Thursday, September 8, 2016

ஆறில் இருந்து அறுபது வரை

நான் இரவு வீட்டுக்கு திரும்பும் போது என் குடியிருப்பில் உள்ள மற்றொருவரும் கூட வருகிறார். அவரது வீடு முதல் மாடியில். நான் அவரை கடந்து தான் மூன்றாவது மாடிக்கு செல்ல வேண்டும். இன்று நான் மாடிப்படிகள் ஏறும் போது அவர் தன் வீட்டு வாசலை அடைந்து சிறுகுழந்தையான தன் மகனுக்கு குரல் கொடுப்பது கேட்டது. அவரது மகன் அப்பா என்று கூவியபடி ஓடி வருவதும் கேட்டது. அடுத்து பையன் அப்பாவிடம் ”நீ எனக்கு என்ன வாங்கி வந்தே?” என திரும்ப திரும்ப கேட்கிறான். இதை அடுத்து வீட்டில் உள்ளோரிடம் அப்பா தனக்கு முறுக்கு கொண்டு வந்துள்ளதை அறிவிக்கிறான். ஆனால் முறுக்கை அவன் அப்பாவிடம் தரக் கேட்கவில்லை. வாங்கி வந்த மகிழ்ச்சியே அவனை துள்ள வைக்கிறது. அவன் அவசரமாய் அப்பாவிடம் தனது அன்றைய நாளின் முக்கியமான அனுபவங்களை பகிர ஆவேசப்படுகிறான். கொய்யா மரத்தில் அணில் ஒன்றை பார்த்தது பற்றி சத்தமாய் தெரிவிக்கிறான். திரும்ப திரும்ப அணிலின் செயல்களை வர்ணிக்க முயன்று திணறுகிறான்.

எனக்கு அப்பையனின் நடவடிக்கைகள் ஒரு விசயத்தை புரிய வைத்தன. வளர்ந்த பின்னும் மனிதர்கள் தம்மை யாராவது சந்திக்க வரும் போது இந்த இரண்டு காரியங்களை தான் செய்கிறார்கள். ஒன்று, “நீ எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்?” என கேட்கிறார்கள். இது உணவுப்பொருள், மது, பரிசுப்பொருள், பணம், ஒரு நல்ல அனுபவம், சுவையான கதை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறுங்கையுடன் வரும் நண்பர் கூட நம்மிடம் ஏதோ சில ஆர்வமூட்டும் சொற்களை பகிர வேண்டும் என முதலில் எதிர்பார்க்கிறோம். அந்த நண்பரை வெளியே சந்தித்தால் அவர் நம்மை ஒரு புது இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், ஒரு இனிய புது நபரை அறிமுகப்படுத்த வேண்டும், சுவையான வித்தியாசமான உணவகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என கோருகிறோம். இதையெல்லாம் நண்பர் செய்யாவிட்டாலும் நமக்கே தெரியாமல் எதிர்பார்க்கிறோம். இதில் ஏதாவது ஒன்றை செய்யும் நண்பரை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இதை செய்யத் தெரிந்தவர்கள் உற்சாகமான நட்பு வட்டம் கொண்ட பிரபலமான பலரும் விரும்பும் நபராக இருப்பார்.


எனக்கு இதை சொல்லும் போது நண்பர் மனுஷ்யபுத்திரன் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பற்றி கூறியது நினைவு வருகிறது. அவர் முதலில் குமரகுருபரனை சந்திப்பது மழைவெள்ளத்தின் போது தான். குருபரன் அப்போது மனுஷுக்காக கொஞ்சம் உணவுடன் ஒரு ஆட்டோவில் அவரை தேடி வருகிறார். “நீங்கள் தனியாய் சிரமப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேன். அது தான் வந்தேன்” என்கிறார். அது போல் குருபரன் தன்னை பார்க்க வரும் போது ”உங்களுக்காக தேடி வாங்கி வந்தேன்” என வித்தியாசமாய் ஏதாவது ஒரு பரிசுப்பொருளை கொண்டு வரும் வழக்கம் வைத்திருந்ததாய் சொன்னார். அந்த பொருட்கள் முக்கியமில்லை. ஆனால் ஒருவர் நமக்காய் அக்கறையுடன் ஒன்றை கொண்டு வருகிறார் எனும் உணர்வு தரும் அணுக்கம் மிக ஆழமானது.
நீங்கள் உங்கள் நண்பர்களுடனான மறக்க முடியாத நினைவுகள் ஏதாவது ஒரு அனுபவத்தை, உணவை, மதுவை, சுவையான சம்பவங்களை பகிர்ந்ததாகவே இருக்கும்.

நான் முதலில் சொன்ன குழந்தைக்கு வெளியே செல்ல முடியாது. அதற்கு பரிசு கொண்டு வரும் ஒரே வெளியுலக பிரதிநிதி அப்பா தான். ஆனால் வளர்ந்து நாம் வெளியே செல்ல துவங்கிய பின்னரும் அது போல் ஒரு அப்பாவை நம் நண்பர்களிடம் எதிர்பார்க்கிறோம்.

இரண்டாவதாய் ஒருவர் நமக்காக ஏதோ ஒரு தனிச்சிறப்பான பரிசு கொண்டு வந்ததாய் அறிந்ததும் நாம் மடை திறந்தது போல் நம் அன்றைய நினைவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம் பேச்சை அப்படி தொந்தரவின்றி ஆர்வமாய் கேட்பவர்களை நாம் உள்ளார நேசிக்கிறோம்.

ஊரில் எனக்கு ஒரு பாட்டி இருக்கிறார். அவரால் நடக்க முடியாது. நிறைய உடல் உபாதைகள். ஒரு அறையில் அடைந்து கிடப்பார். அவரைப் பார்க்க என் அம்மா செல்லும் போது நான் வாங்கி அளித்ததாய் சொல்லி ஏதாவது ஒரு தின்பண்டத்தை தன் காசில் வாங்கி கொடுப்பார். அது போக தான் வாங்கி கொணர்ந்ததாய் சொல்லி ஏதாவது துணி மணியும் கொடுப்பார். இவற்றையெல்லாம் கையில் வாங்கியதும் பாட்டி பூரித்து போய் விடுவார். அடுத்து அரைமணி நேரம் தனக்கு கை கால் உளைச்சல் எடுக்கிறது, தன்னை யாரும் சரிவர கவனிப்பது இல்லை என புலம்புவார். அதை என் அம்மா மறுக்காமல் கேட்டிருந்து விட்டு திரும்ப வருவார். அந்த மகிழ்ச்சி பாட்டிக்கு ஆறு மாதங்களுக்கு போதும்.


மனிதன் பிறந்ததில் இருந்து கடைசி வரை மாறுவதில்லை.

No comments: