Tuesday, July 5, 2016

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் - போகன் சங்கர் விமர்சனம்

Image result for கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் + ஆர்.அபிலாஷ்
முக்கிய கவிஞரும் சிறுகதையாளரும் பிரபல பேஸ்புக் பதிவருமான போகன் சங்கர் தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதிய விமர்சனத்தின் மீள் பதிவு இது. இரு பாகங்களாய் எழுதியிருக்கிறார். 
நீங்கள் கதைத் துவக்கத்துக்கு வந்துவிட்டீர்கள் 1
அபிலாஷ் சந்திரனின் கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் படித்தேன்.துப்பறியும் கதை என்று சொல்லப்படும் கதை.உண்மையில் ுழந்தைக் கொலை குழந்தை வல்லுறவு போன்ற இருட்டுப் பக்கங்களை விவரிக்கும் கதை
அபிலாஷின் கதைசொல்லல் முறை பற்றி புதிதாக ஒன்றும் நான் கூறப்போவதில்லை.அவரது கால்கள் நாவல்கள் படித்துவிட்டு கண்கலங்கி நின்ற தோழிகள் எனக்குண்டு

சுந்தர ராமசாமி ஜெயமோகன் பள்ளிகளிடமிருந்து சம தூரத்தில் நிற்கிற நடை அவருடையது.அதிகம் உணர்ச்சிவசப்படவோ அல்லது மிகுந்த நிதானத்தோடோ இல்லாத நடை . உண்மையில் அவர் இந்த நாவலில் இந்த இரண்டு முனைகளுக்கும் மாறி மாறி போய்வருகிறார்.நடுவில் கொஞ்சம் மாய யதார்த்தப் பதார்த்தத்தைக் கடித்துக் கொள்கிறார் .ஏழரை அடி நீல மனிதனைப் படிக்கையில் எனக்கு ஆலன் மூரின் watchmen சித்திர நாவலில் -படமாகவும் வெளிவந்த-வரும் டாக்டர் மன்ஹாட்டன் நினைவுக்கு வந்தது.ஆனால் தோற்றத்தில் மட்டுமே
அபிலாஷின் சில உவமைகள் அபாரமாக இருக்கின்றன.காற்றில் சைக்கிள் ஓட்டும் நாய்,ஒரு பெரிய வாத்தைப் போல நடந்துவந்து காலைப் பற்றிக்கொள்ளும் தமிழ்ச்செல்வன் ...
சில வார்த்தை உபயோகங்கள் சுஜாதாவை நினைவுபடுத்துகின்றன.பழைய பேப்பரை படிக்கையில் ஜார்ஜ் நினைத்துக்கொள்வது -கோகிலா இன்னும் உயிரோடு இருந்தாள் -
ஆனால்
இ்ந்த நாவல் அடிப்படையில் இந்தியா அறிந்த-ஆனால் நமது தமிழ் இலக்கியவாதிகள் மட்டும் அறியாத -ஒரு கொலைவழக்கை அடிப்படையாகக் கொண்டது .இந்த நாவல் தொடர்பாக வந்த விமர்சனங்களில் எங்காவது இதுபற்றி பேசியிருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன்.நான் தேடியே பார்த்திருக்க வேண்டியதில்லை.எனக்கு தமிழ் இலக்கியவாதிகளின் பிற துறை அறிவைப் பற்றி பூரணமாக நம்பிக்கை உண்டு.-இல்லை.ஜெயமோகன் அடிக்கடி சொல்கிற -செய்தித்தாள் போன்ற உபயோகமற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தக் கூடாது என்கிற அறிவுரையை கவனமாகக் கடைப்பிடிக்கிறவர்கள்
அது உத்திரப்பிரதேசம் நோய்டாவில் நடந்த ஆருஷி கொலை வழக்கு

கதைத் துவக்கத்துக்கு வந்துவிட்டீர்கள் 2
ஆருஷி வழக்கை அடிப்படையாகக் கொண்டு தல்வார் என்ற இந்திப்படம் வந்தது இர்பான்கான் நடித்தது நம்முடைய உலகசினிமா ரசிகர்கள் சிலர பார்த்திருக்கலாம்.ஆருஷி வழக்கைப் பற்றி மிகதீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புத்தகம் வந்திருக்கிறது.avirook sen எழுதி ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது .குற்ற சம்பவங்களை அதன் பின்னணியை அதன் உளவியலை விவரிக்கும் புத்தகங்கள் புதிதல்ல. திரைப்படங்களாக எடுக்கப்படுவதும் புதிதல்ல.மிகப் பிரபலமான மிகச் சிறந்த உதாரணம் Truman capote எழுதிய In cold blood.அமெரிக்காவில் ஒரு குடும்பமே கொலை செய்யப்படுகிறது பணத்துக்காகத்தான் .ஆனால் மிகச் சிறிய தொகைக்காக.அமெரிக்காவை அதிரவைத்த இந்த கொலையைச் செய்த இருவரை அவர்களது வாழ்க்கை பின்னணியை உளவியலை பின்தொடர்ந்து செல்லும் கதை.
அபிலாஷின் நாவல் இதுபோன்றதொரு எத்தனம்.குற்றவாளியின் மனநிலையோடு துப்பறிகிறவரின் குற்றத்தை விசாரிக்கிறவரின் நீதி சொல்கிறவரின் மனநிலையையும் விவரிப்பது அந்த குற்றத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள உதவுகிறது.மேலும் ஒரு குற்றம் நிகழ்ந்தவுடன் அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி மாறுகிறது செயல்படுகிறது என்பதும் முக்கியம்.
பெரும்பாலும் நமது மனநிலை 'பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகவோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கர்மக் கோட்பாடாகவோ இருக்கிறது.நமது ஆழத்தில் இதுவே செயல்படுகிறது .குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் பரிதாபத்துக்குரியவர் ஆயினும் அவர் ஏதோ ஒருவகையில் அப்படியொரு சூழலை அமைத்தவராகிறார்.'மூடிக்கொண்டு போனால் கற்பழிப்பு நிகழாது 'போன்ற தர்க்கங்கள்.இதற்க்கு நேர் எதிரான ஆடையற்று திரிந்தாலும் எதுவும் நிகழக்கூடாது 'என்கிற உடோப்பியன் தத்துவங்கள்.இரண்டுமே மனித உளவியலை அறியாத நிலைப்பாடுகள்
மேலும் நமது வர்க்க மத சாதிய பார்வைகள் அல்லது குருட்டுத்தானங்கள் தேய்வழக்குகள்.இந்த 'குருட்டுத் தானங்கள்'பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றவை என்று காணலாம்.ஒருவகையில் பார்த்தால் நமது பெரும்பான்மையான இலக்கியம் இசை நீதி உணர்வு எல்லாமே நடுவர்க்கம் உற்பத்தி செய்து தருகின்றவையே. நடுவர்க்கத்தின் கோஷம் என்பது எப்போதுமே 'status quao' என்பதாக இருக்கிறது .'எங்களைத் தொந்திரவு செய்யாதீர்கள் 'என்பது அதன் சாரம்
அவிரூக் சென்னின் புத்தகம் இந்த முரண்கள் எல்லாவற்றைப் பற்றியும் விவரமாகப் பேசுகிறது.மேல்தட்டு வர்க்கம் என்றால் அப்படித்தான் நீக்குப்போக்காக இருப்பார்கள் என்ற பொதுப்புத்தி டாக்டர்கள் பற்றிய பொதுப்புத்திப் பார்வை (அவர்கள் அதிக உடல்களை காண்கிறவர்கள் அல்லவா )மிக கீழ்வர்க்கத்தைப் பற்றிய பொதுப்புத்திப் பார்வைகள் .தனது ஆங்கிலத் திறமையைக் காட்டும் உத்வேகத்தில் விசாரணை முடிவதற்கு முன்பே தீர்ப்பு எழுதிவிடத் துவங்கிவிடும் நீதிபதிகள் ,தடய அறிவியல் துறை போன்ற துறைகளின் பரிதாபகரமான நிலை,ஒரு அரசு துறைக்குள் நிகழும் சில்லறை அரசியல்கள் அதன் மூலமாக ஒரு பொறுப்பின் தலைமைக்கு வந்துவிடும் 'முக்கியமானவர்கள்'...
அபிலாஷ் இந்த புத்தகத்திலிருந்து நிறைய பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது.ஆனால் அதன் சமூக விமர்சனங்களை எடுத்துக்கொள்ளவில்லை .குழந்தையின் -ஆருஷி என்கிற அகல்யா -தாயை நடத்தை குறைந்ந்தவளாக மாற்றிவிட்டார்.தந்தையையே சிறு பெண்களைக் கற்பழிப்பவராக மாற்றிவிட்டார்.அந்த சிறு பெண்களும் அவ்வளவு நல்லவர்கள் இல்லை.அவர்கள் பெரியவர்களின் உறவுக்கு ஏங்கும் லோலிடாக்கள் (இந்த இடத்தில் அபிலாஷின் துணிச்சலைப் பாராட்டவேண்டும்.அரசியல் ரீதியாக சரியில்லாத விஷயம் இது.இப்போது இங்கே எழுத்தாளர்களைத் தவிர மற்ற எல்லோருமே அரசியல் ரீதியாக புண்ணியவான்கள் என்ற உயரிய நிலையை அடைந்துவிட்ட ஆபத்தான சூழல் .)
பிரச்சினை அவர் இந்த துணிவை எல்லா இடத்திலும் காண்பிக்கவில்லை என்பதுதான்.அவர் அரசியல் சரிக்கும் இலக்கிய சரிக்கும் மாறி மாறி ஊஞ்சலாடுகிறார்.விஷயம் ரொம்பக் குழப்பமாக ஆகிவிடும்போது விசாரிப்பவரையே பகுதி குற்றவாளியாக ஆகிவிடுகிறார்.ஒருவகையில் நாம் எல்லாரும் கொலை செய்யாத கொலையாளிகள்தான் என்ற இடத்துக்கு வந்துவிடுகிறார்
நான் ஆருஷி வழக்கை தொடர்ச்சியாக கவனித்து வந்தவன்.அந்த முறையில் ஆருஷியின் பெற்றோர்கள் தண்டிக்கப்பட்டது அநீதி என்று நினைக்கிறேன்.இப்போது தீப்புகழ் பெற்றுவிட்ட வார்த்தையான நமது 'கூட்டு மனசாட்சிக்கு 'பலியாக்கப்பட்டுவிட்ட ஆடுகள் இவர்கள் என்பது என் எண்ணம் .narco analysis போன்ற விஷயங்களை காவல்துறையினர் நடத்தலாம்.ஆனால் அதை கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளமுடியாது போன்ற குழப்பமான இந்தியர்களுக்கே உரிய தனித்துவமான 'அற உணர்வு' பிழைகளில் மாட்டிக்கொண்டவர்கள் என்பது என் எண்ணம்.
அந்த வகையில் அபிலாஷின் நாவல் எனக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது.சரித்திரத்தை ஒரு உண்மைச் சம்பவத்தை எழுத்தாளன் சித்தரிக்கும்போது அவன் என்ன வகையான சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பது ரொம்ப தெளிவான பதில்கள் கிடைக்காத ஒரு கேள்வி.வாசிப்பவரின் அரசியலும் சேர்ந்து இங்கு செயல்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.
அந்த வகையில் எனக்கு அபிலாஷின் நாவல் ஒரு சுவராஸ்யமான நாவல்.
ஆனால் சரியான நாவல் இல்லை


No comments: