Sunday, September 11, 2016

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

இப்படம் மேலோட்டமாய் tunnel vision எனப்படும் பார்வைக்குறைபாட்டை கொண்டவனின் ஒரு நெருக்கடியை பேசுகிறது. இக்குறைபாடு கொண்டோருக்கு பார்வைப்புலன் குறுகியதாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடும். சுற்றிலும் இருப்பது தெரியாது, எதிரில் உள்ள ஒரு சிறு வட்டத்துள் மட்டுமே பார்வை பதியும். காகிதத்தை டெலஸ்கோப்பாய் சுருட்டி அதன் வழி உலகை சதா பார்ப்பது போன்ற அனுபவம் இது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த tunnel vision ஒரு உருவகமாய் அது பயன்படுத்துகிறது. ஆழமாய் பார்த்தால் இது பார்வைக் குறைபாடு பற்றின கதை அல்ல. “குறுகின” வாழ்க்கை பார்வை கொண்டவன் பற்றின கதை. அவனால் ஒரு சமயம் தனக்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி மட்டுமே காண இயலும். தான் காதலிக்கும் பெண், அவளை அடைவது எப்படி என யோசிப்பான். தன் பார்வை குறையை எப்படி சரிபடுத்துவது என அக்கறைப்படுவான். வேறு எந்த மனித பிரச்சனைகளும், புற உலக சிக்கல்களும் அவனது (மனக்)கண்ணில் படாது. அதனால் தான் அவன் காதலியின் மரணத்திற்கான பொய் சாட்சியாய் மாறி லஞ்சம் பெறுகிறான். அவனுக்கு இதை செய்வதில் உறுத்தலே இல்லை. இறுதியில் ஒருவேளை அவனே கூட அவளை கொன்றிருக்க கூடும் எனும் குறிப்பு வருகிறது.
 இவை எல்லாமே அவன் தன் சுயநலத்துக்காக செய்வன அல்ல. சுயமையவாதம் தான் அவன் பிரச்சனை, தன்னலம் அல்ல. தன்னை தவிர பிறர் மீது அக்கறை காட்ட இயலாமை தான் அவனது பாத்திரத்தின் மைய பிழை.
படத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உள்ளது. அவன் உலகையே சாமர்த்தியமாய் ஏமாற்றி 25 லட்சம் சம்பாதித்திருப்பதாய் எண்னும் போது அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்து பார்வையை மீட்டுத்தருவாய் சொல்லி மருத்துவமனை அவனை ஏமாற்றுவதை அறிய வருகிறான். மேலும் அவனது பார்வைக்குறைபாட்டுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, அவன் விரைவில் பார்வையை முழுக்க இழக்கப் போகிறான் என அவனது மருத்துவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாய் கைவிடப்படும் அவன் தன் குற்றங்களை எண்ணி மனம் கலங்கி அழுகிறான்.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” படித்தவர்களுக்கு இது ரஸ்கோல்நிக்கோவின் கதை என உடனே புரியும். மணிகண்டனின் படத்தின் தலைப்பு இந்த குறிப்பை வெளிப்படையாகவே வைக்கிறது. “குற்றமும் தண்டனையில்” நாயகன் தொடர்ந்து தனது சிறிய மாடி அறையில் புகுவதில் படிக்கட்டுகள் வழி இறங்கி ஏறுவதுமாய் இருப்பான். இந்த சிறிய மாடிக்குடியிருப்பு அவனது இருண்ட மனதின் குறியீடு என்பார்கள். இப்படத்திலும் நாயகன் அவ்வாறே ஒரு சிறிய மாடி வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது தனியான போக்குவரத்து பலமுறை காட்டப்படுகிறது.
 தஸ்தாவஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிக்கோவ் வட்டிக்கு கடன் அளிக்கும் ஒரு மூதாட்டியை கொல்கிறான். அவன் அதற்கு நியாயப்படாய் பல சமூக மேம்பாட்டு, விடுதலை கோட்பாடுகளை முன்வைக்கிறான். ரஸ்கோல்நிக்கோவின் tunnel vision அவனது தர்க்கமும் அன்பை புரிந்து கொள்ள முடியாத குறுகின மனப்பான்மையுமே. இறுதியில் அவன் தன் கொலை எந்த சமூக புரட்சியையும் விளைவிக்காது, அது ஒரு மாபாதகம் என உணர்கிறான். தான் ஒரு பாவியாக இருந்த போதும் தன்னை மாறுபாடின்றி நேசிக்க ஒரு சோனியா எனும் ஒரு பெண் தயாராக உள்ளதை அறிய வரும் போது அவன் அன்பின் மகத்துவத்தை அறிகிறான். மாற்றம் என்பது அகத்தே நிகழ வேண்டும், சமூக அளவில் பலவந்தமாய் அல்ல என அவன் உணர்கிறான்.
இந்த ”அன்பின் மறுமலர்ச்சி” மட்டுமே மணிகண்டனின் படத்தில் இல்லை. ஆனால் ரஸ்கோல்நிக்கோவின் மனப்பிரச்சனைக்கு ஒரு துல்லியமான விஷுவல் மொழியை மணிகண்டன் அளித்திருக்கிறார். படம் முழுக்க ஒளிப்பதிவு அற்புதமாய் உள்ளது. Tunnel vision வழியாக தான் மொத்த படமும் பயணிக்கிறது.

 பார்வையாளர்களுக்கு உலகை முழுக்க குறுகி நுணுகி மட்டுமே பார்ப்பதன் ஒரு இடுங்கி உணர்வை ஒளிப்பதிவு அளிக்கிறது. முக்கியமாய் ஒளிப்பதிவு மைய பாத்திரத்தின் மனதிற்கான போக்கை காட்டுவதற்கான கருவியாக பயன்படுத்தி இருப்பதை மிகவும் ரசித்தேன். தமிழில் ஒரு மைல்கல் இந்த படம்!

No comments: