Saturday, August 27, 2016

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.3. உயிர்மையில் மட்டுமே என் நூல்கள் வெளியாகி உள்ளன. உயிர்மையில் வெளியான நூல்களுக்காகவே நான் யுவ புரஷ்கார் மற்றும் பாஷா பரிஷத் விருதுகள் பெற்றேன். உயிர்மையில் தான் நான் எழுத்தாளனாக அறிமுகமானேன். அடையாளம் பெற்றேன். இவ்வளவு ராசியான ஒரு இடத்தை நான் ஏன் விட்டு விலக வேண்டும்? உங்களுக்கு நான் அங்கு இருப்பது உறுத்துகிறது என்றால் கூலிப்படை வைத்து தூக்கி விடுங்கள்.

4. உயிர்மை என் நூல்களுக்கான ராயல்டி தொகையை வழங்குகிறது. எனக்கு அப்பதிப்பகத்துடன் எந்த பிணக்கும் இல்லை. கோபதாபங்கள் இல்லை.

5. இன்னொரு முக்கியமான விசயம்: சிவராமன், நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லாததால் இந்த பரிமாணத்தை நீங்கள் அறியாதிருக்கலாம்: ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவு தாம்பத்யம் போன்றது. அது one night stand அல்ல. ஏன் இமையம் கிரியாவில் மட்டுமே தன் நூல்களை தொடர்ந்து பிரசுரிக்கிறார் என யோசித்திருக்கிறீர்களா? எஸ்.ராவுக்கு உயிர்மையுடனும் ஜெயமோகனுக்கு தமிழினியுடனும் உள்ள நீண்ட கால உறவின் உணர்ச்சிகரமான, படைப்பூக்கம் சம்மந்தமான பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் இயங்க அவனை ஊக்குவிக்கும், நம்பி ஆதரவு அளிக்கும் ஒரு இயக்கம் வேண்டும். இலக்கியத்தில் ஒரு நல்ல பதிப்பகமே அப்படி ஒரு இயக்கமாக இருக்கும். அதன் பகுதியாக இருந்தே எழுத்தாளன் வளர முடியும். மேலும் இது அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சம்மந்தப்பட்ட விசயம். கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை கவனித்தாலே இது புரியும். தமிழில் ஏன் உலக இலக்கியத்தில் கூட எடிட்டர் / பதிப்பாளருடனா கூட்டுறவின் அடிப்படையில் தான் பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். உயிர்மையுடன் இருந்த போது சாரு எவ்வளவு எழுதினார், பிரிந்த பிறகு அவரது புத்தகங்களின், கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது என்பதை அறிவேன். சாருவுக்கு பதிப்பிக்க ஆள் இல்லாமல் இல்லை. அவரை தொடர்ந்து ஊக்குவித்து அரவணைத்து எழுத தூண்ட ஒரு ஆள் வேண்டும். அது தான் அவருக்கு இல்லாமல் போனது. எழுத்தாளன் தனியே நின்று இயங்குவதில்லை. அவனுக்கு பின்னால் கண்மூடித்தனமாய் அவனை நம்பும் ஒரு இயக்கம் உள்ளது. அந்த இயக்கத்துடனான அவனது உறவு உணர்ச்சியின், அன்பின், பிரியத்தின், நம்பிக்கையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் இந்த உணர்வுகளுக்கு இடமளிக்காதவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளன் ஒரு பதிப்பகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கிறான் என புரியாது. எனக்கு யார் மீது நேசமுள்ளதோ அவர்களுடனே நான் செயல்பட முடியும். நேசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது.


6. எப்படியாவது எனக்கும் உயிர்மைக்கும் ஒரு புகைச்சலை உண்டு பண்ணி பார்த்து ரசிக்கலாம் என உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களுக்கு சிண்டு முடிய வராது சிவராமன். அந்த சாமர்த்தியம் உங்களுக்கு போதாது. வழக்கம் போல் யுவகிருஷ்ணாவை தூண்டி விட்டு எனக்கு எதிராய் எழுத வையுங்கள். அல்லது புதிதாக அவரைப் போல் ஒருவரை உருவாக்குங்கள். நான் எழுதுகிற வேறு பத்திரிகைகளின் எடிட்டர்களிடம் சென்று என்னைப் பற்றி புகார் செய்யுங்கள். அது போன்ற ரகசிய சதியாலோசனைகள் தான் உங்களுக்கு நன்றாக கைவரும். வாழ்த்துக்கள்.

No comments: