Saturday, September 10, 2016

பாமரனின் நகைச்சுவை

எம்.ஸி.ஸியில் முதுகலை படிக்கும் போது விடுதியில் சார்லஸ் எனக்கு நெருக்கமான நண்பன். இலக்கியம், அரசியலில் ஆர்வம் கொண்டவன். எங்கள் வாசிப்பு பின்னணி, நுண்ணுணர்வு, வாழ்க்கைப் பார்வை வேறு. அவன் சிறுகதை ஒன்று ஏற்கனவே விகடனில் வெளியாகி இருந்தது. கச்சிதமான, நேரடியான சித்தரிப்பு கொண்ட ஒரு கதை. நானும் அப்போது சொல்புதிதில் ஒரே ஒரு கதை வெளியிட்டிருந்தேன். கல்லூரியில் நண்பர்களுடன் எழுதின கவிதைகளை தொகுத்து ஒரு சிறுநூலாய் பிரசுரித்திருந்தேன். அவனுக்கு வெகுஜன எழுத்து, அரசியல், பொருளாதாரம், வரலாற்றில் ஆர்வம். எனக்கு தத்துவம், இலக்கியம் மட்டுமே உலகம்.

நான் அவனுக்கு ஜெயமோகனை “காடு” நாவலை அறிமுகம் செய்தேன். அதுவரை இடதுசாரி இலக்கியம், மானுட விடுதலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை என்று தீவிரமாய் கனன்று கொண்டிருந்த நண்பன் ஒரே நாவலில் ஜெயமோகனின் விசிறியாகி விட்டான். நான் அவனை எப்படியாவது விஷ்ணுபுரம் வாசிக்க வைத்து முழுக்க ஜெயமோகன் பக்கம் சாய்த்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அவன் இறைநம்பிக்கையற்றவன். என்பதால் புத்தக அலமாரியில் உள்ள விஷ்ணுபுரம் நாவலை தடவியபடி “என்ன மாம்ஸ் இது? சாமி புக்கா?” என்று கேட்டு விட்டு, நான் “இல்லை” என்று சொல்வதை நம்பாமல் நகர்ந்து விடுவான்.
அவனுடைய முற்போக்கு தோழர்கள் என்னை வழியில் மடக்கி “நீ தான் அவனை பிற்போக்கு நூல்கள் கொடுத்து கெடுக்கிறாறா?” என கையை பிடித்து முறுக்காத குறையாக மிரட்டுவார்கள்.
நாங்கள் இருவரும் கோடை விடுமுறையில் ஊருக்கு போகாமல் அனாதையான விடுதியில் இருந்து நாட்கணக்காய் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருப்போம்.
எனக்கு அவன் தான் வெகுஜன புத்தகங்கள் பலவற்றை அறிமுகம் செய்தான். அவன் பரிந்துரையின் பெயரில் தான் எண்டமூரி விரேந்திரநாத் படித்தேன். அதே போல் பாமரனையும் பாஸ்கர் சக்தியையும் அறிமுகப்படுத்தினான். அவன் இரண்டு பேருக்கும் விசிறியாக இருந்தான். எளிதாக பகடியாக எதையும் போட்டு உடைக்கும் பாமரனின் பாணி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு முதலில் படித்த போது பாமரனின் வசீகரம் நேரடியான பேச்சு மொழியில் நையாண்டியுடன் எழுதுவது மட்டும் தான் என தோன்றியது. இதில் என்ன சிலாகிக்க உள்ளது என்று அவனிடம் கூறினேன். நான் அப்போது எழுத்தென்றால் கவித்துவ புகைமூட்டத்துடன் அர்த்தபுஷ்டியாய், கடமுடாவென இருக்க வேண்டும் என நினைப்பேன். எதுவுமே லைட்டாக இருந்தால் பிடிக்காது.
அப்போது பாமரன தன் வெகுஜன பத்தி மூலம் புகழின் உச்சத்தில் இருந்தார். அவர் தொடர்ந்து சிறு பிரசுரங்கள், பெரும்பத்திரிககள் என எழுதிக் கொண்டே இருந்தார். 16 வருடங்களுக்கு பின்னரும் இன்று அவர் எழுத்தில் வயோதிகம் தோன்றவில்லை. இன்று குமுதத்தில் அவரது “டுபாக்கூர் பக்கங்கள்” பத்தி கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். அவரது மொழி சாமர்த்தியம் சட்டென புலப்பட்டது. இதைக் காட்டுகிறேன் பார் என அழைத்துப் போய் சட்டென இன்னொரு பாதைக்குள் இழுத்துக் கொண்டு போகிற மொழி விளையாட்டை ரசித்தேன். இந்த எதிர்பாராத தன்மை எழுத்துக்கு மிக முக்கியம். இது சுஜாதாவிடம், புதுமைப்பித்தனிடம் வேறு நுண்ணுணர்வுடன் புத்திசாலித்தனத்துடன் இருந்தது. பாமரன் இத்தனை வருடங்களுக்கு பின்னும் புது வாசகர்களை ஈர்ப்பது அதனால் தான்.
இன்னொரு காரணம் அவரது நகைச்சுவைக்கு நமது சினிமா நகைச்சுவையுடன் உள்ள தொடர்பு. அவரது நையாண்டியில் இரண்டு குரல்கள் வரும். ஒன்று செந்திலுடையது. இன்னொன்று கவுண்டமணியுடையது. தன்னை ரசனை மிக்கவனான அறிவாளியாக மிகையாக நம்பிக் கொண்டு புலம்பும் இடத்தில் செந்திலின் குரல் கேட்கும், அடுத்து உடனே செந்திலை உதைத்து உண்மையை விளங்க வைக்கும் கௌண்டமணியின் குரலும் ஒலிக்கும். இவ்வார கட்டுரையில் நடிகை ராதா (சுந்தரா டிராவல்ஸில் நடித்தவர்)ஒரு பெண்ணின் கணவரை தட்டிப் பறித்து விட்டார் எனும் பற்றின செய்தியை படித்து அது பழைய நீதானா அந்தக்குயில் ராதா என எண்ணி அவர் கலங்கி புலம்பும் இடத்தில் செந்திலாகவும் உடனே அட இது அவங்க இல்லையா இதுக்கு போயா டென்சன ஆன நீ? என காண்டாகும் இடத்தில் கவுண்டமணியும் தெரிகிறார்.

செந்தில் கவுண்டமணி நகைச்சுவை என்பது எம்.ஆர் ராதாவின் பகுத்தறிவு பிரச்சார நகைச்சுவையின் ஒரு நீட்சி. மூடநம்பிக்கை அறியாமையில் மூழ்கியபடி அதையே ஒரு பெரும் அறிவார்ந்த நிலையாய் எண்ணி மிதப்பில் இருப்பவர்களை பகடி பண்ணி நிதர்சனத்துக்கு கொண்டு வருவது தான் இந்நகைச்சுவை மரபின் நோக்கம். அடிப்படையில் ஒரு முற்போக்காளரான பாமரன் இதன் ஒரு கண்ணியாக வந்து பொருந்துவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. 

2 comments:

விசுAWESOME said...

தங்கள் நண்பர் சார்லஸ் பற்றிய நல்ல பதிவு. தலைப்பில் பாமரனின் நகைசுவை என்று இருந்ததால் என்னையும் அறியாமல் வந்தேன்.

அது சரி.. தம்மிடம் ஒரு கேள்வி..

எம் சி சி யில் படித்தவர்களில் பலர் பெருமையாக சொல்லும் ஒரு விஷயம் ..

எனக்கு "டமில்" எழுத படிக்க தெரியாது என்பதே.. தாம் வித்தியாசமாக இருப்பதை பார்த்தவுடன் மனதில் ஒரு சந்தோசம்.

Unknown said...

அம்பை, பிரீதம். வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ஞானி, லக்‌ஷ்மி ஹோம்ஸ்ராம், நான்....யாவரும் எம் சி சி யில் படித்தவர்களே. அதற்கு முன்னர் சூரியநாரயண சாஸ்த்ரி
(பரித்மால் கலைஞர்) சத்யமூர்த்தி இவர்களும் . தியடோர் பாஸ்கரன்