விஜய மகேந்திரன்எல்லா வகுப்பிலும் ஒரு துடிப்பான, காரிய சாமர்த்தியம் கொண்ட, பழகுவதற்கு இனிதான மாணவன் இருப்பான். ஆசிரியர் கேட்கும் முன்னரே “இதை செய்யட்டுமா, அதை இப்படி மாற்றலாமா?” என முன்வருவான். எந்த முயற்சியையும் எடுப்பதற்கும் ஆசிரியர் அவனையே நம்பி இருப்பார். பிற மாணவர்கள் சோம்பி உட்கார்ந்திருந்தாலும் இவன் ஒருவன் தரும் நம்பிக்கையை ஆசிரியர் நம்பி இருப்பார். நம் இலக்கிய உலகம் ஒரு வகுப்பறை என்றால் விஜய மகேந்திரன் தான் அந்த மாணவர்.

சமூகமாக்கல், நண்பர்களை மதித்து அன்பு பாராட்டுவது, நெட்வொர்க் செய்வது ஆகிய விசயங்களில் என்னைப் போன்றோருக்கு அவரிடம் கற்க நிறைய உள்ளது. இன்று இவை அனைவருக்கும் மிகத்தேவையான திறன்களாக, பண்புகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் விஜய்க்கு இயல்பாகவே நண்பர்களிடம் உரையாடவும் புது உறவுகளை ஏற்படுத்தவும் பிடிக்கிறது. அவர் அதில் தனி உற்சாகம் கொள்கிறார்.
இருவரும் முழுக்க வேறுபட்ட ஆளுமைகள் என்றாலும், மனுஷ்யபுத்திரனிடமும் நான் இதே நண்பர்களை பேணும் இயல்பை பார்க்கிறேன். இது ஒரு பிறவி இயல்பு. இத்தகையோர் பகைமையை, விமர்சனங்களை, துரோகங்களைக் கண்டு உடனடியாக கோபப்படுவார்கள். ஆனால் விரைவில் மறந்து விட்டு மீண்டும் நட்பு பாலம் அமைக்க தயாராகி விடுவார்கள். நீண்ட நாள் பகையை நெஞ்சில் புகைய விட முயலவே மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்களை விட ”நட்பு” தான் முக்கியம். அதாவது எல்லா நண்பர்களிடமும் ஒரே ஆளைத் தான் பார்ப்பார்கள். எல்லா நண்பர்களும் இவர்களுக்கு நட்பின் மகிழ்ச்சியின் சாரம். கடவுள் என்பது சிலையில் இல்லை என்பது போன்ற ஒரு அத்வைத நிலை தான் இது.
இவர்களுக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் மிகச்சில நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருவரிடம் நட்பை விட “நண்பனையே” காண்பார்கள். அவர்களுக்கு நட்பை விட ஒரு நண்பனின் முழுமையான் அர்ப்பணிப்பு முக்கியம். “காதல் கொண்டேன்” தனுஷ் போலவே இருப்பார்கள். நண்பர்களுக்கு “தளபதி” ரஜினி போன்றும் இருப்பார்கள். இறுக்கம் மிக்க உறுதியான நண்பர்களே இவர்களின் இலக்கு.
பொதுவாக நம் இலக்கியவாதிகளில் கணிசமானோர் இரண்டாம் வகையினர். அல்லது இரண்டுக்கும் இடைப்பவர்கள். அதனாலே இங்கு ஒரு வெடிமருந்து வாசனை எப்போதும் வீசுகிறது. ஐம்பது இலக்கியவாதிகள் கூடினாலும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டும் முள் தைத்த சொற்களை பரிமாறிக் கொண்டு திரிகிறார்கள். இச்சூழலில் விஜய மகேந்திரன் மாதிரி முதல் வகையினர் உறவாடலை லகுவாக்கவும் எழுத்தாளர்கள் இணைந்து செயல்படவும் உதவுகிறார்கள். விநாயக முருகனுடன் இணைந்து அவர் நடத்திய “செவ்வி” அமைப்பின் கூட்டங்கள் ஒரு நல்ல உதாரணம்.
விஜய மகேந்திரன் ஒரு நல்ல சிறுகதையாளர். அவருக்கு அந்த வடிவம் இயல்பிலேயே கைவருகிறது. ”நகரத்திற்கு வெளியே” தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் உள்ளன. அதே போல் அவர் தொகுத்த “இருள் விலகும் கதைகள்” ஒரு முக்கியமான முயற்சி. அவர் நிறைய வாசிக்கக் கூடியவரும் தான். நான் அவருடன் ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போது ஏதாவது ஒரு புது நூலை எனக்கு அறிமுகம் செய்வார். அதுவும் கராறான ஒரு மதிப்பீட்டுடன் அதைப் பற்றி குறிப்பிடுவார்.
அவருக்கு கொஞ்சம் எழுத்து சோம்பல் உண்டு. அதை அவர் கைவிட வேண்டும் என இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.

விஜய மகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். என் அன்பும் வாழ்த்துக்களும். கொண்டாடுவோம் நண்பா!

Comments