Thursday, August 4, 2016

கதை எப்படி நாவலாகிறது? நான் முதுகலை படித்த சென்னை கிறித்துவக் கல்லூரியின் ஆங்கில இலக்கிய பேரவையின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று என்னை அழைத்திருந்தார்கள்.
பழைய கல்லூரிக்கு செல்கிற உற்சாகம், நினைவேக்கம், நெகிழ்வு என ஒன்றும் இல்லை. கடந்த சில வருடங்களில் நானே சிலமுறை அங்கு போய் வந்திருக்கிறேன். இம்முறை வேறு ஆளாக போகிறேன். அவ்வளவு தான்.
இலக்கிய பேரவை நிகழ்ச்சி என்பதால் இலக்கியம் பற்றியே பேசலாம் என முடிவு செய்தேன். நவீன யுகத்தில் நாவல் ஏன் பிற இலக்கிய வடிவங்களை பின்னுக்கு தள்ளி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என சுருக்கமாய் பேசி விட்டு ஒரு கதை எப்போது நாவலாகிறது என விளக்கினேன். நாவலின் முக்கிய சிறப்பு அதன் விரிவு, பிரம்மாண்டம். வாசகன் தன் உலகை பன்மடங்கு பெருக்கி காணத் தான் நாவல் வாசிக்கிறான். இதை ஒரு எழுத்தாளன் எப்படி நிகழ்த்துகிறான்?
நாவலுக்குள் இடம் மற்றும் காலம் விரிவடையும் போது பிரம்மாண்டம் தோன்றுகிறது.

 காலத்தை பிரம்மாண்டமாய் காட்ட கதையை ஒரு வரலாற்றுப் பின்னணியில் வைக்க வேண்டும். அல்லது வரலாற்றையே கூட கதையாக்கலாம். வரலாறு பின்னணி ஆவதற்கு அருந்ததி ராயின் God of Small Things ஒரு உதாரணம். சாதி மற்றும் நிலப்பிரபுத்துவ சமூகம் அடைகிற மாற்றங்கள், கேரள இடதுசாரி அமைப்புகளின் அரசியல் ஆகிய பின்னணிகள் அந்த எளிய காதல் கதைக்கு ஒரு அகலமான கேன்வாஸை அளிக்கின்றன. தமிழில் வணிக நாவல்களில் சாண்டியல்யனின் பல நாவல்கள், பொன்னியின் செல்வன், இலக்கிய நாவல்களில் ரப்பர், வெள்ளை யானை, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு போன்ற பல படைப்புகளை சொல்லலாம். வரலாறே கதையாவது என்பதற்கு சு.ராவின் புளிய மரத்தின் கதை, எஸ்.ராவின் நெடுங்குருதி, தல்ஸ்தாயின் போரும் வாழ்வும் ஆகியவை உதாரணங்கள். இந்நாவல்களில் வரலாறே முக்கியம் பாத்திரம். மனித உறவுகள் பின்னணியாக வரலாறு காலங்காலமாய் உருபெற்று மாறி வரும் விதமே சித்தரிக்கப்படும்.
இடத்தைக் கொண்டு ஒரு நாவலை பிரம்மாண்டமாக்க பயணம் உதவுகிறது. ஒரு கதையின் நாயகன் பல நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு பயணிக்கிற சித்திரங்களே அந்நாவலை விரிவான அனுபவம் தருவதாய் ஆக்கி விடும். நாஞ்சில் நாடனின் பெரும்பாலான நாவல்கள் இந்த வகைப்பாட்டுக்குள் வரும். எஸ்.ராவின் உறுபசி ஒரு நல்ல உதாரணம். அது ஒரு மெல்லிய நாவல். ஆனால் அதில் வருகிற பயணம் நாவலுக்கு ஒரு விரிவைக் கொடுக்கிறது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு ஒரு தனி ஆளோ அல்லது குடும்பமோ இடம்பெயர்கிற கதைச்சரடு கொண்ட நாவல்களை இந்த வகைமைக்குள் சேர்க்கலாம். (நண்பர் அருள் ஸ்காட் தனது முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதியில் தமிழ் நாவல்களில் தோன்றும் இந்த பயண உருவகம் பற்றி எழுதியிருக்கிறார். )
நாவலை விரிவாக்க மற்றொரு பார்முலா பார்வைக் கோணத்தை திருகி விடுவது. பார்வைக் கோணம் என்றால் யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பது. “நான்” என்ற ஒரு சுயசரிதை தொனியிலா அல்லது “அவன்”, “அவள்”, “அவர்கள்” எனும் பொது பார்வையிலா? எந்த படைப்பும் இதில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். “நான்” என்றும் ”அவன்” என்றும் இரண்டு கோணங்களில் ஒரு கதையை சொன்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் பின்நவீனத்துவ படைப்புகளில் இத்தகைய பரீட்சார்த்தங்கள் செய்யப்படுவதுண்டு. என்னைப் பொறுத்த மட்டில் இந்த பார்வைக் கோணத்தின் விதிகளை தலைகீழாய் கவிழ்த்த ஒரு நாவல் உண்டு: யுவான் ரூல்போவின் பெட்ரோ பராமோ. யுவான் பிரசியாடோ தன் அப்பாவான பெட்ரோ பராமோவை தேடி கொமாலா எனும் ஊருக்கு போகிறான். முழுக்க பேய்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் அது. நாவலின் துவக்கத்தில் நாவலாசிரியர் கதை சொல்ல துவங்கி பின்னர் அது நாயகனின் அப்பாவின் கண்ணோட்டத்தில் விரிந்து, பின்னர் நாயகன் பேய்களின் ஊருக்கு செல்ல அங்கு அவனை சந்திக்கும் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் நினைவுகளும் பல கதைகளை சொல்கின்றன. இந்த நினைவுகளின் வழி பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் கதையை யார் சொல்கிறார், யார் கதைக்குள் உள்ள கதைக்குள் நாம் இருக்கிறோம் எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனே இறந்து ஒரு பேயாகிறான். பேய்கள் இறந்த பின் எந்த காலத்தில் வாழ்கின்றன? இந்த கேள்விக்கு விடையே காண முடியாது. கடந்த காலத்தில் என நீங்கள் சொன்னாலும் அதை பேய்கள் நம்பாது. அவை நிகழ்காலத்திலே வாழ்கின்றன. சரி பேய்களின் கடந்த காலம் உங்களுக்கு என்ன காலம்? பேய்களோடு ஒருவன் பேசும் போது ஒரு கட்டத்தில் தன் நினைவுகளுடன், தன்னுடனே பேசுகிறான். ஒரு பொது கோணத்தில் “அவன் இப்படி செய்தான்” என கதை சொல்லும் நாவலாசிரியர் தனக்குள் பேசும் போது (அதாவது பேயுடன் பேசுவதன் வழி) இந்த கதை யார் வழி சொல்லப்படுகிறது என்பதே தெளிவற்றது ஆகிறது. இந்த காலக்குழப்பம் மற்றும் பார்வைக் குழப்பம் வரலாற்றின் துணையின்றியே நாவலுக்குள் காலம் மற்றும் இடம் சார்ந்த எல்லைகளை விரிக்கின்றன. அதாவது நாவலை பௌதிக தளத்தில் இருந்து மனதின் தளத்துக்குள் நகர்த்துகின்றன. மனதுக்கு தான் கால-இட எல்லைகள் இல்லையே!
நாவலை பிரம்மாண்டமாக்க இன்னொரு வழிமுறை உள்ளது. அது நாடகீய மோதல். தஸ்தாவஸ்கி இதற்கு சிறந்த உதாரணம். அவர் நாவல்களில் வரலாறு இல்லை. பயணம் இல்லை. பாத்திரங்கள் ஒரு அறை அல்லது வீடு அல்லது தெருவுக்குள் இருந்து அல்லது நின்றபடி பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தஸ்தாவஸ்கி இந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒரு வாழ்க்கைப்பார்வை அல்லது தத்துவ தரப்பின் பிரதிநிதியாக்குகிறார். இவர்களுக்குள் கருத்து சார்ந்த, நம்பிக்கை சார்ந்த, உணர்ச்சிகரமான மோதல்கள், தர்க்கபிரதிவாதங்கள், அழுகை, மன்றாடல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்கள் நாவலுக்கு பெரும் விரிவை அளிக்கின்றன. இமையம் தன் நாவல்களின் யுவன் ரூல்போ மற்றும் தஸ்தாவஸ்கி இருவரின் பாணிகளையும் தனதான வகையில் கடைபிடிப்பார். அதாவது இமையத்தின் நாவல்களில் பெரும் வரலாற்று பின்னணினோ பயணமோ இராது. பதிலுக்கு கதையை அவர் முக்கிய பாத்திரங்களின் கண்ணொட்டங்களின் வழி நகர செய்வார். கதைசொல்லி என்பவனே கிட்டத்தட்ட காணாமல் போக யார் கதையை சொல்கிறார், யார் பக்கம் இருந்து கதை பேசுகிறது எனும் ஒரு பூடகத்தை ஏற்படுத்துவார். அவரது பல சிறுகதைகளை உதாரணம் சொல்லலாம். கதையை சொல்லும் பாத்திரத்துக்கு எதிராக கூட அக்கதை திரும்பும் விசித்திரங்கள் நடக்கும். எங்கதெ ஒரு சிறந்த உதாரணம். அக்கதையில் கதைசொல்லியின் காதலியான பெண் பாத்திரம் தொடர்ந்து அவனால் வசை பாடப்படுவாள். அவளை குற்றம் கூறும் நாயகனின் தரப்பில் இருந்து கதை நகர்வதாய் ஒரு பாவனை இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த பாவனை முழுக்க கலைந்து அப்பெண்ணின் தரப்பே சரி என நமக்கு தோன்றும். ஆனால் அப்போதும் கதையை நாயகன் தான் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் அவனை அறியாது அவன் தன் தரப்பு நியாயங்களை விடுத்து தான் துரோகி என வர்ணிக்கும் தன் காதலியின் நியாயங்களை சொல்லத் துவங்கி இருப்பான். இப்படி பார்வைக் கோணங்கள் இமையத்தின் நாவல்களில் ஒரு குழப்ப நிலையில் பனிமூட்டமாய் இருக்கும். அதே போல மிக உணர்ச்சிகரமான மனநிலை மோதல்கள், பாத்திரங்களுக்கு இடையிலான நாடகீய மோதல்களும் இருக்கும். இந்த இரண்டு அம்சங்களும் இமையத்தின் படைப்புகளுக்கு ஒரு அகன்ற பரப்பை அளிக்கின்றன.

இந்த விசயங்களை எல்லாம் சுருக்கமாய், முடிந்தளவு எளிமையாய் இன்று பேசினேன். நான் எதிர்பார்த்ததை விட ஆர்வமாய் அரங்கு நிறைந்த மாணவர்கள் கேட்டார்கள். எந்தளவுக்கு உள்வாங்கினார்கள் தெரியவில்லை. எனக்கு அது முக்கியமாய் தோன்றவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கதை கேட்கும் சுவாரஸ்யமும் அவர்களை இன்று ஒன்ற வைத்தது.

No comments: