Sunday, August 21, 2016

நம் குசுவை நாமே செல்பி எடுக்கும் காலம்


இன்று நண்பரும் இளம் கவிஞருமான சங்கர நாராயணனை சந்திக்க முடிந்தது. ஆங்கிலத்தில் kindred soul என்பார்கள், அப்படியான மன ஒருமை எனக்கு அவருடன் வாய்ப்பதை கவனித்தேன். காரணம் நாங்கள் இருவருமே காரண காரிய ரீதியில் வாழ்க்கையை, புத்தகங்களை அணுக விரும்புகிறோம் என்பது. இரண்டு மணிநேரங்கள் நிறைய விசயங்கள் பேசினோம்.

அவர் இன்று வாசக சாலை கூட்டத்தில் கவிஞர் இசை பற்றி பேசப் போகிறார். இசை பற்றின தன் கட்டுரையை எனக்கு படிக்க தந்தார். ஒரு நல்ல நேர்த்தியான ஆய்வுக்கட்டுரை போல் இருந்தது. அவர் அதில் குறிப்பிட்ட கவிதைகளை பற்றி பேசினோம்.
 இசை எவ்வாறு ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், கொஞ்சம் கலாப்பிரியா ஆகியோரின் மரபில் வருகிறார் என குறிப்பிட்டேன். இசையின் பகடி எண்பதுகளை மையமிட்டது. அதாவது மிகையான உணர்ச்சி தளும்பல், சிலாகிப்பு, தமிழரின் அனைத்து மிகைகளையும் ஆகியவற்றை தொடர்ந்து கிண்டல் செய்கிறார். சினிமா, அரசியல், மொழி வெறி, பண்டைய பண்பாட்டு மோகம் என எதாவது ஒன்றில் தமிழன் ஆழமாய் நம்பி தன் வேர்களை இறக்கி நின்றிருந்த காலம் இருந்தது. அப்போது தான் நவீனத்துவத்தின், புதிய பொருளாதார கொள்கைகளின், அரசியல் சிந்தனைகளின், சாதிய மறுகட்டமைப்பின், மீடியாவின் வருகை இந்நம்பிக்கைகளை கொஞ்சம் சிதறடிக்க துவங்கியது. அந்த இடத்தில் நின்று கொண்டு தான் தமிழ் எனக்கும் மூச்சு தான், ஆனால் பிறர் மீது விட மாட்டேன் என ஞானக்கூத்தன் பேசினார். அதே இடத்தில் நின்றபடி தான் கவிஞர் இசை உங்கள் குசுவுக்கு நீங்கள் மூக்கைப் பொத்துவதுண்டா என கேட்கிறார்.
ஆனால் நாம் இன்று அடுத்த ஒரு காலகட்டத்துக்கு கடந்த பத்து வருடங்களில் நகர்ந்து விட்டோம். இன்று எதற்கும் நாம் சிலாகிப்பதில்லை. சிலாகித்தாலும் அது சில நொடிகள் தாம். அரசியல், இலக்கியம், கொள்கைகள், இசை, சினிமா, காதல், காமம் எல்லாமே ஒரு விளையாட்டு ஆகி விட்டது. இன்று ஒருவன் குசு விட்டு அதற்கு தானே மூக்கைப் பொத்தி தன்னை சுயபகடி செய்து கொள்வான். அதை செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக்குகளும் வாங்குவான். அதனால் தான் இசை ஒரு சமகாலக் கவிஞன் இல்லை என எனக்கு தோன்றுகிறது. அவர் எழுதுவது முக்கியமான் கவிதைகள், ஆனால் அவை வேறு ஒரு தலைமுறைக்கு உரியவை. அதனால் தான் ஜெயமோகனுக்கு அவரை பிடிக்கிறது. ஜெயமோகன் லட்சியவாதத்துக்கும் லட்சியவாத மறுப்புக்கும் இடைப்பட்ட தலைமுறையை சேர்ந்தவர். அவருக்கு இந்த பகடி சுவாரஸ்யமாய் இருக்கிறது. அவர் செல்பி தலைமுறையின் பிரதிநிதி அல்ல.
நான் இதை சொன்ன போது சங்கர நாராயணன் இன்றைய காலத்திலும் லட்சியவாதத்தில் நம்புகிறவர்கள், இசையை சிலாகிக்கிறவர்கள் இருக்கிறார்களே என்றார். இருக்கிறார்கள், ஆனால் இன்றைய காலத்தின் பிரதிநிதிகள் அவர்கள் அல்ல என்றேன். அப்போது எங்கள் வீட்டில் தண்ணீர் கேன் சப்ளை பண்ணும் இளைஞர் ஒருவர் வந்தார். அவர் எப்போதுமே செல்போனில் ஏதாவது ஒரு பாட்டை ஒலிக்க விட்டபடி ஆரவாரமாய் தான் வருவார். இன்றும் அப்படியே. நான் அவரிடம் ஏன் “ஏங்க எப்போ பார்த்தாலும் பாட்டு கேட்கிறீங்க?” என்றேன். அவர் சொன்னார் “நாள் பூரா வேலை. ஓய்வே இல்லை. அலுப்போ அலுப்பு. இந்த மாதிரி பாட்டு இருந்தா தான் ஏதோ பொழைப்பு ஓடுது”. பிறகு ஒரு இடைவெளி விட்டு சொன்னார் “நீங்க கம்புயூட்டர்ல வேலை செஞ்சிட்டே பாட்டு கேட்குறீங்க. நான் இந்த மாதிரி வீடு வீடா தண்ணீர் கேன் போட்டுட்டே கேட்குறேங்க.”
அவர் போன பிறகு நான் சங்கர நாராயணனிடம் கேட்டேன்: அவர் எந்த இடத்திலும் தான் இசையை ரசிப்பதால், அதன் பொருட்டு மட்டும் கேட்கிறேன் என சொல்லவில்லை கவனித்தீர்களா? அவருக்கு அனிருத்தும், குத்துப்பாட்டும், ரஹ்மானும் இளையராஜாவும் ஒன்று தான். அவருக்கு இசை கேட்பது தன்னை லகுவாக்கும் ஒரு எளிய விளையாட்டு. இதே போல் வேலையின் போது காதலியிடம் ஹெட்போனில் உரையாடவும் செய்வார். ஒருவேளை போனில் போர்னோவும் பார்ப்பார். அவருக்கு எல்லாமே ஒன்று தான். இவர் தான் நம் தலைமுறையின் பிரதிநிதி. இவரிடம் நீங்கள், இசை தன் கவிதையில் பாட்டு பாடும் பரோட்டா மாஸ்டரிடம் கேட்பது போல, ”நீங்க எஸ்.பி.பியின் பாட்டு கேட்கும் போது எஸ்.பி.பி சிலிர்ப்பாரா” என கேட்டால் அவர் என்ன சொல்வார்? ”நான் பாட்டு கேட்டா ஏன் எஸ்.பி.பி சிலிர்க்கணும்? என் கிட்ட போன் இருக்கு. நான் கேட்கிறேன். நானே சிலிர்க்க வில்லை அவர் ஏன் சிலிர்க்கணும்”.


அதானே!

No comments: