக்கும் பட்சத்திலும் ஒருவர் தப்பு செய்வது அவர் தனிப்பட்ட விருப்பப்படி தான். அவர் நல்லவராக இருக்க விரும்பினால் மோதிரம் இருந்தாலும் தப்பு செய்ய மாட்டார்.”


யோசித்துப் பார்த்தால் சாக்ரடீஸ் சொல்வதிலும் உண்மை உள்ளது.
நான் மாணவர்களிடம் இன்னொரு கதையை சொல்லி இதை விளக்கினேன். “உங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பர். அவர் உங்களை மோசமாய் அவமதித்து விட்டார். அல்லது ஏமாற்றி விட்டார். அல்லது அவர் காரணமாய் நீங்கள் ஒரு உறவையோ நல்ல வாய்ப்பையோ இழந்து விட்டீர்கள். ஒருநாள் அவருடன் சுற்றுலா போகிறீர்கள். மிக உயரமாய் சிகரத்தின் விளிம்பில் இருவரும் நிற்கிறீர்கள். அவர் சட்டென குனிந்து கீழே பார்க்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை கீழே தள்ளி விட முடியும். உங்கள் மேல் ஐயம் விழாமல் தப்பித்து விட முடியும். நீங்கள் அப்படி செய்வீர்களா? அல்லது மற்றொருவர் அப்படி செய்வாரா?”
மாணவர்கள் இப்போது குழம்பி விட்டார்கள். உறுதியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் செய்ய மாட்டோம் என்றார்கள். நான் சொன்னேன்ஆக கொலை வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொல்லுவது நம் நம்பிக்கையை பொறுத்தது தான். கொலையை நம்பாத ஒருவர் இந்த சந்தர்பத்திலும் கொல்ல மாட்டார்.”
மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.


நான் மேலும் சொன்னேன்குளோகனின் வாதத்திலும், சாக்ரடீஸின் எதிர்வாதத்திலும், அவை எவ்வளவு தான் வலுவானவை என்றாலும், சிறு ஓட்டைகள் உள்ளன. இதை பயன்படுத்தி இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டே போகலாம். இங்கு வெற்றி தோல்வியே இல்லை. இந்த விவாதங்கள் மேலும் மேலும் தீவிரமாகும் போது மனித மனம் பற்றின முக்கிய உண்மை ஒன்றை நாம் கண்டுபிடித்து விடுவோம். அது தான் முக்கியம்.”


நான் அடுத்து, எப்படி குளோகன்சாக்ரடீஸ் விவாதம் இருபதாம் நூற்றாண்டில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான விவாதமாய் வளர்ந்தது என சுட்டிக் காட்டினேன். ”நம் காலத்தின் குளோகன் அம்பேத்கர், சாக்ரடீஸ் காந்தி. இன்றைய பின்நவீனத்துவ, பூக்கோவியலாளர்கள் குளோகனாகவும், இந்துத்துவ / இனவாத / மொழி, சாதி வெறி கொண்ட வலதுசாரிகள் சாக்ரடீஸாகவும் இருக்கிறார்கள். இன்றைய சர்ச்சைகள் அடிதடியாக, உணர்ச்சி தத்தளிப்பாக மாறியிருக்கலாம். ஆனால் விவாதத்தின் மையம் அன்றும் இன்றும் ஒன்று தான். உண்மை மனதில் இருக்கிறதா வெளியே இருக்கிறதா? மனிதன் தன் நம்பிக்கைகள், ஆதார குணங்களால் உருவாகிறானா அல்லது சமூக சூழ்நிலைகள் அவனை வடிவமைக்கின்றனவா?”


No comments: