Wednesday, July 6, 2016

பயிற்சியாளர் தேர்வு எனும் ரியாலிட்டி ஷோ

Image result for anil kumble

இப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவரது திறமை, அனுபவம், மதிப்பு ஆகியவற்றை கடந்து கட்சி விசுவாசம் முக்கியமாகி விட்டது. சமீபத்தில் அனில் கும்பிளே இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராய் தேர்வானது ஒரு உதாரணம்.

எழுபது, எண்பதுகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களோ கோடீஸ்வரர்களோ அல்ல. அப்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளால் துச்சமாய் நடத்தப்பட்டார்கள். அப்போது வாரிய தலைவரான ஏ.சி முத்தையாவை விமான நிலையத்தில் ஒரு முக்கிய வீரர் வணங்கவில்லை என்பதற்காய் அவர் அணியில் இருந்து உடனடியாய் நீக்கப்பட்டார் என ஒரு கதை உண்டு. ஆனால் தொண்ணூறுகளுக்கு பிறகு கிரிக்கெட் லாபகரமான தொழில் ஆகியது. நேரடி ஒளிபரப்பு கிரிக்கெட் வீரர்களை பெரும் நட்சத்திரங்கள் ஆகியது. அவர்கள் அதிகாரம் பெற்றனர். ரெண்டாயிரத்தில் கங்குலி இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் தாதாவாக இருந்தார். அப்போது அணியின் பயிற்சியாளர் யார் என்பது அவரது தனி முடிவாக மட்டும் இருந்தது. அவர் ஜான் ரைட்டை கொண்டு வந்தார். ஜான் ரைட் நீங்கிய பின்னர் கங்குலி கிரெக் சாப்பலை பதவிக்கு பரிந்துரைத்தார். பின்னர் சேப்பல் தானும் ஒரு சோட்டா ராஜன் என நிரூபிக்க கங்குலிக்கும் அவருக்கும் வெளிப்படையான மோதல் வெடித்தது. இம்முறை தன் அரசியலில் கங்குலி பலியானார். சேப்பலுக்கு பிறகு கேரி கிர்ஸ்டன், பிளட்சர் ஆகியோர் இந்திய அணியின் மூத்த வீரர்களின் பரிந்துரையின் பேரில் தேர்வானார்கள்.
ரெண்டாயிரத்தின் இறுதியில் ஐ.பி.எல் தோன்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட்டை ஆட்டுவிக்கும் சக்தியாக உருவெடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனுக்கும் சென்னை அணித்தலைவரான தோனிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஸ்ரீனிவாசன் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருந்ததால் தோனி மற்றொரு கங்குலியானார். ஆனால் சூதாட்ட சர்ச்சையின் போது ஸ்ரீனிவாசன் மீது conflict of interest புகார்கள் எழுந்தன. இது தோனியின் நிலைப்பையும் பாதித்தது. விரைவில் ஸ்ரீனிவாசன் தன் வாரிய தலைவர் பொறுப்பை இழந்தார். இத்தோடு தோனியின் அதிகார எல்லையும் சுருங்கியது.
ஸ்ரீனிவாசனை அடுத்து ஜக்மோகன் தால்மியா தலைவரானார். அவர் கிரிக்கெட் வணிக தொடர்புகள் உடையவர்கள் வாரிய நிர்வாக பொறுப்பில் இருக்க கூடாது எனும் விதிமுறையை நடைமுறைப்படுத்தினார். ஐ.பி.எல்- வாரிய பதவி – இந்திய அணி தலைமை எனும் அதிகார வலையை இது அறுத்தது. தால்மியா விரைவில் மரணமடைய அடுத்த நடந்த தேர்தலில் பா.ஜ.க இளம் தலைவரான அனுராக் தாகூர் பதவியேற்றார். இந்திய கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆளுங்கட்சியினர் வெளிப்படையாக நிர்வாகத்தை கைப்பற்றினர்.
ஸ்ரீனிவாசன் ஒரு பெரும் வணிக நிறுவனத்தின் CEO போன்றே இந்திய கிரிக்கெட்டை கையாண்டார். தனக்கு அணுக்கமானவர்களையும் வணிகரீதியாய் பயன் அளிக்கிறவர்களையும் வெளிப்படையாய் ஆதரித்து பதவியில் இருக்க உதவினார். ஆனால் தாகூர் ஒரு தந்திரசாலியான அரசியல்வாதியை போன்று செயல்பட்டார். ஸ்ரீனிவாசனின் சர்வாதிகார பிம்பம் அவருக்கு வினையாகியது என புரிந்து கொண்ட தாகூர் தன்னை ஊடகத்தில் நேர்மையான வெளிப்படையான நிர்வாகியாக காட்டிக் கொண்டார்;. ஆனால் உள்ளுக்குள் அரசியல்வாதியாக இயங்கினார்.
பிளட்சருக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக யாரும் நியமிக்கப் படவில்லை. பதிலுக்கு இதே பொறுப்புகள் கொண்ட இயக்குநர் எனும் பதவி ஏற்படுத்தப்பட்டு ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் கீழ் இந்திய டெஸ்ட் அணி இலங்கையில் சிறப்பாக ஆடி டெஸ்ட் போட்டி வென்றது. இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியை ஓட ஓட விரட்டியது. ஆனால் சாஸ்திரிக்கு டெஸ்ட் அணித்தலைவர் கோலியுடன் உள்ள இணக்கம் ஒருநாள் அணித்தலைவர் தோனியுடன் இல்லை. டெஸ்டில் சிறப்பாய் ஆடும் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி மண்ணைக் கவ்வியது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்தது. மேலும் ரவி சாஸ்திரி ஸ்ரீனிவாசனின் ஆதரவாளராக இருப்பது இப்போதுள்ள வாரிய தலைமையை உறுத்தியது. இதனால் சாஸ்திரி சிறப்பாய் செயல்பட்டிருந்தாலும் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.
 இந்த முறை வாரிய தலைவர் தாகூர் பயிற்சியாளர் தேர்வை யார் இடையூறும் இல்லாமல் மிக நேர்மையாய் நடத்தப் போவதாய் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். தேர்வின் ஒவ்வொரு கட்டமும் மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. முதலில் 57 பேர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். சச்சின், கங்குலி, லஷ்மண் உள்ளிட்ட முன்னாள் நட்சத்திரங்கள் கொண்ட ஒரு பரிந்துரை குழுவிடம் 57 பேர்களில் இருந்து தேர்வான 21 பேர்கள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது. இதில் சந்தீப் பட்டேல், ஸ்டுவர்ட் லா, பிரவீன் ஆம்ரே, வெங்கடேஷ் பிரசாத், போன்ற அனுபவமிக்கவர்கள் இருந்தார்கள். குறைந்தபட்சம் பயிற்சியாளராக இருந்த அனுபவம் வேண்டும் என்பது வாரியத்தின் நிபந்தனை. ஆனால் இத்தகுதி இல்லாத கும்பிளே நடுவில் களத்தில் குதித்தார். கும்பிளேவுக்கும் சாஸ்திரிக்கும் தான் போட்டி, பரிந்து குழுவினர் கும்பிளேவுடன் ஒரே அணியில் ஆடிவர்கள் என்பதால் அவருக்கே வாய்ப்பு என ஊடகங்கள் பேசினா. ஒவ்வொரு நாளும் இப்படி தகவல்கள் வர பயிற்சியாளர் தேர்வு ஒரு ரியாலிட்டி ஷோ போல மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இறுதியாய் போட்டியில் வெல்லக் கூடும் என பலரும் பேசினார்கள், எழுதினார்கள்.
பரிந்துரைக்குழுவினர் ஒரு நபரையும் வாரியம் மற்றொருவரையும் பரிந்துரைப்பதாய் மற்றொரு செய்தி வந்தது. வாரியம் சாஸ்திரியை விரும்பவில்லை என்பது வெளிப்படை. அப்படி என்றால் வாரியத்தின் ஆள் யார்? இப்போது தான் இத்தேர்வின் அரசியல் கோணம் அலசப்பட்டது.
 விண்ணப்பித்துள்ளவர்களில் கும்பிளே சில வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கக் கூடும் என செய்தி வந்தது நினைவிருக்கலாம். அதன் படி கும்பிளே பயிற்சியாளர் ஆவதையே தாகூர் விரும்புவார் என பேசப்பட்டது. அப்படியே பலித்தது.
கும்பிளேவுக்கு பயிற்சியாளர் அனுபவம் இல்லையென்றாலும் அவர் தகுதியானவர் தான். ஆனால் அவர் கூட அரசியல் செல்வாக்கு மூலம் மட்டுமே பதவியை அடைய முடிந்தது என்பது துரதிஷ்டம்.
அனுபவமே பிரதானம் என்றால் ஆம்ரே, சாஸ்திரி, ஸ்டுவர்ட் லா ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதிக் கட்டத்தில் சாஸ்திரிக்கும் கும்பிளேவுக்குமே போட்டி என்ற செய்தி வந்த போது கும்பிளே தான் பயிற்சியாளர் என்பது எளிதில் ஊகிக்கக் கூடியதாகியது. இதை முன்கூட்டியே உணர்ந்து ரவி சாஸ்திரி நேர்முகத்தேர்வுக்கு வராமல் வெளிநாட்டில் இருந்து ஸ்கைப் மூலம் பரிந்துரைக்குழுவினருடன் உரையாடினார். முடிவு வெளியானதும் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாய் அவர் பேட்டியளித்தார்.
அனுராக் தாகூர் தன் கட்சி சார்புடையவரை பயிற்சியாளராக்க வேண்டும் என விரும்பியிருந்தால் அதை நேரடியாய் செய்திருக்க வேண்டும். எதற்கு 57 பேர்களை விண்ணப்பிக்க வைத்து, சச்சின், கங்குலி, லஷ்மணை கொண்டு தேர்ந்தெடுக்க சொல்லி தன்னை நாணயஸ்தனாய் காட்டி இவ்வளவு பெரிய டிராமாவை நடத்த வேண்டும்?
இந்திய அணி தொடர்பான தேர்வு என்பது வாரிய அரசியலில் ஆரம்பித்து, அணித்தலைவரின் அதிகாரத்துக்கு மட்டும் உட்பட்டு, பின்னர் இப்போது ஆளுங்கட்சி சார்பு கொண்டதாய் மாறி வந்துள்ளது. இந்த பாணி தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்திய அணித் தலைவர் தேர்வு கூட மாநில ஆளுநர் தேர்வு போல் ஆகி விடும் ஆபத்து உள்ளது.

நன்றி: கல்கி

1 comment:

Srimalaiyappanb sriram said...

உண்மைதான்