Monday, August 15, 2016

எதுவுமே ”அதுவாக” இருந்தால் மதிப்பில்லை


என்னுடைய நாய் அடங்க மறுத்தால் “கம்பு எடுக்கட்டுமா?” என்பேன். அது உடனே உடம்பை தழைத்து கொட்டாவி விடும். கொட்டாவிக்கு பொருள் ”ஐ ஆம் சாரி”. சேட்டையும் நிறுத்தி விடும். சரி அது தான் பயப்படுதே என நான் கம்பை நிஜமாவே எடுத்தால் அது கோபத்தில் என்னை நோக்கி சீறிப் பாய வரும். இதனால் நான் இதுவரை கம்பை பற்றி பேசுவதோடு சரி பயன்படுத்த முயன்றதில்லை.

பொதுவாக சொல்லுக்கு இருக்கும் தாக்கம் அது குறிக்கும் பொருளுக்கு இருப்பதில்லை. அசோகமித்திரனின் “கரைந்த நிழல்கள்” நாவலில் ஒரு நடிகை படப்பிடிப்புக்கு வர மறுத்து விடுவாள். அவள் ஒரு வயதான நடிகரோடு ஓடிப் போகும் முனைப்பில் இருப்பாள். அப்போது படத்தின் தயாரிப்பாளர் அவள் வீட்டுக்கு வந்து அவளிடம் சொல்வார் “எல்லா பொண்ணுங்க கிட்டயும் இருக்கிறது தான் உங்கிட்டயும் இருக்கு. உன்னை பெரிய திரையில் ஆயிகரக்கணக்கான பேர் பார்த்து வியக்க வைக்கிறதுனால உங்கிட்ட ஒண்ணும் ஸ்பெஷலா இல்ல. நீ சினிமாவில வரலேன்னா உன்னை எவனும் மதிக்க மாட்டான்.” அவர் இது போல் தொடர்ந்து அவளை மிரட்டி அவமானப்படுத்தி கட்டுப்படுத்தும் நோக்கி கொச்சையாக பேசிக் கொண்டே போவார். ஒரு கட்டத்தில் அவமானம் பொறுக்க முடியாமல் அவள் படப்பிடிப்புக்கு வர ஒத்துக் கொள்வாள். ஆனால் வழியில் மயக்கம் போட்டதாய் நடித்து படப்பிடிப்பை ஒரேயடியாய் தவிர்த்து விடுவாள். தயாரிப்பாளர் ஒருபக்கம் முழுக்க பிச்சைக்காரனாகும் நிலையில் இருப்பார். ஆனாலும் அவர் தன்னை ஒரு “முதலாளியாக’ தக்க வைக்கும் முயற்சியில் நடிகையிடம் நிறைய உதார் விடுவார். அப்பெண்ணும் இன்னொருத்தியய் தன்னை காண்பித்தபடி இருப்பாள். தன்னை உண்மையில் இன்னொன்றாய் முன்வைக்கும் இரண்டு விதமான சிறுமைப்பட்ட ஜீவன்களின் மோதல் இது. இந்த காட்சியை அசோகமித்திரன் அபாரமாய் வளர்த்து எடுப்பார்.
 எனக்கு இது படித்த போது நான் பார்க்க நேரில் நேர்ந்த சில மிக கவர்ச்சியான, அழகான நடிகைகள் நினைவு வந்தனர். இந்நடிகைகளை படக்கருவி, ஒளித்தேர்வு, பின்னணி இசை, திரைக்கதை சேர்ந்து எவ்வளவு வண்ணமயமாய் காட்டியது என நமக்கு வியப்பாய் இருக்கும். நேரில் பார்க்க எதுவோ ஒன்று குறைவதாய் தோன்றும். படத்தில் பார்த்ததை விட குள்ளமாய், குண்டாய், ஒல்லியாய், பற்கள் சற்று பெரிதாய் அல்லது பளபளப்பு குறைவாய், புன்னகையில் சற்று மாற்றுக்குறைவாய் தோன்றும். ஆனாலும் அவர்கள் நடித்த பிம்பங்கள் நினைவில் வர வர அவர்கள் மிக மிக கவர்ச்சியானவர்களாய் தோன்றுவார்கள். நடிகைகள் எதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். இப்படி பிம்பங்கள் வழி தாம் பார்க்கப்படுவதை தவிர்க்க எண்ணி சில நடிகைகள் பொது இடங்களில் மேக் அப்பே இல்லாமல் தோன்றுவார்கள். தொடர்ந்து இவ்வாறு இவர்களை பார்த்து வந்தால் நமக்கு ஒரு கட்டத்தில் திரையில் வந்த பிம்பம் வேறு இப்பெண் வேறு என ஒரு “தெளிவு” வந்து விடும். நிஜ நடிகையிடம் இயல்பாகவும் திரை பிம்பத்திடம் ஆசையுடனும் எதிர்வினையாற்ற மனம் கற்றுக் கொள்ளும்.
இதையே இலக்கியத்துக்கும் இலக்கியத்தனமாய் எடுக்கப்படும் சினிமாவுக்கும் சொல்லலாம். நகுலனின் ஒரு சாதாரண வரியை இன்னொருவர் எழுதினால் உதறி விடுவோம். ஆனால் அதை நகுலனின் வரியாய் படிக்கையில் அதன் பின்னால் நகுலனின் பிம்பம், அவர் உருவாக்கிய பலவித உணர்வுநிலைகள், தீவிர எதிர்-எண்ணங்கள் தொகுப்பாய் நினைவுக்கு வந்து அந்த வரிக்கு வலுவும் கனமும் சேர்க்கும். மிஷ்கின் ஒரு சாதாரண காட்சியை தனது வழமையான ஸ்டைலில் காட்டினாலும் உங்களுக்கு இதுவரை அவர் சித்தரித்த உருவகங்கள், மனநிலைகள் நினைவுக்கு வந்து அது ஒரு அபாரமான கவித்துவம் நிரம்பிய காட்சியாய் தோன்ற வைக்கும். ஒரு உலகத் திரைப்பட விழாவுக்கு முன்பு சென்றிருந்த போது ஒரு மட்டமான தைவான் படத்தை காண்பித்தார்கள். ஒரு சாதாரண காதல் கதை. சோகம், டிராமா, அழுகை, கண்ணீர் … இப்படி போயிற்று. ஆனாலும் முதல் அரைமணிநேரம் எனக்கும் நண்பர்களுக்கு அதில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ குறியீடு இருப்பதாய் தோன்றியது. ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டோம். அப்படத்தை வெறுமனே டிவியில் பார்த்திருந்தால் மனம் அப்படி பாவித்திருக்காது.

எதுவுமே ”அதுவாக” இருந்தால் மதிப்பில்லை!

No comments: