Friday, August 26, 2016

அவாளும் இவாளும்

Image result for சுகா எழுத்தாளர்

குமுதம் லைப் இதழில் சுகா எழுதியுள்ள “விளி” கட்டுரையை ரசித்தேன். வட்டார வழக்கின் பிராந்திய மாறுபாடுகள், அது குறித்துள்ள தவறான நம்பிக்கைகள் பற்றி எளிமையாக தனக்கே உரித்தான நமுட்டுச் சிரிப்புடன் எழுதியிருக்கிறார். மொழியியல், வட்டார வழக்கு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தவற விடாதீர்கள்.


அவாள் என்று ஒருவர் தன் பேச்சினிடையே நழுவ விட்டால் உடனே இவர் பூணூலோ என நம் ஆட்களுக்குள் ஐயம் பிறக்கும். அவாள் என்ற சொல் எப்படி பிராமண வழக்காக இருக்கிறதோ அதே போல அச்சொல் நெல்லையில் அனைத்து சாதி, மதத்தினரும் போற போக்கில் எடுத்து விளம்பும் சொல்லும் தான் என்கிறார் சுகா.

நீ, நீங்க என ஒருவரை அழைக்கும் முறையில் ஊருக்கு ஊர் உள்ள மாறுபாடுகளையும் சுவைபட பேசுகிறார். கோவைக்காரர்களின் அண்ணா விளி பிரபலம். அதே போல் பிறரிடம் மிகவும் மரியாதையும் அன்பும் காட்டும் இன்னொரு ஊர் திருச்சி. சுகா ஏனோ அவ்வூரை குறிப்பிட வில்லை. நான் வேலை விசயமாய் ஒரு மாதம் அங்கு தங்கி இருந்த போது திருச்சி மக்களின் உபசரிப்பில் தினமும் புது மாப்பிள்ளை உணர்வுடனே இருந்தேன். இனிய தமிழ் பேசும் பிரியம் ததும்பும் மக்கள்.

 தமிழகத்தில் யாரையும் மதிக்காமல் எடுத்தெறியும் குணம் மிக்கவர்களின் பட்டியலில் எங்கள் குமரி மாவட்டக்காரர்கள் எப்படியாவது சண்டை போட்டு இரண்டாவது இடத்தையாவது பிடித்து விடுவார்கள். நீங்கள் ரோட்டில் தடுக்கி குப்புற விழுந்தால் வந்து தூக்காமல் உங்களை பார்த்துக் கொண்டே பொறுமையாக டீ குடித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் புரண்டு எழும் போது வந்து கை கொடுப்பது போல் பாவனை காட்டி, ஆனால் அந்த கையையும் முழுக்க கொடுக்காமல், “குப்புற படுத்துட்டு என்ன ஒரே யோசனை? வேறெ சோலி ஒண்ணும் இல்லியா?” என்று வேறு கேட்பார்கள். ஏனோ குமரி மாவட்டத்தையும் சுகா தவிர்த்து விட்டார்.

மலையாளிகள் தமிழ் பேசும் போது நீ என்பது இங்கு ஒருமையிலான விளிச்சொல், அது மரியாதையானது அல்ல என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. மூத்தவர்களை கூட “நீ” போட்டே அழைப்பார்கள். எனக்குத் தெரிந்து இதில் விதிவிலக்கே இல்லை. நீண்ட காலம் இங்கு வாழ்ந்து வாசித்து பண்பாட்டை அறிந்த பின்னர் தான் “நீங்க” போட கற்றுக் கொள்கிறார்கள். நடிகை ஆஷா சரத் தன்னை இவ்வாறு ரொம்ப மரியாதையாக நீ போட்டு அழைத்த சம்பவத்தை சுகா குறிப்பிடுகிறார்.
எனக்குத் தெரிந்து வட இந்தியர்களை மலையாளிகளை விட சுலபத்தில் தமிழை நன்றாய் பேசக் கற்கிறார்கள். நான் வழக்கமாய் இரவுணவு அருந்தும் கடையின் இந்திப் பையன் என்னிடம் சரளமாகவே தமிழ் பேசுவான். ஒருநாள் என்னிடம் ஏதோ ஒரு இந்தி வாக்கியத்தை திரும்ப திரும்ப சொன்னார். பரா பர் பரா பர் என எனக்கு ஏதோ விசித்திர பிராணி முனகுவது போல் கேட்டது. அதற்கு பொருளும் சொல்லித் தந்தான். தன் தமிழையும் என்னிடம் பேசி பழகிக் கொள்வான். ஒருநாள் சொன்னான் “ஆறு அஞ்சு கொடுங்க” எனக்கு சத்தியமாக புரியவில்லை. அவன் திரும்ப திரும்ப விரல் மடித்து சைகைகளுடன் சொன்ன போது தான் அறுபத்தைந்தை அப்படி சொல்கிறான் என புரிந்தது. இந்த வெகுளித்தனம் மலையாளிகளிடம் இல்லை. அரைகுறையாய் தமிழை தெரிந்து கொண்டே தம்மை மாமேதை போல் காட்டிக் கொள்வார்கள்.

கங்கைக்கரை குகா இன மக்கள் எப்படி தமிழை பிராமண பாஷையாக மட்டுமே புரிந்து வைத்துக் கொண்டு யார் போனாலும் “வாங்கோ மாமா” என அழைப்பதை சுகா குறிப்பிடுகிறார். நான் இதை நினைத்து நினைத்து மனதுள் சிரித்தேன்.

சென்னைக்காரர்கள் மரியாதையற்ற முறையில் பேசுகிறார்கள் என ஒரு நம்பிக்கை உள்ளது. சும்மாவே “உனுக்கு இன்னா வேணும்?” என்பார்கள். சென்னை வந்த புதிதில் நானும் அப்படி நினைத்ததுண்டு. ஆனால் இங்குள்ள அடித்தட்டு மக்களிடம் பழகத் துவங்கிய பின் அது அவர்கள் நம்மை இயல்பாக, சகஜமாய் பார்க்கும் விதத்தை காட்டுகிறது என புரிந்து கொண்டேன். அதில் ஒரு அன்னியோன்யம், ஒரு முரட்டு அன்பு உள்ளது. சென்னையின் பூர்வ குடிகள் குறிப்பாய் அன்பின் திருவுருவங்கள். எந்த நேரத்திலும் உதவுவார்கள். சட்டென நண்பராகி விடுவார்கள். நெகிழ்வார்கள். நான் சாலையில் வாகனம் பழுதாகியோ விபத்தில் மாட்டியோ தனியாய் தவிக்கையில் பல முறை முகம் தெரியாத எளிய மக்கள் வந்து உதவியிருக்கிறார்கள். சென்னையின் படித்த மேல்தட்டினர் “வாங்க போங்க” போட்டு பேசுவார்கள். ஆனால் உதவ மாட்டார்கள். கீழ்த்தட்டினர் தகுதி பார்க்காமல் நீ, வா, போ என தாளிப்பார்கள். ஆனால் சிரமம் பார்க்காமல் உங்களுக்காய் உதவுவார்கள். சென்னை மக்கள் உண்மையில் பிறருக்கு அதிகம் மரியாதை அளிப்பவர்கள் என்பதையும் சுகா குறிப்பிடுகிறார்.

நெருங்கிய உறவுக்குள் மரியாதையுடன் ஒருவரை விளிப்பது அன்னியோன்யமற்ற செயலாகி விடும். என் அம்மாவை நான் “நீங்க” என அழைத்ததில்லை. சின்ன வயதில் இருந்தே ”நீ” தான். சிலநேரம் இதை தவிர்க்கலாமே என நினைப்பேன். மனதுக்குள் ஒரு ”நீங்க” போட்டு ஒத்திகை பார்ப்பேன். ஆனால் உடனே அம்மாவுக்கு வயது கூடி விடும். சரி, எதற்கு அவர் ”இளமையை” கெடுக்க வேண்டும் என ”நீ”க்கே திரும்பி விடுவேன். நெல்லையில் இது போல் நெருங்கிய உறவுகளில் மரியாதை காட்டி அடி வாங்கிய அனுபவங்களை சுகா பேசுகிறார். 

அன்பில் மரியாதை காட்டாமல் இருப்பதே மரியாதை!