Saturday, July 23, 2016

கபாலி – இலக்கற்ற சினிமா

Image result for kabali ranjith

கபாலி பற்றி பேசுவோர் மூன்று முகாம்களாய் பிரிந்துள்ளார்கள். ஒரு முகாம், ரஜினி என்ன செய்தாலும் அற்புதம், அவருக்காகவே பார்க்கலாம் என்கிறது. இன்னொன்று ரஞ்சித்தின் படத்தை விமர்சிக்கிறவர்கள் சாதி வெறியர்கள், தலித் வெறுப்பாளர்கள் என்கிறது. இறுதியாய் எளிய சினிமா ரசிகர்களின் முகாம். அவர்களுக்கு இப்படம் ஏமாற்றமே. அந்த கோபத்தை பகடியாய் வெளிப்படுத்துகிறார்கள். அந்த பகடியில் அவர்கள் ரஜினி மற்றும் ரஞ்சித் மீது எவ்வளவு எதிர்பார்ப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இந்த படத்தை அவர்களால் ஒரு சாதாரண வணிகப் படத்தின் தோல்வி என பார்க்க இயலவில்லை.


கபாலியில் ஏமாற்றமடைந்தவர்களுக்கு அதன் திரைக்கதை ஏன் முழுபோதையில் நடுசாலையில் நடந்து போகிறவர்களைப் போல உள்ளது எனப் புரியவில்லை. திரைக்கதை தான் அதிகமாய் விமர்சிக்கப்படுகிறது. ஏன் இந்த படத்தை வேறுமாதிரி எடுத்திருக்கக் கூடாது என தோன்றுகிறது. எந்தெந்த காட்சிகள் எல்லாம் தேவையற்றவை என விமர்சகர்களால் பட்டியலிட முடியும். இது குறித்து நிறைய எழுதப்பட்டு விட்டது என்பதால் நான் அந்த பக்கம் போகவில்லை.
ஆனாலும் தமிழில் திரைக்கதைக்கு உள்ள இடம் பற்றி சுருக்கமாய் ஒரு விசயம். மலையாளத்தில் திரைகதை ஆசிரியர் தான் தயாரிப்பாளருக்கே கதை சொல்வாராம். படத்தயாரிப்புக்கு முன்னரே திரைக்கதை தயாராகி விடும். ஆனால் இங்கு நமக்கு அந்த வழக்கம் இல்லை. நண்பரும் இயக்குநருமான ராம் தன் முதல் படம் எடுக்குமுன்னர் முழுமையாக எழுதப்பட்ட திரைக்கதைகளை வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழில் நடைமுறையில் இது செல்லுபடியாகாது என நிறுத்தி விட்டார். ஏனென்றால் இங்கு நீங்கள் எழுதியது படி படமெடுக்க முடியாது. நிறைய இடையூறுகள், நடைமுறை சிக்கல்கள் வரும். ஒரு இயக்குநருக்கு தன் கதை எப்படி நகர வேண்டும், மையபாத்திரங்களின் இயல்பு என்ன என்பது பற்றி ஒரு புரிதல் இருந்தால் போதும். படப்பிடிப்பின் போதே காட்சியையும் வசனங்களையும் முடிவு செய்து விடலாம். அப்போது அந்த நாளின் படப்பிடிப்பில் திரைக்கலைஞர்களும் நடிகர்களும் அந்த காட்சிக்கு எப்படி தம்மை வெளிப்படுத்துகிறார்களோ அதுவே அக்காட்சியின் சிறப்பை தீர்மானிக்கும். “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் கூட மிஷ்கின் சில முக்கியமான காட்சிகளில் வசனங்களில் தன் மனம் போன போக்கில் சொன்னதாகவே திரைகதை நூலில் குறிப்பிடுகிறார்.
 ஒரு கச்சிதமான திரைக்கதை கூட சரியான ஒருங்கிணைப்பு, கலைஞர்களின் பங்களிப்பு, படைப்பூக்கமான நிகழ்த்துதல் இல்லாவிட்டால் படுத்து விடும். இலக்கிய படைப்பில் போன்றே சினிமாவிலும் அது உருவாகும் போது ஒரு மாயம் நிகழ வேண்டும். அதனால் தான் நாம் ஒரு படம் ஏமாற்றமளிக்கும் போது இயக்குநரை வெளுத்து தொங்கப் போடாமல் அவர் தரப்பில் இருந்தும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஏன் ஒரு நல்ல நாவலாசிரியர் மட்டமான கதையை எழுதுவதில்லையா? அற்புதமான கவிஞன் தட்டையான கவிதையை எழுதவதில்லையா?
கபாலி படத்தின் அடிப்படை பிரச்சனை இயக்குநருக்கு கதையின் நோக்கம் குறித்த தெளிவின்மை தான். ஒரு கதையை தேர்ந்தெடுக்கும் போது ஏன் இதை சொல்கிறோம் என்கிற கேள்வி முக்கியம். கபாலியில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத எதை சொல்லப் போகிறோம் என்ற கேள்வியை ரஞ்சித் கேட்டுப் பார்த்து அவருக்கு திருப்தியான பதில் கிடைத்தால் அதுவே அவர் படத்தின் ஒற்றை வரியாக இருக்கும். இது ஒரு தாதாவின் பழிவாங்கும் கதையா, ஒரு வயதான தாதா தன் குடும்பத்துடன் இணைவது பற்றின கதையா அல்லது மலேசிய தலித் தமிழர்களின் ஒடுக்குமுறை வரலாற்றை பேசும் படமா? இதில் ஒன்றை தேர்ந்து அதில் மிகப்புதிதாய் ஒன்றை சொல்ல முயன்றிருக்கலாம். ரஜினி படம் என்பதால் ஒரு தேய்வழக்கான சட்டகத்தில் கூட படத்தை எடுக்கலாம். ஆனால் ஒரு புதிய அம்சம் முக்கியம். ஆனால் கபாலி துவக்கத்தில் இருந்தே வழிதவறிய குழந்தை போல் அலைகிறது.
ஒரு திரைக்கதையில் தொய்வு இருக்கும், லாஜிக் சொதப்பலும் இருக்கும். ஆனால் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு புதிய கதைக்களனோ வாழ்க்கை சிக்கலோ உணர்வு நாடகமோ உண்டென்றால் அவர்கள் குறைகளை கவனிக்க மாட்டார்கள். “அட்டக்கத்தி” மற்றும் “மெட்ராஸில்” அப்படியான புதுமை இருந்தது. தான் எந்த வாழ்க்கையை, பிரச்சனையை காட்டப் போகிறோம் எனும் தெளிவு ரஞ்சித்துக்கு இருந்தது. அது சின்ன சின்ன குறைகளை கடந்து படத்தின் மீது ஒரு பிடிப்பை ரஞ்சித்துக்கு கொடுத்தது. கச்சிதமான திரைகதை அல்ல, அந்த வாழ்க்கை மீது இருந்த பிடிப்பும் தெளிவும் ரஞ்சித்துக்கு கை கொடுத்தது. ஆனால் கபாலியில் அந்த தன்னம்பிக்கையை காணவில்லை; படம் அவர் கட்டுப்பாட்டில் இல்லை.
அடுத்து மைய பாத்திரத்தின் பிரதான குணாதசியம். ரஜினி படங்கள் அவரது பாத்திரத்தின் போக்கு பற்றியவை தான். ”பாட்ஷா” இரட்டை குணம் கொண்ட ஒரு தாதாவின் கதை. படம் முழுக்க அவர் எப்படி இருவேறான சுபாவங்கள் கொண்டவராய், அவற்றின் இடையே தடுமாறுகிறவார் இருக்கிறார் என பேசுகிறது. இந்த ஒற்றை வரியில் இருந்து அப்படம் விலகுவதே இல்லை. ”சிவாஜியிலும்” மையபாத்திரத்தின் குணாதசியம் தான் கதையின் மையமும். சமூகத்துக்கு தொண்டு செய்ய இந்தியா வரும் ஒரு என்.ஆர்.ஐ. பாதி படம் அவன் இங்குள்ள ஊழலோடும் சமூக சீரழிவோடும் மோதி படும் பாடுகள். எந்த காட்சியிலும் தனியாக சமூக பிரச்சனை பேசப்படாது. அவனது தொண்டு செய்யும் குணாதசியத்தின் பார்வையில் இருந்து தான் சமூகம் காட்டப்படுகிறது. மறுபாதி அவன் ஒரு ராபின்ஹுட்டாக, மொட்டை பாஸாக, மாறும் போது அந்த புது குணாதசியம் வழியாக மீண்டும் அதே சமூக பிரச்சனைகளை ஷங்கர் காட்டுகிறார். அப்படம் முழுக்க இந்த இரண்டு குணநலன்கள் தாம் ஆதிக்கம் செலுத்தும். ”தளபதியில்” இது நட்பின் விசுவாசமாகவும், “அண்ணாமலையில்” விசுவாசத்தின் ஏமாற்றமாகவும் வரும், இப்படி தமிழில் வணிக வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
 கபாலியின் ரஜினி பாத்திரத்தின் அந்த அடிப்படை குணாதசியம் என்ன? எனக்கு சத்தியமாய் தெரியவில்லை. ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுப்பவர், அநீதியை எதிர்ப்பவர், வன்முறையை பிரயோகிப்பவர் என்பது தான் அந்த குணநலன் என்றால் அது படத்தில் தீர்க்கமாய் வெளிப்படவில்லை. படம் முழுக்க கபாலி எந்த பிரதான குணநலனும் அற்ற, ஒரு களைத்துப் போன தாதாவாக தோன்றுகிறார். இது படத்தை வெகுவாய் தொய்வடைய வைக்கிறது.

வணிக சினிமாவும் படைப்பு முயற்சி தான். அது திருப்தியாய் ஈடேறவில்லை என்றால் அது ஒரு சமூக குற்றம அல்ல. பரவாயில்லை ரஞ்சித்! 

1 comment:

NewWorldOrder said...

Kabali is fantastic movie. I disagree with ur comments. Watch more to understand the movie concept