Monday, July 18, 2016

கவலையில்லாமல் எழுதுவது எப்படி?

நண்பரும் எழுத்தாளருமான சுரேஷ் கண்ணன் சமீபத்தில் என்னிடம் எழுத்து சம்மந்தமாய் சில கேள்விகள் எழுப்பினார் அவை கொஞ்சம் அந்தரங்கமான கேள்விகள் எனப் பட்டதால் ஆரம்பத்தில் பதிலெழுத தயங்கினேன். அந்தரங்கம் என்றால் படுக்கையறை என்றெல்லாம் இல்லை. நான் எழுதும் போதான மனநிலை. பொதுவாக என் எழுத்து குறித்து பேச எனக்கு கூச்சம் அதிகம். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு ஏன் விரல் சப்ப பிடிக்கும் என கேட்டு அதுவும் விளக்க துவங்கினால் ரொம்ப தத்துபித்தென பித்துக்குளித்தனமாய் இருக்குமல்லவா! என் எழுத்துக்கான தயாரிப்பு, திட்டங்கள், முஸ்தீபுகள் குறித்த பதில்களூம் அப்படித் தான் அமையும்.

இருந்தாலும் என்னை மதித்து கேட்டிருக்கிறார் என்பதால் சில நாட்கள் என்ன எழுதலாம் என யோசித்தேன். நகம் கடித்தேன். துப்பினேன். முகவாயை மேலும் கீழுமாய் ஆட்டினேன். பிறகு மறந்து விட்டேன். அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வேன். பிறகு மீண்டும் மறதி. இன்று எதேச்சையாய் அவர் பதிவை படிக்க நேர…
சுருக்கமாய் அவர் கேள்விகள் என்ன என முதலில் பார்ப்போம்.
என்னளவில் வார, மாத இதழ்களுக்கு அந்தந்த டெட்லைன்களுக்குள் எழுதுவதென்பது நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயம். சமீபமாக அந்த அழுத்தத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. அது குறித்த அலாரம் மனதில் ஒரு சுமையாக அப்படியே உறைந்து மிரட்டிக் கொண்டேயிருக்கும் சமயங்களில் நடுஇரவில் கூட அது சார்ந்த அலாரம் உள்ளே பலமாக அடித்து பதறியடித்து எழுந்து உட்கார்நது எழுதியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை அச்சு ஊடகத்திற்கு எழுதுவது என்பது ஒரு வாதை. எழுதுவது குறித்த திட்டவட்டமான கருத்துக்களும் வடிவமும் மனதில் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும் அவற்றை சொற்களின் வடிவத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்கி கோர்வையாக அமைப்பது என்பது சள்ளை பிடித்த வேலை. எவ்வளவு தூரம் ஒத்திப் போட முடியுமோ அத்தனை தூரம் ஒத்திப் போடத் தோன்றும்.
இணையத்தில் எழுதும் போது அது நம்முடைய ஏரியா என்பதால் எவ்விதப் பிழைகளையும் பற்றி கவலைப்படாமல் இயல்பாக எழுதி விட முடிகிறது. ஆனால் அச்சு ஊடகம் எனும் போது அது இன்னொருவரின் பொறுப்பில் இருக்கும் பிரதி என்பதால் தன்னிச்சையாகவே ஒரு பதட்டமும் ஒழுங்குணர்வும் உள்ளே வந்து விடுகிறது.”
இந்த நெருக்கடிக்கு எனக்கு உண்டா? உண்டெனில் எப்படி எதிர்கொள்கிறேன்?
முதலில், நானும் சுரேஷ் கண்ணனும் முழுக்க வேறுபட்ட ஆளுமை கொண்டவர்கள். அவர் எதையும் திட்டமிட்டு கராறாய் செய்ய விரும்புகிறவர். கெட்டபெயர் வாங்கக் கூடாது என கவலை கொள்கிறவர். நான் “போனால் போகட்டும் போடா” வகையறா. என் இயல்பே அக்கறையின்மை சார்ந்தது தான்.
நான் இரண்டு பத்திகள் எழுதி வருகிறேன். ஒன்று தினமணியில், இன்னொன்று குமுதத்தில். இரண்டுக்கும் சில மணிநேர தயாரிப்பு அவசியம். இரவில் தூங்கும் முன்னரோ வேறு வேலைகள் நடுவிலோ தயாரித்துக் கொள்வேன். அப்போதே என்ன எழுத வேண்டும் எனும் திட்டம் எனக்குள் இருக்கும். இரண்டு பத்திகளுமே 400-500 வார்த்தைகள் தாம். ஒன்று எழுத சராசரியாய் முக்கால் மணிநேரம் போதும். அதுவும் நிறைய தகவல்களை கோர்க்க வேண்டும் என்பதால். இல்லையென்றால் அதற்கும் பாதி நேரம் போதும். இந்த இரண்டு பத்திகளும் எனக்கு என்றும் நேர நெருக்கடியை அளித்ததில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து எழுதி ஒன்றரை மாதத்துக்கு ஆன கட்டுரைகளை கொடுத்து விடுவேன்.
 அடுத்து உயிர்மைக்கு நான் மாதாமாதம் எழுதும் கட்டுரை. இதைவும் திட்டமிட்டு எழுதுவதில்லை. என் கட்டுரையின் பாணியே மறுத்து எழுதுவது தான். என் இயல்பே எல்லாவற்றையும் சந்தேகிப்பது, சுயமாய் யோசித்து புரிய முயல்வது, எனக்கான ஒரு தனி பார்வையை உருவாக்குவது. யார் சொல்வதையும் நான் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் நான் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளை மறுத்தே நான் பெரும்பாலான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். சிலநேரம் ஒரு நூலிலோ கட்டுரையிலோ பொதுவாய் நாம் புரிந்து கொண்டதற்கு முழுக்க மாறுபட்ட பார்வையை காண்பேன். அதை முன்வைத்து என் தரப்பையும் சேர்த்து எழுதுவேன். விவாத அரங்குகள் கண்டிருப்பீர்கள். ஒருவர் ஆணித்தரமாய் கூறுவதை இன்னொருவர் கொலைவெறியுடன் மறுத்து திரும்ப அடிப்பார். நான் அப்படியான ஒரு ஆள். எனக்கு என ஒரு மாற்றுத்தரப்பு இல்லையெனில் எழுத மாட்டேன். ஒரு நிலைகொண்ட விசயத்தை கலைப்பது தான் என் நோக்கம். அதில் எனக்கு ஒரு திகில் உள்ளது. இதனால் நான் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டு “உன்னை அடித்து காலி பண்ணுறேன் பார்” எனும் மூர்க்கத்துடன் தான் எழுதுவேன். என் உணர்வுநிலை கட்டுரை தொனியில் தெரியாது என்றாலும் இதுவே உண்மை. நிதானமாய் சிந்தித்து சொல் சொல்லாய் கோர்த்து ஒரு கச்சிதமான கட்டுரை எழுதுவது என் விருப்பம் அல்ல.
இதை ஒட்டி என்னை இப்படி விளக்கிக் கொள்கிறேன். நான் ஒரு எழுத்தாளன் அல்ல. நான் ஒரு பெரும் விவாதத்தில் ஒரு சிறிய தரப்பை முன்வைக்கிற ஆள். எல்லாரும் சேர்ந்து சமைக்கிற சாம்பாரில் நான் ஒரு அரைஸ்பூன் காரப்பொடியை போடுகிறேன். அவ்வளவு தான்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே நான் ”எழுத்தாளன் என்றால்” எனும் கட்டுரையில் இது குறித்து எழுதியதாய் நினைவு. எழுத்தாளன் என்பது ஒரு பிரமை என அடிக்கடி எனக்குத் தோன்றும். அது ஏன் என அக்கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.
இந்த நிலைப்பாடு பதற்றமின்றி ஜாலியாய் எழுத எனக்கு உதவுகிறது.
எழுத துவங்கிய காலத்தில் எனக்கு எதை எழுதுவது என்பது குறித்த நெருக்கடி நிச்சயம் இருந்தது. உயிரோசை ஆரம்பிக்கப்பட்ட கட்டத்தில் நான் அதில் வாராவாரம் எழுதினேன். ஆனால் எனக்கு எழுத ஒன்றுமே தோன்றாது. அதற்காய் தேடி தேடி வாசித்து தகவல்கள் தொகுத்து எழுதுவேன். ஆனால் அப்போதும் எழுத துவங்கினால் அதில் மூழ்கி விடுவேன். தப்பான அடவு வைக்கிறோமா என்றெல்லாம் கவலை கொள்ள அவகாசம் இருக்காது. ஆனாலும் எழுதுவதற்கு முன்பான சில நாட்கள் கடன் கேட்பதற்கு முன்பான நிமிடங்கள் போலத் தான் இருக்கும்.
அதை எப்படி கடந்தேன். நான் ஒரு கட்டத்தில் எனக்கு எவை பற்றியெல்லாம் எழுத விருப்பம் அதிகம் என கண்டுகொண்டேன். என் புரிதலில் இருந்து மட்டும் எழுதினேன். எழுத்துக்காய் தனியாய் படிப்பதை நிறுத்தினேன். எதேச்சையாய் நான் வாசிப்பதும் பார்ப்பதும் கேட்பதுமே எனக்கான தூண்டுதல். எழுதி பழகி கொஞ்ச காலத்தில் நம் மனம் பல திசைகளில் தன்னை திறந்து வைக்க துவங்கும். கருத்துக்களும் பார்வைகளும் கொன்றை பூக்கள் போல் கொத்துக் கொத்தாய் நமக்குள் பூத்து தொங்கும். ஒன்றை கிள்ளி எடுத்து வேறு வடிவில் வைப்பதே நம் வேலையாக இருக்கும். சில வாரங்களில் எனக்கு ஒரே நாளில் பத்து கட்டுரைகள் எழுத தூண்டுதலும் ஐடியாக்களும் தோன்றும். நேரம் இல்லாமலே தவிர்த்து விடுவதுண்டு.
சில நாட்களில் ஒரு கணித பார்முலாவை போட்டு பார்ப்பது போல் எழுதுவேன். ஒரு சிறிய கேள்வி தோன்றும். அதை பரிசீலித்துப் பார்க்க எழுதுவேன். என் பாணியில் அதற்கு விடை காண இயலுமா என முயல்வேன். சமீபத்தில் சொர்க்கம் உண்மையில் இருக்கிறதா என்பதற்கு சி.எஸ் லீவிஸ் எனும் விமர்சகரின் பதிலை படித்தேன். எனக்குள் அது சட்டென பல கேள்விகளை தூண்டியது. அவரது பார்வையை வெவ்வேறு தளங்களில் வைத்து உரைகல்லைப் போல் உரசிப் பார்ப்பேன். அது சரியா தவறா என்பதை எழுதும் போக்கிலே கண்டறிய முயல்வேன். அது தான் எழுத்தில் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய உத்வேகம், மனக்கிளர்ச்சி, பறக்கும் உணர்வு.
இப்படி எதை எழுதுவது எனும் ஒரு பிடிப்பு கிடைத்த பின் எனக்கு எழுத்து சார்ந்த பதற்றங்கள் வெகுவாய் குறைந்து விட்டன. இறுதியாய் நானே அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொள்வேன்: “நீ ஒரு எழுத்தாளன் அல்ல.”
 நான் ஒரு புத்திசாலியோ, ஆய்வாளனோ, மேதையோ, அறிவுஜீவியோ அல்ல. என் நண்பர்களுடன் ஒப்பிடுகையில் நான் மிக மிக குறைவாகவே படித்திருக்கிறேன். உலக ஞானமும் எனக்கு மிகக் குறைவே. ஆக இந்த அளவிலான என்னை அறிய விரும்புகிறவர்கள் மட்டுமே என் வாசகர்கள். அவர்களும் என்னைப் போல் எளியவர்களே.
 எழுதும் போது அது எளிய வாசகனுக்கும் புரிய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் கொள்வேன். அது கூட சிலநேரம் என் பிரச்சனை அல்ல என நினைப்பேன். கீர்க்கெகாட் இருத்தலியம் பற்றி என்ன சொல்கிறார் என எல்லா வாசகர்களுக்கும் ஸ்கிரீம் சாப்பிடும் லாவகத்தில் புரிய வைக்க முடியாது. அப்படி முடியாவிட்டால் அது என் குற்றமே. கடவுள் எனக்கு அளித்துள்ள மூளையை வைத்து இவ்வளவு தான் செய்ய முடியும் என சமாதானம் பண்ணிக் கொள்வேன்.
சுருக்கமாய் மீண்டும்:
1)   எதற்கும் அலட்டிக் கொள்ளாதிருப்பது என் இயல்பு
2)   எழுதுவதற்கென யோசிக்க தேவையில்லாதபடி என் மனம் மாறி விட்டது. அது என் எழுத்திற்கான உணர்வுநிலைகளையும் கருத்துக்களையும் அது தந்து கொண்டே இருக்கிறது.
3)   நான் எழுத்தாளன் என என்னை பாவிப்பதில்லை. எனக்கும் அறிவும் புரிதலும் குறைவு என நிலைப்பாட்டில் இருந்து தான் எழுத துவங்குகிறேன்.No comments: