Monday, August 29, 2016

மெனிஞ்சியோமா

Image result for மெனிஞ்சியோமா

கணேசகுமாரனின் மெனிஞ்சியோமா நாவல் படித்து முடித்ததும் எனக்கு முதலில் தோன்றியது: இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த நாவல் படிக்கப் படும். ஏனென்றால் 1) மூளையில் நடக்கும் அறுவை சிகிச்சை, மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சோதனைகளும் ஒரு மனிதனை இழிவின் கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று அவனை ஒரு சுய நிர்ணயமற்ற விலங்கைப் போன்றே நடத்துவது ஆகிய விசயங்களை கணேசகுமாரன் துல்லியமாய் வர்ணித்துள்ள முறை 2) மீண்டும் தமிழில் ஒருவர் மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உயிருடன் மீண்டு வந்து அவர் எழுத்தாளராகவும் இருந்து அதைப் பற்றி ஒரு நாவல் எழுதும் சாத்தியம் 0.05% என்பதால்.


இந்நாவலில் சந்துரு எனும் இளைஞனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவனது மழிக்கப்பட தலையில் ஒரு கோட்டை வரைந்து அங்கு தலைமை மருத்துவர் ஒரு கத்தியால் கிழிக்கிறார். அப்போது ரத்தம் பீறிட்டு அவர் முகத்தில் தெறிக்கிறது. அவர் அமைதியாய் அகன்று ஒரு கழுத்தொட்டியில் பொறுமையாய் தன்னை அலம்பிக் கொள்கிறார். அவர் இடத்தில் நின்று அடுத்த நிலையில் உள்ள மருத்துவர் ஒரு கருவியால் மண்டை எலும்பை அறுக்கத் துவங்குகிறார். இந்த காட்சியை நாவலை படித்த பின்னும் நீண்ட நேரம் என்னால் மறக்க முடியவில்லை. இதே தொனியில் பெரும்பகுதி நாவல் வாசகனை பீதியூட்டிக் கொண்டே போகிறது.

 மனித நிலையின் அவலம் என்பது சுயமரியாதையும், சுயநிர்ணயத்தை ஒருவன் இழக்கிற இடத்தில் தான் துவங்குகிறது. ஏழ்மை, அடிமைத்தனம், சாதிய ஒடுக்குமுறை என ஒவ்வொரு கொடுமையில் மனிதன் தன் மீதுள்ள உரிமையை இழக்கிறான். ஆனால் இந்த அவலத்தின் உச்சம் என்பது ஒருவன் தன் உடல் மீதுள்ள நிர்ணய உரிமையை இழந்து, அதை ஒரு மருத்துவருக்கு, நிறுவனத்துக்கு, சமூகத்துக்கு ஒருவன் தாரை வார்ப்பது தான். தமிழில் உடல் சார்ந்து மெல்ல மெல்ல ஒருவன் சீரழிந்து சிதைவதை, அதன் இழிவை, அருவருப்பை தொடர்ந்து எழுதியவர் என ஜெயமோகனை சொல்ல வேண்டும். குறிப்பாய் அவரது ஏழாம் உலகம், நூறு நாற்காலிகள் போன்ற படைப்புகள். மெனிஞ்சியோமா நாவல் எனக்கு இந்த வகை எழுத்து எனப் பட்டது. ஒரே வித்தியாசம் ஜெயமோகனில் இப்படி இழிவுக்குள்ளாகப்படுபவர் பிறிதாகவும் கணேசகுமாரனில் அது மைய பாத்திரமாகவும் இருக்கிறது. ஜெயமோகன் சிதையும் உடலைக் கொண்டு அறம், நன்மை-தீமை குறித்த கேள்விகளை எழுப்புகிறார். கணேசகுமாரன் அவலத்தையும் அதன் கழிவிரக்கத்தையும் மட்டும் சித்தரிக்கிறார்.

 இது சார்ந்து இன்னொரு விசயம்: இப்படியான அருவருப்பான காட்சிகளை நாம் நேரில் பார்த்தால் வாந்தி எடுப்போம். உதாரணமாய், மெனிஞ்சியோமாவில் சந்துருவுக்கு எனிமா கொடுப்பது, அவன் தன் நாவை நனைக்க மூத்திரத்தை தொட்டு நக்குவது, சிகிச்சை காலத்தில் முதன்முதலில் எழுந்து நடக்க துவங்கியதும் முதன்முதலில் சிறுநீர் கழிப்பதற்காய் ஏங்குவது… ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதையில் அந்த பிச்சைக்காரி அம்மா தன் மகனின் குழந்தைக்கு ஒரு அழுகிய உணவை ஊட்டும் இடம் ஆகியவை. ஆனால் இக்காட்சிகளை எழுத்து வழியாய் ஒரு வர்ணனையாய் எதிர்கொண்டு கற்பனை செய்வதில் வாசகனுக்கு ஒரு சுகம், ஒரு திகில் உணர்வு உள்ளது.

எனக்கு மெனிஞ்சியோமா படிக்க ஒரு பேய் நாவல் போன்றிருந்தது. இரவு 12 மணிக்கு துவங்கி 1:30க்கு படித்து முடித்தேன். அதன் பிறகு கண்ணை மூடித் தூங்க பயமாய் இருந்தது. சொல்லப் போனால் பேய் நாவல்கள் கூட என்னை இப்படி பயமுறுத்தியது இல்லை.

இந்த நாவலில் மருந்துகள், சிகிச்சை முறை, மூளையின் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிவியல் தகவல்களை தந்தபடியே போகிறார் கணேசகுமாரன். இதற்கு அவர் நிறைய மெனக்கட்டிருப்பது தெரிகிறது. இத்தகவல்கள் நாவலின் காட்சிகளின் குரூரத்தன்மையை இன்னும் உக்கிரமாக்க உதவுகின்றன. இதை அவர் தெரிந்து செய்தாரா அல்லது எதேச்சையாய் நடந்ததா எனத் தெரியவில்லை. எப்போதுமே ஒரு கொடூரமான செயலை எந்த உணர்ச்சியுமற்ற அறிவியல் அல்லது தொழில் நுட்ப தகவல்களால் விவரித்தால் அதன் தாக்கம் பன்மடங்காக இருக்கும். மெனிஞ்சியோமாவில் மருத்துவ துறையின் ஒரு அந்நியத்தன்மை, அதன் சர்வாதிகாரம், அதனிடம் நம்மை ஒப்பிவித்தபின் நான் உணரும் தனிமை, பீதி ஆகியவற்றை உணர்த்த இத்தகவல்கள் மட்டுமே கொண்டு எழுதப்பட்ட இடங்கள் உதவுகின்றன.

தூங்கும் முன் மூன்று கேள்விகளை யோசித்தபடி இருந்தேன்:
1)   ஏன் இப்படியான ஒரு நாவலை வாசித்து தொலைத்தேன்?
2)   ஏன் இந்த நாவலை நான் இதுவரை வாசிக்கவில்லை?

3)   ஏன் இவ்வளவு அருவருப்பும் கொடூரமும் கொண்ட நாவல் எனக்கு இவ்வளவு சிலாகிப்பாய் எனக்கு தோன்றுகிறது? நான் ஏன் இந்த அவலத்தை உள்ளுக்குள் ரசிக்கிறேன்?

No comments: