Tuesday, September 6, 2016

டி.எம் கிருஷ்ணா: சாதியும் இசையும்

Image result for கிருஷ்ணா மகசேசே விருது
டி,எம் கிருஷ்ணா

இம்மாத உயிர்மையில் ஷாஜி டி.எம் கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். விருது டி.எம் கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை அடித்தட்டினருக்கு கொண்டு சென்றதன் மூலம் சாதிய அடுக்குகளை கலைத்து சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. 1) அப்படி கர்நாடக இசையை சேரியில் பாடுவதன் மூலம் சாதியை அழிக்க முடியுமா? 2) கர்நாடக இசையை வெகுஜன இசையாக மாற்ற முடியுமா?

சாதி என்பது மனிதனின் அதிகார, அந்தஸ்து வேட்கையின் மற்றொரு வடிவம், அது உள்ளிருந்து குணமாக வேண்டிய வியாதி, அதை இசை மூலம் அழிக்க முடியாது என்கிறார் ஷாஜி. எனக்கு இக்கருத்துடன் முழுக்க உடன்பாடு உண்டு. பொதுவாக இசை மனிதனின் அகந்தையை கரைத்து அழுக்காறை அகல செய்யும் என்கிறார்கள். எனக்கு மனித மனம் அவ்வளவு எளிமையானது அல்ல என படுகிறது. ஒரு கொலைகாரன் கூட கொலைக்கு சற்று முன்பு இசையை ரசிக்க முடியும்.

டி.எம் கிருஷ்ணாவுக்கு சாதியம் குறித்த ஆய்வு நோக்கோ ஆழமான பார்வையோ இருப்பதாய் எனக்கு படவில்லை. அவரது கட்டுரைகளை ஹிந்து ஆங்கில நாளேட்டில் படித்திருக்கிறேன். ஒரு துடுக்குத்தனமான முற்போக்குவாதி. துணிச்சலாய் அரசியல் பேசும் ஒரு நட்சத்திரம் என்பதே எனக்கு அவர் குறித்துள்ள சித்திரம்.

 அவருக்கு சாதி அமைப்பின் உச்சத்தில் இருப்பது சம்மந்தமாய் ஒரு குற்றவுணர்வு இருக்கலாம். பொதுவாய் பல எலைட்டுகளுக்கும் இந்த குற்றவுணர்வு உண்டு. அவர்கள் தானதர்மம் செய்வார்கள், சமூகசேவை, தெருவில் திரியும் நாய் பூனைகளை காப்பாற்றுவது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது, மாடுகளை காப்பாற்றி கோசாலாக்களில் வைத்து பராமரிப்பது என செயலாற்றுவார்கள். இவையெல்லாம் பாராட்டத்தக்கவையே. ஆனால் இவர்களிடம் தாம் வேறு – பிறர் வேறு என பிரித்துப் பார்க்கும் ஒரு மனநிலை வலுவாக இருக்கும். தம்மை ஒரு மீட்பராக கருதுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோருடன் ஒன்றாய் உணர்ந்து அல்ல, அவர்களை தம்மில் இருந்து வேறுபடுத்தி உணர்ந்தே அவர்கள் செயலாற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர், வறியவர்கள் ஆகியோரை மற்றமையாக (other) காணும் பார்வையில் இருந்து தான் இவர்களின் கருணையும் தொண்டாற்றும் மனப்பான்மையும் தோன்றுகிறது. டி.எம் கிருஷ்ணாவுக்கும் இவர்களுக்குமான முக்கிய (பாராட்டத்தக்க) வித்தியாசம் அவர் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கிறார் என்பது தான்.

டி.எம். கிருஷ்ணா உண்மையில் சாதிய அமைப்பில் ஒரு குலைவை ஏற்படுத்த விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இசைக்கச்சேரி அல்ல. அவர் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து அந்த ஜோடிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க ஒரு அறக்கட்டளையை நிறுவலாம். இதை அவர் தம் சாதியில் இருந்து கூட துவங்கலாம். (மத்திய சாதிகளில் கை வைத்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும்) கலப்புத்திருமணத்தின் போது சாதி அழிவதில்லை. ஆனால் அதன் இறுக்கம் சற்றே தளர்கிறது. தலித்துகளுடன் நேரடியாய் கைகுலுக்குவதன் மூலம், பறையடித்து அவர்களுடன் மேடையில் ஆடுவதன் மூலம் சமத்துவத்தை கொண்டு வந்து விடலாம் என அவர் நம்புவது கொஞ்சம் குழந்தைத்தனமாய் இருக்கிறது. இதைத் தான் ஷாஜியும் சுட்டுகிறார்.

இசையை சமூக அளவில் பரவலாக்கும் டி.எம் கிருஷ்ணாவின் முயற்சியை ஷாஜி தான் வேலை பார்த்த மேக்னம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் வணிக திட்டங்களுடன் ஒப்பிடுகிறார். இந்நிறுவனம் கர்நாடக இசைத்தட்டுகளை சரியாக விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்தி விற்று பெரும் லாபம் சம்பாதிக்க முடியும் என நம்பி களமிறங்கி தோற்கிறது. இதே விசயத்தை பின்னர் கிருஷ்ணா தனி ஆளாக சேரிகளில் சென்று நிகழ்த்தி காட்டுகிறார். அவர் இசையை விற்கவில்லை; பரவலாக்க முயல்கிறார். பிராமண பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சத்தை பிற சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க முயல்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவேளை கர்நாடக சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டு அதை பின்பற்றினாலும் அதனால் சாதி ஒழியாது, பதிலாக சம்ஸ்கிருதமயமாக்கல் எனும் போலி சமூக மேல்நிலையாக்கம் நிகழும் என நினைக்கிறேன். அதாவது ஆர்.எஸ்.எஸ் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் தலித்துகளை பெருமளவில் பங்கேற்க வைத்தது போன்ற மற்றொரு காரியமாக முடியும்.
வெகுஜன இசை ஆக எளிதானதாய், கேட்டவுடன் மனதில் ஒட்டுவதாய் இருக்க வேண்டும், கர்நாடக சங்கீதத்தை ஒருநாள் மக்கள் திரளிடம் முழுக்க கொண்டு சேர்க்க இயலாது என்கிறார் ஷாஜி. எனக்கும் இக்கருத்துடன் உடன்பாடே. உலகம் முழுக்க செவ்வியல் இசையின் நிலை இது தான். அதாவது சாதியே இல்லாத ஐரோப்பிய சமூகங்களில் கூட மக்கள் தினமும் பீத்தோவன் கேட்பதில்லை. அங்கு பாப், ராக் இசை தான் கோலோச்சுகிறது. ஏதோ இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையால் தாழ்த்தப்பட்டோருக்கு கர்நாடக இசையின் வரப்பிரசாதம் கைவரவில்லை என டி.எம் கிருஷ்ணா நம்புவது அவரது மேலோட்டமான பார்வையை தான் காட்டுகிறது.

உலகம் முழுக்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் தேவைகள் நெருக்கடிகள் வேறு. கர்நாடக சங்கீதம் அல்ல அவர்களின் விடுதலை மார்க்கம். பார்வையற்றோர் பள்ளியில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி நடத்துகிறார், அதை அக்குழந்தைகள் கேட்டு குதூலகமானார்கள் என்றால் மகிழ்ச்சி. ஆனால் இதன் மூலம் பார்வையற்றோரின் வேதனையை ரஹ்மான் நீக்கினார் என நாம் கோரினால் அது அபத்தம்.

1 comment:

mani maran said...

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது பாராட்டத் தேவையா என்று எனக்கு தோன்றவில்லை