Friday, August 26, 2016

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சை


பிரம்மராஜன் – கல்யாணராமன் - ஆத்மாநாம் சர்ச்சையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?
 கல்யாணராமன் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதினார்: “சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி”. இது பிரம்மராஜனின் தொகுப்பு முறை பற்றியது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவரது எடிட்டிங் பற்றியது. அவர் எவ்வாறு ஆத்மாநாமின் கவிதைகளை நூலாக தொகுக்கும் போது அவற்றை பல இடங்களில் மூலத்தில் இருந்து மாற்றி இருக்கிறார் என கல்யாணராமன் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். எனக்கு இதில் வரும் மூலக் கவிதை வரிகளையும் மாற்றப்பட்ட வரிகளையும் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட வரிகளே மேல் எனப் பட்டது.

கூர்மையான பக்கங்களைக்கொண்ட, புற்கள் தாறுமாறாய்ச், சிதறிக் காத்தன, ஏரியை
என்கிற ஒரு கவிதை வரியில் ”புற்கள்” பிரம்மராஜனின் தொகுப்பில் “பற்கள்” ஆகி விட்டன. எனக்கு தாறுமாறாய் சிதறிக் கிடக்கும் பற்கள் கொண்ட ஏரிக்கரை என்பது இன்னும் அழகான, வித்தியாசமான, சர்ரியல் தன்மை கொண்ட சித்திரமாய் படுகிறது. இது எதேச்சையாய் நடந்த தவறு என்றாலும் கூட நல்ல தவறு தான்.
ஆத்மாநாமின் ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை என்ற வரியை தொகுப்பாளர் பிரம்மராஜன் ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை என்று மாற்றி இருக்கிறார். நுணுகவில்லை என்பது ஒரு உருவகம். அது அவ்வரியை பாரமாக்கி விடுகிறது. ”அணுகவில்லை” இன்னும் நேரடியாய் மென்மையாய் இருக்கிறது. (நவீன கவிதையில் உருவகங்களை தவிர்ப்பதே நல்லது என்பது என் நம்பிக்கை) இதுவும் நல்ல மாற்றமே.
இப்பரந்த உலகின் தூசி முனையில் என்பதை இப்பரந்த உலகின் ஊசி முனையில் என மாற்றுகிறார். இதுவும் சிறப்பே. தூசிக்கு முனை உண்டா? தூசி உருளை வடிவென்றால் எப்படி அதற்கு முனை சாத்தியமாகும்? ஊசி முனை எனும் போது உடனே நமக்குள் ஒரு சித்திரம் எழுகிறது. பிரம்மராஜனின் மாற்றம் இவ்வரியை இன்னும் விஷுவலாக மாற்றி இருக்கிறது.
 மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்துஆத்மாநாம் வரி
”‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்துபிரம்மராஜன் திருத்திய ஆத்மாநாம் வரி

மற்றவரை விட மாற்றான் என்பதே இன்னும் ஆற்றல் மிக்கதாக எனக்கு படுகிறது. மற்றவர் என்பதை இன்னொருவர் என ஆத்மாநாம் கண்டிருக்க இயலாது. அரசியல் பொருளில் படிக்கையில் குறிப்பாய் மாற்றான் எனும் சொல்லே எனக்கு இன்னும் பிடித்தமாய் இருக்கிறது. எதிர்தரப்பு என்பதை விட மாற்று நிலை கொண்டவன் என்றே நான் மாற்றானை பார்க்கிறேன்.
இதே “சுதந்திரம்” எனும் எமெர்ஜன்ஸி பற்றின கவிதையில் வரும் மற்றொரு வரியான உனதுயிர்மீது ஆசை இருந்தால் எனபதை “உன் மீது ஆசை  இருந்தால் என்று பிரம்மராஜன் மாற்றுகிறார். எமெர்ஜென்ஸி உயிர் மீதான ஒடுக்குமுறை அல்ல. சர்வாதிகாரத்தை ஆத்மாநாம் நம் இருப்பு சம்மந்தமான பிரச்சனையாகவும் தான் பார்த்தார். அப்படி இருக்கையில் “உன்” எனும் சொல் தான் “சுயம்” என்கிற பொருளில் பொருத்தமாய் இருக்கிறது. “உன் உயிர்” என்பது சற்றே பௌதிகமாக அதில் பேசப்படும் மனிதனை அர்த்தப்படுத்தி விடுகிறது.
அருகில் கேட்கும், குழாயின் ஒழுகல் 
என்பதை
இருளில் கேட்கும், குழாயின் ஒழுகல்  என பிரம்மராஜன் மாற்றியிருக்கிறார். இந்த திருத்தமும் அதிக விஷுவல் தன்மை கொண்டதே. ஒரு நல்ல மாற்றம் தான். அருகில் கேட்கும் குழாயின் ஒலியை விட இருளில் கேட்கும் ஒலியை கற்பனை செய்ய இன்னும் அணுக்கமாய் தீவிரமாய் அழகாய் உள்ளது.
”காலம் கடந்த” கவிதையின் இறுதி வரிகள் சிலவற்றை பிரம்மராஜன் நீக்கியிருக்கிறார்.
அக்கவிதை, “என் காலடியில், கொஞ்சும் நாய்க்குட்டிக்காக, இன்னும் எனது நம்பிக்கை, நசித்துப்போகவில்லை, இன்னமும் கொஞ்சம், அன்பு மீதமிருக்கிறதுஎன்று முடிகிறது.
ஆனால் உண்மையில் அது
இது ஏசுவோ புத்தரோ
ஆதி சங்கரரோ
மகாத்மாகாந்தியோ
பிரச்சாரம் செய்த
அன்பு அல்ல
நானே
ஆகிய    
அன்பு 
என்று தான் முடிந்திருக்க வேண்டும். நீக்கப்பட்ட வரிகள் ஒரு statement என்பதை படிக்கும் எந்த வாசகனாலும் புரிந்து கொள்ள முடியும். கவிதை ஒரு அறிவிப்புடன், கவிஞனின் அறிவுறுத்தலுடன் முடிய வேண்டாம் என நினைத்து பிரம்மராஜன் நீக்கியிருக்க கூடும். இங்கும் அவர் எடிட்டிங் ஆத்மாநாமின் கவிதையை மேம்படுத்தி இருப்பதாகவே நினைக்கிறேன். முக்கியமான எந்த கூடுதல் பொருளும் தராத வரிகளை ஏன் நீக்கக் கூடாது?
டெலெக்ஸ் என்பதை டெலக்ஸ் என்பதாக்கியது ஒரு பெரும் தவறு அல்ல. “1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன என்ற வரியில் 74,000 என்பதை பிரம்மராஜன் 75,000 என்று தவறாக மாற்றி இருக்கிறார். இது கவிதையின் அர்த்தத்தை மாற்றாது என்பதால் மன்னித்து விடலாம்.
சில கவிதைகளில் “ஒரு” என்பதை “ஓர்” என மாற்றுகிறார். ”சுவற்றில்” “சுவரில்” ஆகி விட்டது. இது போல் வேறு பல தொந்தரவு இல்லாத சிறு மாற்றங்கள். ஆத்மாநாமின் சில கவிதைகளின் தலைப்புகளை பிரம்மராஜன் மாற்றியதையும் கல்யாணராமன் குறிப்பிடுகிறார். இந்த இடங்களில் கவிதைகளை அத்தலைப்பு மாற்றங்கள் சீரழித்தன என்பதை விட ஆத்மாநாமின் சம்மதத்தை பெற்றாரா இல்லையா என்பதே கேள்வி.

ஒட்டுமொத்தமாய், பிரம்மராஜன் இந்த creative editing மூலமாய் ஆத்மாநாமுக்கு நல்லது பண்ணியிருப்பதாகவே நான் நம்புகிறேன். இதன் அறம் மட்டுமே பிரச்சனை. இதனை ஆத்மாநாம் ஏற்றிருப்பாரா இல்லையா? நமக்குத் தெரியாது.
இன்னொரு கேள்வி: ஒரு படைப்பை நாம் அதை எழுதிய படைப்பாளியின் சொத்தாக, அவனுக்கு மட்டுமே முழு உரிமை கொண்ட பொருளாக ஏன் பாவிக்க வேண்டும்? எனக்கு கடந்த மாத உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றை படிக்கையில் இறுதி சில வரிகளை கத்தரித்திருக்கலாமே என தோன்றியது. என் மனதுக்குள் அவ்வாறு எடிட் செய்து படித்து ரசித்தேன். நாளை நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை என் பாணியில் எடிட் செய்து பிரசுரிக்கலாமா? ஏன் கூடாது? ஒரு வாசகனாய் எனக்கு அந்த உரிமை, சுதந்திரம் நிச்சயம் உள்ளது. ஒரு சிறு குறிப்பை மட்டும் இறுதியில் சேர்க்க வேண்டும்: “இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காதது தான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம். இதற்கு போய் அவரை ஏன் அடித்து துவைக்க வேண்டும் என எனக்கு சத்தியமாய் புரியவில்லை.

நான் குமுதம் கிரிக்கெட்டோகிராபியில் 3000 ரன்களை 4000 என எழுதியதற்காய் ஒருவர் ”என் கட்டுரையை படித்தால் தற்கொலை புரியும் எண்ணம் வருகிறது” என பேஸ்புக்கில் எழுதினார். இன்னொருவர் என்னை பேஸ்புக் முட்டுச்சந்துக்குள் வீச்சருவாளோடு விரட்டினார். பாவம் பிரம்மராஜன், அவரை ஆட்டோவில் ஆளுக்கு ஒரு கத்தியை சுழற்றியபடி வந்து துரத்துகிறார்கள்!

No comments: