Saturday, September 10, 2016

தமிழ் நாடு பிரீமியர் லீக்: அரசியலும் இளம் நட்சத்திரங்களும்

(கடந்த வார கல்கியில் வெளியான கட்டுரை)
தமிழக கிரிக்கெட் வாரியம் பல்வேறு தமிழக மாவட்ட வீரர்களை கொண்டு ஒரு மினி ஐபிஎல் நடத்துகிறது: TNPL – Tamil Nadu Premier League. கோவை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், சேப்பாக், தூத்துக்குடி, காஞ்சிபுரம், காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கின்றன. அம்பானியின் பினாமி நிறுவனம், தந்தி டிவியின் குழுமம், லைக்கா எனும் சினிமா தயாரிப்பு நிறுவனம் போன்ற சில பெரும்புள்ளிகள் அணிகளை வாங்கி இருக்கிறார்கள். ஸ்டார் சேனலில் நேரடி ஒளிபரப்பு, மாதவன், சமந்தா போன்ற திரைநட்சத்திரங்கள் பங்கேற்ற துவக்க விழா, டீன் ஜோன்ஸ், பிரெட் லீ, ஸ்ரீகாந்த், லஷ்மண் சிவராம கிருஷ்ணன் போன்ற பிரபல வர்ணனையாளர்கள் என் டி.என்.பி.எல் ஒரு நட்சத்திர, சர்வதேச தோரணை கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம்
டி.என்.பி.எல்லின் பிரதான கவர்ச்சி அது அதிகம் கிரிக்கெட் புழங்காத மாவட்டங்களில் T20 கிரிக்கெட்டை கொண்டு போகிறது என்பது. சேப்பாக்கில் ரஞ்சி டுரோபி நடந்தால் கூட அதைப் பார்க்க பாதி மைதானமாவது கிரிக்கெட் விசுவாசிகளால் நிறைந்து விடும். ஆனால் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் நேர் எதிரானது. இப்போது திண்டுக்கல், நெல்லை போன்ற மாவட்ட மைதானங்களில் ஆடப்படும் டி.என்.பி.எல் குடும்ப பார்வையாளர்க்ள், இளைஞர்களை பெருமளவில் ஈர்க்கிறது. இது வருங்காலத்தில் தமிழக கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கும். சிறுநகர, கிராமத்துக்கு மக்களையும் இந்த எலைட் ஆட்டத்தை நோக்கி இழுக்கும்.

அரசியல்
இந்திய கிரிக்கெட்டின் எந்த மாற்றத்திலும் என்.ஸ்ரீனிவாசனின் பெயர் இழுபடாது இருக்காது. அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றில் இருந்து தன் தலைமை பதவிகளை இழந்தார். கௌரவமாக அல்ல. கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான சூதாட்ட குற்றச்சாட்டு, அந்த அணியின் இருவருட தடை அவரை இன்னும் தளர்த்தியது. இந்த பின்னடைவுகளுக்கு எதிராக தமிழக கிரிக்கெட் வாரிய தலைவரான ஸ்ரீனிவாசன் இப்போது மற்றொரு மினி ஐபிஎல்லை ஒரு மாற்றாக அறிமுகப்படுத்த முயல்கிறார் என இது பார்க்கப்படுகிறது.
 இவ்விசயத்தில் தமிழக வாரியத்துக்கும் இந்திய வாரியத்துக்குமான மோதல் இப்போதே ஆரம்பித்து விட்டது. டி.என்.பி.எல்லுக்காக பிஸ்லா, பாட்டியா போன்ற சில வெளிமாநில வீரர்களை ஆட அழைப்பதற்கு இன்னும் இந்திய வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. டி.என்.பி.எல் நடக்கும் போது இந்திய வாரியம் இன்னொரு பக்கம் துலீப் கோப்பை என முக்கியமான உள்ளூர் ஆட்டத்தொடரை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவிலும் இந்திய ஏ அணி ஒன்று ஆடி வருகிறது. இந்த இரண்டிலும் பெரும்பாலான உள்ளூர் நட்சத்திரங்கள் ஈடுபட்டு வருவதால் டி.என்.பி.எல் கொஞ்சம் ஒளி மங்கி போய் விட்டது. இந்திய வாரியத்துக்கும் தமிழக வாரியத்துக்கும் (அதாவது ஸ்ரீனிவாசனுக்கும் அனுராக் தாக்குருக்கும் இடையிலான) இந்த ஈகோ மோதல், அரசியல் இழுபறியில் டி.என்.பி.எல் மாட்டிக் கொண்டிருக்கிறது.
 நட்சத்திர பங்களிப்பும் மீடியா கவனமும் பெரும்ளவில் இல்லை என்றாலும் டி.என்.பி.எல் சில சிறந்த உள்ளூர் வீரர்க்ளை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. குறிப்பாக பாபா அபராஜித், ஆர்.சதீஷ், ஆந்தொனி தாஸ், எம். விஜய் குமார் ஆகியோரை சொல்லலாம். இந்நால்வரும் சர்வதேச தரம் கொண்டவர்கள்.
பாபா அபராஜித்
 அபராஜித் 19 வயதுக்கு கீழானோருக்கான உலகக்கோப்பையை இந்திய வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அபராஜித் கொஞ்சம் வி.வி.எஸ் லஷ்மணை நினைவூட்டும் wristy பேட்ஸ்மேன். அபாரமான டைமிங் கொண்டவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். 2013இல் துலீப் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்தார். திருவள்ளூர் அணியின் தலைவராக இருக்கும் இவர் டி.என்.பி.எல்லின் முதல் சதத்தை அபராஜித் அடித்திருக்கிறார்.
Off sideஇல் மிக நளினமாய் பந்தை விரட்டும் அபராஜித் T20க்காக இதே ஷாட்களை சற்று தூக்கி அடிக்கிறார். கவர் பகுதிக்கு மேலாக இவர் தூக்கி அடிக்கும் சிக்ஸர்கள் அனாயசமாய், வெகு அழகாக இருக்கின்றன. ஒரு பின்னங்கால் straight driveஇல் பார்க்க கொஞ்சம் சச்சின் டெண்டுல்கர் சாயல். சிக்ஸர் அடிக்கும் போதும் முழங்கையை இவர் நேராய் உயரமாய் வைத்திருப்பது பார்த்தால் மரபான கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகிப்பார்கள். அபராஜித் நிச்சயம் எதிர்காலத்தில் ஐ.பி.எல்லிலும் இந்திய அணியிலும் ஆடப் போகிறார். அவரிடம் இப்போதே அந்த தரம் ஜொலிக்கிறது.

ஆர்.சதீஷ்
சதீஷை ஐ.பி.எல் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக கொஞ்ச காலம் ஆடினார். நல்ல கீழ்வரிசை பேட்ஸ்மேன். மிதவேக பவுலர், சுறுசுறுப்பான களத்தடுப்பாளர். இப்போது சதீஷ் ஐ.பி.எல்லில் கொல்கொத்தா அணியில் ஆடுகிறார். சதீஷ் டி.என்.பி.எல்லில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைவர். காரைக்குடி அணிக்கு எதிரான இவரது 46 ஒரு பெரிய ஸ்கோரை தன் அணி எட்ட உதவியது.
சதீஷ் தொண்ணூறுகளில் இந்தியாவுக்காக ஆடின ராபின் சிங், இப்போதைய நம் ஒருநாள் அணித்தலைவர் தோனி ஆகியோரின் பாணியை கொண்ட ஒரு பேட்ஸ்மேன். சம்பிரதாயமான காலாட்டமோ தடுப்பாட்டமோ இல்லை. சுலபத்தில் சிக்ஸர் அடிக்கும் திறனும், ஒற்றை இரட்டை ஓட்டங்களுக்காய் முயல் போல் ஓடும் எனர்ஜியும் கொண்டவர். எந்த கட்டத்திலும் மனம் தளராது போராடி அணியை வெற்றியின் அருகில் கொண்டு போய் சேர்ப்பவர்.

எம். விஜய் குமார்
விஜய் குமார் அதிகம் அறியப்படாதவர். டி.என்.பி.எல்லில் காரைக்குடி அணிக்காக ஆடுகிறார். ரொம்ப இயல்பான ஒரு stroke maker இவர். சேப்பாக் அணிக்கு எதிராக இவர் அடித்த 46 ஒரு வாணவேடிக்கை இன்னிங்ஸ். அலட்டிக் கொள்ளாமல் கம்பீரமாய் இவர் அடிக்கும் சிக்ஸர்கள் கொஞ்சம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாய் லெண்டில் சிம்மன்ஸ் நினைவு வருகிறார். (2016 T20 உலகக்கோப்பை அரை இறுதியில் தனது 82 அடித்து இந்தியாவை நாக் அவுட் செய்தவர்.) விஜய் குமார் தொடர்ந்து உழைத்து ரன்களை குவிக்கும் பட்சத்தில் நாம் ஒருநாள் அவரை இந்திய அணியில் காண முடியும்.

ஆந்தொனி தாஸ்
ஆந்தொனி தாஸ் இப்போதைய தமிழ்நாடு அணியின் பிரதான வேகவீச்சாளர். ஒரு வறிய மீனவப் பின்னணியில் இருந்து தன் உழைப்பு மற்றும் திறமையை மூலதனமாய் கொண்டு இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறார்.

டி.என்.பி.எல்லில் சேப்பாக் கில்லீஸ் அணிக்காக ஆடும் ஆந்தொனியின் பவுலிங் ஸ்டைல் சற்று முகமத் ஷாமியை நினைவுபடுத்துகிறது. இவர் ஒரு டிப்பிக்கல் டென்னிஸ் பந்து பவுலர் எனலாம். வேகமாய் ஸ்டெம்புக்கு நேராய் கூர்மையாய் வீசுகிறார். Round arm பவுலர் என்பதால் இவரது யார்க்கர்களை ஆடுவதும் கணிப்பதும் சிரமம். தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் தன் எனர்ஜியை தக்க வைக்கிறார். இந்த ஆட்ட வடிவில் எப்படி வீச வேண்டும் என அவருக்கு தெரிகிறது: முழுநீளம் மற்றும் பவுன்சர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துகிறார். டி.என்.பி.எல்லில் பிற வேக வீச்சாளர்கள் பேட்ஸ்மேன் விரட்டும் விதம் டெஸ்ட் மேட்ச் நீளத்தில் வீசி அடி வாங்க, ஆந்தொனி மிகத்தெளிவான திட்டங்களுடன் செயல்படுகிறார். பிற பவுலர்களிடம் இல்லாத ஒரு முதிர்ச்சி இவரிடம் உள்ளது.


காரைக்குடி அணிக்கு எதிராக 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவரது ஸ்பெல் இவர் விரைவில் ஐ.பி.எல் ஆடுவார் என உணர்த்தியது.

No comments: