Tuesday, July 26, 2016

எழுத்தும் மரணமும்

நான் சமீபமாய் உடல் நலமின்மை காரணமாய் எழுதுவதை படிப்படியாய் குறைக்க முடிவெடுத்தேன். கொஞ்ச காலம் எழுத்தில் இருந்து விலகி இருப்பதே என் ஆரோக்கியத்துக்கு நல்லது என நம்பினேன். இதைப் பற்றி நான் ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டேன். அப்போது நண்பர் விநாயக முருகன் பின்னூட்டத்தில் எழுதினார் “எழுதுவதை நிறுத்தினால் நீங்கள் செத்து விடுவீர்கள்.” ஆனால் சிலர் எழுத்தை குறைப்பது எனக்கு நலம் பயக்கும் என இன்னொரு பக்கம் குறிப்பிட்டனர். தமிழில் இது சம்மந்தமாய் இரண்டு முகாம்கள் உள்ளன:

1)   எழுத்து சீரழிவான வாழ்க்கை முறையை கொண்டு வருகிறது. படைப்பின் நெருக்கடி, உழைப்பு, போதுமான வருவாய் இன்மை, மிதமிஞ்சிய போதை பழக்கம் ஆகியவை எழுத்தாளனை இளமையிலே காவு வாங்கி விடுகின்றன.
2)   வாழ்வின் சிக்கல்களில் இருந்து மீள எழுத்தே சிறந்த மார்க்கம். எழுத்தாளனின் மரணத்துக்கான காரணங்கள் அவனது எழுத்து வாழ்வுக்கு புறம்பானவை.
முதல் முகாமில் பிரதான ஒழுக்கவாதியான ஜெயமோகன் வருகிறார். ஜெயமோகன் நீண்ட காலமாகவே bohemian கலைஞர்களுக்கு எதிரானவர். அவர் குடிக்கவோ புகைக்கவோ மாட்டார். நான் அவரை என் பதினாறாவது வயதில் சந்தித்தேன். எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் குடியிருந்தார். அவரது அலுவலகம் தக்கலையில். இருபது நிமிடம் நடந்து அலுவலகம் போவார். திரும்ப மாலையில் வரும் போது குழந்தை கூட இருந்தால் பேருந்து. அல்லாவிட்டால் மீண்டும் நடந்தே வீடு திரும்புவார். அப்போது எங்கள் ஊரில் பெரும்பாலானோர் பேருந்து பயன்படுத்தத் துவங்கி இருந்தனர். ஸ்கூட்டர், பைக், ஆட்டோ என பிரயாண மார்க்கம் எளிய மக்களுக்கு கூட மாறிப் போயிருந்தது. வாழைத்தோப்புக்கு செல்லுக்கு கூலித்தொழிலாளிகள் மட்டுமே நீண்ட தூரம் நடந்து செல்வார்கள். ஜெயமோகன் நடந்து போவது பார்க்க எனக்கு அக்காலத்தில் விசித்திரமாக இருக்கும். ஆனால் அவர் உடல் நலனை பேணுவதில் கராறாக இருந்தார். அதற்காக இரண்டு மணிநேரம் படிப்புக்கு, மூன்று மணிநேரம் எழுத்துக்கு, அரைமணிநேரம் உணவுக்கு என கால அட்டவணை போட்டு செயல்படுபவர் அல்ல. அவர் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து வரும் வேளையில் கையில் ஒரு பெரிய நூலை ஏந்தி இருப்பார். அதை படித்தபடியே சாலையில் தடுக்கி விழாமல் அற்புதமான சிரத்தையுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார். ஊரில் இது குறித்து வியக்காதவர்கள் இல்லை. என் அத்தான் மருத்துவர்கள், எழுத்தாளர்கள் போன்று அறிவுத்துறையை சேர்ந்தவர்களை கடுமையாய் வெறுத்தவர். அவர் தினமும் மாலையில் என்னிடம் வந்து சொல்வார் “இன்று மாலை உன் எழுத்தாளரை ஒரு பஸ் மோதப்பார்த்தது, அவர் ஒரு லாரி சக்கரத்தின் இடையில் விழாமல் தப்பித்தார்”. நான் சொல்வேன் “ஜெயமோகனை லாரி மோத முடியாது. அவர் மட்டுமே லாரியை மோத முடியும்”. கடைசி வரை அப்படியே நடந்தது. எங்கள் ஊர் லாரிகள் அவரைப் பார்த்ததும் ஒதுங்கியே சென்றன.
 ஜெயமோகன் பேருந்தில் பயணிக்கும் போதும் படித்தார். அலுவலகம் சென்று அமர்ந்ததும் அப்படிப்பை தொடர்ந்தார். அங்கேயே அவருக்கு எழுதும் வசதியும் வாசக நண்பர்களுடன் உரையாடும் அவகாசமும் இருந்தது. மாலையில் அவர் வீட்டில் ஏதாவது ஒரு நண்பர் உரையாட வந்து விடுவார். அவரது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி பன்னிரெண்டு, ஒன்று வரை தீவிரமான எழுத்துப்பணியை மேற்கொள்வார் என என்னிடம் கூறினார். காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளை குளிப்பாட்டி அவரும் தயாராகி விடுவார். நடுவில் மிஸ்ஸாகும் உறக்கத்தை மதியம் உணவுக்கு பின் ஒருமணிநேரம் உணவருந்தும் அறையின் சிறிய பெஞ்சில் தூங்கி ஓரளவு சமாளித்து விடுவார். ஆனாலும் தூக்கக் கணக்கு இடிக்கிறதே? இது குறித்து நான் ஒருமுறை வினவிய போது தனக்கு தூக்க போதாமையால் சிலநேரம் உடல் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவரை நாடுவதுண்டு என்றார். போதை பழக்கம், வெற்று அரட்டை ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால் ஜெயமோகனும் பிற எழுத்தாளர்களைப் போல் சமநிலையற்ற, மிகக்கடுமையான எழுத்து நிரலை கொண்டவர் தான்.
லட்சியபூர்வ எழுத்து சமநிலையை பேணியவர் என சுந்தர ராமசாமியை குறிப்பிடலாம். அவர் எட்டு மணிக்கு சன் நியூஸ் பார்க்கிறார் என்றால் அந்நேரம் நீங்கள் அவரிடம் சென்று உலக இலக்கியத்தின் மாபெரும் சிக்கலொன்றை விவாதித்தால் கூட நடுவில் நிறுத்தி “நாம் இப்போது நியூஸ் பார்க்க வேண்டும். நான் டிவியை ஆன் செய்யவா?” என்று கேட்டு விட்டு டி.வி பார்க்க துவங்கி விடுவார். அதன் பின் அவர் இரவுணவு அருந்தும் நேரம். இந்த அட்டவணையை அவர் மீறியதே இல்லை. அது போல சு.ராவுக்கு நடைபயிற்சி வழக்கம் இருந்தது. போதைப்பழக்கங்கள், உடலை கெடுத்துக் கொள்ளும் எந்த மிதமிஞ்சிய வழமைகளும் அவருக்கு இல்லை. ஆனாலும் அவர் அறுபதுகளில் இருந்தே மரணத்துடன் விளையாடத் துவங்கினார். எழுப்பு நான்கு வயதில் நம்மை விட்டு சென்றார்.
எனக்கு ஒரு பாட்டி இருக்கிறார். எண்பத்தைந்து வயது கடந்து விட்டது. ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு ஆகிய உபாதைகள் உண்டு. ஆனால் அவர் வாழ்நாளில் உடல் உழைப்பையோ உடற்பயிற்சியையோ அறிந்ததில்லை. பெயருக்கு மாத்திரைகள் உட்கொள்வாரே அன்றி அவருக்கு மருத்துவத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. அவர் தன் ஆயுளில் ஒரே விசயத்தை மட்டும் கராறாய் பேணினார். அது வேளாவேளைக்கு காரமும் புளியும் கொண்ட மீன்குழம்பில் சுடுசோறை பிசைந்து உருட்டி வாயை அகலத் திறந்து லபக் என உள்ளே விடுவது. அவர் மென்று நான் பார்த்ததே இல்லை. காய்கறிகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என நான் கூறும் போதெல்லாம் அவர் என்னை அருவருப்பாய் பார்ப்பார். கொடிய வறுமை ஏற்பட்டால் ஒழிய அவர் சப்பாத்தி, பழவகைகள், ராகி, கொள்ளு ஆகிய உணவுகளுக்கு திரும்ப மாட்டார். அவரை பரிசோதிக்கும் மருத்துவர்கள் அவர் இன்னும் முப்பது வருடங்கள் தாராளமாய் வாழ்வார் என கூறுகிறார்கள். அவர் வாழ்க்கையை வைத்து ஆய்வு செய்யும் போது உடல் உழைப்பே இல்லாதது தான் அவரது நீண்ட ஆயுளின் காரணமோ என எனக்கு சிலநேரம் தோன்றும்.
எங்கள் ஊரின் மக்கள் தொகையில் வயதானவர்கள் அதிகமோ என அங்கு புதிதாய் வரும் பயணிகளுக்கு தோன்றலாம். எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு தொண்ணூறு வயது கிழவர் தூய வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கையில் ஊன்று கோலுடன் நடந்து போய்க் கொண்டிருப்பார். எண்பது வயது பாட்டிகள் பாதி திறந்த பிளவுஸ், தோளில் ஒரு துண்டு, அழுக்கு வேட்டி அணிந்து குளத்துக்கு குளிக்கவோ கோயிலுக்கோ சென்றபடி இருப்பார்கள். நாற்பது ஐம்பதுகளில் பிறந்த பலர் இன்றும் எங்கள் ஊரில் “அரண்மனைப் பல்லி” போல் தம் கால அட்டவணை, தோற்றம், இடம் மாறாமல் இருப்பதை காண்கிறேன். ஆனால் அறுபது, எழுபதுகளில் பிறந்தவர்கள் ஐம்பதில் இருந்து எழுபது வயதுக்குள் இறந்து விடுகிறார்கள். எங்கள் ஊரில் அடிக்கடி நிகழும் மற்றொரு துயரம் முப்பது வயதுக்கு உட்பட்டோரின் மரணங்கள்.
ஏன் நமக்கு மூன்று தலைமுறைக்கு பிந்தியவர்கள் நீண்ட ஆயுள் கொண்டிருக்கிறார்கள் என நான் வியந்திருக்கிறேன். இது குறித்து மேற்கில் ஆய்வுகள் நடந்துள்ளன. ஒரு ஆய்வு முடிவு என்னவென்றால் உணவு, செக்ஸ், வேலை போன்ற வாழ்வின் நோக்கங்கள் மிதமிஞ்சி சாத்தியப்படும் போது ஆயுள் குறைகிறது. ஒரு தலைமுறையினருக்கு உணவு குறைவாக கிடைத்திருக்கலாம். வேலை செய்து, பணம் ஈட்டி தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்புகளும் அரிதாக இருக்கலாம். அப்போது உடல் தன் வேகத்தை குறைத்துக் கொள்கிறது. இன்றைய ஆண்டுரோயிட் போன்களில் இரவில் மட்டும் குறைவான மின்கலனை பயன்படுத்தும் ஒரு செட்டிங் உள்ளது. போன் தானாகவே இரவில் தன் வேலையை குறைத்து மின்கலனின் ஆற்றலை சேமிக்கும். பஞ்ச காலத்தில் நம் உடலும் இப்படி செயல்படும். ஏனென்றால் உடலின் நோக்கம் நமது மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுவது தான்.
உணவும் சம்பாத்தியமும் அதிக கொண்டாட்டங்களும் செக்ஸும் உள்ள வாழ்க்கையில் அது நாற்பது வயதுக்குள் மனிதனுக்கு தாராளமாய் சாத்தியமாகும். அதனால் நாற்பது வயதாகும் போது உடல் தானாகவே ஒரு தற்கொலை முயற்சியில் இறங்குகிறது. மெல்ல மெல்ல பல வியாதிகளை உருவாக்கி மனிதனை பலவீனமாக்குகிறது. இது சம்மந்தமாய் நான் வாசித்த Threshold of Death எனும் நூல் ஒரு சுவாரஸ்யமான சேதியை குறிப்பிடுகிறது. பலவித வியாதிகள், உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் உத்திகளை நம் உடலே அறியும். இந்த பாதுகாப்பு அரண்கள் முப்பது வயதுக்கு மேல் தாமாகவே தளர்கின்றன. உடல் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலமாய் முக்கியமான உள்ளுறுப்புகளை பாதுகாப்பதை தவிர்க்கிறது. மெல்ல மெல்ல நம்மை சாக அனுமதிக்கிறது. அதாவது நாம் எப்போது மரணிக்க வேண்டும் என்பதற்கான ஒரு அலாரம் நமக்குள்ளே ஓடுகிறது. அதில் நேரத்தை நம் உடலே தீர்மானிக்கிறது. போதுமான அளவுக்கு பொருள் சேர்க்கவும் “வாழவும்” புணரவும் வாய்ப்பு இல்லாத முப்பது, நாற்பதுகளின் தலைமுறையினருக்கு உடல் அலாரத்தை தாமதமாகவும், எழுபது, எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு சீக்கிரமாகவும் வைக்கிறது.
இந்த விவாதத்தின் படி நம் மரணம் நம் கையில் இல்லை. சிறுவயதில் இருந்தே மிக மிக குறைவாய் உண்டு, குறைவாய் உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் மனிதர்கள் தம் ஆயுளை நீட்டிக்க முடியும் என இந்த புத்தகம் கூறுகிறது. இதற்கு இந்திய ஆன்மீக மரபில் இருந்து உதாரணங்களும் கூறுகிறது. உடலை ஒடுக்கி ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நீட்டிப்பதில் காந்தி ஒரு முன்மாதிரி.
இதன் எதிர்தரப்பினர் கராறான உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, சீரான மருத்துவ கவனிப்பு இருந்தால் மனிதன் நீண்ட காலம் வாழலாம் என்கிறார்கள்.
மரணத்தின் காரணங்களை துல்லியமாய் அறிவதோ அதன் வருகையை கணிப்பதோ சாத்தியமல்ல. தி.ஜாவின் சிறுகதையொன்றில் ரயில் பயணத்தில் கதைசொல்லி ஒரு உடல்நல நிபுணரை சந்திப்பார். அவர் உடல் நலத்தை பேணுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம், அதற்கு தேவையான சிரத்தை, பழக்கங்கள் பற்றி விவரிப்பார். பேச்சின் இடையே சட்டென மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே செத்து விடுவார்.
முன்பு கவிஞர் ராஜமார்த்தாண்டன் இறந்த போது மிதமிஞ்சிய மதுப்பழக்கம் தான் காரணம் என பரவலாய் பேசப்பட்டது. ஜெயமோகன் இந்த நோக்கில் ஒரு விரிவான கட்டுரையும் எழுதினார். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கிட்டத்தட்ட மரணத்தை தொட்டுப் பார்த்து விட்டு மீண்டு வந்தேன். நான் மீண்டிருக்கா விட்டால் மிதமிஞ்சிய எழுத்தும், உடல் மீதான அக்கறையின்மையும் என்னை கொன்று விட்டது என என் நண்பர்களும் குடும்பத்தினரும் நம்பி இருப்பார்கள்.
 சமீபத்தில் கவிஞர் குமரகுருபரன் எதிர்பாராத நேரத்தில் மாரடைப்பால் காலமான போது பலரும் தாள முடியாத அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்ந்தோம். செய்தி கேட்ட போது என்னால் நீண்ட நேரம் அதை நம்ப முடியவில்லை. தனது முதல் எதிர்வினையும் நம்ப இயலாமையே என ஜெயமோகனும் எழுதியிருந்தார். நான் நீண்ட நேரம் என் அறைக்குள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவர் முக்கியமான இயல் விருதை தன் கவிதைக்காய் வென்றுள்ள சமயம். தன் படைப்பு வாழ்வின் உச்சத்தை நோக்கி செல்லும் வேளையில் அவரை மரணம் கவ்விக் கொண்டதே எனும் ஆற்றாமையில் நாம் தவித்தோம்.
இதைத் தொடர்ந்து பல நண்பர்கள் குமரகுருபரனின் மது மற்றும் சிகரெட் பழக்கம், உடல் எடையை குறிப்பிட்டு, ஒரு இளம் கவிஞனை தேவையின்றி இழந்து விட்டோமே என கவலை தெரிவித்தார்கள். ஜெயமோகனும் அவ்வாறான இரண்டு கட்டுரைகளை தன் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டார். ஒன்று செல்வேந்திரன் எழுதியது. மற்றொன்றி சுகாவினுடையது. இருவரும் கவிஞர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதேன் என கேட்டிருந்தார்கள். சுகா நேரடியாகவே குடிக்கலாச்சாரத்தை மகத்துவமான கலக விழுமியமாய் முன்வைத்து, இளைஞர்களை வழிதவற செய்யும் சில ”மூத்த” எழுத்தாளர்களை சாடி இருந்தார்கள். அவர் சாருவை தான் குறிப்பிடுகிறார் என்பது வெளிப்படை. கவிஞர் திருச்செந்தாழை தன் பேஸ்புக் பதிவில் குமரகுருபரனின் சிகரெட் பழக்கத்தையும், உடல் எடையும் குறிப்பிட்டு ஒரு திருமண நிகழ்வின் போது அவர் மூச்சு விட சிரமப்பட்டு இருமிக் கொண்டிருந்ததை பார்த்தது குறித்தும் எழுதி இருந்தார்.
இந்த எதிர்வினைகளை ஒரு எதிர்பாராத மரணத்தை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வதற்கான முயற்சிகளாகவே பார்க்கிறேன். இந்த எளிமைப்படுத்தல் இல்லாவிட்டால் நம்மால் இயல்பு வாழ்வின் ஓட்டத்திற்கு உடனே திரும்ப முடியாது. சீரான வாழ்வுமுறைக்கு மீண்டு நம் ஆயுளை காப்பாற்றிக் கொள்ள முடியும் என நம்ப விரும்புகிறோம். எம்.ஜி.ஆர் தன் மேனி மிளிர்வுக்காக குங்குமப்பூ உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார். அதுவே அவரது சிறுநீரகத்தை பாதித்து மரணத்துக்கு காரணமானது என சொல்கிறவர்கள் இன்றும் உண்டு. அவர் தன்னை விட ஐம்பது வயது குறைவான ஒரு இளம் நடிகையுடன் உறவு கொண்டிருந்தது காரணம் என கூறுகிறவர்கள் உண்டு. தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர் எப்படி சாக முடியும் என புரியவில்லை. அவர் உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம் என தன்னை பாதுகாத்துக் கொண்டார். மிதமிஞ்சி போதைப்பழக்கங்கள் இருந்ததாகவும் நமக்கு தகவல் இல்லை. உருக்கு மனிதரான புரூஸ் லீ ஏன் இளமையில் இறந்தார்? அவரது மிதமிஞ்சிய வேலைப்பளுவே காரணம் என அவரது அம்மா கூறினார். அவரது ரசிகர்கள் அவர் விஷமூட்டப்பட்டதாய் நம்பினர். ஆனால் உண்மையான மருத்துவக் காரணம் தலைவலியால் ஏற்பட்ட மூளை வீக்கம். ஒரு சின்ன தலைவலி மாத்திரை அப்போது கிடைத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார். மரணம் நமக்கு எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்கிறது.
இந்த உண்மைகள் ஜெயமோகனுக்கும் தெரியும். அவர் ஆயுளை விட கால வீணடிப்பை பற்றித் தான் அதிகம் கவலை கொள்கிறார் என்பது என் ஊகம். ஜெயமோகன் நடைபயிற்சி, கராறான உணவுப்பழக்கம் என உடலை பேணி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். எழுத்து வாழ்வு அப்படியான ஒரு கராறான ஒழுக்கமான வாழ்க்கை முறையை கோருகிறது என்கிறார் அவர். ஒழுங்கீனம் படைப்பாற்றலை வீணடிக்கிறது என்கிறார். அதனாலே ஒழுங்கீனமான பழக்கம் காரணமாய் ஒரு படைப்பாளி மரணிக்கும் (அல்லது அப்படி நம்பும் போது) போது அவர் கலங்குகிறார்.
நான் ஒரு எழுத்தாள நண்பரிடம் சொன்னேன் “நமக்கு முந்தின தலைமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் போல் நம்மால் உழைக்க முடிவதில்லை. ஒரு வருடம் அவர்களைப் போல் எழுதினாலே நம் ஆரோக்கியம் சிர்குலைந்து ஐ.சி.யுவில் அட்மிட் ஆகி விடுகிறோம்”
அவர் சொன்னார் “இம்மூவருமே முழுநேர எழுத்தாளர்கள். வேலையில் இருக்கும் எழுத்தாளர்கள் தினமும் அலுவலகத்தில் பன்னிரெண்டு மணிநேரம் கழித்து விட்டு வீட்டிலும் அமர்ந்து எழுத முயன்றால் சீக்கிரமே பரலோகம் போக வேண்டியதும் தான்.”
நான் முன்பு மூன்று மாதப்பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது கூட இரண்டு வார, நாள் இதழ்களிலும் பத்தி எழுதுகிறேன். ஆப்பில் வால் மாட்டின் குரங்கின் நிலை தான் எனக்கு. நான் நிம்மதியாய் இரண்டு மணிநேரம் பகலில் ஓய்வெடுத்து ஒரு வருடம் ஆகிறது. இரவிலும் தூக்கம் குறைவு. அலுவலகத்தில் பத்து மணிநேர வேலை. திணறுகிறேன். ஒருவேளை இதனால் தான் என் உடல் நலம் சீரழிகிறதோ என கவலைப்பட ஆரம்பித்தேன். நண்பரான இயக்குநர் ராமிடம் இது குறித்து பேசும் போது அவர் சொன்னார் “நீங்கள் கல்லூரி ஆசிரிய வேலைக்கு திரும்பினால் உங்களுக்கு இப்போதுள்ள சிக்கல் தானே தீர்ந்து விடும். மற்றபடி ஒரு படைப்பாளி இயங்கித் தான் ஆக வேண்டும். வேறுவழியில்லை.”
என் தலைமுறையில் அலுவலக வேலையில் உள்ள கணிசமான எழுத்தாளர்களுக்கு இந்த அச்சம் உள்ளது. எழுத்தை நம்மை கொன்று விடுமா?
இது குறித்தும் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன.
1) எழுத்து நமக்குள் படிந்துள்ள தீய எண்ணங்களை வெளிப்படுத்தும். கடும் கசப்பு, வெறுப்பு, ஆற்றாமை ஆகிய உணர்வுகளின் தாக்கம் தாளாமல் நம் மனம் சிதற ஆரம்பிக்கும். இதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எழுத்தாளன் கடும் உடற்ப்யிற்சிகள் செய்ய வேண்டும் என ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகாமி தனது What I Talk About When I Talk About Running நூலில் சொல்கிறார்.
பெரும்பாலான இந்தியர்களும் இதையே மானசீகமாய் நம்புகிறோம். ஊரில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களிடம் “ரொம்ப படித்தால் மனம் பேதலித்து விடும்” என அச்சுறுத்துவது மக்களின் வழக்கம். இந்த தொன்மம் நீண்ட காலமாய் நம் மத்தியில் உள்ளது. உலக அளவிலும் கூட இளம் வயதில் மரணமடைந்த கலைஞர்கள் பற்றின தொன்மம் பிரபலமானது. மைக்கேல் ஜாக்ஸன், ஜான் கீட்ஸ் ஆகியோரை குறிப்பிடலாம்.
2)   2012இல் Journal of Aging and Health இதழில் மரணத்துக்கும் படைப்பூக்கத்துமான உறவு குறித்து ஒரு ஆய்வு வெளியாகி இருந்தது. இந்த ஆய்வின் பிரதான கண்டுபிடிப்பு படைப்பாளிகளின் மூளை ஆரோக்கியமான நரம்பணு தொடர்புகளை கொண்டுள்ளது. அவர்கள் மன அழுத்தத்தை சுலபத்தில் எதிர்கொண்டு மீள்கிறார்கள். இதனால் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள். மூளை தான் உடலின் பிற உறுப்புகளின் இயக்கத்தையும் நீட்சியையும் தீர்மானிக்கும் தலைமையகம் என்பது இந்த ஆய்வாளர்களின் மைய வாதம். புத்திசாலித்தனம், உலகத்திடம் திறந்த மனதுடன் இருப்பது, நிறைய நண்பர்களை கொண்டிருப்பதை விட படைப்பூக்கமே ஆயுளுக்கான சாவி என இந்த ஆய்வு கருதுகிறது.

மனுஷ்யபுத்திரனிடம் இது குறித்து உரையாடினேன். படைப்பாளிகளின் துர்மரணங்களை தனித்து பார்க்க கூடாது, தமிழ் சமூகத்தில் ஒரு பகுதியினர் போதைப்பழக்கம் மற்றும் சீர்கேடான வாழ்க்கைமுறைகள் கொண்டு தம்மைத் தானே அழித்துக் கொள்கிறார்கள், அவர்களின் ஒரு பகுதி மட்டுமே எழுத்தாளர்களும் என்றார் அவர். சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அவர் இதை வலியுறுத்தியதாய் நினைவு.

மரணம் ஏன் இத்தனை சலசலப்புகளை, உணர்ச்சி கொந்தளிப்புகளை எழுத்தாளர்களிடையே ஏற்படுத்துகிறது? அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாகாணத்தில் நடந்த உளவியல் ஆய்வு ஒன்று மரண பயத்துக்கும் படைப்பூக்கத்துமான தொடர்பை அலசுகிறது. மரணம் குறித்த எண்ணம் படைப்பூக்கத்தை அதிகமாய் தூண்டுகிறது என்கிறது இவ்வாய்வு. எனக்கு இது குறித்து ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. நான் சமீபமாய் எழுத்தை குறைத்து அதிக ஓய்வு எடுக்க வேண்டும் என முடிவெடுத்ததாய் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அந்த சபதம் எடுத்த பிறகு நான் எழுதுவது முன்பை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. இது என்ன கொடுமை என உண்மையில் எனக்கு புரியவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட ஆய்வு இது மனம் தன் ஆழத்தில் மரணம் குறித்து கொள்ளும் பதற்றத்தின் வெளிப்பாடு தான் என்கிறது. சாவு பயம் முதலில் செக்ஸ் ஆர்வத்தை அதிகமக்கும், படைப்பூக்கத்தையும் தூண்டும். உதாரணமாய் உணவு உற்பத்தி குறைவாக இருந்த, பட்டினியாலும் கொள்ளை நோய்களாலும் மனிதர்கள் இறந்து விழுந்த பழங்காலத்தில் மனிதர்களுள் ஆளுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் விதம் பெற்றுக் கொண்டார்கள். உணவும் மருத்துவ வசதிகளும் பெருகிய இன்றைய காலத்தில் மலட்டுத்தன்மை மக்களுக்கு அதிகரித்து வருகிறது. போன தலைமுறையினர் அளவுக்கு நாம் செக்ஸில் திளைப்பதாகவும் சொல்ல முடியாது. ஊடகங்கள் முன்வைக்கும் செக்ஸ் பிம்பங்களில் தான் அதிகம் திளைக்கிறோம். உடலுறுவுக்கான் நேரமும் ஆர்வமும் இன்று குறைந்து வருகிறது.

 இது எதேச்சையானது அல்ல. இது இயற்கையின் தீர்மானம். இன்றைய மனிதனுக்கு சாவு பயம் குறைந்து விட்டது. அதனால் அவனுக்கு குழந்தைப்பேறின் அவசியமும் குன்றுகிறது. இளம் எழுத்தாளர்களின் துர்மரணம் நமக்குள் அப்படியான மரண பயத்தை தூண்டுமா? நமக்குள் மரண பயம் துளிர் விட்டால் நாம் எழுதுவதும் அதிகரிக்குமா?
நன்றி: உயிர்மை, ஜூலை 2016

No comments: