Sunday, August 14, 2016

கோபி கிருஷ்ணன் படைப்புலகம்

  
கோபி கிருஷ்ணன் தமிழ்ப் புனைவுலகில் மிகவும் வித்தியாசமானவர். பிற எழுத்தாளர்களைப் போல விரிவான பிரச்சனைகள், பரந்துபட்ட கதாபாத்திரங்களை தன் எழுத்துக்குள் கொண்டு வர அவர் கவலைப்பட்டதில்லை. அவருடையது உளவியல் பிறழ்வு கொண்ட மனிதர்களின் ஒரு மிகச் சின்ன உலகம். இப்புள்ளியில் நிலை கொண்டு நேர்த்தியான சில கதைகளையும், மிகவும் சுவாரஸ்யமான ஒரு நாவலையும் (உள்ளிருந்து சில குரல்கள்) எழுதியிருக்கிறார்.

 அவரை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர் என்றும் வகைப்படுத்த முடியாது. புனைவும் அபுனைவும் கலக்கிற ஒரு மெட்டாபிக்‌ஷன் பாணி எழுத்தை முயன்றிருக்கிறார். ”மகான்கள்”, “கடவுளின் கடந்தகாலம்” போன்ற சிறுகதைகளிலும், “உள்ளிருந்து சில குரல்களிலும்” இதை அநாயசமாக செய்திருக்கிறார். கதைமொழியைப் பொறுத்தமட்டில் கோபி கிருஷ்ணன் சாரு நிவேதிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் பிறழ்வு கொண்ட உதிரி மனிதர்களில் அக்கறை கொண்டவர்கள். உரைநடையும் புனைவுகளும் ஊடுபாவும் நடையை கொண்டவர்கள். மனதின் கசடுகளை காட்டுவது தான் இருவரும் நோக்கம். ஒரே வித்தியாசம் சாருவிடம் உள்ள இகோடிசம் (தான் தான் எனும் அறைகூவல்) மற்றும் எலைட்டிசம் கோபி கிருஷ்ணனிடம் இல்லை.
கோபி கிருஷ்ணன் பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட ஒரு நவீனத்துவ எழுத்தாளர். அதாவது அவரது படைப்புகளில் நவீனத்துவ எழுத்தின் முக்கிய பண்புகளான கராறான வடிவ ஒழுங்கு, நேர்கோட்டிலான கதைகூறல், தனிமனிதவாதம் ஆகியன உண்டு. அதேநேரம் கதைமொழிக்குள் கதைசொல்லியும் பாத்திரமும் ஒன்றாய் மாறி விடும்படியான குழப்படிகள், ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் மனதை பின் தொடரும் பாணி ஆகிய பின்நவீனத்துவ கூறுகளும் உண்டு. முக்கியமாய் அவரது கதைகளில் சமூக உதிரிகளை பிரதிநுத்துவப் படுத்தும் போக்கும் அவரை சமகால பின்நவீனத்துவ வாசகனுக்கு நெருக்கமாய் உணர வைக்கிறது. இவ்விசயத்தில் நாம் இவரை நகுலனுக்கு இடப்பக்கமாய் ஒரு குட்டி நாற்காலி போட்டு உட்கார வைக்கலாம்.
தனக்குள் உழன்று உழன்று தன்னையே நுணுகி ஆராயும் விதத்தில் அவரிடம் கால் ஸ்பூன் தஸ்தாவஸ்கியும் இருக்கிறார். ஆனால் அவரது சிறப்பே எந்த ஒரு எழுத்தாளனின் தாக்கத்தையும் வெளிப்படையாய் காட்டாதது தான்.
கோபி கிருஷ்ணனின் இன்னொரு முக்கியமான தனித்துவம் அவரது கதைகளின் case study வடிவம். எனக்குத் தெரிந்து தமிழில் யாரும் இதை முயன்றதில்லை. பொதுவாக உளவியல், சமூகவியல் ஆய்வுகளில் மனிதர்களை பேட்டி கண்டு அதை சுருக்கமாய் ஒரு கதைவடிவில் ஆய்வறிக்கையில் அளிப்பார்கள். இது தான் கேஸ் ஸ்டடி. இது எழுதுபவரின் தாக்கம் இன்றி மிகவும் புறவயமாக இருக்க வேண்டும். கோபி கிருஷ்ணனின் ”உள்ளிருந்து சில குரல்கள்” முழுக்க உளவியல் நோயாளிகளின் கேஸ் ஸ்டடிகளின் தொகுப்பு தான். கேஸ் ஸ்டடி செய்கிற உளவியலாளர்களான ரவீந்திரன் மற்றும் ஸ்டெல்லா தாம் இந்நாவலை எழுதியவர்கள் என்றும் கருத்துக்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நாவலுக்குள் அவர்களின் முகவரி அளிக்கப்படுகிறது. ஆனால் நாவலின் முன்னுரையில் இது ரவீந்திரன் மற்றும் ஸ்டெல்லா செய்த ஆய்வுகளின் தொகுப்பு என்று மற்றொருவர் கூறுகிறார். இம்மூவர்களில் யார் நாவலாசிரியர் எனும் பின்நவீனத்துவ விளையாட்டு புத்தகத்தின் அமைப்பிலேயே உள்ளது. கேஸ் ஸ்டடிகளில் ஒரு ஆண் ஸ்டெல்லாவிடம் பாலுணர்வுடன் பேசுகிற இடம் ஒன்று உள்ளது. இன்னொரு ஸ்டடியில் ஒரு நோயாளி தன்னையே ரவீந்திரன் என்கிறார். பின்னர் சாருவும் வழித்தோன்றல்களும் உருவாக்கிய பின்நவீனத்துவ பிரதிகளை விட இது இன்னும் இயல்பாய் வந்துள்ளது.
கோபி கிருஷ்ணனிடம் வலுவான பிராய்டிய தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாய் repression எனும் ஆழ்மன ஒடுக்குதல். சமூகத்தில் கெட்ட விசயங்களாய் கருத்தப்படும் பாலுணர்வு, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை நமது பிரக்ஞை மனம் நமது ஆழ்மனதுக்குள் மூடி மறைக்கிறது. ஆனால் சமூக விதிகளை மீறி மனம் இந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளுக்காய் ஏங்குகிறது. பிரக்ஞைக்கும் ஆழ்மன விழைவுக்குமான இந்த முரண் உச்சநிலையை எட்டும் போது மனநோய் வருகிறது என்பது பிராய்டின் கருத்தாக்கம். பாலுணர்வை ஒடுக்குதல் தான் மனச்சிக்கலின் அடிப்படை என பிராய்ட் கருதியதை பின்னர் வந்த அறிஞர்கள் ஏற்கவில்லை. பிராய்டின் கருத்தாக்கம் மிகை என அவர்கள் கருதினர். இவர்களில் கார்ல் யுங், லகான் ஆகியோர் முக்கியமானவர்கள். யுங்கின் கூட்டு நனவிலி (collective unconscious) பிரபலமானது. மனித மனதுக்கு என்று தனிப்பட்ட சிக்கல்களோ தூண்டுகோல்களோ இல்லை, அவை பரந்துபட்டு மொத்த சமூகத்துமானவை என அவர் கருதினார். உதாரணமாய் நீலவெளிச்ச பின்னணியில் ஒரு பெண் மழையில் நனைந்து கொண்ட நிற்கிற காட்சி பெரும்பாலான ஆண்களுக்கு ஒரே வகையான உணர்வை தன் ஏற்படுத்தும். மழையை தமிழ் சினிமா பயன்படுத்தி உள்ள விதத்தை ஆராய்ந்தாலே இது விளங்கும். அதே போன்று ரத்த சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள் தரும் உணர்வுகள். இவற்றை யுங் மூலப்படிமம் (archetype) என்றார். ஒரு சிவசேனா அல்லது பா.ஜ.க தலைவர் ஒரு பெருங்கூட்டத்தின் முன் வாளைத் தூக்கி காண்பிக்கும் போது ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் மதம் மற்றும் வன்முறை அடிப்படையிலான பழங்குடி அடையாளம் எனும் ஒரே அலைவரிசைக்கு சென்று விடுகிறது. அவர்கள் கண் முன்னில் இருந்து அத்தலைவர் மறைந்து விடுகிறார். வாள் மட்டுமே நிற்கிறது. அவர் இடும் ஆணைகள் அந்த வாளின் ஆணைகளாகவே தெரிகின்றன. சமகாலத்தில் மீடியா பரவலாய் வளர்ந்த பின் தனிப்பட்ட மனித சிக்கல்களை விட பொதுவாய் கூட்டாய் சமூகம் உணரும் சிக்கல்கள் தாம் அதிகம் ஆராயப்படுகின்றன. மனம் என்பது ஒரு துளி அல்ல, பல துளிகள் சேரும் பெருமழை எனும் புது புரிதல் உண்டானது. லகான் நமது மனத்தை ஒரு கட்டற்ற மொழி வடிவமாய் பார்க்க தலைப்பட்டார். மொழி வழியாக தொடர்ந்து நடக்கும் பரஸ்பர உரையாடல்கள் தாம் நம் மனதின் உணர்வுகளை, எண்ணங்களை உருவாக்குகிறது, மனதிற்கென்று தனியான உணர்வுகளோ எண்ணங்களோ இல்லை என்பது பின் அமைப்பியல்வாத உளவியலாளர்களின் பார்வை.
பிராய்ட் மீதான மற்றொரு குற்றச்சாட்டு அவர் கிறித்துவ தொல்நம்பிக்கையான பாவம், சாத்தான், காமம் அசிங்கமானது எனும் தயக்கம், சமூக கூச்சம் ஆகியவற்றை செயற்கையாய் உளவியல் மீது திணித்து விட்டார் என்பது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமூக கூச்சமும் மறுப்பும் ஏற்படுத்தும் பல விசயங்களை தமக்குள் மறைக்கிற பண்பு இன்றும் மனிதர்களுக்கு உண்டு. இன்றும் மனிதர்கள் உரையாடல்களின் போதும் தம்மை மறைத்து போலியாய் வெளிப்படுத்துவதில் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் அறியவும் ஆராயவும் இன்றும் நமக்கு பிராய்ட் முக்கியமானவராய் இருக்கிறார். பிராய்டின் தாக்கத்தில் எழுதிய தி.ஜானகிராமன் (மோகமுள்), அ.மாதவன் (கிருஷ்ணப்பருந்து), ராஜேந்திர சோழன் (புற்றில் உறையும் பாம்புகள், சாவி) ஆகியோரின் படைப்புகள் இன்றும் வாசிக்க சுவார்ஸ்யமாய் உள்ளன. சாரு நிவேதிதாவின் ஆரம்ப கால சிறுகதைகளில் ஒன்றான “முள்ளில்” கூட பிராய்டிய தாக்கம் வலுவாக இருக்கும். ஆழ்மனதில் மாட்டிக் கொண்டு சிக்கல் ஏற்படுத்தும் காமத்துக்கு உருவகமாய் தொண்டையில் சிக்கிக் கொண்ட முள் அக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பொதுவாய் நவீனத்துவ கதைகளின் வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் பிராய்டிய பகுப்பாய்வின் தாக்கம் இருக்கும். ஆழ்மனதில் புதைக்கப்படும் உணர்வு எதிர்பாராத நேரத்தில் விசித்திரமான முறையில் வெளிப்படும் என்றார் பிராய்ட். பெரும்பாலான நவீனத்துவ சிறுகதைகள் இப்படியான வெளிப்படலை தம் முடிவாக கொண்டிருக்கும். இம்முடிவை நோக்கித் தான் கதை துவக்கத்தில் இருந்தே வில்லில் இருந்து அம்பு போல பாயும். புதுமைப்பித்தனின் “அந்த முட்டாள் வேணுவை” எடுத்துக் கொள்ளுங்கள். வேணு என்பவன் ஒரு அழகான பெண்ணை ரயில் நிலையத்தில் பார்க்கிறான். அவள் உடல்கட்டு அவனை பித்தம் கொண்டவனாக்குகிறது. தன்னை மறந்து அவள் பின்னால் போகிறான். ரயிலில் அவளுடன் ஏறுகிறான். அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறான். சிறிது நேரத்தில் அவள் அவனை ஓரப்பார்வையால் கவனிக்கிறாள். தனக்குள் புன்னகைக்கிறாள். இதையெல்லாம் அவன் அவள் தன் நோக்கத்தை அங்கீகரிப்பதன் வெளிப்பாடுகளாய் தவறாய் புரிந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் கட்டுப்பட்டை மீறி அவளை பாய்ந்து கட்டியணைக்கிறான். அவள் கூச்சலிட்டு அவளை தள்ளுகிறாள். கூட்டம் கூடி அவனைப் பிடித்து போலிசில் கொடுக்கிறார்கள் அவன் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. லட்சுமணன் வேணுவின் நண்பன். அவன் வேணுவின் பொருட்டு வழக்கை வாப்பஸ் வாங்க கேட்பதற்காய் அப்பெண்ணின் வீட்டிற்கு செல்கிறான். இவ்வழக்கினால் அவளுக்கு தான் அதிக அவப்பெயர் நேரும் என அவள் சித்தப்பாவிடம் கூறுகிறான். சித்தப்பாவும் ஏற்கிறார். அவர் சிறிது நேரத்தில் அவனை அங்கே விட்டு விட்டு வெளியே போகிறார். அவனும் அந்த அழகியும் தனியாக சில மணிநேரங்கள் அங்கு இருக்க நேர்கிறது. அவளைப் பார்த்த மட்டும் அவனுக்கு வேணு செய்தது தவறில்லை எனப்படுகிறது. இந்தளவு அழகு கொண்டவளைக் கண்டால் யாருக்கு தான் சமநிலை தவறி விடாது என நினைக்கிறான். இதை அவளிடமே சொல்கிறான். அவள் ஒருவரின் சிந்தனைக்கும் செயலுக்கும் வேறுபாடு வேண்டாமா என்று கேட்கிறாள். வேணுவைப் போல் லட்சுமணன் நாசூக்கு அற்றவர் அல்ல என தனக்குத் தெரியும் என குறிப்பாய் சொல்கிறாள். லட்சுமணன் உடனே அவளைப் பற்றி முத்தமிடுகிறான். அவள் அவனை விலக்கித் தள்ளி விட்டு அவன் ஒரு மிருகம் என ஏசுகிறாள். அவன் உடனே தான் அவளை ஒருவருடத்துக்கு மேலாய் காதலித்து வருவதாயும், அன்று அவன் அங்கு வந்ததற்கு வேணு ஒரு பொருட்டு மட்டுமே, உண்மையான நோக்கம் அவளைப் பார்ப்பது தான் என்கிறான். அவள் அகமகிழ்ந்து அவனை ஏற்கிறாள். அவர்கள் அணைத்துக் கொண்டு முத்தமிடுகிறார்கள். அடுத்து சில மணிநேரங்கள் என்ன நடந்திருக்கும் என்பதை புதுமைப்பித்தன் நம்மை ஊகிக்க விட்டு விடுகிறார். சித்தப்பா திரும்பியதும் லட்சுமணன் அங்கிருந்து கிளம்பி விடுகிறான். வழக்கும் பேச்சுவார்த்தை மூலம் தள்ளுபடியாகிறது. இதன் பிறகு லட்சுமணன் அந்த அழகியை ஒரு பொதுவிடத்தில் அவள் கணவனுடன் பார்க்கிறான். அப்போது அவள் கணவன் சொல்கிறான் ”தாங்கள் அந்த முட்டாள் வேணு விசயத்தில் எவ்வளவு மரியாதையாக பக்குவமாக நடந்து கொண்டீர்கள் என்று சாந்தா அடிக்கடி புகழ்ந்து கொண்டு இருக்கிறாள்”. கணவனின் ஒவ்வொரு சொல்லும் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. அப்பெண்ணையும் லட்சுமணனையும் தவிர ஊரில் எல்லாருமே முட்டாளாக்கப்படுகிறார்கள்.
வேணுவின் முட்டாள்தனம் என்ன? தன் பிரக்ஞை மனம் சொல்வது படி தன்னை கட்டுப்படுத்தாததா? இல்லை. பிரக்ஞைக்கும் நனவிலிக்கும் நடுவில் ஈகோ இருக்கிறது. இது சமூகம் ஏற்காத காரியங்களை பக்குவமாய் பிறர் ஏற்கும்படி செய்ய நமக்கு அது சொல்லித் தருகிறது. வேணுவுக்குள் இந்த ஈகோ செயல்படவில்லை; அதனால் தான் அவன் முட்டாள். அப்பெண்ணை எங்கு வைத்து எதைக் கூறி முத்தமிட வேண்டும் என அவனுக்குத் தெரியவில்லை. இந்த கதையின் முடிவில் உள்ள வெளிப்பாட்டை பாருங்கள். அது நாம் எதிர்பாராத ஒன்றை மனித மனம் பற்றி சொல்வதாக உள்ளது. தோட்டத்தில் பயிர்களுக்கு நீர் நனைக்கும் ரப்பர் குழாய் இருக்கிறது அல்லவா. அதன் வாய்ப்பகுதியை நம் கையால் சற்று நேரம் அழுத்திப் பிடித்து மூடினால் என்னாகும்? சற்று நேரத்தில் நமது ஏதோ ஒரு விரலிடுக்கின் வழியாய் நீர் பீய்ச்சியடிக்கும். இப்படி பீய்ச்சும் தருணம் தான் நவீனத்துவ சிறுகதைகளின் முடிவாக இருக்கும்.
ராஜேந்திர சோழனின் கதைகள் உறவுகள் இடையிலான காமம் மற்றும் வன்முறை எப்படி சமூக உறவாடல்களின் போது வெளிப்படுகின்றன என சுட்டுகின்றன. அவரது “சாவி” சிறுகதை குடும்பத்தில் ஒரு ஆணின் ஈகோ சீண்டப்படும் போது அவன் தன் ஆண்மையை நிரூபிக்க எப்படியெல்லாம் அற்பத்தனமாய் நடந்து கொள்வான் எனச் சொல்கிறது. சுஜாதாவின் “கால்கள்” சிறுகதையில் ஒரு காலை இழந்த ஒரு முன்னாள் ஆங்கிலோ இந்திய ராணுவ வீரர் சுதந்திர போராட்ட கலவரங்களின் போது அப்பவிகளை முட்டிக்கு கீழ் தான் சுட்ட சம்பவங்களை சிலாகித்து நினைவு கூர்கிறார். அதன் மூலம் தனது இல்லாத கால் சமூக அளவில் தனக்கு ஏற்படுத்தும் கசப்பு மற்றும் இழப்புணர்வை ஈடுகட்டுகிறார். தி.ஜாவின் ”மோகமுள்ளில்” நாயகனான பாபுவின் அடக்கப்பட்ட காமம் அவன் மனதுக்குள் கற்பனையால் பலமடங்கு மேலானதாய் விரிகிறது. அது இசையின் வடிவம் கொள்கிறது. அப்பெண்ணை அடைவதற்காய் அவனை பல வருடங்கள் காத்திருக்க வைக்கும் ஒரு தவமாகிறது. இறுதியில் தான் மோகித்த உடல் என்பது அற்பமானது எனும் எண்ணம் தோன்ற அவன் விடுதலை உணர்வு பெறுகிறான். அடக்கப்பட்ட ’கெட்ட’ உணர்வு மேம்பட்ட அனுபூதியாய் சமூகத்தில் வெளிப்படும் என்பதை பிராய்ட் sublimation என்றார். தி.ஜாவின் நாவல் இதன் மொழி மற்றும் பண்பாட்டு வெளிப்பாடுகளை அலசிய விதத்தில் முக்கியமானது. காமத்தின் அடக்கப்பட்ட சூடு தான் மகத்துவமான கலையும் ஆன்மீகமும் என அவர் கண்டார். அ.மாதவனின் “கிருஷ்ணப் பருந்து” இளம்பெண் மீதான ஒரு வயதான மனிதரின் காமம் எப்படி அன்பாகவும் வெறுப்பாகவும் ஒரேசமயம் வடிவெடுக்கக் கூடும் என பேசியது.
கோபி கிருஷ்ணனின் கதைகள் ஒருவரது உளவியல் சிக்கலின் துவக்கப்புள்ளி என்னவாக இருக்கக் கூடும் என பேசுகின்றன. சிலருக்கு ஏதோ ஒரு புள்ளியில் மனம் சமநிலை இழந்து விசித்திர அனுபவங்களை தருகின்றது. அவரது பெரும்பாலான கதைகளில் பாலுணர்வுகள் தாம் இதற்கு தூண்டுகோலாய் இருக்கின்றன. “உள்ளிருந்து சில குரல்களில்” ஒரு ஐந்து வயது குழந்தையை கற்பழிக்கும் ஒருவன் அதை இன்னொருவர் செய்ததை தான் பார்த்ததாய் மீளமீள கூறுகிறான். இன்னொருவன் தன் மனைவியை தான் கற்பழித்ததாய் வருந்துகிறான். ”உரிமை” இவ்விதத்தில் ஒரு அழகான கதை. பாலுணர்வு சார்ந்து குற்றவுணர்வும் கூச்சமும் கொண்ட கதைசொல்லி தன்னுடன் வகுப்பில் படிக்கும் பெண்ணை நேசிக்கிறான். சில வருடங்கள் இருவரும் சேர்ந்து பழகி திருமணம் செய்யும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அதற்கு முன் ஒரு திருப்புமுனை. ஒரு மாலையில் கடற்கரையில் அவள் அவனிடம் தன் செருப்புகளை பாதுகாக்க சொல்லி விட்டு அலைகளுடன் விளையாட கடல் அருகே செல்கிறாள். அவனுக்கு கோயிலில் செருப்புகளை சில்லறைக்காக பாதுகாக்க உட்கார்ந்திருக்கும் அனாதை சிறுவன் தானோ எனத் தோன்றுகிறது. அந்த எண்ணம் அவளை விட்டு விலக காரணமாகிறது. ஆனால் அவளது இச்செய்கை தான் அவனது முடிவுக்கு காரணமா என்றால் இல்லை. அவளைப் போன்ற ஒரு அழகான பெண்ணுடன் எப்படி உறவு கொள்வது எனும் பயமும் குழப்பமும் அவனை வாட்டுகிறது. அவனது காமம் சார்ந்த ஆழ்மன குற்றவுணர்வு இதற்கு காரணம். அடக்கப்பட்ட குற்றவுணர்வு முதலில் அவள் மீது பிரமிப்பையும் காதலையும் தோன்ற வைக்கிறது. பிறகு அது வெறுப்பாக மாறுகிறது. அந்த வெறுப்புக்கான ஒரு சந்தர்ப்பமாக அந்த செருப்பு மாறுகிறது. அவ்வளவு தான்.
”இழந்த யோகம்” என்ற கதையில் மினி ஸ்கெர்ட் அணிந்த பெண்கள் மீது கவர்ச்சியும் பயமும் கொண்ட கதைசொல்லி அதனாலேயே மினி சிகரெட் பிடிப்பவனாகிறான். அப்பழக்கத்தை எப்படி விட்டுத் தள்ளுவது என தவிக்கும் அவன் ஒரு யோகா கற்றுத் தரும் மையத்திற்கு செல்கிறான். அங்கு மினி ஸ்கர்ட் அணிந்த பெண்ணைப் பார்த்து கவரப்படுகிறான். அவளது அழகு அவனை அப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற உதவுகிறது. ஆனால் அவள் அங்கிருந்து சென்று விட்ட பின் அவன் மீண்டும் அதிகமாய் மினி சிகரெட் புகைக்கிறான். நவீன மனிதனுக்கு சிகரெட் கூட பெண்ணுடல் தான் என நுட்பமாய் உணர்த்தும் கதை இது.
நமது மொழியில் எப்படி அடக்கப்பட்ட காமம் வெளிப்படுகிறது என்பது பற்றின கதை “புயல்”. கதைசொல்லி ஒரு புயலடிக்கும் மாலையில் வீடு வந்து சேர்கிறான். அப்போது அவனது மனைவி தான் வெளியே சென்றிருந்த போது ஆண்கள் எப்படியெல்லாம் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார்கள் என புகார் செய்கிறாள். அதைச் சொல்லி அவள் அழுது கோபப்பட்டாலும் அவளுக்கு அதையெல்லாம் சொல்வதில் ஒரு இன்பமும் இருக்கத் தான் உள்ளது என கதையில் ஒரு மறைமுகமான குறிப்பு உள்ளது.
கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளில் வடிவம் மற்றும் கருப்பொருள் அளவில் கச்சிதமாய் அமைந்தது “ஒரு ரூபாய்க்கு ஒரு கதை” தான். இதில் கதைசொல்லி தனது அலுவலகத்தில் உள்ள மார்கரெட் எனும் இரு கால்களும் ஊனமுற்ற பெண்ணைக் கண்டு இரக்கப்படுகிறான். அவளை தினமும் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் மீண்டும் வீட்டுக்கும் தன் மொபட்டில் வைத்து அழைத்துப் போய் விடும் உதவியை செய்கிறான். அவனது கருணை என்பது அவனுக்குள் புதைக்கப்பட்ட ஒரு மிதமிஞ்சிய குற்றவுணர்வின் வெளிப்பாடு தான். அவனது உதவிகளை மார்கரெட் மிக சாதாரணமாய் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் அவனால் அவளை சுலபத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. அவளுக்கு உதவ உதவ அவனது குற்றவுணர்வும் மிகுதியாகிறது. அவளிடம் தான் போதுமான படி கருணையுடன் நடந்து கொள்ளவில்லை என நினைக்கிறான். இந்த மனக்கொந்தளிப்பை எப்படி சமாளிப்பது என அவனுக்கு தெரியவில்லை. ஒருமுறை அவன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது ஒரு ரூபாய் அவனிடம் குறைகிறது. மார்கரெட் அவனிடம் ஒரு ரூபாய் தருகிறான். அவன் அன்றில் இருந்து ஒரு ரூபாய் பற்றியே அலுத்துக் கொள்கிறான். அந்த ஒரு ரூபாயை அவன் திருப்பித் தருவதை மார்கரெட் ஏற்கவில்லை. அவள் பின்னால் இருக்கும் போது ஒரு ரூபாய் அவள் நெற்றியில் ஒட்டியிருப்பதாய் அவனுக்கு தோன்றுகிறது. அவள் அவனுக்கு மரணத்தை நினைவுபடுத்துகிறாள். அவன் மிகுந்த மனத்தொந்தரவுக்கு உள்ளாகிறான். நடந்ததை அவளிடம் விளக்கி அவள் எப்படியாவது ஒரு ரூபாவை அவள் வாங்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறான். அவள் வாங்கிக் கொண்டால் தன் மனச்சிக்கல் தீர்ந்து விடும் என்கிறான். அவள் அவன் வேண்டுமென்றால் அப்பணத்தை தேவாலய உண்டியலில் போட்டு விடலாம் என்கிறான். அவன் அப்படியே செய்கிறான். ஆனால் அப்போதும் அவன் மனக்கிலேசம் தீரவில்லை. அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்தளிக்கிறான். அப்போது தான் அந்த ஒரு ரூபாய் கடன் தீர்ந்து விட்டதாய் அவனுக்கு நிம்மதி கிடைக்கிறது. கடைசியில் அவன் அந்த அலுவலகத்தில் இருந்து விலகும் சந்தர்ப்பம் வருகிறது. இனிமேல் அவளை பார்க்க முடியாது. “என்னை மறந்து விடுவீர்களா?” என அவள் கேட்க அவன் சொல்கிறான் “இந்த ஒரு ரூபாய் இருக்கும் மட்டும் உன்னை மறக்க இயலாது”.
பல சமயங்களில் குற்றவுணர்வு உள்ளிட்ட பல அகச்சிக்கல்களுக்கு பணத்தை போன்ற ஒரு அரூப வடிவம் அளித்து நாம் தப்பி விடுகிறோம் என்பதை இக்கதை அழகாய் உணர்த்துகிறது. சரி, அவனது கருணைக்கு காரணமான குற்றவுணர்வு எதனால் ஏற்படுகிறது? அவள் மீதான ஈர்ப்பில் இருந்து. பிற பெண்கள் என்றால் அவன் தன் ஈர்ப்பை மறைத்திருப்பான். அவளது ஊனமுற்ற உடல் அவனுக்கு அந்த காமத்தை கருணையாக மாற்றிட வாய்ப்பளிக்கிறது. காமத்தின் மீதான பயம் அவள் ஊனமுற்ற உடல் மீதான பயமாகவும் வடிவெடுக்கிறது. இதில் இருந்து தப்பிக முடியாது தான் அவன் கதை முழுக்க அல்லாடுகிறான்.

பிராய்டிய பார்வை தான் கோபி கிருஷ்ணனின் வலிமையும் பலவீனமும். காமத்தையும் குற்றவுணர்வையும் கடந்து அவரால் மனித மனதின் சிக்கல்களை பார்க்க முடியவில்லை என்பது தான் அவர் படைப்புகளின் முக்கிய குறை. ஆனால் மொழியளவிலும் மனித செயல்பாடுகளிலும் அடக்கப்பட்ட காமமும் குற்றவுணர்வும் அன்பாகவும் வெறுப்பாகவும் எப்படியெல்லாம் வர்ணஜாலங்கள் காட்டும் என நுணுக்கமாய் சித்தரிக்க முடிந்தது தான் அவரது பிரதான சாதனை. தன் காலத்தின் எதார்த்தவாதத்தை கடந்து புதுவடிவ பரிசோதனைகளை அவரால் இயல்பாய் செய்ய முடிந்திருப்பதும் பாராட்டத்தக்கதே!

No comments: