Monday, July 25, 2016

கபாலியும் காந்தியும்

எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய அரசியல் வெற்றிக்கு காரணம் சினிமா பிம்பத்தையும் தனிப்பட்ட அடையாளத்தையும் இணைத்தது தான் என பலரும் பேசி இருக்கிறார்கள். ஒரு அரசியல்வாதி வீரதீரமாய், உணர்ச்சிப்பிழம்பாய், நீதிப் போராளியாய் உரை நிகழ்த்தும் போது அந்த பேச்சு தான் அவர் ஆளுமை என நம் மனம் உடனே நம்பி விடுகிறது. இது மனித மனத்தின் ஒரு பிரத்யேக குணம். இருட்டான இடத்தில் மாட்டிக் கொள்கிறோம். அங்கு ஒரு தப்பி வந்த புலி பதுங்கி இருப்பதாய் சொல்கிறார்கள். பின்னால் லேசாய் ஒரு ஒலி. உடனே அங்கு புலி வந்து விட்டதாய் பதறுவோம். நின்ற இடத்திலே தாவுவோம். உண்மையில் அங்கு ஒரு சருகு அசைந்திருக்கும்.

இப்படித் தான் ஆதி மனிதன் பல ஆபத்துகளில் இருந்து தப்பிப் பிழைத்தான். நமக்கும் இந்த உளவியல் உள்ளது. ஒரு பிம்பத்தையும் ஆளையும் சட்டென ஒன்றாய் இணைத்து விடுவோம். கடவுள் பற்றி பேசின சாமியார்களை எல்லாம் நாம் கடவுள் என்றே நம்பி சரணடையவில்லையா? தொடர்ந்து அறிவுஜீவிகளின் மேற்கோள்கள் மற்றும் புத்தகங்கள் பற்றி ஒருவர் பேசினால் அவரையும் ஒரு அறிவுஜீவி, மேதை என நம்பி விட மாட்டோமா? ஒரு கூட்டத்தில் நீங்கள் ஒருவரை பார்த்து “வணக்கம் தோழர்” என வணங்கினால் அவர் உங்களை ஒரு இடதுசாரி என உடனே நம்பி விடுவதில்லையா? அடுத்து பேச்சில் மோடி அரசை கண்டித்து சில சொற்கள் கூறினால் நீங்கள் நிச்சயம் இடதுசாரி தான் என முடிவு கட்டி விடுவார்கள்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் யாரை பார்த்தாலும் தோழர் என்பார். மோடியை கடுமையாய் விமர்சிப்பார். ஆனால் அவர் அதிமுக நிர்வாகி. அவர் வெள்ளை வேட்டி சட்டையில், பையில் அம்மா போட்டோவுடன் தோன்றினால் அதிமுக என்றும் கேஷுவல்ஸில் திரிந்தால் இடதுசாரி.
எம்.ஜி.ஆருக்கு நடந்தது தான் இப்போது ரஜினிக்கும் கபாலியில் நடக்கிறது. தலித் தொழிலாளர்களின் பாதுகாவலர் கபாலி. கபாலி = ரஜினி. அதனால் ரஜினி தான் தலித் போராளி என நம் மனம் நம்பி விட்டது. இதுவரை அவர் மீது இருந்த இந்துத்துவா பாதுகாவலர் எனும் பிம்பம் பஞ்சாக பறந்து விட்டது. தத்துவத்தில் இதை logical fallacy என்பார்கள். அ. மழை பெய்தால் தெரு ஈரமாக இருக்கும்
ஆ. தெரு ஈரமாக இருக்கிறது
இ. அப்படி என்றால் மழை பெய்திருக்கிறது.
ஒரு தண்ணீர் லாரி பழுதாகி தண்ணீர் வீணாய் கொட்டியதில் தெரு ஈரமாகி இருக்கலாமே? நம் மனம் உடனே இப்படி யோசிக்காது.
தினமணி விமர்சனத்தில் காந்தியின் கதராடையையும் கபாலி எனும் தாதா அணியும் கோட்சூட்டையும் எப்படி ஒப்பிடலாம் என கேட்கிறார்கள். தினமணிக்கு கபாலி = கேங்ஸ்டர். நம்மில் சிலருக்கு கபாலி = தலித் காவலர். இந்த முரண்பாடு தான் தினமணியை சாதிய காழ்ப்புணர்வு மிக்க பத்திரிகை என சித்தரிக்க வைக்கிறது. விமர்சனம் எழுதியவருக்கு கபாலி = அம்பேத்கர் என ஏனோ தோன்றவில்லை. இதில் சாதிய காழ்ப்புணர்வு வெளிப்படுவதாய் நாம் அவ்வளவு அவசரமாய் முடிவு கட்ட அவசியமில்லை. விமர்சகர் காந்தியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பீட்டீர்கள் எனக் கேட்கவில்லை. 25 வருடம் சிறை சென்று வந்த ஒரு கேங்ஸ்டருடன் ஏன் காந்தியை ஒப்பிடுகிறீர்கள் எனக் கேட்கிறார். ஒரு கேங்ஸ்டர் என்ன தான் தலித் போராளி என்றாலும் அவர் அனுபவிக்கும் பணமும் ஆயுத பலமும் சட்டவிரோத முறையில் ஈட்டப்பட்டதல்லவா? நாம் இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளவில்லை. நம் மனதில் கபாலி = கேங்ஸ்டர் அல்ல. கபாலி = அம்பேத்கர். ஆக கபாலியை கேள்வி கேட்டதை நாம் அம்பேத்கரையே
விமர்சித்ததாய் புரிந்து கொண்டு கொதித்து எழுந்து விட்டோம்.
இந்த படத்தில் வசனங்களும் பாத்திர அமைப்பும் பொருந்தாமல் நிற்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஏன் ரவிக்குமாரும் கூட சொல்கிறார். படத்தின் உருவாக்கத்தில் தனக்கு உடன்பாடில்லை என ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அதிருப்தியாளர் = தலித் விரோதிக்ள் என்றால், ரவிக்குமார் + ஸ்டாலின் ராஜாங்கம் = தலித் துரோகிகளா?
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த அமளியில் தலித் ஆதரவாளர்களாக தம்மை காட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளது தான். யாராவது கபாலியை விமர்சித்தால் “அடே சாதிய வெறியனே” என நான்கு பேர் வந்து பின்னூட்டமிடுகிறார்கள். இவர்களின் பின்னணியை தேடினால் இவர்களுக்கும் தலித்தியத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
தலித்தியம் குறித்து பலமடங்கு தீவிரத்துடன் விவாதித்து எழுதியவர் ரவிக்குமார். தமிழ் செவ்வியலக்கியம், வரலாறு, இந்து மற்றும் நாட்டார் தெய்வங்கள், வழிபாட்டு வழக்கங்களின் பௌத்த பின்னணி குறித்து விரிவாக எழுதிய ஆதி சிந்தனையாளர் / ஆய்வாளர் அயோத்திதாச பண்டிதர். தமிழில் இப்போது இவர்களை விமர்சித்து கூட எழுதி விடலாம். ஆனால் ரஞ்சித் இவர்களை தாண்டி பல மடங்கு உயரத்தில் தலித்திய ஐகானாக மாறி விட்டார். அவர் படம் சரியாக வரவில்லை என எழுதினால் அது தலித்தியத்தையே கேள்வி கேட்டதாய் பார்க்கப் படுகிறது. ரஞ்சித் தலித் வாழ்வியலை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். அவரது அட்டக்கத்தி மிக முக்கியமான படம். ஆனால் மேற்சொன்ன இருவரின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் ரஞ்சித் மிகச்சின்ன ஒரு காரியத்தை தான் செய்திருக்கிறார். அவர் சினிமாவில் செயல்பட்டிருக்கிறார் என்பது தான் வித்தியாசம். இன்னும் கொஞ்ச நாளில் ரஞ்சித் = அம்பேத்கர் என மக்கள் நம்பி விடுவார்கள்.
(இதை படித்து விட்டு சில ரஜினி ரசிகர்கள் = தலித்திய சிந்தனையாளர்கள் என்னை - கபாலியை கேள்வி கேட்பவன் = சாதி வெறியாளன் = அபிலாஷ் என ஒரு முடிவுக்கு வரலாம். உனக்கு வயிறு எரியுதுன்னா நான் கோட்டு போடுவேண்டா என்றும் பின்னூட்ட்டம் எழுதலாம். கூட்டத்தில் யார் மாட்டினாலும் நாலு மொத்து மொத்தி விட வேண்டும். அது தான் கொள்கை)

No comments: