Monday, October 3, 2016

அருந்ததி ராயின் அடுத்த நாவல்

Image result for arundhati roy
அருந்ததி ராயின் அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness வெளிவரும் செய்தி ஆங்கில ஹிந்து நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தியாக வந்துள்ளது. அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்: “வாழ்வுடா!”

அருந்ததி ராய்க்கு இந்த இடம் எப்படிக் கிடைத்தது? உலகமயமாக்கல், அபரித தொழில் வளர்ச்சி, படித்த மேல் மத்திய வர்க்கத்தின் எழுச்சி, உலகம் முழுவதுமான இந்தியர்களின் பரவல், இந்திய சமூகத்துக்கு ஒரு வளர்ச்சியடைந்த சக்தியாக தன்னை முன்வைக்க வேண்டிய பெரும் தேவை – இவை நிகழும் தொண்ணூறுகளில் சச்சின், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்று நவீன தொன்மங்கள், நட்சத்திரங்கள் தோன்றுகிறார்கள். இவர்களை உலக அரங்கின் முன்வைத்து முஷ்டியை உயர்த்தி காட்டுகிறோம். அருந்ததி ராயின் முதல் நாவலான God of Small Things புக்கர் பரிசை வெல்ல ஐஸ்வர்யா ராய்க்கு இணையான புகழ் இவருக்கும் கிடைக்கிறது.
 கேரளாவின் நிலப்பிரபுத்துவ, சாதிய ஒடுக்குமுறை சூழல், அதன் வன்முறை, அங்குள்ள மார்க்ஸிய அரசியல், இவற்றின் மீதான விமர்சனமும் கிண்டலும் என இங்கிருந்து ஆரம்பித்து சமகாலத்துக்கு வந்து இன்றுள்ள இளந்தலைமுறையினர் உணரும் வேரற்ற தவிப்பு, எந்த இடத்திலும் அடையாளத்திலும் பண்பாட்டிலும் தம்மை பொருத்திக் கொள்ள முடியாத அவஸ்தை ஆகியவற்றை பேசி முடிக்கிறார். இந்த நாவல் இந்தியா குறித்த ஒரு தட்டையான சித்திரம் கொண்டுள்ள வெள்ளையர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி தகவல்களும், சித்திரங்களும் கொடுத்து உலுக்கி, அவர்களின் “விசித்திர இந்தியா” எனும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்நாட்டின் பண்பாட்டையும் போக்குகளையும் அறிந்த நமக்கு இந்நாவலில் புதிதாக அறிய ஒன்றுமில்லை. கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு இது சற்றே பழைய மலையாள நாவல் ஒன்றின் ஆங்கில மொழியாக்கம் போல் தோன்றும். அதாவது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் (இந்நாவலில் மலையாள சிறியன் கிறித்துவ பண்பாடு) பல அடுக்குகளுக்குள் நாவல் பயணிக்கும் போதே வாசகனுக்கு அது அபாரமான அனுபவத்தை தரும். புதுமைப்பித்தனின் “கபாடபுரம்”, “கயிற்றரவு” போன்றவற்றை உதாரணம் காட்டலாம். ஆனால் அருந்ததி ராய் இந்த பண்பாட்டு கூறுகளை லேசாய் மீன்களின் செதில்களை திறந்து மீன்காரி காண்பிப்பது போல் ஆங்கில வாசகனுக்கு காண்பிக்கிறார். உடனே அடுத்த இடத்துக்கு நகர்ந்து விடுகிறார். மேலோட்டமாய் ஒரு விசயத்தை தொட்டு காட்டி அதிர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தினாலே ஆங்கிலேய வாசகன் லயித்து விடுவான். இந்தியா குறித்து மேலும் விவரமாய் ஆழமாய் பேசி அவனை குழப்பி ஒரேயடியாய் துரத்தி விடக் கூடாது எனும் ஆதார விதியை ராய் சாமர்த்தியாய் பின்பற்றினார்.
 ஒரு பக்கம் இங்குள்ள பிற்போக்கு கலாச்சாரம், நம்பிக்கைகள், அவற்றில் இருந்து விடுபடத் தவிக்கும் மக்கள் ஆகியோரை காட்டினால் வெள்ளை வாசகர்களுக்குள் உள்ள காலனிய மனதுக்கு மசாஜ் பண்ணி விட்ட கிளர்ச்சி கிடைக்கும். அமெரிக்க, இங்கிலாந்து வாசகர்களுக்கு கம்யூனிஸ்டுகள் என்றால் ஒவ்வாது. ஆக கம்யூனிஸ கிண்டலையும் லேசாய் நாவலில் தூவினார். அதேநேர சமூக சீரழிவுகளையும் விமர்சித்து தனக்குள் உள்ள ”புரட்சியாளரையும்” ராய் வெளிக்கொணர்ந்தார். நாவலில் பெண்ணிய டெம்பிளேட்டும் செயல்படுகிறது. எல்லா பெண் பாத்திரங்களும் ஒன்று தமக்கு விருப்பமான ஆணை அடைவதில்லை. அல்லது ஆண்களால் ஒடுக்கப்பட்டு வெறுமையின் பள்ளத்தாக்கில் தள்ளப்படுகிறார். ”ஏ கேடுகெட்ட ஆண்சமூகமே” என கூவ விரும்பும் ஆரம்ப நிலை விடலை பெண்ணியவாதிகளுக்கும் இந்நாவலில் கொஞ்சம் மசாலா வைத்திருந்தார். இப்படி இந்நாவல் ஒரு கனகச்சிதமான பேக்கேஜ்.
 பிற்போக்கான அறுபதுகளில் இருந்து இன்றுள்ள உலகமய தாராளவாத சமூகம் வரை ஒரு வரலாற்று சித்திரத்தை அளிப்பது, நாவலில் மைய பாத்திரம் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு சென்று சில காலம் வாழ்வது இந்திய ஆங்கில நாவல்களுக்கான ஒரு கம்ர்ஷியலான மற்றொரு டெம்பிளேட்டையும் ராய் உருவாக்கினார். இந்திய ஆங்கில நாவல்கள் தாராளமயமாதலின் குழந்தை என்பதால் அதன் வரலாற்று காலத்தை எப்படி காட்டுவது எனும் கேள்வி எழுகிறது. ஜெயமோகன் பிச்சைக்காரர்கள் பற்றி ஒரு நாவல் எழுதலாம். அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோ காலகட்டம் பற்றி எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பெயளவில் மட்டும் இந்தியனான வாசகனுக்கும், இந்தியாவை பற்றி மீடியா வழி மட்டுமே அறிந்த வெள்ளை வாசகனுக்கும் இது போன்ற உள்ளூர்தன்மை கொண்ட சித்திரங்களில் ஆர்வமில்லை. அவனுடைய காலம் என்பது ஐரோப்பிய தாக்கம் இந்திய வரலாற்றை மாற்ற துவங்கிய காலம். அல்லது ஐரோப்பிய காலனியவாதிகள் கைவிட்ட இந்தியாவுக்கு என்ன நேர்ந்தது என பேசும் வரலாறு. எப்படியும் இந்த வரலாற்று காலத்தில் ஒரு “வெள்ளை” நிழல் விழ வேண்டும்.
 அதே போல் நாவலின் “இடமும்” திருநெல்வேலி ஜில்லாவில் ஆரம்பித்தாலும் உலகம் முழுக்க ஒரு சுற்று சுற்றி வர வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஆரம்பித்து அங்கு வாழும் இந்தியனின் மன அலைகளாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இந்த டெம்பிளேட்டை நாம் ஆரம்ப கால இந்திய ஆங்கில நாவலாரிசியர்களான ஆர்.கே நாராயணனிடம் பார்க்க முடியாது. அருந்ததி ராய் இதை (வணிகரீதியாய் வெற்றிகரமாய்) கட்டமைத்து தன் வாரிசுகளுக்கு கையளித்தார்.
ராயின் இந்த முதல் நாவல் இப்படித் தான் இந்திய ஆங்கில வெற்றி நாவல்களுக்கான அரங்கை அமைத்து கொடுத்தது. ராய்க்கு பின்வந்தவர்களில் ஜும்பா லஹரி போன்றவர்கள் அவரை விட அதிக ஆழமுள்ள தளம் கொண்ட எழுத்தை பயின்றார்கள். அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள்.
ரெண்டாயிரத்துக்கு மற்றொரு மாற்றம். ”நம் இந்தியாவே ஒரு அமெரிக்கா தானே” என படித்த மேற்தட்டினர் நம்ப துவங்கினார்கள். அப்போது அவர்களுக்காக படித்து, ”அமெரிக்க இந்திய” உயர்தட்டுக்கு நகர விரும்பும் ஒரு தலைமுறையின் சிக்கல்களை பேசும் (அதோடு ராயின் சமூக சீரழிவு விமர்சனங்களும் தாங்கிய) படைப்புகள் வந்தன. சேத்தன் பகத், அரவிந்த் அடிகா போன்றோர் தோன்றினார்கள். இவர்களிடம் “உலகமய” காலம், இடம், வரலாறு ஆகிய டெம்பிளேட்டுகள் இருக்காது. மேலும் இவர்கள் இந்திய நாவல்களை இந்திய வாசகனுக்கே விற்று சம்பாதிக்கலாம் என நிரூபித்து வெற்றி கண்டார்கள்.
 சமூகம் பொருளாதார ரீதியில் வளர்ந்து மாறுதல் அடையும் போது அடுக்குமுறை கலைத்து அடுக்கப்படும். கீழே இருப்பவர் மேலே செல்வார். அப்போது என்னவகையான பிரச்சனைகள் வரும் எனும் கேள்வி இன்றைய தலைமுறைக்கு உள்ளது. ரோட்டில் கைவண்டி தள்ளிக் கொண்டிருந்தவன் ரௌடியிஸம், ரியல் எஸ்டேட், அரசியல் என்று முன்னேறி வந்து பென்ஸ் காரில் செல்கிறான் என்றால் அவனைப் பார்த்து படித்த மேல்தட்டு பயப்படும். அவனைப் பற்றி அறியவும் தம் பதற்றத்தை பரிசீலிக்கவும் விரும்பும். ”அவனைப்” பற்றி (அவன் தரப்பில் இருந்தும்) அரவிந்த அடிகா எழுதினார்.
இப்படி God of Small Thingsஇல் இருந்து நாம் வேறு ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம். எல்லா தடபுடலையும் ஆரம்பித்து வைத்தவர் 19 வருடங்களுக்கு பிறகு இப்போது தன் இரண்டாவது நாவலை எழுதி முடித்து விட்டார். நாவலின் தலைப்பை பார்க்கும் போது அது பின்நவீனத்துவ பாணியிலான அரசியல் பகடியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன்.

நான் நிச்சயம் இந்த இரண்டாவது நாவலை படிக்க விரும்புகிறேன். என்னதான் ராய் மீது விமர்சனங்கள் வைத்தாலும் எனக்கு அவர் மொழி மீது மரியாதை உண்டு. முதல் நாவலில் அவர் பயன்படுத்திய நான்லீனியர் ஸ்டைல், சொற்களை பயன்படுத்துவதில் ஒரு விளையாட்டுத்தனம், குழந்தைகளின் மனநிலையை, சிதைவுற்ற சமகால மனநிலையை சுட்டும் விதம் நினைவுகளை அவர் கலைத்து, சிதைத்து மூட்டமாய் சித்தரித்த விதம் என்னை கவர்ந்தது. 

No comments: