Wednesday, September 28, 2016

மனம் இணைய இதழில் என் பேட்டி

உங்களது இலக்கியப் பயணம் எந்த இடத்தில் தொடங்கியது?
என்னுடைய எழுத்துப் பயணம் என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. நான் அறிவார்ந்த ஆள் கிடையாது. முழுக்க உணர்ச்சிகளின் உலகத்தில்தான், நான் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறேன். சுமார் பதினான்கு வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிறகு, சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன். அப்போது, கட்டுரைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. அப்படியாக வளர்ந்து வருகிறபோதுதான், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உடனான நட்பு கிடைத்தது. அப்போது எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. சில மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதிக்கொண்டுபோய், அவரிடம் காண்பித்தேன். அதைப் படித்த மனுஷ்யபுத்திரன், அதைப் பதிப்பிக்கலாம் என்று சொன்னார். ஆனால், சில காரணங்களால் அது பதிப்பிக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில்தான், உயிரோசை என்கிற இணையதளத்தை மனுஷ் ஆரம்பித்தார். அதில் நிறைய புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்படி, அதில் எழுத எனக்கும் வாய்ப்பளித்தார். அங்கேதான், ஒரு கட்டுரையாளனாக நான் உருவானேன். தொடர்ச்சியாக எழுத எழுத, அதன்மேல் ஒரு தீவிரமான ஈடுபாடு வந்துவிட்டது. இதுதான், பின்னாட்களில் ஒரு நாவலாசிரியனாக உருவாகக் காரணமாக அமைந்தது!


கால்கள் நாவல் எவ்வாறு உருவானது?
நாவல் எழுதும் ஆசை குறித்து மனுஷிடம் சொன்னபோது, தினமும் அரை மணி நேரம் எழுதுங்கள். என்ன வருகிறதோ, அதை முதலில் எழுதிவிடுங்கள். அதுதான், உங்களுடைய அன்றைய நாவலுக்கான பங்களிப்பு. தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், மூன்று மாதங்களில் உங்களுடைய நாவலை முடித்துவிடலாம் என்றார். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு பத்தி, ஒரு வரி அல்லது ஒரு சொல்லாவது எழுதிவிடுவேன். அப்படித் தொடர்ச்சியாக எழுதியதன் வாயிலாக, என்னால் நாவலுக்குள் எளிதாகப் பிரவேசிக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை, நாவல் என்பது திறக்கப்படாத கதவு. நீங்கள் அதை சிரமப்பட்டு தள்ளி உள்ளே சென்றுவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு அது உங்களை தனக்குள் இழுத்துக் கொண்டுவிடும். ஏறக்குறைய அரேபிய இரவுகள் கதை போலத்தான். அந்த இரவு விடியவே விடியாது. 
கால்கள் நாவலை, ஏறக்குறைய 800 பக்கங்களுக்கு மேல் எழுதினேன். பிறகு, அதனை எடிட் செய்து 550 பக்கமாகக் குறைத்தேன். அந்த நாவல், நம்முடைய உடல் இந்த உலகத்தோடு எதிர்கொள்கிற பிரச்சினைகளைப் பற்றியது. அதை இலக்கிய உலகில் அதிகமாக யாரும் எழுதவோ, பேசவோ இல்லை என்று நினைத்தேன். அப்படியான மாறுபட்ட உலகத்தைப் பற்றி பேசுகிறது  கால்கள் நாவல்.

வெகுசன இதழ்களில், பல்வேறு விதமான விஷயங்களையும் உங்களால் எழுத முடிகிறதே?
இயல்பிலேயே எனக்குப் பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. அதற்குக் காரணம், எழுத்தாளர் ஜெயமோகன் என்று கூட சொல்லலாம். என்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, அவரைச் சந்தித்து உரையாட முடிந்தது. ஏனெனில், அவர் என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருந்தார். அவர் எல்லாவற்றையும் படிப்பார். எது குறித்து வேண்டுமானாலும், அவரிடம் விவாதிக்கலாம். எனக்குத் தெரிந்து, அவர் ஒரு குழந்தை மாதிரி இருந்தார். ஒரு இடத்தில் விட்டால், எப்படி அது நிற்காமல் அங்குமிங்கும் சுறுசுறுப்புடன் சந்தோஷமாக சுற்றித் திரியுமோ, அப்படி! எனவே அவரைப் போல் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால், பரவலாக என்னுடைய வாசிப்பு பழக்கத்தை வைத்துக்கொண்டேன். அதனால்தான், இப்போது எது குறித்தும் எழுத முடிகிறது என்பதாக நினைக்கிறேன்.

யுவபுரஸ்கார் விருதை, எழுத்தின் தொடக்கத்திலேயே பெற்றுவிட்டீர்களே?
உண்மையில் கால்கள் நாவலுக்காக மட்டும் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததாக, நான் நினைக்கவில்லை. அதற்கு முன்னதாகவே நான் எழுதி வந்த கதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள் மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிவந்த பங்களிப்புக்குக் கிடைத்த வெகுமதியாகத்தான், அந்த விருதைப் பார்க்கிறேன். அந்த நாவல் முழுக்க என்னுடைய அனுபவமாக இருந்ததால், அதை எழுதும்போது ஒரு தயக்கம் இருந்தது. எனவே, அதை ஒரு பெண்ணுக்குரிய பிரச்சினையாக மாற்றி எழுதினேன். மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணுக்கு, ஆணைக் காட்டிலும் அதிகமான உளவியல் சிக்கல்களும் பிரச்சினைகளும் இருக்கிறது. அதனால்தான், அது பெரும்பாலான பெண் வாசகர்களைப் பாதித்தது. அதுதான், கால்கள் நாவலின் உண்மையான வெற்றி.
ஒரு நாவல் ஐம்பது வருடங்களைக் கடந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். மற்றபடி, விருது என்பது ஒரு எழுத்தாளனுக்கான தற்காலிக வெளிச்சம்தான்!

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பங்காற்றியும், எதிர்வினையாற்றியும் வருகிறீர்களே?
சமூக வலைதளங்கள் மூலம், இன்று ஒரு எழுத்தாளருக்குப் பரவலான வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஆனால், 1980 மற்றும் 1990களில் அப்படியான ஒரு பரந்துபட்ட வெளி என்பது கிடையாது. ஆனால், இதைவிடக் காரசாரமான மோதல்களும் தனிநபர் தாக்குதல்களும், அன்றைய இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கின்றன. அன்று லட்சியவாதங்களுடைய உட்சபட்சமான காலம். அத்தகைய லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதற்காக, அவர்கள் அடிதடியில் இறங்கவும் கூட செய்தார்கள். ஆனால், இரண்டாயிரத்துக்குப் பிறகு லட்சியவாதங்கள் தோற்றதால், தனிநபர் வழிபாடு, சமூக மேல்நிலையாக்கம் போன்ற விஷயங்கள் பிரதானமாகி விட்டன. முன்பு லட்சியத்துக்காகச் சண்டையிட்டவர்கள், இப்போது தனிநபருக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி இலக்கியச் சண்டைகள் காலந்தோறும் நடக்கவே செய்யும்!

உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் யார்?
நவீன இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், தமிழ்மகன், விநாயக முருகன், சரவணன் சந்திரன் உள்ளிட்ட நிறைய பேர் அந்தப் பட்டியலில் அடக்கம். பொதுவாக, எனக்கு நாவலாசிரியர்களை விட கவிஞர்களைத்தான் அதிகம் பிடிக்கும். அந்தவகையில் தேவதச்சன், தேவதேவன், பிரமிள், கலாப்ரியா, விக்ரமாதித்தன், முகுந்த் நாகராஜன், போகன் சங்கர் என விரிவான பட்டியல் என்னிடம் உண்டு.

சினிமாவில் எழுதும் வாய்ப்பு கிடைத்ததா?
கடந்த சில வருடங்களாகவே, எனக்கு அந்த வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும், நண்பர்களால் எடுக்கப்படும் படங்களில்தான் வேலை செய்கிறேன். சினிமா என்பது இலக்கிய உலகம் போன்றது அல்ல; அது முற்றிலும் வேறான உலகம். ஒரு திரைக்கதையை எழுதிவிட்டு, நீங்கள் தயாரிப்பாளரிடம் சென்று கதை சொல்லி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது நின்றுவிடலாம். பிறகு, படம் நின்றுவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு தயாரிப்பாளர் உடனடியாக அந்தப் படத்தை தயாரித்து, நீங்கள் இயக்குநராக வெளியே தெரியலாம். சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சினிமாவில் எதையும் எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ முடியாது!

அடுத்த நாவல் எப்போது?
நான்கு அல்லது ஐந்து கட்டுரை தொகுப்புகள் வெளியிடும் அளவுக்குப் படைப்புகள் உள்ளன. ஆனால், அது எதுவும் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. எனவே, அவற்றை ஒரு படைப்பாகக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. நிறைய திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. உறுதியாக ஒன்றை வேண்டுமானால் சொல்லுவேன், இந்த வருடம் என்னிடமிருந்து எந்த நாவலும் வெளிவராது!
தமிழ் இலக்கிய உலகில், தற்போது இயங்கிவருபவர்களின் இயல்புகளும் செயல்பாடுகளும் மாறிப்போய்விட்டன. அதன் தற்போதைய தோற்றத்தைத் தன்னளவில் பிரதிபலித்திருக்கிறார் ஆர். அபிலாஷ்No comments: