Sunday, August 14, 2016

தமிழரின் பண்பாட்டு தோய்வுக்கு காரணம் என்ன?


இக்கேள்விக்கு வரும் முன் நீங்கள் நம் சமகால பண்பாட்டு உண்மையிலேயே ஆழமற்றது, வெறும் கேளிக்கை நடவடிக்கைகள் சார்ந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது இங்கு இலக்கியம், தத்துவம், வரலாறு ஆகியவற்றை அறிவதில் அவற்றை ஆய்வு செய்வதில் மக்களுக்கு ஆர்வமில்லை. ஆம், இது உண்மை தான் என்றால் இனி இந்நிலைக்கு என்ன காரணங்கள் எனக் கேட்போம்.


பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழவன் திராவிடக் கட்சிகளை குறை சொல்கிறார். கர்நாடகத்திலும் கேரளாவிலும் அரசியல் உணர்வு  மக்கள் பேரியக்கமாய் வளர்ந்து வந்த கட்டத்தில் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் முக்கிய பங்காற்றினர். அதனாலே அங்கு எழுத்தாளர்களுக்கு அதிக மதிப்புள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல் எழுத்தி அறுபதுகளில் சினிமா நட்சத்திரங்கள் வழியாகவே நிகழ்கிறது. எம்.ஆர். ராதா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றோர் இங்கு அரசியல்-சமூக-பண்பாட்டு இயக்கமொன்றை சினிமாவை மையமிட்டு கட்டி எழுப்புகிறார்கள். மூன்று பெரும் திரை நட்சத்திரங்கள் மாநிலத்தின் உச்ச அதிகாரத்தை பெறுகிறார்கள். இதனாலே இங்கு இசை, நடனம், எழுத்து என ஒவ்வொன்றும் சினிமாவின் முகமாகவே மாற்றப்பட்டு விட்டது. சினிமா கலைஞர்கள் அல்லாது வேறு யாரும் இங்கு கவனிக்கப்படுவதில்லை. இது தமிழவனின் பார்வை. வரலாறு ஒரு புள்ளியை மையமிட்டு அதிகாரத்தால் கட்டமைக்கப்படுகிற ஒன்று எனும் அமைப்பியல் நோக்கு இதில் உள்ளது. தமிழவன் ஒரு அமைப்பியல்வாதி.

ஜெயமோகன் இது தமிழகம் கடந்த நூற்றாண்டில் சந்தித்த கடும் வறுமையின், பஞ்சங்களின் விளைவு எனப் பார்க்கிறார். ஒரு வளமான பாதுகாப்பான சூழலின் இருந்தே சிறந்த இலக்கியமும் அழகியல் பார்வையும் தழைக்க முடியும். இதற்கு அவர் கிரேக்கத்தின் பொற்காலத்தை சான்றாய் பார்க்கிறார். அடிமைகள் உழைக்க நாடு தழைக்க கிரேக்கர்கள் அந்த வியர்வையின் ரத்தத்தின் விலையை கொண்டு சொகுசாக வாழ்ந்தனர். அந்த செழிப்பிலும் அது தந்த ஓய்வு மற்றும் பாதுகாப்பில் இருந்தும் உன்னத தத்துவங்களும் நாடக இலக்கியமும் தோன்றியது. ஜெயமோகனின் இந்த பார்வைக்கு ஒரு மாற்றுத்தரப்பும் உண்டு. நீட்சே அக்கால கிரேக்கத்தை போர்கள், அழிவுகள், அரசியல் குழப்பங்கள், பிரச்சனைகள் என கடும் நெருக்கடிக்கும் சவால்களுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்கள் திரளாக பார்க்கிறார். அவர்களின் அக/புற நெருக்கடிகளே அவர்களின் உன்னத கலாச்சாரத்துக்கு காரணம் என்கிறார்.
இந்த நீட்சேயிய தரப்புக்கு இங்கிலாந்தின் இலக்கிய வரலாறும் இதற்கு ஒரு உதாரணமே. இங்கிலாந்தின் இலக்கிய பண்பாட்டின் உச்சம் என இரு காலகட்டங்களைச் சொல்லலாம். ஒன்று 16ஆம் நூற்றாண்டு. ஷேக்ஸ்பியர், பேகன், மில்டன், ஜான் டன்களின் நூற்றாண்டு. இன்றும் இவர்களை விஞ்ச கலைஞர்கள் இல்லை. இக்காலகட்டம் இங்கிலாந்தின் தடுமாற்றங்களின் காலகட்டம். எலிசபத் அரசியின் கீழ் அரசியல்ரீதியாய் ஓரளவு இங்கிலாந்து நிலைப்பெற்றாலும் தொடர்ச்சியான மதக்குழப்பங்கள், பிரான்சுடனான போர், உள்நாட்டு அரசியல் சதிகள், ஐரோப்பிய இலக்கிய, தத்துவ பிரதிகள் மொழிபெயர்ப்பாகி இங்கிலாந்தில் வாசிக்கப்பட்டு உருவான சிந்தனை/பார்வை மாறுதல்கள் என முழுக்க ஸ்திரமற்ற சூழல் அங்கு நிலவியது. ஷேக்ஸ்பியரின் அரசியல் நாடகங்கள் முழுக்க இப்படி தத்தளிக்கும் அரசியல் நிலை, அது சமூகத்தில் ஏற்படுத்தும் குழப்பங்கள் பற்றியவை தான். ஆனால் இதன் பின்னான நூற்றாண்டுகளில் இங்கிலாந்து பெரும் செல்வ செழிப்பையும் அதிகார நிலைப்பையும் நோக்கி சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகையே காலனியாதிக்கம் செய்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் ஆகியது. ஆனால் இலக்கியத்தை பொறுத்தமட்டில் இந்த செழிப்பான காலம் தான் வறிய காலம். இலக்கியத்தில் இங்கிலாந்தில் அடுத்த மேதைகள் தோன்ற இருபதாம் நூற்றாண்டு வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அது இங்கிலாந்தின் வீழ்ச்சியின் காலம். சாம்ராஜ்ஜியம் துண்டுதுண்டாகி சிதைந்து விட்டது.
 இரண்டாம் உலகப்போரின் முடிவுடன் இங்கிலாந்தும் எனும் சாம்ராஜ்ஜியம் அஸ்தமித்தது. இது ஏற்படுத்திய பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளும் சிதைவுகளும் உன்னத் இலக்கியத்துக்கு வழிகோலியது. விர்ஜினியா வூல்ப், கிரெகம் கிரீன், டி.எச்.லாரன்ஸ், ஆர்வெல், சி.எஸ். லீவிஸ் தோன்றினர். டி.எஸ். எலியட் அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்து தன் ஆகச்சிறந்த கவிதைகளை எழுதினார். இதே இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா பொருளாதார, பண்பாட்டு, மத ரீதியாய் கடும் சோதனைகளை சந்திக்கிறது. உயிரும் பொருளாதாரமும் எதிர்காலமும் நிலையற்றது, அர்த்தமற்றது என மக்களுக்கு தோன்றுகிறது. இது ஏற்படுத்தும் கடும் அழுத்தத்தில் பெரும் இலக்கியங்களூம் தத்துவங்களும் தோன்றுகின்றன.
இந்த இரண்டு தரப்புகளில் எது உண்மை? செழிப்பா அல்லது வறுமையா? ஸ்திரமான சூழலா அல்லது ஸ்திரமின்மையா? அச்சமா பாதுகாப்புணர்வா? எது பண்பாட்டு உன்னதத்துக்கு வழிகோலுகிறது?
சமகாலத்தை கவனிக்கும் போது இரண்டுக்கும் சாத்தியமுள்ளது எனத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அதிகார, பொருளாதார வலிமை அவர்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கும் ஒரு உந்துசக்தியை அளித்துள்ளது; லத்தீன் அமெரிக்க நாடுகளின் தத்தளிப்பு அங்கிருந்து மார்க்வ்ர்ஸ், போர்ஹெ போன்ற பெரும் கலைஞர்கள் தோன்ற உதவியுள்ளது.
இன்னொரு சுவாரஸ்மான பதில் மரபைப் பற்றியது. ஒரு தேசத்திலோ மாநிலத்திலோ நீண்ட அழுத்தமான மரபு இருந்தால் அங்கு புது கலாச்சார, சிந்தனை மாற்றங்கள் சாத்தியப்படாது என்பது இந்த பார்வை. தமிழர்களின் ரெண்டாயிரம் வருட மரபு இங்கு ஒரு இறுக்கமான மத/சாதிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. நமது பழம் இலக்கியங்கள் அழுத்தமான உணர்வுகளை, மொழி கட்டமைப்புகளை நம் மீது சுமத்தி உள்ளது. நாம் இவற்றை மீள மீள விதந்தோத முடியுமே அன்றி உதறி புது சிந்தனைகளை ஏற்க முடியாது என்பது இந்த வாதம். அதாவது தமிழனின் மரபே அவனது முதுகை வளைக்கும், பண்பாட்டை மழுங்கடிக்கும் பெரும் சுமை.

ஏப்ரல் மாத அம்ருதாவில் வெளிவந்த தனது பேட்டியில் லஷ்மி மணிவண்ணன் நமது சினிமா மையமிட்ட கலாச்சார சீரழிவுக்கு இதைத் தான் காரணம் காட்டுகிறார். கேரளாவும் கர்நாடகாவும் புதிதாய் தோன்றின மாநிலங்கள், அவற்றின் பண்பாட்டு உருவாக்கம் அண்மையானது என்பதால் அம்மாநில மக்கள் வெளியில் இருந்து புது ஊடுருவல்களை தம் பண்பாட்டில் தொடர்ந்து அனுமதிக்கிறார்கள். தம்மை தொடர்ந்து கலைத்துப் போட தயாராக உள்ளார்கள். அதனாலே அங்கு நவீன சிந்தனைகளும் பரீட்சார்த்த முயற்சிகளும் அவற்றை முன்னெடுக்கும் படைப்பாளிகளும் கொண்டாடப்படுகிறார்கள் என்கிறார் லஷ்மி மணிவண்ணன். 

No comments: