Thursday, August 11, 2016

ஸ்வாதி கொலைவழக்கு: ஆர்.எஸ்.எஸ் vs பெரியாரிஸ்டுகள்


ஸ்வாதி கொலை வழக்கின் துவக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் சம்மந்தமே இல்லாமல் ஒரு கதையாடலை ஆரம்பித்து வைத்தது. அது ஒய்.ஜி மகேந்திராவின் முகநூல் பக்கம் மூலம் பரவியது. ”ஸ்வாதி எனும் இந்து பிராமணப் பெண்ணை ஒரு இஸ்லாமியர் கொன்றார்!” இது எடுபடவில்லை. இதை அடுத்து தமிழக பா.ஜ.கவினரே U turn எடுத்து இவ்வழக்கு விசாரணை தவறான பாதையில் செல்கிறது என அறிக்கை விடுத்தனர். ஆர்.எஸ்.எஸ் வக்கீல் ஒருவர் கைது செய்யப்பட்ட ராம்குமாருக்கு உதவ முன்வந்தார்.

 இந்த கட்டத்தில் தான் தலித் ஆதரவாளர்களும் பெரியாரிஸ்டுகளும் விழித்துக் கொண்டு “பார்ப்பனிய சதிக்கு” ராம்குமார் பலியாக்கப்படுவதாக குரல் கொடுக்க துவங்கினர். ஸ்வாதியின் குடும்பத்தின் ஆர்.எஸ்.எஸ் சார்பு, சோ ராமசாமி அவர்களுக்காய் முதல்வரிடம் பரிந்துரை செய்ததாய் வெளிவந்த தகவல் ஆகியவை இந்த “பார்ப்பனிய சதி” கதையாடல்களுக்கு வலு சேர்த்தன.
 திருமாவளவன் இப்போது மிக வெளிப்படையாய் ஒரு அறிக்கை விட்டார். ஸ்வாதி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்திருந்தார். அவர் நோன்பு காத்தார். அவர் மதம் மாறும் தறுவாயில் இருந்தார். அப்போது அவர் கொல்லப்பட்டார் என்பது திருமாவின் வாதம். ஸ்வாதியினுடையது கருணைக்கொலையாக இருக்கலாமோ எனும் ஒரு ஐயத்தை இது கிளப்பியது. இப்போது ”பார்ப்பனிய சதி” கதையாடல் 2 ஆரம்பித்தது. அதாவது தம் மகள் இஸ்லாத்துக்கு மாறப் போவதை பொறுக்க முடியாது அப்பாவான சந்தான கோபாலனே கூலிப்படையை ஏற்பாடு செய்து கொன்றார் என்கிறது இத்தரப்பு.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ்ஸினர் தம் சார்பாய் இன்னொரு கதையாடலை அவிழ்த்து விட்டனர். இதுவும் மீடியாவில் பரவியது. இதற்கு மையம் ஸ்வாதியின் மென்பொருள் நிபுணர் பின்னணியும், போலிசாரால் கைப்பற்றப்பட்ட அவரது லேப்டாப்பும். ஸ்வாதி ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் சதியில் அகப்பட்டு, தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து மென்பொருளை திருடி அளித்ததாகவும், இதனால் பங்களூர் நிறுவனத்தில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டதாகவும் இதற்காகவே அவர் பங்களூரில் இருந்து மாற்றலாகி சென்னை வந்ததாகவும், பின்னர் தமக்கு போதுமான படி ஒத்துழைக்காததனாலும், அவரது லேப்டாப்பில் உள்ள தகவல்களை கைப்பற்றுவதற்காகவும் அவரை ஐ.எஸ். தீவிரவாதிகளே கொன்றதாகவும் இந்த புது ஆர்.எஸ்.எஸ் கதையாடல் 2 சொல்கிறது. இந்த புனைவு பழைய விஜயகாந்த் போலீஸ் படங்களின் கதையை விட பயங்கர வேடிக்கையாய் இருப்பது ஒரு விசயம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த வழக்கு நான்கு முரணான கதையாடல்களுக்கு இடையில், இரண்டு முகாம்களின் மோதலுக்கான ”ருசிகர” மையமாய் மாறியிருக்கிறது என்பது.
இப்போது சமூக வலைதளங்களில் இந்த வழக்கில் பெரியாரிய முகாம் சார்பில் தமிழச்சியும் (கவிஞர் தமிழச்சி அல்ல; இவர் வேறு) திலீபன் மகேந்திரன் எனும் பெரியாரிய, தலித் ஆதரவாளர் இருவரும் ”பிரமாணிய சதி” கதையாடலை வலுப்படுத்தும் வகையில் பல பதிவுகளை இடுகிறார்கள். இதற்கு இஸ்லாமிய, பெரியாரிய தோழர்களும், நடுநிலையாளர்களும் கணிசமான ஆதரவு அளிக்கிறார்கள். இளவரசன் கொல்லப்பட்ட பிரச்சனையில் கூட பெரியாரியவாதிகள் இவ்வளவு முனைப்பு காட்டவில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு ஆர்.எஸ்.ஸ். + பிராமண அதிகார மையம் எனும் ஒரு ”மரபான” எதிரி முகாம் வாய்த்திருக்கிறது. அதனால் தலித் vs பிராமணர்கள் எனும் தமக்கு வசதியான ஒரு வியூகத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். (வன்னியர்களும், தேவர்களும் இந்த எதிரி முகாமில் இருந்திருந்தால் இவர்களில் கணிசமானோர் வாயே திறந்திருக்க மாட்டார்கள் என்பது வேறு விசயம்)
 தமிழச்சி சமீபத்தில் ஒரு பரபரப்பான பதிவை இட்டிருந்தார். அதில் அவர் இது ஒரு கௌரவக் கொலையே, உண்மைக் குற்றவாளிகள் ஸ்வாதியின் அப்பா சந்தான கோபாலனின் தம்பியின் ஆதரவில் பதுங்கி இருப்பதாய் கூறி இருக்கிறார். தமிழச்சி ஒரு பெண்ணியவாதி என்பதால் அவருக்கு இந்த கோணம் மிகவும் கவர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் இது கௌரவக் கொலை என்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்பதை சின்ன குழந்தை கூட சொல்லி விடும். இந்தியாவில் எனக்குத் தெரிந்து ஆயிரக்கணக்கான கௌரவக் கொலைகள் காதும் காதும் வைத்தது போல் நடந்து முடிகின்றன. பெண் தன் காதலனுடன் தனியாக வாழ ஆரம்பிக்கும் போது தான் பொதுவிடத்தில் வைத்து தாக்குகிறார்கள். மற்றபடி வீட்டோடு வாழும் பெண்ணை கௌரவக் கொலை செய்ய இதை விட சுலபமான வழிகள் உள்ளன.
இஸ்லாமியருக்கு எதிராய் கலவரம் மூட்டுவதற்கான இந்துத்துவா/ பார்ப்பனிய சதி இது எனும் கதையாடலுக்கு வருவோம். கடந்த இருபது வருட வரலாற்றில் மதக் கலவரங்களை தூண்டுவதற்கு இவ்வளவு சிக்கலான வழியை யாரும் தேர்ந்தெடுத்ததில்லை. அதற்கு இதை விட சுலபமான வழிகள் உள்ளன (விழாக்களில் நாசவேலை செவ்வது, குண்டு வைப்பது…) மதக்கலவரத்தை தூண்டுவதற்காய் ரயில் நிலையத்தில் தேமே என நின்றை பெண்ணை வாயில் வெட்டி கொல்வார்கள் எனும் புனைவை யாரும் நம்பப் போவதில்லை.
 திலீபன் மகேந்திரன் இதற்கு வலு சேர்க்கும் விதமாய் இக்கொலையை சம்மந்தப்பட்டவர்கள் என மூன்று பேர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறார். ஒருவர் ராம்குமாரின் சொந்த ஊர்க்காரர். மற்றொருவர் இஸ்லாமியர். திலீபன் எந்த ஒரு தெளிவான திட்டமிடலும் இன்றி இந்த வழக்கு பற்றி பலவித அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுபவர். அது தான் அவருக்கும் தமிழச்சிக்கும் வித்தியாசம். அவருக்கு ஒரு தெளிவான தலித்திய, பெரியாரிய கதையாடலை கட்டமைப்பதில் ஆர்வமில்லை. அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள பெயர்கள் பெரியாரியவாதிகளுக்கே சற்று அவஸ்தையை ஏற்படுத்தும். ஆனால் இறுதியாய் திலீபன் ஒரு முடிச்சிட்டு அவர்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கிறார். இக்கொலையின் மாஸ்டர் மைண்ட் பா.ஜ.க பிரமுகரும் சமீப தேர்தலில் பா.ஜ.க சார்பில் நின்று தோல்வியுற்ற கருப்பு முருகானந்தம் தான் என்கிறார். முருகானந்தம் மூலமாகவே கொலையாளிகள் இக்கொலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள் என்கிறார். இதற்கு திலீபனிடம் ஆதாரம் இருக்குமா? வாய்ப்பு குறைவு தான்.
ஏன் என்றால் இவ்வழக்கில் காவல் துறையினரோடு ஒத்துழைக்கும் மனநிலையில் தான் ராம்குமார் இருக்கிறார். அவர் இக்குற்றத்தில் ஒரு கண்ணி தான் என இப்போது அவருக்கு ஆதரவளிக்கும் வழக்கறிஞர்கள் குழுவே ஏற்றுக் கொள்கிறது. ஒருதலைக் காதல் ஏமாற்றத்தில் கொன்றதாய் அவர் ஒத்துக் கொண்டால் ஒருவேளை அவரது பின்னணியை கணக்கில் கொண்டு உணர்ச்சிகரமான குற்றம் எனும் வகையில் தண்டனை குறைக்கப்படலாம். ஆனால் அவர் வாடகைக் கொலையாளி என நிரூபணம் ஆனால் அவருக்கு கடுமையான தண்டனையே கிடைக்கும். ஆக இக்கொலையில் பிற வாடகைக் கொலையாளிகளும் சம்மந்தப்பட்டிருக்கும் பட்சத்திலும் அவர் அவர்களை காட்டிக் கொடுக்காமல் இருப்பதே (1) அவருக்கு தண்டனையை பொறுத்து அனுகூலம். (2) அவர் பணம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர் மௌனம் காப்பதே ஆரோக்கியமானது. (3) தன் குடும்பம் மற்றும் தனது உயிரை பாதுகாப்பதற்கும் அவர் பிறரின் பெயர்களை வெளியிடாமல் இருப்பதே நலம். ஆக ராம்குமாரின் தரப்பில் இருந்து யோசித்தால் இந்த வழக்கில் அவர் போலீசாரின் கதையாடலில் தன் பாத்திரத்தை ஏற்று நடிப்பார் என்றே படுகிறது.
அவர் தான் வாடகைக்கொலையாளி எனும் பட்சத்திலும் ஏவியவர்கள் பற்றின தகவல்கள் அவருக்கு தெரிந்திருக்குமா என்பது ஐயமே!
 ஆக இப்போதைக்கு பெரியாரிய முகாமினர் முகநூலில் ஊகங்களையும் பெயர்களையும் வெளியிட இயலும். எதிர்முகாம் சற்று சுதாரித்து அவ்வப்போது ஒரு கதையாடலை வெளியிடலாம். இருவரும் சற்று காலம் அடித்து விட்டு ஓய்ந்து போவார்கள். ராம்குமாருக்கும் காவல்துறைக்கும் தேவை இவ்வழக்கில் இருந்து ஒரு சுலபமான வெளியேற்றம் மட்டுமே! அதுவே நடக்கப் போகிறது!

No comments: