Thursday, July 7, 2016

ராம்குமார் துணிந்து பேசும் போது…


ராம்குமார் கைது செய்யப்பட்ட போது மனுஷ்யபுத்திரன் எழுதினார் “ராம்குமார் பேச வேண்டும். அப்போது தான் வழக்கின் உண்மைகள் வெளியே வரும்.” இப்போது சிறையில் இருக்கும் ராம்குமார் தன்னை சந்திக்க வந்த வக்கீல் ராமராஜிடம் சுருக்கமாக இரண்டு விசயங்களை கூறியிருக்கிறார். 1) குற்றத்தில் தனக்கு பங்குள்ளது. ஆனால் பிரதான குற்றவாளி தான் அல்ல. காவல்துறை பிரதான குற்றவாளிகளை காப்ப்பாற்றவே தன்னை பலிகடாவாக்குகிறது.

2) காவல்துறையினரே அவரது கழுத்தை வெட்டி விட்டு நாடகமாடி இருக்கிறார்கள்.
இதற்கு மேல் உண்மைகளை வெளிப்படுத்த அவர் அஞ்சுகிறார். அவரை காவல்துறையினர் செங்கோட்டையில் அவர் வீட்டருகே வைத்தே என்கவுண்டர் செய்திருப்பார்கள். ஆனால் டி.வியில் மாலன் போன்றவர்களும் பேஸ்புக்கில் பலரும் ”என்கவுண்டர் நடக்கும்” என கவலை தெரிவித்ததால் காவல்துறை ராம்குமாரை விட்டு வைத்தது. பதிலுக்கு கழுத்தை வெட்டி மிரட்டி இருக்கிறது. கழுத்தை வெட்டியதன் மூலம் உடனடியாய் மக்களிடம் ராம்குமாரே முழுமுதல் குற்றவாளி எனும் பிம்பத்தை காவல்துறையினரால் ஏற்படுத்த முடிந்தது. வெறுமனே பிடித்திருந்தால் சந்தேகங்கள் நீடித்திருக்கும். ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றதுமே மக்கள் “குற்றம் செய்யாதவன் ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும்?” என யோசிக்க தலைப்பட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணை உண்மையில் பலவீனமானது. ராம்குமார் தானே குற்றத்தை முழுக்க ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் இவ்வழக்கு ஒருவேளை தோற்கலாம். ராம்குமாரே குற்றவாளி என நீதிமன்றம் அணுக முனையும் பட்சத்திலும் குற்றம் எப்படி, எதற்காக நடந்தது எனும் கேள்விளுக்கு ராம்குமாரும் காவல்துறையும் அளிக்கும் பதில்கள் வேறுவேறாக இருக்கும். ஏனென்றால் காவல்துறை கணிசமான தகவல்களை மறைத்தும் திரித்துமே வழக்கை கட்டமைக்க விரும்புகிறது. ஆக காவல்துறையால் நேரடி சாட்சிகளை பயன்படுத்த முடியாமல் போகும். தமிழ்ச்செல்வன் நிச்சயம் ஸ்வாதியை தாக்கியவரும் கொன்றவரும் வேறுவேறு என்கிறார். இது குழப்பத்தை ஏற்படுத்தும். ராம்குமாரின் நண்பர்களை ஆஜர்படுத்தினாலும் உண்மைகள் வெளிவரும். ஆக காவல்துறைக்கு பல சங்கடங்கள் உள்ளன. எங்கள் ஊரில் சொல்வார்கள்: அக்குளில் உள்ள பொருளை எடுக்கவும் வேண்டும், அதேநேரம் கையையும் தூக்கக் கூடாது என்று. காவல்துறையின் நிலை தற்சமயம் அது தான். இப்படி காவல்துறையை கட்டுப்படுத்தும்படியான கடும் அழுத்தும் அதற்கு மேலிருந்து அளிக்கப்படுகிறது. இது நிச்சயம் விசாரணையை கேள்விக்குள்ளாக்கும்.
இதுவரையிலும் மரண பயம் மட்டுமே ராம்குமாரை உண்மையை பட்டவர்த்தமாக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பயணத்தின் போது போலீஸ் தன்னை கொன்று விடுமோ என அவர் பயந்து கொண்டே இருந்திருக்கிறார். தூங்காமல் இரவெல்லாம் விழித்திருந்திருக்கிறார். திருச்சியை நெருங்கும் போது தன்னை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என பதறித் தவித்திருக்கிறார். இப்போதும் கூட சிறையில் இருக்கும் அவரை பிற குற்றவாளிகளை பயன்படுத்தி அங்கேயே கொல்ல போலீசால் முடியும். அதே போல் வெளியே விசாரணைக்கு அழைத்துப் போகும் போதும் என்கவுண்டர் செய்யப்படலாம். இந்த மிரட்டலைக் கொண்டே அவரையும் அவர் குடும்பத்தினரையும் இந்த ஜோடனை வழக்குக்கு உடன்பட வைக்கலாம் என காவல்துறை எதிர்பார்க்கிறது. இதுவே இப்போதைக்கு இவ்வழக்கை வெற்றிகரமாய் முடிப்பதற்கான ஒரே துருப்புச்சீட்டு.
ஆரம்பத்தில் வெளியான வாக்குமூலம் போலீசாரே எழுதி தயாரித்து தன்னை மிரட்டி கையெழுத்துப் பெற்ற ஒன்று என இப்போது ராம்குமார் கூறுகிறார். காவல்துறை இப்போதைக்கு நம்பவே முடியாத வகையில் வழக்கை பலவகைகளில் திரித்து சித்தரிக்கிறது.
 ஸ்வாதியை ராம்குமார் ஏற்கனவே ரயில்நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளதாய் காவல்துறை அறிக்கை கூறுகிறது. ஆனால் இத்தாக்குதலை நேரில் பார்த்த ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஸ்வாதியை அறைந்த நபர் சிவப்பான உயரமான ஆசாமி என்கிறார். அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஏன் தமிழ்ச்செல்வனைக் கொண்டு கொலையாளி ராம்குமார் தானா என காவலர்கள் உறுதிப்படுத்த தயங்குகிறார்கள்? ஏன் அவர் வாயை மூடி வைத்திருக்கிறார்கள்?
ராம்குமார் ஸ்வாதியை மூன்று மாதங்களாக மட்டுமே அறிவார் என காவல்துறை கூற, ராம்குமாரோ ஒருவருடத்திற்கு மேலாக ஸ்வாதியை தான் அறிவேன் எனக் கூறுகிறார். காவல்துறையின் தரப்பு இது போல் அப்பட்டமான முரண்களால் நிரம்பி இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விசயம் உள்ளது. ராம்குமாரின் தரப்பும் முழுக்க நம்பும்படியாய் இல்லை. அவர் தனக்கு ஸ்வாதி பேஸ்புக்கில் பழக்கமானதாய், சாட்டிங்கில் நிறைய உரையாடியதாய் சொல்கிறார். ஆனால் அவரது பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்தால் அவர் ஒரு வருடமாகவே பேஸ்புக்கில் செயல்பட்டதாய் தெரியவில்லை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு ஒரு லைக் கூட போடவில்லை.
இப்போதைக்கு இந்த வழக்கை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்:
1)   ராம்குமார் ஒரு வாடகைக்கொலையாளி. கொலைச்செயல்களில் சிறிதளவு பழக்கமுள்ளவர். ஆனால் போதுமான அளவுக்கு அனுபவம் அற்றவர். அவரை ஏவி விட்டிருக்கிறார்கள். கொலைக்கு பிறகு அவர் தனக்கு உதவி கிடைக்கும் என நம்பி, அதற்காக முழுநாளும் மேன்சன் அறையில் காத்திருந்திருக்கலாம். பிறகு ஊருக்கு சென்றவர் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்திருந்தது விசித்திரம். காவல்துறை தன்னை நெருங்குகிறது என அஞ்சியவர் முதலில் செய்ய வேண்டிய காரியம் போனை அணைத்து, ஆதாரங்களான ரத்தம்பட்ட சட்டை, ஸ்வாதியின் போன் ஆகியவற்றை அழிப்பது தானே? அவர் ஏன் அதை செய்யவில்லை? குற்றத்துடன் சம்மந்தப்பட்டவர்களுடன் அவர் போன் தொடர்பில் இருந்தாரா? அல்லது இந்த ஆதாரங்களை போலீசே ராம்குமார் வீட்டில் இருந்து எடுத்ததாய் நாடகமாடுகிறதா?
போலீஸ் வரும் வரை அவர் ஏன் தப்பித்துப் போக முயலாமல் வீட்டில் இயல்பாக காட்டில் ஆடுமேய்த்தபடி இருந்திருக்கிறார்? ஒன்று, அவர் இக்கொலையில் தான் ஒரு சிறு புள்ளி மட்டுமே என நம்பி இருக்க வேண்டும். இக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட பிறரின் போன் தொடர்பில் அவர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தன்னை காப்பாற்றுவார்கள் என அவர் நம்பியிருக்க வேண்டும். போலீஸ் தேடி நெருங்கும் போது கூட மாட்டிக் கொள்வதை விட உயிரை காப்பாற்றுவதே அவருக்கு முக்கிய அக்கறையாக இருக்கிறது. இதுவே அவருக்கு குற்றத்தில் முழு பங்கில்லை அல்லது குற்றத்தில் அவருடன் பிறரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறி.
2)   இன்னொரு கோணம் இது ராம்குமார் உணர்ச்சிவசப்பட்டு மன சமநிலை இழந்த தருணத்தில் செய்தது என்பது. (ஆனால் அப்படியான கொலைகள் இவ்வளவு துல்லியமாய் திட்டமிடப்பட்டு நடக்குமா என்ற கேள்வியும் உள்ளது.) இந்த கோணத்தை ஏற்கும்பட்சத்தில் ராம்குமாரை கொலைவெறிக்கு தூண்டும்படியாய் ஸ்வாதி என்ன செய்திருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை பொதுவில் வைத்து கொல்ல வேண்டும் என்றால் ஒன்று தான் அவளால் ஏமாற்றப்பட்டதாய் அவன் உணர்ந்திருக்க வேண்டும். அல்லது அவளது இருப்பு அவனுக்கு நடைமுறையில் பிரச்சனைகளை தருவதாக இருக்க வேண்டும். சாலையில் பார்த்த பரிச்சயம் மட்டுமே கொண்ட பெண்ணை தன்னை ஏமாற்றியதாய் ஒரு ஆண் நம்ப வாய்ப்பில்லை. ஒன்றை தருவதாய் உறுதியளித்து பின் மறுப்பது தானே ஏமாற்றம்? ஸ்வாதி அப்படி எதை தருவதாய் சொல்லி ஏமாற்றினார்? இந்த கேள்வி முக்கியமானது.

நிராகரிப்பின் பொருட்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் கத்திக்குத்து, ஆசிட் வீச்சு, கற்பழிப்பை தொடர்ந்து கொலை என. ஆனால் இக்கொலை ஒரு வெளிப்படையான சேதியாக தோன்றியது. யாருக்கோ யாராலோ விடுக்கப்பட்ட சேதி போல்.

ஸ்வாதி தனது பேஸ்புக் நண்பர் ஒருவருக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்ததாய் ஒரு டிவி பேட்டியில் ஸ்வாதியுடன் பணி செய்த பெண் ஒருவர் கூறுகிறார். இவ்வளவு பணம் ஸ்வாதிக்கு எங்கிருந்து வந்தது? யாரிடம் இருந்து பெற்றார்? கொலைக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ஸ்வாதியை யாரோ போனில் அழைத்து மிரட்டியதாய் அவரது அண்டை வீட்டார் தெரிவிக்கிறார்கள். இது உண்மை என்றால் ஏன் மிரட்ட வேண்டும்? ஸ்வாதியால் நிராகரிக்கப்பட்ட ஆண் ஏன் அவளை போன் செய்து மிரட்ட வேண்டும்? இப்படுகொலை நிகழப்போகிறது என ஸ்வாதியின் அப்பா ஊகித்திருக்கிறார். அது அவர் தன் மகளின் பிணத்தை கண்டதும் கூறின சொற்களில் தெரிந்தது. நம் ஊரில் ஒருவர் மிரட்டப்படுகிறார் என்றால் ஏவி விடப்பட்டு கொல்லப்படுகிறார் என்றால் அது பணம் அல்லது அதிகாரம் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். ஸ்வாதியின் பொருளாதார பரிவர்த்தனைகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும்.

இக்குற்றத்தில் ராம்குமார் தண்டிக்கப்படுவது பிரச்சனையில்லை. அவரே தனக்குள்ள தொடர்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் போலீசார் பொய்யாக ஒரு வழக்கை தம் சௌகர்யப்படி ஜோடிப்பது தான் சிக்கல். இது மிகவும் ஆபத்தானது. போலீஸ் தம் விருப்பப்படி ஆதாரங்களை சமைத்து சில குற்றவாளிகளை காப்பாற்றியோ முக்கியமான தகவல்களை மறைத்தோ வழக்கை ஜோடிப்பது மொத்த நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் காரியம். இது தடுக்கப்பட வேண்டும். போலீசாரே போலியாய் குற்றவாளிகளை கட்டமைக்கவும் உண்மையான குற்றாவாளிகளை தப்பிக்க வைக்கவும் அனுமதிப்பதன் பேர் நீதி விசாரணை அல்ல.

ஸ்வாதியை பற்றி சேதிகள் வெளிவரக் கூடாது என்பது அதிகார மட்டத்தின் முடிவாக இருக்கலாம். ஆனால் ஒரு குற்றம் நிகழ்ந்த பின் அதில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நற்பெயரை காப்பாற்றுவதை விட நாணயமாக அதை விசாரித்து முழு உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியம். நிர்பயாவுக்கு என்ன நடந்தது? அவர் பெயர் களங்கப்படக் கூடாது என்றால் அவர் பலவந்தப்படுத்தப்படவில்லை, அவரை சில கொள்ளையர்கள் தாக்கிக் கொன்று விட்டார்கள் என வழக்கை ஜோடித்திருக்கலாம். ஆனால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? குற்றவாளிகள் உச்சபட்ச தண்டனையில் இருந்து தப்பித்திருப்பார்கள். தலைநகரில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழாதிருந்திருக்கும். ஒரு உண்மையை மறைப்பது நூறு குற்றங்களுக்கு இடம் கொடுப்பதாக முடியும்!

5 comments:

Rajnarayanan Veeraiyan said...

சுவாதியின் தந்தை தன் மகளின் பிணத்தை பார்த்ததும் கூறியது என்ன ?

vivek said...

Whats is the current report of this case in high court??

Rekha Selva said...

சுவாதியின் தந்தை தன் மகளின் பிணத்தை பார்த்ததும் கூறியது என்ன

nature said...

Police is doing their duties these blogs to be ignored

Siva Style said...

Ramkumar is the murderer as you mentioned. So he can reveal if someone else is there. We should appreciate TN police for finding the murderer Ramkumar and arresting him. If he did this for money through someone he should open his mouth and say the same. Swathi is very good and nice girl. No second thought about her character or anything. So only question is someone else helped ramkumar or he is just a killer for money.