Friday, August 26, 2016

கி.ராவின் இனக்குழு அடையாளம்: ஜெயமோகன் கூறுவதில் உள்ள சில சிக்கல்கள்

Image result for கி.ராஜநாராயணன்

"தமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்வது செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல.தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். " - ஜெயமோகன், ”கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி

எனக்கு ஜெ.மோவின் இக்கூற்றில் முழுக்க உடன்பாடில்லை.

தேவதச்சன் எந்த இனக்குழு அழகியலை முன்னெடுக்கிறார்? மனுஷ்யபுத்திரன்? ஜி.நாகராஜனின் “குறத்தி முடுக்கு” அல்லது சு.ராவின் “பல்லக்கு தூக்கிகளில்” எந்த இனக்குழு அடையாளம் உள்ளது?


சரி, இது உண்மையென்றால் உலக இலக்கியத்துக்கும் பொருந்த வேண்டுமே. தஸ்தாவஸ்கியின் இனக்குழு அடையாளம்? காம்யு? தஸ்தாவஸ்கிக்கு தனது இனக்குழு அடையாளத்தை விட (அவருக்கு அப்படி ஒன்று இருந்ததென்றால்) கிறித்துவத்தின் அறம், இறையியல், மனித நேயம், உளவியல், நவீன வாழ்வின் அந்நியமாதல், மனிதனிடம் உள்ள தர்க்கத்துள் அடைபடாத ஒரு பித்து ஆகியவற்றில் தான் ஆர்வம் அதிகம்.

ஜெயமோகனின் இந்த கட்டுரைக்கு உள்ளேயே அவர் சு.ரா மற்றும் நி.நாகராஜனின் “சமூக அடையாளம்” அவர்கள் மீது திணிக்கப்பட்டதே அன்றி இயல்பானது அல்ல என்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு சிறந்த படைப்பாளியிடம் அவனது ஆழ்மனதின் இனக்குழு விழைவுகளும் நவீன பிரக்ஞையும் மோதும் போதே படைப்பூக்கம் உச்சம் அடைகிறது என்கிறார். இதன் படி பார்த்தால் அவர் மேற்சொன்ன இருவரின் குறையாவகவே இனக்குழு அடையாளமின்மையை காண்கிறார்.

ஜெயமோகனின் இந்த விமர்சன அணுகுமுறை ஒரு சில படைப்பாளிகளுக்கும் மட்டுமே பொருந்தும் என நினைக்கிறேன். ஆனால் அவர் பொதுவாய் ஒரு படைப்பாளியை கொண்டாடும் போது
சில விசயங்களை அழுத்தி சொல்வார். அப்போது அவர் கூற்று சற்று மிகையாகி விடும். அப்படியே இதை புரிந்து கொள்கிறேன். ஜெயமோகனின் விமர்சனத்தில் உள்ள பிசிறுகளை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவர் விமர்சனம் எழுதும் படைப்பாளி. ஆக, நாம் அவர் விமர்சனத்தில் உள்ள சில சிறப்பான அவதானிப்புகளை மட்டும் உள்வாங்கினால் போதும். மிகையை தவிர்த்து விடலாம்.

நான் இதைப் பற்றி இங்கு குறிப்பிட்டு எழுதக் காரணம் வேறு. ஜெயமோகனின் இனக்குழு அடையாள வாதம் எனக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம் படைப்பு மனம் பற்றி குறிப்பிட்ட ஒரு விசயத்தை நினைவுபடுத்தியது. ஜெயமோகனுக்கு அப்போதில் இருந்தே இனக்குழு அடையாளங்களுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தவிர்க்க இயலாத உறவு குறித்து ஒரு வலுவான நம்பிக்கை உண்டு.
நான் பதினெட்டு வயது வரை கிராமத்திலேயே வாழ்ந்தேன். ஆனால் ஊரில் உள்ள பண்பாட்டு வாழ்க்கையில் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. எனக்கு மனிதர்களில், குறிப்பாய் தனியாய் உலவும் மனிதர்களில், ஆர்வம் உண்டு. கோயிலுக்கும் குளத்துக்கும் தனியாய் போகும் முதியவர்கள், மாடு மேய்க்கும் பையன்கள் இப்படி. அதே போல் விசித்திரமான மனிதர்கள், அவர்களைப் பற்றின ஊர்க்கதைகள். ஆனால் கோயில் நிகழ்ச்சிகள், கொடை, தீபாராதனை, விழா, தேரோட்டம் இதிலெல்லாம் என் மனம் சென்றதில்லை. ஊரின் சமூக நிகழ்ச்சிகளில் கலந்திருப்பேன். ஆனால் மனம் அங்கு ஒன்றியதில்லை. நான் இதை ஒரு இளைஞனாக ஜெயமோகனிடம் குறிப்பிட்ட போது அவர் முகம் ஒரு கணம் சுண்டியதை இப்போதும் நினைவு கூர்கிறேன். அவர் சொன்னார் “இல்லை கோயில் பற்றி நீங்கள் கவனித்த விசயங்கள் உங்கள் ஆழ்மனதில் இருக்கும். எழுத்தின் போது அது தானே வெளிவரும்”

அப்போது எனக்கு என் மீதே வருத்தம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் ஜெயமோகன் கூறியதை அச்சு பிசகாமல் நம்பினேன். சற்று காலம் குற்றவுணர்வுடன் மருகினேன். ஆனால் என் வாசிப்பு பரவலாக இலக்கியத்தில் ஒரு வழி அல்ல பல வழிகள் என அறிந்து கொண்டேன்.

ஜெயமோகனின் பார்வையை = பின்அமைப்பியல்- மொழியியல் + உளவியல் என புரிந்து கொள்கிறேன். மொழியின் அடுக்குகளையும் மனதின் அடுக்குகளையும் அவர் ஒன்றாக பார்க்கிறார். Unconscious எனும் நனவிலில் தான் நம் மனதின் கீழ்மட்டத்தில் உள்ள அடுக்கு, இதுவே நம் அன்றாட விழைவுகளை (செக்ஸ், அச்சம்) போன்று தீர்மானிக்கிறது என்றார் பிராய்ட். நனவிலிக்கு தர்க்கம் இல்லை. அது ஒரு குழப்பநிலையில் இருக்கிறது. எல்லா உணர்ச்சிகளும் எண்ணங்களும் பின்னிப்பிணைந்த கலவை அது. பிராயிடுக்கு பின்னர் வந்தவர்கள் இந்த நனவிலியையே நம் மொழியாக கண்டார்கள். நனவிலியைப் போன்றே மொழிக்கும் நிலைத்த அர்த்தமோ தர்க்கமோ இல்லை என்றார்கள். மானுடவியல் சார்ந்து மனிதர்களை அலசியவர்கள் இனக்குழு வாழ்க்கைக்குள் சென்றார்கள். மனித நடவடிக்கைகளின் அடிப்படையை அங்கு காணவியலும் என்றார்கள். அமைப்பியல் – பின்-அமைப்பியல் என இது சார்ந்து நிறைய விவாதங்கள் நடந்தன. ஜெயமோகன் நனவிலி, மொழி, இனக்குழு மனநிலை மூன்றையும் இணைத்து அதையே படைப்பூக்கம் என காண்கிறார். இது பண்பாட்டு தேடல் சம்மந்தமான அவரது அடிப்படை நம்பிக்கை. அவரது குழந்தைகள் நாவலான “பனிமனிதனில்” இது வெளிப்படையாகவே இருக்கும். உன்னத நிலையில் இருக்கும், மனித நாகரிகமே இல்லாத, கட்டற்ற நனவிலிக்குள் வாழும் ஆதிமனிதர்கள் இதில் வருவார்கள். இவர்களைத் தேடியே ஆய்வாளனும் ஒரு பௌத்த ஞானியும் செல்வார்கள்.
இந்த ”ஆதிமனிதனை” ஒரு எழுத்தாளன் தனக்குள் சந்திக்கையிலே சிறந்த படைப்பு தோன்றுகிறது என்கிறார் ஜெயமோகன். கி.ராவிடம் இது நிகழ்வதாலே அவர் கி.ராவை ஒரு முக்கிய படைப்பாளியாய் மதிப்பிடுகிறார். “பனிமனிதன்” நாவலை ஜெயமோகனின் விமர்சன அணுமுறையின் அடிப்படையான ஒரு வரைவு எனலாம்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. மானுடவியல், தொன்மவியல், இனக்குழு ஆய்வு சார்ந்து ஆராய முடியாத முக்கிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். உதாரணமாய், ஷேக்ஸ்பியரிடம் சமூகவியலையும், கிறுத்துவ இறையியல் சார்ந்த ஒரு வேரை காணலாம். ஆனால் அவரது ஆதி அடையாளம் என்பதை மேலும் தேடிப் போனால் அது பழங்கால கிரேக்க இலக்கியம், தொன்மம், தத்துவத்திலே போய் முட்டி நிற்கும். ஆனால் இங்கிலாந்தின் தொல்குடிகள் கிரேக்கர்கள் அல்ல. ஆக, மொழி மற்றும் மதம் வழியாக ஒரு அந்நிய தொல்குடியுடன் ஒரு செயற்கை உறவை இங்கிலாந்து மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஹருகி முராகாமி போன்ற ஒரு எழுத்தாளரிடம் நீங்கள் (உலக இலக்கிய வாசிப்பு வழி) இதே கிரேக்க தொல் குடி உறவை காண இயலும். ரஷ்ய மேதையான தஸ்தாவஸ்கியும் அவ்வாறே. ஆக ஜெயமோகன் கூறுவது போல் பழங்குடி மனதுக்கும் எழுத்தாளனுக்குமான உறவு அத்தனை நேரடியான ஒன்று அல்ல. (அவர் சொல்வது உண்மை தான். ஆனால் சற்றே மிகைப்படுத்தி, எளிமைப்படுத்துகிறார்!)

சரி இவர்கள் எல்லாம் ஐரோப்பியர்கள். அதனால் கிரேக்க தொன்மம் மற்றும் பண்பாட்டில் போய் இணைகிறார்கள். முராகாமி போன்றவர்கள் ஐரோப்பிய தாக்கம் கொண்ட ”போலி” இலக்கியவாதிகள் என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் (சொந்த மண்ணின் வேர்களை நேரடியாய் ஸ்பரிசிக்காதவர்கள் போலிகள் என்பதே ஒரு சிக்கலான ஏற்றுக்கொள்ள சிரமமான வாதம்). நவீன ஐரோப்பிய தத்துவம் நம்முடைய வைதிக மரபின் தாக்கத்தால் உருவானது என்றொரு பார்வை உள்ளது. குறிப்பாய், தெரிதா இந்திய வைதிக தத்துவங்களில் வாசிப்பு கொண்டவர். அவரது கட்டுடைத்தல் என்பதே நாம் வேள்வியின் போது சொல்லும் மந்திரங்களின் நீட்சி என்கிறார்கள். “இதுவும் அல்ல, அதுவும் அல்ல” என இறைவனை எதுவெல்லாம் அல்லாது இருக்கிறானோ அவனே என்கிறோம். அதாவது மொழியை, மொழி வழியாய் மனதை கடந்தவனே பூரண உண்மையான இறைவன். குறிப்பானுக்கும் குறிக்கப்படுபவற்றுக்குமான உறவை இப்படித் தான் அமைப்பியல் வாதிகள் வரையறுக்கிறார்கள். பசு என்றால் என்ன? எது பசு இல்லையோ அதுவே பசு. ஆனால் பசு என்றால் பசுவின் அர்த்தமே வரவேண்டியதில்லை, அது மற்றொன்றாகவும் இருக்கலாம், மொழி கட்டற்றது என்று கூறும் தெரிதா ஒரு வைதிக மரபின் நீட்சியாகவே எனக்குப் படுகிறார். அப்படி என்றால் நீங்கள் ஐரோப்பிய தத்துவவாதிக்ளை, அவர்களின் தாக்கம் கொண்ட ஐரோப்பிய எழுத்தாளர்களை, கிரேக்க மரபில் இணைப்பீர்களா அல்லது நம் வைதிக மரபின் பகுதி என்பீர்களா? சம்ஸ்கிருத தாக்கம் வலுவாக கொண்ட ஷோப்பன்ஹெர், நீட்சே போன்றவர்கள் எம்மரபை சேர்ந்தவர்கள்?

இனக்குழு வாழ்வியலை தாண்டி பார்த்தோமானால் மொழியை நாம் எந்த ஒரு சமூக வாழ்க்கை அடையாளத்தோடும் பிணைக்க முடியாத படி அது சிக்கலாக, குழப்பமாக உள்ளது. தனது இனக்குழு வேரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சந்திக்காமலும் ஒரு சிறந்த படைப்பு தோன்ற முடியும். எப்படி?
ஒரு படைப்பு மனித மனம் அல்லது மனிதனின் நடவடிக்கைகளின் விசித்திரங்கள், புதிர்களை வெளிச்சமிடும் போதே சுவாரஸ்யமாகிறது. அதற்கு விரிவும் ஆழமும் கொடுக்க தத்துவம், சமூகவியல், வரலாறு போன்று வேறு துறைகளின் அனுபவங்கள் உதவுகின்றன. இனக்குழு வரைவியல் இவ்வாறான பல வழிகளில் ஒன்று மட்டுமே. ஆனால் அதுமட்டுமே ஒரே வழி அல்ல.
இனக்குழு வாழ்வை இருவிதமாய் காட்டலாம். எஸ்.ரா தனது “நெடுங்குருதியில்” அதை வரலாற்றின் நகர்வில் பல தலைமுறைகள் சந்திக்கும் வெறுமையை பேச பயன்படுத்துகிறார். கி.ரா வரலாற்றை ஒரு பாத்திரம் ஆக்காமல் பின்னணியில் வைத்து இனக்குழு வாழ்வை மட்டும் முன்வைக்கிறார். எனக்கு ”நெடுங்குருதி” படிக்கையில் கிடைக்கும் மன விரிவு, கிளர்ச்சி கி.ராவின் நாவல்களில் கிடைப்பதில்லை.
 எஸ்.ராவுக்கு தன் இனக்குழு வரலாற்றை நேரடியாய் சித்தரிப்பதில் ஏன் ஆர்வம் இல்லை? ஏனென்றால் அவருக்கும் ஒரு பண்பாட்டை அதனளவில் சித்தரிப்பதை விட அதன் வரலாற்று நகர்வை, அது ஒரு தனிமனிதனை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அவன் எப்படி எல்லாம் வரலாற்றில் நிராதரவாய் உணர்கிறான் என பேசுவதிலே உற்சாகம் இருக்கிறது. பி.கிருஷ்ணனின் ”புலிநகக்கொன்றையிலும்” இதே போல் வரலாற்று மாற்றங்களுக்கும் தனி மனிதனுக்குமான உறவு, அவனது வெறுமை, நிராதரவு நிலையின் அவலம் பேசப்படுகிறது. இந்த இரு நாவல்களுக்கும் சு.ராவின் “புளிய மரத்தின் கதை”, ஜெ.மோவின் “ரப்பர்” ஆகியவற்றை முன்னோடிகள் எனலாம். எனக்கு இந்த நாவல்கள் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இவை வாழ்க்கையை அதை விட அகலமான ஆழமான ஒன்றுடன் இணைக்கிறது (வரலாறு அல்லது தத்துவம்).
 என்னைப் பொறுத்த வரையில் நாவல் எப்படி இருக்க வேண்டும்? நாவலில் வெறும் வாழ்க்கை மட்டும் இருக்கக் கூடாது. வாழ்க்கை இன்னொரு தளத்துடன் கைகோர்க்க வேண்டும். கி.ராவிடம் அது நேர்வது இல்லை. எனக்கு “கோபல்ல கிராமம்” ஒரு நாவலாக அல்ல ஒரு நாவலுக்கான முன்வரைவாக மட்டுமே தோன்றுகிறது.
இதே போன்று கிராமத்து பின்னணி கொண்ட, வாய்மொழி சித்தரிப்பு பாணி கொண்ட இமையத்தின் கதைகளில் மனித மனங்கள் எப்படி மொழியின் ஊடாய் ஒன்றோடொண்டு பின்னிக் கொள்கின்றன எனும் சித்திரம் வருகிறது. உதாரணமாய் “எங் கதெ” நாவலில் விநாயகம் தன் காதலியை கடுமையாய் சாடிக் கொண்டே வருகிறான். ஆனால் அவனது எதிர்மறையான சித்தரிப்பின் ஊடே அப்பெண் குறித்த ஒரு நேர்மறையான சித்திரமே நமக்கு கிடைக்கிறது. இந்த நாவலை படிக்கையில் நமக்கு கிடைக்கிற கிளர்ச்சி இந்த நுணுக்கங்களிலே தான் உள்ளது. ஒருவன் நான் ”இதுதான்” என்கிறான். ஆனால் அவன் பேசிக் கொண்டே போகையில் அவன் ”அது” அல்ல, அவன் ”வேறொருவன்” என நமக்கு புலனாகிறது. அப்படி என்றால் அவன் செய்யும் குற்றங்களுக்கு நாம் யாரை பொறுப்பாக்குவது? விநாயகம் தன் காதலியை கொல்ல முடிவெடுக்கிறான். அது அவன் முடிவா அல்லது அப்பெண்ணே அவனை அவ்வாறு முடிவெடுக்க தூண்டுகிறாளா? விநாயகத்தின் காதலி அவனுக்கு துரோகம் செய்கிறாள். இது இவர்களின் குற்றமா அல்லது சமூகம் சூழல், அவர்களை சூழ்ந்துள்ளோருடனான உரையாடல் அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுகிறதா? ஏற்கனவே குடும்பமும் குழந்தைகளும் கொண்ட அவளை அவன் காதலிக்கும் தூண்டுதலை அவன் ஊரும் அவன் குடும்பமும் அளிப்பதாய் நமக்கு ஒரு குறிப்பு நாவலில் கிடைக்கிறது. அப்படி என்றால் அந்த பிறழ்வான காதலுக்கு விநாயகம் காரணமா அந்த ஊரே காரணமா?
இந்நாவலில் நம் மனம் செயல்படும் விதம், மொழி நமக்குள் இயங்கும் விதம், நம் நடவடிக்கைகளுக்குள் ஒரு ஊரின் மனம் செயல்படும் நுணுக்கம் குறித்த ஒரு தீவிரமான உளவியல் அலசல் உள்ளது. இதுவே இந்நாவல் என்னை கவர காரணம். இதை என்னால் கி.ராவில் காண முடிவதில்லை.
கி.ரா ஒரு இனக்குழு கதைசொல்லியாகவே இருக்கட்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் அவர் நாவல் ஆசிரியர் அல்ல. அவர் கதைகள் கதைகளாகவே இருக்கின்றன, அவை தத்துவம், வரலாறு, உளவியல் எங்கும் போய் தீவிரமாய், நுணுக்கமாய் இணைவதில்லை.

கி.ராவை ஒரு நாவலாசிரியராக அல்ல, ஒரு மொழியில் உள்ள பண்பாட்டு நினைவுகளை மீட்டுகிறவராய் தான் பார்க்க வேண்டும். ஒரு வாசகனுக்கு அவர் மீது உள்ள சுவாரஸ்யம் அதுவே. நானும் அவரை அவ்வாறே வாசிக்க விரும்புகிறேன்.

1 comment:

prasanth said...

Not only derrida Ferdinand de Saussure also had a deep knowledge in sankrit.This has been clearly explained in the book"structuralism, post-structuralism and Eastern poetics"