Thursday, August 4, 2016

மூன்று பேட்டிகள்


இம்மாத புத்தகம் பேசுது இதழில் மூன்று இளம் எழுத்தாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன: லஷ்மி சரவணகுமார், ஆத்மார்த்தி, போகன் சங்கர். தமிழ் பத்திரிகைகள் பொதுவாய் உங்களுக்கு முடி நரைக்கும் வரை பொருட்படுத்தி பேட்டி எடுக்காது (முடி நரைத்து டை அடித்திருந்தாலும் பரவாயில்லை) இது பத்திரிகைகள் என்றில்லை பொதுவாகவே இந்தியர்களின் ஒரு மனவியாதி தான். இளம் வயதுக்காரனுக்கு என்ன ஞானம் இருக்கக் கூடும் எனும் ஒரு துச்ச உணர்வு நம் சமூகத்துக்கு உண்டு. மாறாக ஒருவர் 1952இல் இரண்டு கதைகளும் 1972இல் நான்கு கவிதைகளும் 1991இல் ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதியிருப்பார். அவருக்கு மூத்த எழுத்தாளர் பட்டம் கொடுத்து நாம் மேடையில் அமர வைத்து மாலை சாத்துவோம். இறந்தால் அவருக்கு கொத்துக் கொத்தாய் அஞ்சலிக் கட்டுரைகள் சமர்ப்பிப்போம். ஒரு சமகால எழுத்தாளன் வருடத்திற்கு 500 பக்கங்கள் எழுதினாலும் அவனை ஒத்திப்போ என்று தான் நடத்துவோம். மூத்த எழுத்தாளர்கள் அவர்களை தம் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். அப்படியே ஒரு பாராட்டு விழாவில் அவரைப் பற்றி பேசும் நிர்பந்தம் ஏற்பட்டாலும் மூத்த எழுத்தாளர் தன் சொந்த கதை, பார்வையாளர்கள் மத்தியில் தலை காட்டும் தன் நண்பர்கள், தான் வாசித்த எழுத்தாளர்கள் பற்றி முக்கால் மணிநேரம் உரையாற்றி விட்டு “ஆதனால் இந்த இளம் எழுத்தாளரை மனதார பாராட்டுகிறேன்” என முடித்து விடுவார்.

எஸ். செந்தில் குமார் புத்தகம் பேசுது இதழில் செய்து வரும் முக்கியமான புரட்சி இந்த சமகால எழுத்தாளர்கள் மீது ஒளி பாய்ச்சும் இப்பேட்டிகள். அவ்விதத்தில் என் பாராட்டுகள்.

என்னை கவர்ந்த சில விசித்திரங்களையும் குறிப்பிட வேண்டும். ஆத்மார்த்தி தான் ஏழு வயதிலேயே புத்தகம் வாசிக்க ஆரம்பித்ததாய் கூறுகிறார். போகன் சங்கரிடம் அவர் எழுத்தில் உள்ள ஜெயமோகனின் தாக்கம் பற்றி கேட்கிறார்கள். அவர் அது இயல்பு தான், எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு “அண்ணன்” எழுத்தாளர் இருப்பார், தவிர்க்க முடியாதது என்கிறார். அடுத்து அவரிடம் அவரைக் கவர்ந்த மூத்த எழுத்தாளர்கள் பற்றி கேட்கிறார்கள். அவர் தரும் பட்டியலில் ஜெயமோகன் பெயர் இல்லை.  

1 comment:

aekaanthan ! said...

நீங்கள் எழுதியிருப்பது சரிதான். பெரிசுகளில் பலருக்கு சொந்தப் புலம்பலுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. மேடையில் ஏறிப்பேசமாட்டோமா, டிவி நிகழ்ச்சியில் வந்துவிடமாட்டோமா எனப் பலர் ஏங்குபவர்கள். அதனால் எதற்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு தன் புராணத்தை ஆரம்பித்து ஓதிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டுத் தொலைக்கவேண்டிய துர்பாக்கியம் வந்திருப்பவர்களுக்கு. என்ன செய்ய?

போகன் சங்கரையே கவனியுங்கள். அவர் இந்தத் தலைமுறையைச் சார்ந்தவர். ஜெயமோகனைக் குறிப்பிடுவதில் அவருக்கு இஷ்டமில்லை. பொதுவாகப் பிறரை பாராட்டும் பக்குவம், ஆசை இல்லாதவர்கள் நாம். தத்தம் விருப்பு, வெறுப்புகள்தான் மிக முக்கியம்! இந்தத் தமிழ்ச் சூழலில் பெரிசாக மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.