Thursday, August 25, 2016

மாணவர்களுடன் ஜெயமோகன்: ஒரு கொடுப்பினை


ஜெயமோகன் சிங்கப்பூரின் National Institute of Education இல் writer in residency ஆக தங்கி இருக்கிறார். இது பற்றின சேதியை straitstimes.com எனும் இணையதளத்தில் படித்தேன்.
Writer in residency என்பது ஐரோப்பிய தேசங்களில் உள்ள ஒரு வழமை. ஒரு எழுத்தாளரை அழைத்து பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கி எழுத வாய்ப்பளிப்பார்கள். அசோகமித்திரன் தனக்கு இவ்வாறு கிடைத்த வாய்ப்பின் போதான அனுபவங்களை ஒற்றன் நாவலில் எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூரின் NIEஇல் இப்போது தான் இந்த தமிழ் writer in residency கொண்டு வந்திருக்கிறார்கள். முதன்முதலாக ஜெயமோகனும் மற்றொரு சிங்கப்பூர் எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள். எட்டு வாரங்கள் அங்கு தங்கி எழுதலாம். அவ்வப்போது மாணவர்களுடன் உரையாடலாம். இந்த வாய்ப்பு ஜெயமோகனுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை விட அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு கொடையாக இருக்கும். (அவர்கள் அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் என்றால்.)

எனக்கு இச்செய்தியை படித்த போது ஜில்லென்று இருந்தது. அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனத் தோன்றியது. என் கல்லூரி நாட்கள் நினைவு வந்தன. நான் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் தான் ஜெயமோகனை அடிக்கடி தேடி சென்று பார்க்க துவங்கினேன். காலையில் இரண்டு வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து நைசாக தப்பித்து தக்கலையில் உள்ள ஜெயமோகனின் அலுவலகம் சென்று விடுவேன். அவர் பேச்சை கேட்பதில் எனக்கு அப்படி ஒரு மனக்கிளர்ச்சி இருந்தது.

ஜெயமோகன் என் பேராசிரியர்களை விட பலமடங்கு படித்தவராக இருந்தார். குறிப்பாய் புனைவிலக்கியத்தில். தான் வாசித்த நூல்களின் நுண் தகவல்களை துல்லியமாய் நினைவு வைத்திருப்பார். அவற்றை அழகாய் சுவாரஸ்யமாய் அறிமுகம் செய்வதில் அவர் விற்பன்னர். அக்காலத்தில் எப்படி இலக்கிய பிரதியை அணுக வேண்டும் என அவர் கற்றுத் தந்ததை தான் நான் என் அனுபவம் மற்றும் வாசிப்பு கொண்டு பின்னாளில் மெல்ல மெல்ல விரிவாக்கி கொண்டேன். யானை ஒரு வனத்தில் நடந்தால் ஒரு பாதை அங்கு தானே உருவாகும் என ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியிருப்பார். ஜெயமோகனின் சொற்கள் எனும் யானை பயணித்த தடம் என் மனதில் இன்றும் அழியாமல் உள்ளது. நான் அவ்வழி ஒரு வியப்புடன் நடந்து செல்ல முயல்கிறேன்.

நான் அவரிடம் அக்காலத்தில் “நீங்கள் ஏன் ஒரு பேராசியர் ஆகியிருக்கக் கூடாது?” எனக் கேட்டேன். அவர் அது தனக்கு அலுப்பூட்டியிருக்கும் என்றார். ஒருவிதத்தில் உண்மை தான். எல்லா மாணவர்க்ளும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. ஒரே பாடத்தை திரும்ப திரும்ப சொல்லித் தர வேண்டும். ஆனால் என்னைப் போன்ற ஆர்வம் ததும்பும் மாணவர்களுக்கு ஜெயமோகனின் அருகாமை ஒரு வரப்பிரசாதமாய் இருந்திருக்கும் (இதையே எஸ்.ராவுக்கும் சொல்லலாம்.)

ஜெயமோகனை சந்திக்க ஏற்ற வயது 15-25 எனலாம். அதற்கு பிறகு உங்களுக்கு என அனுபவங்களும் இறுக்கமான நம்பிக்கைகளும் தோன்றும். கண்கள் கடிவாளம் இட்டது போல் ஆகும். நம் மனம் ஈரமன மண் போல் இருக்கும் போது ஜெயமோகன் போன்றவர்களின் சொற்கள் அதில் விழ வேண்டும். அதனால் தான் இது போல் அவரை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது.
ஆனால் இளம் எழுத்தாளர்கள் அவருடன் தொடர்ந்து உரையாடுவதும் ஆரோக்கியமானது அல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். எப்படி ஒரு ஆலமரத்தின் கீழ் வேறு செடி வளர முடியாதோ அது போல் ஜெயமோகனுடனான தொடர்ந்து உரையாடல் உங்கள் சிந்தனை சுயமாய் அமைவதை தடுக்கும். இதை நான் ஏதோ இன்று புதிதாய் சொல்ல வில்லை. வலுவான ஆளுமை கொண்ட, அறிவும் கற்பனையும் மிக்க, பிறர் மீது அதிகம் தாக்கம் செலுத்துபவர்களின் நட்பு ஒருவரின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என பிரான்ஸிஸ் பேகன் எனும் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கில கட்டுரை ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனுடன் தொடர்ந்து நெருக்கமான உறவு பேணும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் (எனக்குத் தெரிந்து) தனித்துவமான எழுத்தாளர்ர்களாய், சிந்தனையாளர்களாய் மலர்ந்ததில்லை. அவர்கள் அவரைப் போன்றே யோசிக்கவும் எழுதவும் முயன்று கொண்டிருப்பார்கள். அவரது தாக்கம் அவர்களை சிறுத்து போக செய்யும்.

புது எழுத்தாளர்கள் ஜெயமோகனை “அகலாது அணுகாது தீக்காய” வேண்டும். ரொம்ப பக்கத்தில் போனால் சுட்டு விடுவார். (அது நெருப்பின் குணம். அவரது தவறல்ல :)) கொஞ்சம் விலகி நின்று அவரை ரசிக்கவும் அவருடன் உரையாடவும் வேண்டும். அல்லது அரவணைப்பாய், உயிருக்கு உயிராய் பழகி விட்டு, அவரது வெம்மையில் உங்கள் ஆளுமை தவிப்பதை அறிந்ததும் உறவை முறித்து கொண்டு விட வேண்டும். முதலாவது தான் நல்லது!
ஆனால் மாணவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. நண்பர்களுக்கும் (அவர்களிடம் மிகுந்த அக்கறை கொள்பவர் ஜெயமோகன்)

ஜெயமோகன் இளைஞர்கள், மாணவர்கள், இளம் வாசகர்கள் அருகில் இருக்க வேண்டியவர். அது அவர்களுக்கு கொடுப்பினையாக இருக்கும்! 

No comments: