Monday, August 15, 2016

நிரப்ப முடியாத ஒன்று

Image result for சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நல்ல கவிதைகள் போல. படிக்க படிக்க புது புது அர்த்தங்கள், நுணுக்கங்கள் புலப்படும். அவரது பெரும்பாலான கதைகளில் நீண்ட விவரணைகள் இருக்கும், மனவோட்டங்கள் சரம் சரமாய் வரும். எதிர்பாராத திருப்பம், நாடகீய தருணங்கள், உணர்ச்சி மோதல்கள், நெகிழ்வான முடிவுகள் இராது. நம்முடைய பெரும்பாலான சிறுகதைகள் இரண்டாம் வகையே. ஆனால் சு.ரா கதையை நவீன கவிதையின் இலக்கணப்படி கதையை எழுதியவர். அது என்ன?


கவிதையில் – அதாவது நவீன கவிதையில் – வடிவம் முக்கியம். அறையறையாக கட்டப்பட்ட வீடு போல் அது இருக்கும். ஒவ்வொரு சிறு வரி, பத்தி, கேள்வி, அவதானிப்பு, விவரணை, உவமை, உருவகம் எல்லாம் சேர்ந்து தலைப்பின்னல் போல் ஒட்டுமொத்தமாய் ஒரு வடிவம் எடுக்கும். கவிதையின் பிரதானமான கண்டுபிடிப்பு அல்லது திறப்புக்கு இந்த ஒவ்வொரு அங்கமும் உதவும். எதையும் தனியே பிரித்து எடுக்க முடியாது. ஒரு ஜன்னலை, கதவை மூட முடியாது. ஒரு மேஜையை நகர்த்தி இன்னொரு இடத்தில் வைக்க முடியாது. இந்த கட்டுக்கோப்பு, ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தம் சு.ராவின் கதைகளில் இருக்கும். ரொம்ப சாதாரண ஒரு அன்றாட வாழ்க்கை நிகழ்வை அவர் பேசுவது போல் இருக்கும். இந்த கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து முடிக்கையில் தோன்றும். ஆனால் கிளைமேக்ஸை படித்த பின் அதற்கு முன் வரும் காட்சிகள், விவரணைகள், கிண்டல் கேலி பகடி மற்றும் தலைப்புடன் இணைத்தால் கதையின் மொத்த உலகமும் புலப்பட்டு விடும்.
“பள்ளம்” சு.ராவின் அதிகம் பேசப்படாத கதை. ஆனால் அவரது சிறந்த கதைகளில் ஒன்று அது. இக்கதையிலும் வழக்கம் போல் மகனை உளவியல் ரீதியில் ஒடுக்கி வதைக்கும் ஒரு ஒழுக்கசாலீயான அப்பா வருகிறார். இலக்கியத்திலும் பகல் கனவுகளிலும் தோய விரும்பும், வேண்டாவெறுப்பாய் வேலை செய்ய நேரும் மகனும் வருகிறான். அப்பா ஒரு விடுமுறை நாள் அன்று மகனை தனது ஜவுளிக் கடையில் ஒரு வேலையை முடித்து வர அனுப்புகிறார். மகன் உள்ளுக்குள் அலுத்துக் கொள்கிறான். ஆனாலும் மறுக்க முடியாமல் கிளம்புகிறான். அவன் அப்பா எப்போதும் முடுக்கி விட்ட கடிகாரம் போல் ஒரே கதியான வாழ்க்கை வாழ்பவர். பையன் அப்பாவில் இருந்து தன்னை ஒவ்வொன்றிலும் வித்தியாசப்படுத்திக் கொள்பவன். அவன் ஒழுங்கின்மையை சிலாகிக்கிறான். அன்று அவன் வழக்கமான வழியை விடுத்து சந்து பொந்துகள் வழி பயணிக்கிறான். சேரிகளில் வசிக்கும் பலவித மக்களை பார்க்கிறான். சின்ன வயதில் இருந்தே கவனித்து வரும் வேசிகள், அபின் வாங்க ஒரு சிதிலமான கட்டிட வாயிலில் காத்திருக்கும் முதிய மக்கள் பலரை வேடிக்கை பார்க்கிறான். அன்று வார இறுதி ஆகையால் திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பப் பெண்கள் இடுப்பில் குழந்தைகளை தொத்திக் கொண்டு ஆவேசமாய் திரையரங்குக்கு விரைகிறார்கள்.
அன்று ஜவுளிக்கடையில் அவன் புதிதாய் வந்திருக்கும் துணிக்கட்டை உடைத்து கணக்கு சரி பார்த்து அதில் விலைப்பட்டி தைக்க வேண்டும். அவ்வேலையில் உதவுவதற்கு வேலையாளான மதுக்குஞ்சு வந்து காத்திருக்கிறான். மதுக்குஞ்சு சற்று முன்னரே வந்து விட்டான். அவன் அருகில் உள்ள சந்தில் ஒட்டப்பட்டுள்ள கவர்ச்சி வழியும் சினிமா சுவரொட்டிகளில் மனம் லயித்து நிற்கிறான். பையனைக் கண்டதும் அவன் ஓடி வருகிறான். இருவருமாய் வேலையை முடிக்கிறார்கள். பையனுக்கு அப்போது அப்பா அவனிடன் மதுக்குஞ்சு பற்றி சொன்ன ஒரு விசித்திரமான சேதி நினைவுக்கு வருகிறது. மதுக்குஞ்சுக்கு ஒரு கண் இல்லை. அங்கு அவன் அம்மாவின் கண் பொருத்தப்பட்டிருக்கிறது.
 இது எப்படி நடந்தது என அவன் விசாரிக்கிறான். மதுக்குஞ்சு குழந்தையாய் இருக்கையில் ஆற்று மணலில் அமர்ந்திருக்கும் அம்மாவின் மடியில் படுத்தபடி சினிமா பார்க்கிறான். கையில் கூழாங்கற்களை எடுப்பதும் போடுவதுமாய் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா எதேச்சையாய் கல்லுக்கு பதிலாய் அவன் கண்ணொன்றை நோண்டி எடுத்து விடுகிறாள். ஐயோ பிறகு என்னாச்சு?
 ஒன்றுமில்லை. அவன் அம்மா விரைவில் தற்கொலை பண்ண மருத்துவர்கள் அவன் அம்மாவின் கண்ணை அவனுக்கு பொருத்தி விடுகிறார்கள். இதெல்லாம் நடந்ததாய் அவனுக்கு நினைவில்லை. அவன் ஊர்க்காரர்கள் பலவிதமாய் சொன்ன கதைகளை அவன் இவ்வாறாய் தொகுத்து புரிந்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அந்த கண்ணில் பார்வை இல்லை. அது வெறும் பள்ளம் தான் என மதுக்குஞ்சு சொல்கிறான். தலைப்பு இங்கிருந்து தான் வருகிறது.
மதுக்குஞ்சுக்கு ஒரு கண் சொந்தமில்லை. அங்கு கண் இருக்கிறது. ஆனாலும் அது இல்லாத மாதிரி தான். அவனால் என்றுமே நிரப்ப முடியாத பள்ளம் அது. அது கண்ணின் பள்ளம் மட்டுமல்ல, அவன் அம்மா இல்லாத ஏக்கத்தின் பள்ளமும் தான். வாழ்க்கை ஏற்படுத்திய வடுவின் பள்ளமும் தான்.
அந்த கதையில் வரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போல் ஒரு பள்ளம் உள்ளது. அப்பா என்ன தான் கராறான வெற்றிகரமான குடும்ப நாதன் என்றாலும் அவர் சில நாட்கள் மனம் பொறுக்க முடியாமல் கொந்தளித்தபடி தன் அறையை நாடி வந்து அமர்கிறார். அங்கு இருக்கும் போது தான் அவருக்கு நிம்மதி கிடைக்கிறது. அவருக்குள் இருக்கும் ”பள்ளத்தை” அவர் அங்கு கிடைக்கும் ஆறுதலால் நிரப்ப முயல்கிறார்.
கதைசொல்லியான பையனின் வாழ்க்கையில் விரும்பின எதையும் பண்ண முடியாத, எதை உண்மையில் விரும்புகிறோம் என அறிய முடியாத அடையாளமின்மையின் ”பள்ளம்” உள்ளது. இளமையில் தழைத்த உடல் சுருங்கி தளர்ந்த வேசிகளுக்கு அந்த உடல் ஒரு பள்ளம். அபினுக்காய் ஏங்கும் முதியவர்களுக்கு போதை ஒரு பள்ளம். வார இறுதி கொட்டகை சினிமா கனவில் விழ ஏங்கும் குடும்ப பெண்களுக்கு அலுப்பு ஒரு பள்ளம். ஒவ்வொருவரின் வாழ்விலும் காலம் அகலமான ஒரு பள்ளமாய் இருக்கிறது. அதில் மணலை அள்ளிப் போட, குழாங்கற்களை இட்டு நிரப்ப, எதேச்சையாய் மனக்கொந்தளிப்பில் ஒரு குழந்தையின் கண்ணை பிடுங்கி போட நேர்கிறது.

வாழ்க்கையின் நிரப்ப முடியாத ஒன்றை பற்றின இந்த கதை அபாரமான விரிவை கொண்டது. ஒரு நாளின் காலைப் பொழுதின் சில மணிநேரங்களில் நடந்து முடிவதால் கதை சுலபத்தில் ஒரு புள்ளியில் வந்து ஒடுங்குகிறது. ஆனாலும் ஊத ஊத பலூன் போல் விரிந்து கொண்டே போகிறது.

No comments: