Wednesday, July 20, 2016

நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதன் சிக்கல்


சிதைவான உடல்களைப் பேசுவதில் ரெண்டாயிரத்துக்கு பிறகான நவீன எழுத்தாளர்களுக்கு தனி விருப்பம் உள்ளது. வாழ்வின் சிதைவுற்ற தன்மைக்கு, சிதறிப் போன மனதுக்கு குறியீடாக நவீன புனைவுகளில் சிதைவுற்ற உடல் அடிக்கடி வருகிறது. ஆனால் சிதைவுற்ற உடலை உடலாக மட்டுமே காண்கிற, அதாவது ஒரு தனி இருப்பாக சித்தரிக்கிற, படைப்புகள் நம்மிடைய பெரும்பாலும் இல்லை. இது நவீன இலக்கியத்தின் ஒரு முக்கிய சிக்கல். உடல் குறைகள் எப்போதும் அகத்தின் சிக்கலை காட்டும்படியாகவே இருக்கும். இதன் எதிர்விளைவு என்னவென்றால் உடல் குறை பற்றி சமூகத்தில் இருக்கும் தேய்வழக்குகளை இவை உறுதிப்படுத்தி விடுகின்றன.
 மேற்குலகில் இருந்து ஒரு உதாரணம் பார்ப்போம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான “மெக்பெத்” அதிகார ஆசையினால் கொலை தாண்டவம் ஆடும் ஒரு தளபதியின் கதை. தளபதி மெக்பத் இயல்பில் நல்லவன். அவனுக்குள் மன்னன் ஆகும் பேராசையை தூண்டி விடுகிறாள் அவனது மனைவி. அதிகார இச்சை அவனுக்குள் விஷமாக இறங்குகிறது. ஆனால் அப்போதும் அவன் குற்றவுணர்வால் தடுமாறுகிறான். அப்போதெல்லாம் மனைவி அவனைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி மன்னர் உட்பட பலரை கொல்லும்படித் தூண்டுகிறாள். அவள் அற உணர்வு அற்றவளாய் காட்டப்படுகிறாள். அவளது ஒரே மோகம் அரியணையில் அமர்வது. ஷேக்ஸ்பியர் அவளுக்கு அளிக்கும் முக்கிய அடையாளம் அவள் மலடி என்பது.

 மலடு அவளை ஆண்மை மிக்கவள் ஆக்கிறது. மன்னரைக் கொல்ல கணவன் தயங்கும் போது அவள் சொல்கிறாள் “என் தேவைகள் நிறைவேற வேண்டுமென்றால் என் மாரில் பாலுறிஞ்சும் மதலையை பறித்து சுவற்றில் அடித்துக் கொல்லவும் தயங்க மாட்டேன்”. ஷேக்ஸ்பியர் எப்படி மலட்டுத்தன்மை எனும் ஒரு உடல் குறை கொண்டு முதலில் அவளது பெண்மையை ரத்து செய்கிறார், அடுத்து அவளை அறவுணர்வு இல்லாத ஆண்மை மிக்கவளாக காட்டுகிறார் என கவனியுங்கள். இப்பாத்திரம் மிக மிக பிரபலமானது. இதை மேடையில் காணும் கோடானுகோடி மனங்களுக்கு ”மலடிகள்” கொடிய மனம் கொண்டவர்கள் எனும் எண்ணம் வலுப்படும். இந்த எண்ணம் ஏற்கனவே சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது தான். இதை உடல் குறையுடன் இணைத்து ஷேக்ஸ்பியர் மேலும் வலியுறுத்தும் போது இரண்டு சிக்கல்கள் ஏற்படுகின்றன:
1)   பொதுப்புத்தியின் செண்டிமெண்டுகளை அவர் சுரண்டி தனக்கேற்றபடி பயன்படுத்துகிறார்.
2)   உடல் குறையை அதுவாகவே பார்க்க மறுக்கிறார். கருத்தரிக்க இயலாத ஒரு பெண்ணின் அக உலகம் சித்தரிக்கப்படாமல் போகிறது. இது ஒரு முக்கிய பிரச்சனை.
இனி தமிழ் நவீன இலக்கியத்தில் உடல் குறைகள் சித்தரிக்கப்படும் விதங்களைப் பார்ப்போம். சுவாரஸ்யமாய் இப்படைப்புகள அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களின் நெருக்கடியை, துயரங்களை பதிவு செய்பவை. ஆனால் இவை ஒடுக்குதலின் வாதையை பேசுவதற்காய் சிதைவுற்ற உடலை “ஒடுக்குகின்றன”, தமக்கேற்றபடி ஒரு கருவியாய் பயன்படுத்துகின்றன.
நாவல்கள்:
ஆறாவடு
சயந்தனின் நாவல் ”ஆறாவடுவில்” புலிகள் அமைப்பின் போராளியான அமுதன் ஆரம்பத்தில் ஒரு லட்சியவாதியாக வருகிறான். ஆனால் போகப் போக போரின் அபத்தம் அவனை நீர்த்துப் போகச் செய்கிறது. இக்கட்டத்தில் அவன் போரில் தன் காலை இழக்கிறான். செயற்கை கால் மாட்டி நடக்க பயில்கிறான். அவன் புலிகளின் மீடியா பிரிவில் பணியாற்றுகிறான். மெல்ல மெல்ல புலிகளுக்கு எதிரான சிந்தனைகள் அவனுக்குள் முளை விடுகின்றன. இந்நாவல் ஈழ விடுதலை லட்சியவாதத்தின் மீதான பகடி என நினைவில் கொள்ள வேண்டும். ஆக “காலை” இழப்பது லட்சியவாதம் எனும் போதையை இழப்பதாகிறது. “கால்” லட்சியவாதத்தின் குறியீடு என்றால் “செயற்கைக் கால்” நடைமுறை விவேகத்தின் குறியீடு. அமுதன் ஈழத்தில் இருந்து வெளியேறி வெளிநாட்டுக்கு குடியேறுவதற்காய் கப்பலில் செல்கையில் கப்பல் கவிழ கடலில் மூழ்கி இறக்கிறான். அவனது செயற்கை கால் ஒரு கடற்கரையில் ஒதுங்குகிறது. அங்கு எரித்தீரிய விடுதலைப் போரில் தன் காலை இழந்த ஒரு வயதான போராளி இருக்கிறான். அவன் தேசவிடுதலை என்பது வெறும் கனவு என ”தெளிந்து” விட்டவன். நடைமுறையில் அவன் இயங்க அவனுக்கு ஒரு நல்ல செயற்கைக் கால் வேண்டும். அதற்காகவே ஏங்குகிறான். இறந்த அமுதனின் செயற்கைக் கால் அவனுக்கு கிடைக்க ஜென்ம சாபல்யம் அடைந்ததாய் உணர்கிறான். புலிகளின் லட்சியவாதத்தின் பழுதுகளை பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு நுட்பமான கருவி மட்டுமே இங்கு உடல் ஊனம்.
இந்நாவலில் தேவி என்றொரு மனம் பேதலித்த பெண் வருகிறாள். இந்திய அமைதிப் படையினர் அவளை பலாத்காரம் செய்கிறார்கள். அவள் கர்ப்பமாக அவள் வயிற்றில் சுட்டுக் கொல்கிறார்கள்.
 நிலாமதி இயல்புக்கு மாறாய் பருத்த மார்புகள் கொண்டவள். அதனாலே ஊரில் அவளை “குண்டுப்பெண்” என கேலி செய்கிறார்கள். அவள் குடும்பம் புலிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அவ்வாறு புலிகளின் குண்டுகள் அவள் வீட்டில் பதுக்கப்படுகின்றன. ஒருநாள் இந்திய ராணுவத்தினர் இதை அறிந்து சோதனைக்கு வர அவள் அவற்றை ஒளித்து வைக்கிறாள். ஒரே ஒரு குண்டு மட்டும் வெளியே கிடக்கிறது. அதை மறைப்பதற்காய் தன் ரவிகைக்குள் வைக்கிறாள். அவளது இயல்புக்கு மீறிய மார்புகளைக் கண்டு கவரப்பட்டு அவளை பலாத்காரம் செய்ய முயலும் இந்திய ராணுவத்தினன் வெடித்து சாகிறான். நிலாமதியும் சிதறுகிறாள். இந்த இரண்டு பெண்கள் விஷயத்தில் உடல் சிதைவுகள் இந்திய படையினரை துஷ்டர்களாய் காட்டுவதற்காய் சயந்தனுக்கு கருவிகளாய் பயன்படுகின்றன.
 நிமித்தம்
கடந்த பத்து வருடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து தன் புனைவுகளில் பேசும் பிரச்சனை தோல்வியும் சிறுமைப்படலும். சமீபத்தைய அவரது நாவல்கள் சிறுமைப்படலின் பல்வேறு சமூகவியல், வரலாற்று பரிமாணங்களை பேசுகின்றன. உதாரணமாய் – தமிழக அரசியல் போக்குகளின் பின்னணியில் தனிப்பட்ட அவமானங்களால் சிறுத்து தன்னையே ஒருவன் அழிப்பது (”உறுபசி”); சிறுமையை உடல் வாதையாலும் ஆன்மீகத்தாலும் கடந்து போவது (”துயில்”). அவரது “நிமித்தம்” இதே சிறுமைப்படலை ஊனம் எனும் குறியீடு மூலம் அவலத்தின் மொழியில் பேச முயல்கிறது. நாவலின் முன்னுரையிலே எஸ்.ரா இதை வலியுறுத்துகிறார். அவர் ஒரு கோயில் முன்னால் தன் பழைய நண்பன் முத்துராமன் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவன் தான் அந்த நிலைக்கு வந்ததற்கு தான் செவிடனாய் இருப்பதே காரணம் என்கிறார். எஸ்.ரா ஊனம் காரணமாய் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நியாயமான வாய்ப்புகளும் மரியாதையும் அங்கீகாரமும் அன்பும் மறுக்கப்பட்ட ஒருவனது கதையை (முத்துராமனின் கதையை) கூற முயல்கிறார். ஆனால் உண்மையில் வாழ்க்கையில் நடப்பது வேறு. வாழ்க்கையின் சவுக்கடிகள் எல்லாருக்கும் ஒரே போல் தான் விழுகின்றன. சலுகைகளும் அப்படியே – ஊனர்களுக்கு அது கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை. எஸ்.ராவின் பிரக்ஞை இதை புரிந்து கொள்ளாவிட்டாலும் அவரது ஆழ்மனம் இதை அறிகிறது. அதனால் நாவலுக்குள் ஒரு இரட்டை கதையாடல் தோன்றுகிறது – ஒரு பக்கம் நாவலின் நாயகன் தேவராஜன் தன் வாழ்வின் ஒவ்வொரு சவுக்கடிக்கும், வீழ்ச்சிக்கும் தான் செவிடனாய் இருப்பதே காரணம் என புலம்புகிறான். ஆனால் நாவலில் இதற்கெல்லாம் காரணமான சம்பவங்கள் வேறொரு காரணத்தை சுட்டுகின்றன – அவனது ஊக்கமின்மையும் போராடும் விருப்பமின்மையும்.
 இன்னும் துல்லியமாய் சொல்வதென்றால் ஈகோ இல்லாமை. உளவியல் மனிதனின் மன ஆரோக்கியத்துக்கு ஈகோ முக்கியம் என்கிறது. தன்விருப்பம் இல்லாதவர்களுக்கு தன்முனைப்பு இருக்காது. தன்முனைப்பு இல்லையென்றால் வாழ விருப்பம் தோன்றாது. மனச்சிதைவு கொண்டோருக்கு சுத்தமாய் தன்முனைப்பு இருக்காது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் செயலற்று இருப்பார்கள்.
தேவராஜன் மன நோயாளி அல்ல. ஆனால் அவன் செயலற்றவன். அவனுக்கு படிப்பில் விருப்பமில்லை. அதை மறைக்க அவன் காணும் உத்தி பள்ளியில் வாத்தியார் சிறுமைப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் என்பது. அவனை காதுகேளாதோருக்கான பள்  ளிக்கு அனுப்புகிறார்கள். அங்கு அச்சுத்தொழில் கற்கும் அவன் பாதியில் ஓடி வருகிறான். வேலைக்கு சேர்ந்த பின்னும் அதை பாதியில் விடுகிறான். இயல்பாகவே ஊக்கமின்மை அவனை பல மோசமான தற்காலிக வேலைகளில் கொண்டு சேர்க்கிறது. இறுதியில் அவன் சீட்டுக்கம்பனி ஒன்றில் பணி செய்கிறான். அங்கு தவறான வழியில் பணம் சேர்க்கிறான். மாட்டுகிறான். அவமானப்பட்டு அடிவாங்கி மீண்டும் வறுமைக்கு திரும்புகிறான். தேவராஜனுக்கு வாய்க்கும் பெண்களும் காரியக்காரிகள். அவனுக்கு அவர்களை தக்க வைக்கும் சாமர்த்தியம் இல்லை. இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து அவன் தன் ஊனத்தையே பழியாக்குகிறான். ஆனால் நாவலின் ஊடே ஊனம் அல்லாது வேறொரு தர்க்கம் வளர்ந்து நிற்கிறது. தேவராஜனின் தர்க்கமும் நாவலின் தர்க்கமும் முரண்படுகின்றன.
தேவராஜனின் குரல் எஸ்.ராவின் பிரக்ஞையின் குரல். அக்குரல் அவனது தன்முனைப்பு இல்லாமைக்கு ஒரு சாக்குபோக்கை அவன் உடலில் கண்டுபிடிக்கிறது. அவன் ஊனத்தை அவனது ஊக்கமின்மைக்கு குறியீடு ஆக்குகிறது.
ஏழாம் உலகம்
 மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றியவர்களை பிச்சை எடுக்க வைத்து வியாபாரம் நடத்தும் பண்டாரத்தின் அறம் சார்ந்த தடுமாற்றங்களே ஜெயமோகனின் இந்நாவலின் மையம். ஊனம் இந்நாவலில் வாசகர்களின் இரக்கத்தை தூண்டுகிற முக்கியமான அம்சம் என்றாலும் அடிப்படையில் இது ஊனம் பற்றியதல்ல. சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகள் பண ஆசையாலும் அதிகார இச்சையாலும் சீர்குலைவதை, இதனால் ஏற்படும் ஆன்மீக சீரழிவை பேசுவதற்கு ஜெயமோகனுக்கு இந்த மூளை/உடல் வளர்ச்சியற்ற “உருப்படிகள்” குறியீடாய் பயன்படுகின்றன. இந்த நாவலின் சுவாரஸ்யமான அம்சம் ஊனமுற்றவர்கள் பற்றின சித்தரிப்பு எப்படி பல முனைகளில் இருந்து முரண்பட்ட வகையில் நிகழ்கிறது என்பது.
 முதலில் கதையாசிரியரின் குரல். ஜெயமோகன் ஊனமுற்றவர்களை வணிக நோக்கிற்காய் சுரண்டுவதை வலுவாக கண்டித்துக் கொண்டே வருகிறார். ஆனால் அதே வேளை அவர் உடல்/மூளை வளர்ச்சி அற்ற மகப்பேறு நிலையில் இருக்கும் முத்தம்மாவை வர்ணிக்கும் விதம் இந்த சமூக விமர்சனத்துக்கு நேர்மாறானது. அப்பெண்ணை அவர் ஒரு விநோத மிருகம் என்கிறார். அவளது குழந்தையும் மற்றொரு விநோத மிருகமே. இது கதையாசிரியரின் குரல் என்பது முக்கியம். இதனுள் ஊனமுற்றவர்களை சிறுமைப்படுத்தும், மற்றமையாக பார்க்கும் நோக்கம் உள்ளது.
 அடுத்து ஊனமில்லாத “மேல் நிலையில்” இருக்கும் மனிதர்களின் விவரணை. இவர்கள் ஊனமுற்ற பெண்ணின் குழந்தைப்பேறை ”ஈணுதலாக” காண்கிறார்கள். அவர்களை உருப்படியாக பார்ப்பதில் எந்த அறச்சிக்கலுமில்லாத மனிதர்கள் இவர்கள். முத்தம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் பெண் அவளை ஒரு ஜெர்சிப் பசுவுடன் ஒப்பிடுகிறாள். பண்டாரத்தின் மகள் முத்தம்மாவின் குழந்தையை ”குட்டி” என்று அழைக்கிறாள். ஊனமில்லாதவர்களின் மொழி சுலபத்தில் ஊனமுற்றவர்களை மிருகநிலையில் வைக்கிறது.
 நாவலின் முக்கியமான சுவாரஸ்யங்களில் ஒன்று எப்படி பலவிதமான மனிதர்கள் ஊனமுற்றவர்களை தமக்கு ஏற்றபடி கட்டமைக்கிறார்கள் என்பது. ஊனமுற்றவர்கள் எப்படி சிறிய ஆன்மாக்களாக உள்ளார்கள் என ஒரு உரையாடலும் நாவலில் வருகிறது. இந்திய பண்பாட்டு பார்வை மீதான பகடி இதில் உள்ளது. இன்னொரு பக்கம் ஊனமுற்றவர்கள் தம்மிடையேயான உரையாடல்களில் பரஸ்பரம் ஊனத்தை சுட்டி தம்மையே “ஒடுக்குகிறார்கள்”, ஒரு படிநிலையை உருவாக்குகிறார்கள். ஊனமுற்றவர்களை சிறுமைப்படுத்தும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் முரணான குரல்களின் மோதல் இந்நாவலின் முக்கியமான அம்சம். இந்த குரல்களில் ஜெயமோகனின் குரலும் ஒன்றும் என்பதே சுவாரஸ்யம். நாவலினூடே அவர் மொழியில் தன்னை மீறி எழுதுவதை காண முடிகிறது. அவரே ஊனத்தை ஒடுக்குவதை கண்டிக்கிறார், அவரே மொழியில் ஊனத்தை சிறுமைப்படுத்தவும் செய்கிறார். தமிழில் எழுதப்பட்ட மிக இயல்பான பல்குரல்தன்மை கொண்ட (polyphonic) நாவல் “ஏழாம் உலகம்” – குறிப்பாய் ஊனத்தை கட்டமைப்பதில்.
சிறுகதைகள்

சுஜாதாவின் “கால்கள்” தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கால் இல்லாத ஒரு ஆங்கிலோ இந்திய முன்னாள் ராணுவக்காரர் தான் கதையின் மையம். அவர் தொடர்ந்து கால்கள் குறித்த சிந்தித்தபடி இருக்கிறார். வெள்ளையர் ஆட்சியின் போது விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கால்களை தான் குறி வைத்து சுட்டதைப் பற்றி விவரிக்கையில் அபரிதமான மகிழ்ச்சி கொள்கிறார். அழிந்த, சிதைவுற்ற கால்களின் தோற்றம் அவர் மனதை ஆட்கொண்டிருக்கிறது. இன்னொருவரின் காலை அழிக்கும் கற்பனை அவருக்கு தனது கால் இன்மைக்கு மனதளவில் ஒரு நிறைவை அளிக்கிறது. இக்கதையில் மற்றொரு உபபிரதி ஆங்கிலோ இந்தியர்களின் அடையாளம் இழந்த, பிடிப்பற்ற சமூக நிலை. இதற்கான ஒரு குறியீடாகவும் சுஜாதா கால்களை இக்கதையில் பயன்படுத்துகிறார். ஊனமுற்ற கால் ஊனமான மெல்ல மெல்ல காணாமல் போகும் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் நிலையை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.
சுந்தர ராமசாமி ஊனமுற்ற உடலை மிக நுணுக்கமான கதைமொழியில் கையாண்டவர். அவர் சிறுவயதில் ஊனத்தை நேரடியாய் அனுபவித்தவர் என்பதால் அவருக்கு அது குறித்து அந்தரங்கமான புரிதலும் ஈர்ப்பும் உள்ளது. ஆனால் சு.ரா ஊனத்தின் பௌதிக, உளவியல் நிலைகள் பற்றி பேச ஆர்வம் காட்டியதில்லை. அவரது புனைவுகளின் மைய கருப்பொருள் இது: சமூகம் எனும் தொழிற்சாலையில் ஒரு எந்திரம் போல் பணி செய்யும் தனிமனிதன்; அவனை ஈவிரக்கமின்றி பயன்படுத்தி சுரண்டும் சமூக எந்திரம். இந்த சமூக எந்திரம் வரலாறாக இருக்கும் (”ஒரு புளிய மரத்தின் கதை”); அரசியல் அமைப்பாக இருக்கும் (”பல்லக்கு தூக்கிகள்”); காலமாகவும் இருக்கும் (”வாழ்வும் வசந்தமும்”).
 காம்யு, காப்கா போன்றவர்களின் இருத்தலிய படைப்புகளின் தாக்கம் காரணமாய் சு.ரா இந்த சமூக எந்திரத்தை கண்மூடித்தனமான குரூரமான காலமாகவும் பார்க்க தலைப்பட்டார். ஒரு சிறந்த உதாரணம் அவரது சிறுகதையான “ஜன்னல்”. இது காப்காவின் “உருமாற்றம்” கதையின் ஒரு கவித்துவமான தமிழ் வடிவம் எனலாம். ”உருமாற்றத்தில்” ஒருநாள் தூங்கி எழுகையில் தன்னை கரப்பான் பூச்சியாய் காண்கிறான் கிரெகர் சாம்சா. சு.ராவின் கதையில் வியாதியில் படுத்தபடுக்கையான இளைஞன் வருகிறான். அவனால் எழுந்து நடக்க இயலாது. அவன் தன்னை சித்தரிக்கும் மொழி சுவாரஸ்யமானது. அவன் தன்னை ஒரு “பொருளாக” கற்பனை செய்கிறான். ஊனம் மெல்ல மெல்ல அவனது சுய அடையாளத்தை அழிக்கிறது. தன் தொண்டைப்பகுதி வற்றிப் போய் எலும்பாய் புடைத்த இடத்தில் ”ஆழாக்கு” தண்ணீர் பிடிக்கலாம் என்கிறான். அவன் தங்கை “அண்ணா நீ பார்க்க ஒரு பல்லி போல் இருக்கிறாய்” என கூறி விட்டு செல்கிறாள். அவனுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தான் இக்கதையில் வரும் தனிமனிதனை கண்மூடித்தனமாய் ஒடுக்கும் ”சமூக எந்திரம்”. அவனுக்கு ஒரே ஆசுவாசம் தன் படுக்கைக்கு பக்கத்தில் உள்ள ஜன்னல் வழி வெளிக்காட்சிகளை வேடிக்கை பார்ப்பது, இயற்கையை ரசிப்பது. இது கிட்டத்தட்ட அவன் மீட்சிக்கான வழியாகவே உள்ளது. ஆனால் மருத்துவர் அவனை அங்கிருந்து நகர்த்தி ஜன்னல் இல்லாத ஒரு இடத்தில் படுக்க வைக்க சொல்கிறார். ஜன்னல் இல்லாத உலகம் அவனை மூச்சு முட்ட செய்கிறது. இந்த திணறல் சமூகத்தால் ஒடுக்கப்படும் தனிமனிதனின் அவஸ்தை. ஆனால் அவனது குடும்பத்தினர் அவனுக்கு காற்று கிடைக்காமல் மூச்சுத்திணறுகிறது என நினைத்துக் கொள்கிறார்கள். சு.ரா இங்கு இருத்தலியல் உலகில் வாழும் பலவீனமான தனிமனிதனை காட்ட ஊனத்தை குறியீடாக்குகிறார். காப்காவுக்கு கரப்பான்பூச்சியான உடல் என்றால் சு.ராவுக்கு நடக்க முடியாத உடல்.
சு.ராவின் ”விகாசம்”, “காணாமல் போனது” போன்ற கதைகளில் வரும் தனிமனிதர்கள் சமூக உதிரிகள். ”விகாசத்தில்” வரும் பார்வையில்லாத கணக்கர் ராவுத்தர் ஒரு கணிதமேதை. நினைவுத்திறனில் புலி. ராவுத்தர் கதைசொல்லியின் அப்பாவின் ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். ராவுத்தரின் தன்னிச்சையான போக்கும் ஈகோவும் அப்பாவை எரிச்சல்படுத்துகிறது. ஆனால் ராவுத்தர் இல்லாமல் அவரால் வியாபாரம் செய்யவும் முடியாது. அப்போது தான் அப்பாவுக்கு ஒரு கால்குலேட்டர் கிடைக்கிறது. அவர் கால்குலேட்டர் கொண்டு ராவுத்தர் எனும் மனக்கணக்கும் மேதையை காயடிக்கிறார். அவரையை வேலையில் இருந்து மெல்ல மெல்ல விலக்க முயற்சிக்கிறார். ஆனால் ராவுத்தர் ஒரு காரியதரிசியாக தன்னை வடிவமைத்து கால்குலேட்டரின் தொழில்நுட்ப ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்கிறார்.
சு.ராவின் புரிதலின் படி சமூகத்தில் தனிமனிதன் மேதைமை கொண்டவனாகவும் சமூக ஒற்றை அடையாளப்படுத்தலில் தனித்து நிற்கிறவனாகவும் இருக்கிறான். சமூகம் அவனது வேறுபட்ட தன்மையை கண்டிக்கிறது. அவனை தொடர்ந்து ஒரே அடையாளத்துக்குள் வந்தடங்கும்படி வற்புறுத்துகிறது. அல்லாதபட்சத்தில் அவனை ஒடுக்குகிறது. இக்கதையில் அப்பா பாத்திரம் (சு.ராவின் பல்வேறு கதைகளில் வருவது போல) சமூக எந்திரத்தின் முகமாக இருக்கிறார். அவருக்கும் ராவுத்தருக்குமான மோதல் தொழில்நுட்பம் கொண்டு தனிமனிதனை காயடிக்கும் முதலாளித்துவ சமூக எந்திரத்துக்குமான மோதலே. தனிமனிதனின் உதிரியான குணத்தை காட்ட சு.ரா ராவுத்தரை பார்வையற்றவராக படைக்கிறார்.
“காணாமல் போனது” கதை இதே போல் மாறுபட்ட அடையாளம் கொண்ட ஒரு மனவளர்ச்சி குன்றின குழந்தை மற்றும் கால் ஊனம்ற்ற வாத்து பற்றியது. அந்த குழந்தையும் அதன் தாத்தாவும் தினமும் ஒரு பாலத்தின் மீது நின்று மேய்ச்சல் முடிந்து திரும்பும் வாத்துக்கூட்டத்தை வேடிக்கை பார்ப்பார்கள். ஒருநாள் வாத்துகளில் ஒன்றை காணவில்லை என மேய்க்கும் பையன் அழுகிறான். அப்போது அந்த குழந்தை தன் தாத்தாவிடம் கூறுகிறது “பரவாயில்லை நொண்டி வாத்து இன்னும் இருக்கிறதே” என்று. அபாரமான கவித்துவ மனஎழுச்சியில் முடியும் இக்கதை விசித்திரமானவர்களின் இருப்பு கொண்டாட வேண்டிய ஒன்று என சுட்டுகிறது. விசித்திர உடல் கொண்ட குழந்தை மாறுபட்ட தனிமனிதர்களுக்கான குறியீடு. சீரான வாத்துகளை மேய்த்து கரைசேர்க்கும் அந்த பையன் தான் தான் சமூக எந்திரம். சு.ரா அவனை மாதிரி “முதலாளிகளிடம்” சொல்வது மாறுபட்டவர்கள் பிழைத்து வாழ்வதும் இங்கும் ஒரு அற்புதமே என்பது. இதை சொல்ல அவர் ஊனத்தை பயன்படுத்துகிறார்.
உடலை உடலாக மட்டுமே பார்ப்பது
உடலை ஒரு குறியீடாக மாற்றுவதன் பல சிக்கல்களை பார்த்தோம். அது ஒருவிதத்தில் சமூகம் உடல் மீது செலுத்தும் அதிகாரத்துக்கு துணை போகிறது. சமூக அதிகாரத்துக்கு எதிராய் பேசும் படைப்பே அதற்கு ஆதரவாய் செயல்படும் விசித்திரம் நேர்கிறது. இதற்கு ஒரு தீர்வு உடலை உடலாக மட்டுமே பார்ப்பது.
 இதில் விதிவிலக்காக சில படைப்புகளை காட்ட முடியும். ஒன்று ஸர்மிளா ஸெய்யத்தின் நாவல் ”உம்மத்”. ஈழப்போரும் அதற்கு பிறகான சமூக சூழலும் இந்நாவலின் களங்கள். போரில் புலிப் போராளியாக செயல்படும் யோகா தன் காலை இழக்கிறாள். அவளது கால் ஊனம் இந்நாவலில் போருக்கு பிந்தைய ஈழ சமூகத்தின் சிதைவுற்ற நிலையின் குறியீடாக மாறினாலும் நாவல் இன்னொரு பக்கம் ஊனம் எப்படி ஒரு தற்காலிகமான நிலை என்பதையும் காட்டுகிறது. ஊனத்தின் உளவியலை ஆழமாய் பேச முயலும் மிகச்சில சமகால படைப்புகளில் ஒன்று இது. குறிப்பாய், யோகா செயற்கைக்கால் மாட்டி நடக்க ஆரம்பித்ததும் அவள் “ஊனம் அற்றவளாய்” இயல்பானவளாய் உணர்கிறாள். சமூகத்துடன் உறவாடும் தடைகள் அகன்றதும் அவள் ஊனமும் மறைந்து போகிறது. ஊனம் என்பது உடம்பிலோ மனதிலோ இல்லை, அது சமூகம் ஏற்படுத்தும் தடைகளில் இருக்கிறது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. போக்குவரத்து தடைகள், வேலையிடத்து பௌதிக தடைகள், படிக்கட்டுகள், கட்டிட அமைப்பு உருவாக்கும் தடைகள் என பல்வேறு சமூக இடையூறுகள் தான் ஊனத்தை கட்டமைக்கின்றன.

தலித் மற்றும் பெண்ணிய படைப்புகள் நடப்புலகையும் உடல் அனுபவங்களை குறியீடாக்காமல் அப்படியே சித்தரிப்பதில் வெற்றி பெற்றவை. உடலை குறியீடாகவோ உருவகமாகவோ மாற்றாமல் பௌதிக நிலையாகவே சித்தரிப்பதற்கான ஒரு தனி அழகியலை தலித்திய / பெண்ணிய படைப்பாளிகளான நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார், அழகிய பெரியவன், குட்டிரேவதி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை ஆகியோர் உருவாக்கி இருக்கிறார்கள். சயந்தன், எஸ்.ரா, ஜெயமோகன், சு.ரா, சுஜாதா ஆகியோரின் உடல் எழுத்தில் உள்ள சிக்கல் இவர்களிடத்து இல்லை. 
நன்றி: தீராநதி

No comments: