Saturday, July 9, 2016

எழுத்தாளனும் மனிதன் தானே?


 விருதுகள் எந்த சார்பும் இல்லாமல் முழுக்க புறவயமான தேர்வுக்கு உட்பட முடியுமா? ஒருவேளை கணினியால் முடியும். மனிதனால் முடியாது. சமீபத்தில் ஒரு ஈழக்கவிஞர் ஒரு பேஸ்புக் பதிவு இட்டிருந்தார்: “கனடா இலக்கிய தோட்ட விருதுகள் நாகர்கோயிலில் துவங்கி ரொரொண்டோவில் போய் முடிகின்றன”. அதன் கீழ் ஒருவர் இப்படி பின்னோட்டம் இடுகிறார்: ”அவ்விருதை பெற நீங்கள் ஜெயமோகன் காலை பூஜிக்க வேண்டும்.”

இது சற்று வியப்பான சங்கதி தான். இம்முறை இந்த இரண்டு தரப்பில் இருந்தும் ஆள் தேர்வானதாய் தெரியவில்லை. குமரகுருபரன் ஜெயமோகன் தனக்கு நெருக்கமானவர் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் தீவிரமாய் செயல்படும் செயல்படுகிறவர் அல்ல. நல்ல நண்பர் மட்டுமே. சரி ஒருவேளை குருபரனை ஜெயமோகன் பரிந்துரைத்திருந்தாலும் அது மோசமான தேர்வு ஒன்றும் அல்ல. குருபரனின் இக்கவிதையை பாருங்கள்:
குற்றம் தவிர்

தண்டனைகள்
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டு
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.

நுணுக்கமான பார்வை கொண்ட கவிதை இது. இதில் முக்கியமான இடம் ” ”மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே”

கொஞ்சம் மனுஷ்யபுத்திரனை நினைவுபடுத்துகிறது என்றாலும் ம.புவிடம் உள்ள நாடகீயம், உணர்ச்சித்தளும்பல் குமரகுருபரனிடம் இல்லை. கொஞ்சம் ஆத்மாநாம், கொஞ்சமே கொஞ்சம் சாரு நிவேதிதா கூட (அந்த பகடியில்) தெரிகிறார். ஆனால் குருபரனிடம் ஒரு தனித்த ஸ்டைல் உள்ளது. இன்றைய கவிதையில் அதிகம் புலப்படாத மென்மையான, அடங்கலான தொனி உள்ளது. இக்கவிதை தண்டனைகளின் உளவியல் பற்றியது. என்ன விதமான மரணங்கள், கொலைத்தண்டனைகள் என தெளிவாக இல்லை. ஆனால் எப்போதும் நாம் பிறரது மரணத்தை பற்றி மதிப்பிடத் துவங்கும் போது நாமும் ஒரு தீர்ப்பை அவர்கள் பால் எழுதுகிறோம், அது நீதிபதியின் மரணதண்டனை தீர்ப்பைப் போன்றே உள்ளது என்கிறார். எனக்கு இது முக்கியமான கவிதையாக படுகிறது.
புனைவுக்கும் அபுனைவுக்குமான விருதுகள் பெறும் ஷோபா சக்தி மற்றும் அசோகமித்திரனின் தகுதியை நாம் கேள்வி கேட்கவே முடியாது. ஷோபா சக்தி ஒரு புதிய எழுத்து பாணிக்கான தோற்றுவாய். சயந்தன், குணா கவியழகன் என சில நாவலாசிரியர்களுக்கான பாதை ஷோபா அமைத்துக் கொடுத்தது தான். இப்படியான தாக்கத்தை செலுத்தியவர்கள் என தமிழில் அசோகமித்திரன், சு.ரா, கோணங்கி, எஸ்.ரா ஆகியோரைத் தான் குறிப்ப்பிட முடியும். இப்போதைக்கு ஜெயமோகனின் மொழியை கைவாங்கி வெற்றி பெற்றிருப்பவர் என போகன் சங்கரை சொல்லலாம். சு.ரா, அ.மி மொழியில் எழுதுகிறவர்கள் அக்காலத்தில் பலர் இருந்தார்கள். எஸ்.ரா, கோணங்கியின் மொழியை பின்பற்றுகிறவர்கள் என பத்து பதினைந்து எழுத்தாளர்களை பட்டியலிட முடியும். இது அந்த எழுத்தாளர்களின் வரலாற்று பங்களிப்பு. மிகச்சிலராலே இதை சாதிக்க முடிகிறது.
ஆக இம்முறை விருது தேர்வுகள் சிறப்பானவையே. முந்தின வருடங்களும் அவ்வாறே என காலவரிசை பட்டியலைப் பார்த்தால் புலப்படுகிறது. முதலில் இவ்விருதை வாங்கியவர் சு.ரா. அதன் பிறகு வாங்கியவர்களில் வெங்கட் சாமிநாதன், கோவை ஞானி, அம்பை, ஐராவதம் மகாதேவன், ச. பொன்னுத்துரை, நாஞ்சில் நாடன், சொ.தர்மன், ஜொ.டி குரூஸ், எஸ்.ரா தமிழவன், ஜெயமோகன், பொ.கருணாகரமூர்த்தி, சு.வெங்கடேசன், யுவன், கண்மணி குணசேகரன், தியோடர் பாஸ்கரன், பெருமாள் முருகன், பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். எனக்கு இப்பட்டியலில் காலச்சுவடு தாக்கம் வெகுகுறைவு என்றே படுகிறது. மனுஷ்யபுத்திரனை நீங்கள் காலச்சுவடு முகாமை சேர்ந்தவர் என கூற முடியாது தானே? அதே போல் சு.ராவை நீங்கள் “காலச்சுவடு முகாமை சேர்ந்தவர்” என கருத இயலாது. அவர் நவீன தமிழ் இலக்கியத்தின் “ஆள்”, பிதாமகர்.
 மேலும் இப்பட்டியலில் தமிழ் எழுத்தின் தவிர்க்க முடியாத பலவிதமான ஆளுமைகள் உள்ளதை காணலாம். கட்டுரையாளர்கள், கோட்பாட்டாளர், ஆய்வாளர், புனைவெழுத்தாளர் இப்படி பலரும் இடம்பெறுகிறார்கள். எனக்கு இது சாகித்ய அகாதெமியின் பரிசுப்பட்டியலை விட மேல் எனப் படுகிறது. அதுவும் புனைவு, அபுனைவு, கவிதை என பகுத்து பட்டியலிடும் மூலம் கணிசமான முக்கிய எழுத்தாளர்களை குறைக்க காலத்தில் கௌரவித்திருக்கிறார்கள். இந்த பாணியை சாகித்ய அகாதெமியும் பின்பற்றினால் சிறப்பு. கனடா தோட்டத்தின் சுமார் ஒன்றரை லட்சம் பரிசுத் தொகையும் சாகித்ய அகாதெமி தருவதை விட அதிகம்.
கனடா தோட்ட விருதுகளில் என்னை மிகவும் கவர்ந்தது அபுனைவு பிரிவில் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு “தற்கால தமிழ் அகராதிக்கு” 2005இல் வழங்கப்பட்ட விருது. ஒன்று அகராதியை அபுனைவு என கோரி விருது அளிக்க அவர்களுக்கு மிகுந்த துணிச்சல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதேவேளை அந்த அகராதி மிக முக்கியமான ஒரு பிரதியும் தான். நானே அதை ஐம்பது தடவைக்கு மேல் ஒரு புத்தகம் போல் வரிக்கு வரி வாசித்திருப்பேன். Lexicography எனப்படும் அகராதி உருவாக்கத்துக்கு மேற்கில் உள்ள மதிப்பு இங்கு இல்லை. அது ஒரு தனி துறை, எழுத்து வகை. சாமுவேல் ஜான்சன் என்பவர் அவரது பதினெட்டாம் நூற்றாண்டு அகராதிக்காகவே ஆங்கிலத்தில் கொண்டாடப்படுகிறவர். அதன் உருவாக்கத்தில், அவர் தருகிற உதாரணங்களில் ஜான்சனின் தனி முத்திரை இருக்கும். அதையே தற்கால தமிழ் அகராதியிலும் பார்க்கலாம். நிறைய வட்டார சொற்கள், நவீன தமிழ் சொற்கள், எளிமையான் பிரயோகங்கள்.
அடுத்து பரிந்துரைகள், செல்வாக்குக்கு வருவோம். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் பரிந்துரைகள் இன்றி விருது சாத்தியப்படாது. மனிதர்கள் எந்திரங்கள் அல்ல என்பதால் நிச்சயம் தற்சார்பு, மனச்சாய்வு இருக்கும். தவிர்க்க இயலாது. ஆனால் எப்படியும் ஒரு முக்கிய படைப்பாளிக்கு ஏதோ ஒரு கௌரவமான விருது அவர் வாழ்நாளில் கிடைத்து விடுகிறது. அதுவே ஆசுவாசமான விசயம்.
நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய “கால்கள்” நாவலை நான் ஒரு முக்கிய தமிழக விருது தேர்வுக்கு முன்பு அனுப்பினேன். தேர்வாளர்கள் மூவர். அதில் ஒருவர் ஒர் வணிக பத்தியாளரின் நூலுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண் இட்டு விட்டார். இது அந்நூல் விருது பெறுவதை உறுதி செய்ய அவர் செய்த ஒரு தந்திரம். எனக்கு விருது கிடைக்காததை விட நான் ஒரு போலி என நம்பும் ஒருவருக்கு கிடைத்ததை நினைத்து தான் அதிகம் கலங்கினேன். இலக்கிய விருதுக்கு கூட வெகுஜன பத்தி எழுத்தாளன் தான் பரிசீலிக்கப்படுவானா என கோபப்பட்டேன். ஆனால் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டு தான் இருந்தேன். என்னை விட மிக மிக குறைவாய் சுமாராய் எழுதினவர்கள் வருடத்துக்கு ஐந்து விருதுகள் வாங்கினார்கள். அவர்களை போற்றி எழுதின மூத்த எழுத்தாளர்கள் ஒருவர் கூட என்னை கவனிக்கவில்லை (எஸ்.ராவை தவிர). நான் ”இன்மை” இணைய இதழ் நடத்தின் போது ஒருவர் கவிதைகளுடன் தன் CVயும் அனுப்பினார். அவர் ஒரு புத்தகம் கூட வெளியிடவில்லை. எந்த முக்கிய பத்திரிகையிலும் எழுதவில்லை. அவர் பெயரையும் நமக்கு தெரியாது. ஆனால் 25க்கு மேல் விருதுகள் பெற்றிருந்தார். உண்மையில் விருது, அங்கீகாரம் பெறுவது முழுக்க வேறொரு திறமை, அது நமக்கு இல்லை போல நான் முழுக்க நம்பிக்கை இழந்திருந்தேன். When it rains it pours என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மழையே இல்லாமல் நீண்ட காலம் வறட்சி நீடிக்கும். ஒரு சொட்டு பெய்யாதா என நாம் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது கொட்டோகொட்டென்று வானம் பொத்துக் கொண்டு பிரளயம் வரும். எனக்கும் அப்படித் தான் நடந்தது: எதிர்பாராத வேளையில் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார், பாஷா பரிஷத் என இரு தேசிய விருதுகள் எனக்கு கிடைத்தன.
இந்த கதை எதற்கென்றால்: விருதுப் பரிந்துரைகள் எப்போதும் நியாயமாய், தர்க்கரீதியாய் அமையும் என நாம் எதிர்பார்க்க கூடாது. ஆனால் கிடைக்க வேண்டியவருக்கு எப்படியாவது கிடைத்தே தீரும்
தமிழில் எழுத்தாளனுக்கு ராயல்டி இல்லை. அவன் இங்கு ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க கறுப்பின அடிமை போலத் தான். அவன் தினமும் நான்கு ஐந்து மணிநேரம் உழைக்க வேண்டும். அதற்கு அவனுக்கு டீ கிளாஸ் அலம்பும் பையனுக்கான வருமானம் கூட வராது. விருதுத் தொகை அவனுக்கு பொருளாதார ரீதியான ஒரு நல்ல ஆறுதல். வேலையில்லாத இரு வருடங்களும் எனக்கு அப்பணம் பெரிதும் பயன்பட்டது.
போன வருடத்தின் ”விருதை திரும்பக் கொடு” சர்ச்சையில் எத்தனை பேர் எழுத்தாளன் விருதையும் பணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும் என கோரினார்கள். ஆனால் ஏன் அவர்களில் ஒருவர் கூட எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை எப்படி நடக்கிறது என அக்கறைப்படவில்லை? ஒரு ஏழைக்கு அறுவைசிகிச்சைக்கு பணம் இல்லை என்றால் எத்தனை கொடையாளர்கள், அறக்கட்டளைகள் உதவி செய்ய முன்வருகின்றனர். ஆனால் நான் இரண்டு முறை கிட்டத்தட்ட உயிர் போகும் நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தேன். இதே நிலை எழுத்தாளர்கள் தேவிபாரதிக்கும், ரமேஷுக்கும் வந்தது. நெருக்கமான சில நண்பர்கள் தவிர எந்த இலக்கிய அமைப்போ, விமர்சகர்களோ, அறக்கட்டளைகளோ திரும்பிப் பார்க்கவில்லை. நான் கோமா நிலையில் இருந்து திரும்பி ஆஸ்பத்திரியில் இருந்த போது ஒரு தோழி கோவையில் இருந்து என்னைத் தேடி வந்து பார்த்தார். போகும் போது என் கைக்குள் ஆயிரம் ரூபாயை திணித்து விட்டுப் போனார். எனக்கு கண்ணீர் வந்து விட்டது. மருத்துவ செலவான ஒன்றரை லட்சத்தை நான் வங்கியில் கடன் வாங்கி செலுத்தினேன். நான் அப்போது ஒரு கல்லூரியில் குறைந்த சம்பளத்துக்கு தற்காலிக வேலையில் இருந்தேன். நான் வேலைக்கு திரும்பிய போது நிர்வாகம் எனக்கு ஒரு சிறிய தொகையை அளித்தது. அப்போது அத்தொகை மிகவும் உபயோகப்பட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் பிற்பாடு என் நிலையை பற்றி அறிந்து சிறிது கண்ணீர் விட்டது. அவ்வளவு தான்.
எழுத்தாளர் ரமேஷ் உடல் மிகவும் நலிவுற்று தளர்ந்த போதும் நண்பர் மனோமோகன் தனிப்பட்ட முயற்சிகள் எடுத்து நிதி திரட்ட வேண்டி வந்தது. ஜெயமோகன் அறிந்து அவருக்கு தங்கும் வசதிகள் செய்து தந்து உதவினார் என கேள்விப்பட்டேன். தமிழ் எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பில்லை என குற்றம் சாட்டுகிறவர்கள் அப்போது எங்கு போனார்கள்? எழுத்தாளனிடம் அவனது அரசியல் பொறுப்பை உணர்த்தி, இதைக் கொடு அதைக் கொடு என கோர ஆயிரம் பேர் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் அவன் சாகக் கிடக்கும் போது ஐந்து பேர் தான் அவனுக்கு உதவ வருகிறார்கள். என்ன ஒரு மனசாட்சி அற்ற சமூகம்?
ரமேஷ் பிரேமுடன் சேர்ந்து தொண்ணூறுகளின் சிந்தனைப் போக்கை மாற்றிய பல கருத்தாக்கங்களை அறிமுகம் செய்தவர். அவர் ஒரு தனி இயக்கம். அவரை பாதுகாக்கிற, கவனித்துக் கொள்கிற பொறுப்பு நமக்கு இல்லையா? அந்த தருணத்தில் மீடியா, அறக்கட்டளைகள், வாசகர்கள் இணைந்து தம்மாலான பணத்தை திரட்டி அவர் பெயரில் வங்கியில் ஒரு பெரும் தொகையை செலுத்தியிருக்க வேண்டும். நலிவுறும் திரைக்கலைஞர்களுக்கு திரைத்துறை இதை செய்வதில்லையா? அதை மீடியா முன்னிறுத்துவது இல்லையா? “பறவை” முனியம்மாவுக்கு ஒருமுறை உடல் நலமின்றி போன போது அதை ஒரு பிரபல பத்திரிகை செய்தியாக படத்துடன் வெளியிட்டது. அதை அறிந்து அன்றைய முதல்வரே உதவினார். ஏன் ”பறவை” முனியம்மாவின் பத்து கலாச்சார சதவீத முக்கியத்துவம் கூட ரமேஷுக்கு இல்லையா?
விருதுகள் அறிவிக்கப்படும் போது சர்ச்சைகள் வரலாம். நாம் மாறுபட்ட கருத்துக்களை விவாதிக்கலாம். ஆனால் அதோடு நம் பொறுப்பு முடிவதில்லை. உண்ணி. ஆர் எனும் மலையாள எழுத்தாளரின் “காளி நடனம்” எனும் சிறுகதை நூல் சுகுமாரன் மொழியாக்கத்தில் தமிழில் வெளியானது. அதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் அவர் ஏதோ ஒரு பரிசோ விருதோ பெற்றிருக்கிறார். அவர் அந்த மெல்லிய தொகுப்புக்கு ராயல்டி எதிர்பார்க்க வேண்டியது கூட இல்லை. சாகித்ய் அகாதெமி பரிசுத் தொகையை விட அதிக பணத்தை உண்ணி. ஆர் இத்தகைய தனி விருதுகள் மூலம் மட்டுமே சம்பாதித்திருப்பார். மலையாளத்தில் அவ்வளவு விருதுகள் உள்ளன.
ஆனால் தமிழில் வழங்கப்படும் கொஞ்ச நஞ்ச விருதுகளை ”அவருக்கு ஏன் தரவில்லை, இவருக்கு தந்தது தவறு” என சர்ச்சை செய்வதிலேயே நாம் காலம் கழிக்கிறோம். நாமே புது விருதுகள், பரிசுகளை ஏன் அறிவிக்க கூடாது? இப்போது உள்ளதற்கு ஐம்பது அல்லது நூறு மடங்கு விருதுகளை தோற்றுவிப்போம். முக்கியமான ஒரு எழுத்தாளனுக்கு ஒரு வருட செலவுக்கு தேவையான பணத்தை இவ்வாறு நல்குவோம். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி எடுத்து செய்யலாம்.
இன்று வரை நம் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் சமகாலத் தமிழுக்கு தம் கொடையாக எண்ணி செய்வது வருடாவருடம் புத்தக சந்தையில் புத்தகங்கள் வாங்குவது தான். சமீபத்தில் பதிப்பகம் ஆரம்பித்த ஒரு நண்பரிடம் இம்முறை உரையாடினேன். “விற்பனை மந்தம் என்கிறார்களே?” அவர் சொன்னார் “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எட்டு நாட்களில் நானே பதிமூன்று லட்சத்துக்கு விற்று விட்டேன்”. தொண்ணூறுகளுக்கு பிறகு உண்மையில் புத்தக விற்பனை அதிகமாகி இருக்கிறது. வாசகர்கள் பதிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்கள். இனி இதே தமிழ் ஆர்வலர்கள், விமர்சகர்கள், முகநூல் பதிவர்கள் இந்த புத்தகங்களுக்கு காரணமான எழுத்தாளர்களையும் வாழ வைப்பது பற்றி யோசிக்க வேண்டும்.

எழுத்தாளனும் மனிதன் தானே?
நன்றி: தீராநதி, ஜூலை 2016