Sunday, July 17, 2016

இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸும் இணையும் புள்ளி

 சமீபத்தில் ஹிந்து நாளிதழ் நடுப்பக்கத்தில் ரொமிலா தாப்பரின் பேட்டி வெளிவந்தது. கருத்து சுதந்திரம், அறிவுஜீவிகள் மீதான பா.ஜ.கவின் ஒடுக்குமுறை குறித்து பேசியிருக்கிறார். ஒரு கருத்து என்னை கவர்ந்தது.
 ரொமிலா தாப்பர் சொல்கிறார்: “அறிவுஜீவிகள் புது கருத்துக்களை கண்டடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. …. ஆனால் அவர்கள் அச்சத்தில் வாழ நேர்ந்தால், பின் அந்த அச்சம் அவர்களைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியிலும் கசிந்து இறங்கும். சமூகச் சூழல் அச்சத்தால் ஆனதாகும்….”. இப்படியே அவரது வாதம் தொடர்கிறது.
அறிவுஜீவிகள் பாதிக்கப்பட்டால் சமூகமே பாதிப்புக்குள்ளாகுமா? அறிவுஜீவிகள் சமூகத்தின் நியூக்ஸியசா? அதற்கு வரலாற்று சான்று உண்டா?

 இல்லை. அறிவுஜீவிகள் சமூகத்தின் முக்கியமான உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் வடிவமும் தர்க்கமும் தருகிறவர்களாய் இருந்திருக்கிறார்கள். பாரதியின் அரசியல் கவிதை வரிகளை உதாரணம் கூறலாம். ஆனால் பாரதியிடம் இருந்து தமிழ் சமூகம் தோன்றுகிறதா அல்லது தமிழ் சமூகத்தின் எண்ண சுழிப்புகளின் மீதிருந்து ஒரு குமிழியாக பாரதி தோன்றுகிறாரா?
பிளேட்டோ – கிறித்துவத்தில் இருந்து மார்க்ஸியம்
அரைநூற்றாண்டாக இடதுசாரிகளும், எழுத்தாளர்களும் அறிவுஜீவிகள் பரப்பி வருகிற கருத்து அவர்களே சமூகத்தின் மையம் என்பது. அதாவது ’எழுத்தாளன் உருவாக்குகிற கருத்து, உணர்ச்சி, படிமம், குறியீடு மக்களை சென்றடைந்து அவர்களின் பேச்சையும் எண்ணத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இந்த பார்வையின் வேர் என்பது மேற்கத்திய மரபில் சாக்ரடீஸ் பிளேட்டோ துவக்கி வைத்த மையவாதத்தில் உள்ளது. பிளேட்டோ ஆதி உண்மை என்பது ஒளி என்றும் மனித உண்மைகள் அதன் பிரதிகள் என்றும் நம்பினார். மனிதனின் ஒவ்வொரு கருத்துக்கும், நம்பிக்கைக்கும் ஒரு ஒரிஜினல் அச்சு பிரபஞ்சத்தில் உண்டு என நினைத்தார். பன்னெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு இது கிரேக்க தத்துவத்தில் இருந்து கிறித்துவ இறையியலுக்கு சென்றது. கிறித்துவ போதகர்களும் ஆய்வறிஞர்களும் ஒரிஜினல் உண்மையின் இடத்தில் பிதாவையும் அதன் அடுத்த குட்டி ஒரிஜினல் உண்மையாக கர்த்தர் எனும் அவரது புத்திரனையும், இவர்களுக்கு அடுத்த நகல் உண்மைகளாக மனிதர்களையும் காணத் துவங்கினார்கள். இறைவன் தன் சாயலில் தான் மனிதர்களை உருவாக்கினான் எனும் நம்பிக்கையின் பின் மனிதர்கள் வெறும் சாயல் எனும் கருத்து வலுவாக இருக்கிறது. இதுவே பின்னர் கர்த்தர் முன் அனைத்தையும் துறந்து தன்னை மண்டியிட வைக்க மேற்கத்திய மனிதனைத் தூண்டியது.
மனிதனை ஜெராக்ஸ் பிரதியாக பார்க்கும் கருத்தியலை நீட்சே பின்னர் அடிமை ஆண்டாம்-அடிமை ஒழுக்கவியல் (master-slave morality) என்று விமர்சித்தார். தேவனை ஆண்டானாகவும் பக்தனை அடிமையாகவும் பார்க்கும் கருத்தியல் பின்னர் ஐரோப்பிய புத்தொளிக்காலத்தில் மற்றொரு வடிமம் எடுக்கிறது. கர்த்தர் இடத்திலும் அறிவும் விஞ்ஞான வளர்ச்சியும் வருகிறது. மனிதர்கள் அறிவின் பெருக்கத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் தம் சுகதுக்கங்களை மறந்து உழைக்க வேண்டும், விட்டுக் கொடுக்க தயாராக வேண்டும் எனும் கருத்து தோன்றுகிறது. சமுகத்தின் வளர்ச்சிக்காக மாற்றுக்கருத்து கொண்டவர்கள், மாற்று மதப்பார்வை கொண்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான மனவளர்ச்சி குன்றியவர்களும் மனநோயாளிகளும் கருப்பை நீக்கப்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் இது இனமேன்மை கருத்தாக்கமாய் பரிணமித்தது. உலகின் மையமாக ஹிட்லர் ஆரியர்களைப் பார்த்தார். பிற ஐரோப்பிய தேசங்கள் வெள்ளையர்களை மையம் ஆக்கினர். வெள்ளை சமூக வளர்ச்சிக்காய் கறுப்பு அடிமைகளை பயன்படுத்தலாம் என கருதினர்.
அரசியலில் இந்த மையவாதம் மார்க்ஸியமாக உருக்கொண்டது. இதற்கு மார்க்ஸிடம் இருந்த இறையியல் தத்துவஞானி ஹெகலின் தாக்கம் பிரதான காரணம். விசித்திரமாய் கிறித்துவத்தில் இருந்து தோன்றிய மார்க்ஸியம் ஒரு கடவுள் மறுப்பு, லோகாதேய இயக்கமாய் வளர்ந்தது. இது கர்த்தரின் இடத்தில் மார்க்ஸிய கருத்தியலை வைத்தது. மனிதனுக்கு எது நன்மை பயக்கும் என தேவனுக்கு தெரியும். அது போல் சமூக முன்னேற்றத்துக்கு எது சரியான மார்க்கம் என மார்க்ஸியத்துக்கு தெரியும். தேவன் ஆதி உண்மை. அது போல் மார்க்ஸியம் மாற்று இல்லாத ஒரு கருத்தியல். சொர்க்கராஜ்ஜியமாய் பொது உடைமை சமூகம் மாறியது. தேவன் வருகிறார் என்பதற்கு பதில் புரட்சி வருகிறது என அறிவித்தார்கள். தேவனின் பணிக்காய் மனிதன் தன்னை அர்ப்பணிப்பது போல் காம்ரேடுகள் மார்க்ஸிய பணிக்காய் தம்மை முழுக்க ஒப்புக் கொடுத்தனர். இன்றும் கிறித்துவ மிஷினரிகளிடம் உள்ளது evangelical fervor ஐ நாம் இடதுசாரிகளிடம் காணலாம். இரு சாராருக்குமான பொது இயல்பு அவர்கள் பொதுமக்களுக்கு என்று சுயநிர்ணயத் திறன் இருக்கலாம் என ஏற்கவில்லை. பல முரண்பட்ட நம்பிக்கைகளின், உணர்வுகளின் முயக்கமாய் ஒரு சமூகம் தன்னிச்சையாய் இயங்க முடியும் என நம்பவில்லை. சமூகத்தை ஒரு மேய்ப்பன் தேவைப்படும் ஆட்டுமந்தையாய் இருசாராரும் கருதினர்.
அறிவுஜீவிகள் சமூகத்தின் மனசாட்சி, ஊக்கவிசை எனும் ரொமிலா தாப்பரின் விசுவாசம் இந்த கிறித்துவ கருத்தியலில் இருந்து தான் தோன்றுகிறது.
சமூக இயக்கத்தின் ஸ்விட்சாக தனிமனிதர்கள் சிலர் இருக்கிறார்கள் அல்லது ஒரு கடவுள் இருக்கிறார் அல்லது ஒரு கருத்தாக்கம் இருக்கிறது எனும் இந்த இந்த எளிமையான பார்வையை ”நம்புவது” சுலபம். ஏனென்றால் நாம் எப்போதும் யாரோ ஒருவரை எல்லா விசயங்களுக்கும் மையமாக வைத்து பார்த்து பழகி இருக்கிறோம். ஆனால் இதை யாரும் நேரடியாய் விஞ்ஞானபூர்வமாய் ஆராய்ந்து பார்த்தாய் தெரியவில்லை.
 கடந்த பத்து வருடங்களில் நம் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை உருவாக்கியதாய் தெரியவில்லை. அதனால் பத்து வருடங்கள் இன்னும் பின்னுக்கு போய் தொண்ணூறுகளுக்கு செல்வோம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், பின்நவீனத்துவம், அதிகாரம், கதையாடல், நுண் அரசியல் போல ஏராளமான புது கருத்துக்கள் தீவிரமாய் வாதிக்கப்பட்ட காலகட்டம் அது. இக்கருத்துக்கள் அன்று சமூகத்தின் மையத்துக்கு சென்று விட்டனவா? இல்லை. ஆனால் இரண்டாயிரத்துக்கு பிறகு நாம் வெகுஜன மீடியாவில் இக்கருத்துக்களின் சிறு சதவீதம் பேசப்படுவதை கவனிக்கலாம். மக்கள் வாழ்வில் மீடியா மற்றும் சமூக பொருளாதார மாற்றங்களில் பின்நவீனத்துவம் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், நலன் குமாரசாமி ஆகியோரின் படங்களின் பின்நவீனத்துவத்தை மக்கள் ரசிப்பதை காண்கிறோம். என் கேள்வி இது தான்: அப்படி என்றால் பிரேம்-ரமேஷில் இருந்து தான் பின்நவீனத்துவம் இங்கு வந்து சேர்ந்ததா?
 ஆம் என்றால் பிரேம்-ரமேஷ் போன்ற சிலர் தான் இன்றைய சமூகத்தின் மையம் என கூற வேண்டி இருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் இல்லை என்று தான் கூறுவேன். ஏனென்றால் பிரேம்-ரமேஷ் எழுத்தாளர்கள் ஆகாமல் சினிமாத் துறைக்கு சென்று வசன கர்த்தா ஆகியிருந்தால் இன்றைய ஒட்டுமொத்த சூழலும் வேறாக இருக்குமா? இல்லை. சமூகத்தில் எதற்கும் மையம் அல்ல. ஐரோப்பாவில் தோன்றிய பின்நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிய பிரேம்-ரமேஷ் இங்கு அறிமுகம் செய்கிறார்கள். பூடகமாய் மூட்டமாய் ஒரு பின்நவீனத்துவ புகை இங்கும் கிளம்பி சூழ்வதை அவர்களை உணர்கிறார்கள். அதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். அதை நோக்கி நம் கவனத்தை திருப்புகிறார்கள். ஆனால் பின்நவீனத்துவம் முழுசொரூபத்தை வெளிப்படுத்த 2005 கடக்க தேவையிருக்கிறது. அப்போது பிரேம்-ரமேஷ் களத்தில் பெரும்பாலும் இல்லை. ஆனால் அவர்கள் பேசிய பின்நவீனத்துவம் இங்கு பல ஊடகங்களின் தாக்கம் மற்றும் லட்சியங்களின் சீரழிவு காரணம் தன்னிச்சையாய் உருக்கொண்டு தலைதூக்குகிறது. பிரேம்-ரமேஷ் இல்லாவிட்டாலும் தாராளமயமாக்கல், உலகமயமாதல், அதன் காரணமான கார்ப்பரேட் மீடியாக்களின் பெருக்கம் இன்று பின்நவீனத்துவத்தை கொணர்ந்திருக்கும். ஆனால் அதை விளக்குவதற்கும் சுட்டிக் காட்டி விவாதிப்பதற்கும் தமிழில் சொற்களும் தர்க்கமும் இருந்திருக்காது. (அல்லது அவற்றை உருவாக்க பிரேம்-ரமேஷுக்கு பதில் ”குமார்-சுரேஷ்” தோன்றியிருக்கலாம்.)
மாற்றங்கள் எப்போதுமே விளக்க முடியாத காரணிகளால் விசித்திரமாய் ஏற்படுகின்றன. சமூகம் அதன் அடியாழத்தில் சதா அரைந்து கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட கிரைண்டர். என்ன அரைகிறது, என்னவாக வெளிவரப் போகிறது என யாருக்கும் தெரியாது.
எழுத்தாளன், சிந்தனையாளன், கலைஞன் ஆகியோர் இந்த மாற்றங்களுக்கு ஒரு தர்க்கத்தை, நிறத்தை, உணர்ச்சியை கொடுக்கிறார்கள். ஒரு கொக்கோ கோலா தொழிற்சாலையை கற்பனை செய்யுங்கள். Assembly line எந்திரத்தில் புதிதாய் தயாரான கோக் காலி டப்பாக்கள் வரிசையாய் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறு குழாயில் இருந்து கோக் நிரப்பப்பட்டு அடுத்த நிலைக்கு போகிறது. அங்கு சீல் வைக்கப்பட்டு கோக் தயார் நிலைக்கு செல்கிறது. இந்த காலி டப்பா மட்டும் தான் எழுத்தாளன். இதை நான் எழுத்தாளனையோ சிந்தனையாளனையோ மட்டம் தட்ட சொல்லவில்லை. டப்பா இல்லாமல் கோக்கை குடிக்க முடியாது. ஆனால் அவன் தன்னை சமூக மையம் என நினைப்பது மிகை. அது உண்மை அல்ல.
என்று தணியும் எங்கள் அமைப்பியல் மோகம்?
எண்பதுகளில் தமிழவன் அமைப்பியல் பற்றி அறிமுகப்படுத்தி நிறைய எழுதினார். அடுத்து சில வருடங்களில் நாம் பின் அமைப்பியல் பேச ஆரம்பித்தோம். அமைப்பியல் சமூகத்தை ஒரு வட்டமாய் பார்க்கிறது. அதற்கு ஒரு மையத்தை கற்பிக்கிறது. உதாரணமாய் உங்கள் கம்பெனியில் நீங்கள் வெளிவட்டம் என்றால் மையம் உங்கள் முதலாளி. மதத்துக்கு மையம் தலைமை குரு. கோயிலுக்கு மையம் கடவுள். பின்-அமைப்பியல் இதை மறுத்தது. சமூகம் மையமற்றது என்றது. மொழியும் பண்பாடும் தன்னைத் தானே உற்பத்தி பண்ணுகிறது என்றது. அதாவது புற்றுநோய் அணுக்கள் போல மொழியும் பண்பாடும் அரசியல் அமைப்புகளும் வளர்ந்து போகின்றன. அதை யாரும் கட்டுப்படுத்துவதில்லை.
ஆனால் பாருங்கள் எண்பதுகளில் தமிழவன் பேசின அமைப்பியலை தான் நாம் இன்றும் அரசியல் வாதங்களில், மீடியாவில் வலியுறுத்துகிறோம். அமைப்பியலின் சிக்கல் அது அதிகாரத்தை ஒரு மையத்தை நோக்கி குவிக்கிறது என்பது. அறிவுஜீவிகள் தாமே அனைத்துக்கும் மையம் எனும் போது அவர்கள் சமூக அதிகாரம் தம் கையில் இருக்க வேண்டும் என கோருகிறார்கள்.
இடதுசாரி கட்சியில் இணைகிறவர்களுக்கு அவர்கள் பாடம் எடுத்து, தொடர்ந்து கருத்தியலை போதிப்பார்கள். இது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று ஒரு discourseஐ உருவாக்க. அதாவது எதையும் தம் பக்கம் இழுத்து வந்து பேசவும் செய்யவும் வைத்து அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு தர்க்கத்தை போதிக்க. அடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த. இதன் விளைவு என்னாயிற்று?
மார்க்ஸிய discourse பல்வேறு discourseகளுடன் கலந்து எந்த சிக்கலுமற்று பொது மக்களிடமும் அறிவுஜீவிகளிடம் இயங்குகின்றன. அது சமூக இயக்கத்தை தீர்மானிக்கும் காரணியாக மார்க்ஸியவாதிகளிடம் கூட இல்லை. எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) கோயிலுக்கு ரகசியமாய் விசிட் அடிக்கும் மார்க்ஸிய தோழர்கள் பற்றின கேலிக் கதைகள் உண்டு. எனக்கு அதை கேட்கும் போது எந்த வேடிக்கையும் ஏற்படாது. அதை மிக இயல்பான ஒன்றாய் தான் பார்க்கிறேன். மனிதனின் மூளை அமைப்பு அப்படி. பல்வேறு முரண்பட்ட தர்க்கங்கள், சிந்தனைகளுடன் மனிதனால் சாதாரணமாய் இயங்க முடியும்.
மனித மூளையும் மையவாதமும்
முன்பு மனித மூளை அதன் அமைப்பில் செங்குத்தானது (vertical) என நம்பினார்கள். இன்றைய ஆய்வாளர்கள் அல்ல மூளை கிடைநிலையானது (horizontal) என கண்டறிந்துள்ளார்கள். வி.எஸ் ராமசந்திரன் தன் ஆய்வுகளின் மனதின் விசித்திரங்களைப் பற்றி கூறும் போது இதையே வலியுறுத்துகிறார். Verticalஆக இருந்தால் மேலே இருக்கும் எண்ணம் கீழே வரை வடிந்து வந்து மூளையின் எல்லா இயக்கங்களையும் பாதிக்கும். இது மாடியில் உள்ள நீர்த்தொட்டியில் இருந்து நீர் குடியிருப்பின் ஒவ்வொரு வீடாய் இறங்குவது போல. ஆனால் மனித மூளையின் அமைப்பு தண்ணீத் தொட்டி மாடியில் கொண்ட குடியிருப்பை போன்றதல்ல. அது நீளமாய் அடுக்கப்பட்ட தங்கும் விடுதி அறைகளைப் போன்றது. ஒரு அறையில் ஒரு ஜோடி ஆவேசமாய் முயங்கிக் கொண்டிருக்கலாம். பக்கத்து அறையில் ஒருவர் தீவிரமாய் சிராசனம் பயின்று கொண்டிருப்பார். அதன் பக்கத்து அறையில் ஒருவர் மற்றொருவரின் கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பார். ஒரு அறையில் செயல் இன்னொரு அறையை பாதிக்காது.
சில உதாரணங்கள்: 1) உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒரு முக்கியமான நெருக்கடி கட்டத்தில் கோயிலுக்கு போய் மண்டியிட்டு இறைஞ்சுகிறீர்கள். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அதே உங்களுக்கு கடவுள் நம்பிக்கை போலியானதோ என தோன்றலாம். நீங்கள் மீண்டும் நாத்திகவாதி ஆகலாம். ஆனால் உள்ளுக்குள் எப்போது வேண்டுமெனிலும் கடவுளிடம் மீண்டும் மண்டியிடும் சாத்தியம் கொண்ட ஆளாக இருப்பீர்கள். இப்படி ஒரு சுயமுரண்பாடு இருப்பதாகவே உணர மாட்டீர்கள். 2) ஒரு ’பெண்ணியவாதி’ பெண் திருமணத்துக்கு பின் கணவனின் ஆணாதிக்கவாதத்தை ஓரளவு மறைமுகமாய் ஏற்று வாழ்கிறாள். ஆனால் அதேநேரம் ஆண்களின் ஆதிக்கத்தை மறுத்து பெண்கள் தம் அதிகாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவள் தீவிரமாய் நம்புவாள். அதற்காய் பல மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவாள். கூட்டம் நடத்துவாள். புத்தகங்கள் எழுதுவாள். டி.வியில் கைகளை ஆட்டி பேசுவாள். ஆனால் தனக்குள் ஒரு முரண்பாடு எனும் சிலந்தி வலைபின்னுவதாய் அவளுக்கு தோன்றவோ நெருக்கடி ஏற்படுத்தவோ செய்யாது. தன் குடும்ப சூழலையும் அரசியல் களத்தையும் இருவேறாக அவள் பார்ப்பாள்.
இவர்கள் பல்வேறு எதிர் கருத்துநிலைகளுடன் ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். இந்த ஊசலாட்டத்தினால் அவர்கள் மனம் ஒன்றும் சிதறிடாது. சுலபமாய் இந்த அலைபாய்ச்சல்களின் மத்தியில் நிதானமாய் செயல்படுவார்கள்.
தீவிரமான முற்போக்காளரிடம் எப்படி சாதிய நம்பிக்கை இருக்க முடியும்? தொழில்முறை கொலைகாரர்கள் வேறு சமயங்களில் எப்படி கருணை மிக்கவர்களாய் இருக்கிறார்கள்? ஊழலுக்கு எதிராய் அமைப்பு ஆரம்பித்து அதை கட்சியாக்கி தேர்தலில் வென்றதும் எப்படி அதே கட்சியால் ஊழலில் ஈடுபட முடிகிறது? அதுவும் தாம் அப்போதும் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று நம்பிக் கொண்டே? பஞ்சமி நிலங்களை மேற்சாதியினரிடம் இருந்து பாதுகாத்து தலித்துகளுக்கு அளிக்க போராட வேண்டிய தலித் கட்சியினரே பேரம் பேசி அவற்றை மேற்சாதி முதலாளிகளிடம் விற்பதாய் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இச்செயலில் ஈடுபடும் தலித் தலைவர்கள் இன்னொரு பக்கம் தலித் முன்னேற்றத்துக்கான பணியில் உண்மையாக ஈடுபட்டபடியும் தான் இருப்பார்கள். எப்படி அவர்களால் இருவெறான திசைகளில் ஒரேசமயம் பயணிக்க முடிகிறது? எப்படி பாதி ரட்சகர்களாகவும் பாதி சீரழிந்தவர்களாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள்?
நம் மூளை அமைப்பு அப்படி.
இப்படி நம்மிடம் உள்ள ”சுயமுரண்பாட்டு” மூளைகள் ஒன்றிணைந்து சங்கிலித் தொடராய் சமூகம் ஆகிறது. சமூக மூளையும் horinzontal தான். அதுவும் சம்மந்தா சம்மந்தம் இல்லாத நம்பிக்கைளையும் உணர்வுகளை ஒரே போல் ஏற்று சுமக்கிறது. சில நேரம் தனக்கு பாதகமானதை கொண்டாடுகிறது. சாதகமானதை பழிக்கிறது. கோடானுகோடி மூளைகள் இணைந்து ஒரு குருட்டுத்தனமான, பிரம்மாண்ட சுயமுரண்பாடு கொண்ட சமூக மூளை தோன்றுகிறது. ரொமீலா தாப்பர் கூறுவது போன்ற மிகப்பெரிய சமூக அச்சம் என்னும் சூறாவளி வீசும் போதும் பொதுமக்கள் அதை கவனித்து தம் கோபத்தை வெளிப்படுத்தியபடியே அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், சினிமா, குழந்தைப்பேறு, தேர்தல் வாக்குக்கான 5000, ஆமேசான் டிஸ்கவுண்ட், ஸ்மார்ட் போன் என வாழ்ந்து வருவது இதனால் தான். இதை சிலர் ஒரு சீரழிவு என பார்க்கலாம். ஆனால் நான் இதுவே இயல்பான இயற்கையான வாழ்க்கை என்கிறேன்.
சமூக மூளை குருட்டுத்தனமானது என்றால் அதை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அறிவுஜீவிக்கு இல்லையா? மக்கள் தமக்கு தோன்றினபடி சிந்தனை செய்தபடி இருப்பார்கள், அது சரியா? அது போதுமானதா? அவர்களை எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் சீர்படுத்த வேண்டாமா? எப்போதெல்லாம் அப்படி ஒரு தனிமனிதன் தன்னை மீட்பராய் அறிவித்து மக்களுக்கு திசைகாட்டவும் அவர்களை கட்டுப்படுத்தவும் விழைகிறானோ அப்போதெல்லாம் பேரழிவுகள் நேர்கின்றன. ரஷ்யாவில் ஸ்டாலினும் இந்தியாவில் சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி, மோடி போன்றோர் இந்த மீட்பர் வார்ப்பில் தோன்றினவர்கள் தாம். “நான் ஒரு தாய். என் பிள்ளைகளூக்கு என்ன கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியும்” என ஜெயலலிதா கூறும் போது நம் காதில் அது ஏன் ஒரு சர்வாதிகாரியின் குரலாய் ஒலிக்கிறது? ஏனென்றால் பிள்ளைகளுக்கு தம் தேவைகள் என்னவென தெரியாது, அவர்கள் அறிவில்லா அடிமைகள், முடிவெடுக்க உரிமையற்றவர்கள் எனும் ஒடுக்குமுறை பார்வை அதனுள் பொதிந்துள்ளது.
மக்களுக்கு ஆசான்களோ, வழிகாட்டியோ மீட்பர்களோ தேவையில்லை. எப்படி வாழ்வது என அவர்களுக்கு தெரியும். எழுத்தாளன் தன்னை அவர்களின் வழிகாட்டி எனும் நம்பத் துவங்கும் போது அவன் கோருவது கலாச்சார அதிகாரத்தை தான்.
ஒடுக்குமுறைக்கும் இனவிடுதலைக்கும் கருவியான, குறியீடான கர்த்தர்
சமூகம் தனக்கு ஒரு கட்டத்தில் தேவைப்படும் சிந்தனைகளையும், உணர்வுநிலைகளையும் தானே வடிவமைத்துக் கொள்கிறது. பிறகு அவற்றை வெளிப்படுத்த ஒரு கருவியை உருவாக்குகிறது. அது ஒரு எழுத்தாளனாகவோ சிந்தனையாளனாகவோ சினிமாக் கலைஞனாகவோ இருக்கலாம். ஏன் கர்த்தர் கூட அக்காலத்தைய யூத சமூகத்தின் சமூக, ஆன்மீக நெருக்கடியின் அழுத்தத்தின் விளைவாய் வெடித்தெழுந்த எரிமலைச்சீற்றமாய் இருக்கலாம். பிறகு அதே சமூகம் கர்த்தரை தம் தேவைக்கேற்றபடி இறைவனின் புத்திரனாய், பலி கொடுகப்பட்ட ஆடாய், மதக்குறியீடாய், தன் ரத்தம் கொண்டு உலகின் பாவங்களை கழுவியராய் கற்பித்துக் கொண்டது. கிறித்துவம் உள்ளூர் சிறுமதங்களை செரித்து ஒரு பெரும் இயக்கமாய் வளர்ந்தது. பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டு துவங்கி பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய தேசங்கள் உலகை வென்றடக்க கப்பல் படையும் வெடிமருந்துமாய் கிளம்பிய போது பழங்குடிகளை அடிமைகளாக்க அவர்களை பண்பாடற்ற மிருகங்களாய் சித்தரிக்க இதே கர்த்தர் தான் பயன்பட்டார். மிஷினரிகள் உலகம் முழுக்க பயணித்து பழங்குடிகளையும் மாற்று மதத்தினரையும் கர்த்தரின் பக்கம் “சீர்திருத்தி” அழைத்து வந்தனர். மதம் காலனியாதிகத்தின் கருவியான போது கர்த்தர் அதன் ஓங்கிப் பிடித்த வாள் ஆனார். கிறிஸ்டபர் கொலம்பஸ் போன்றோர் அமெரிக்க தீவுகளை ஆக்கிரமித்து பல்லாயிரம் கறுப்பர்களை கொன்றொழித்து அடிமைப்படுத்திய போது அதை கர்த்தரின் ஒளியை இருளின் பிரதேசத்துக்கு பரப்புவதற்காகவே என நம்பினார்.
 பின்னர் இதே கறுப்பர்களின் விடுதலைக்காய் மார்ட்டின் லூதர் கிங் எனும் பாதிரியார் கையில் எடுத்தது இதே கர்த்தரின் சிலுவையை தான். அவர் தம்மை காலனியாதிக்கம் செய்த அதே சிலுவையை கொண்ட வெள்ளையர்களின் மனசாட்சியை அசைத்து விடுதலையை வென்றெடுத்தார். இங்கு கர்த்தர் எனும் தனிமனிதரின் முகம் சமூகத்தின் அக்காலத்தைய வரலாற்று தேவைக்கேற்ப வடிவமைக்கப்படுகிறது.
கொலம்பஸும் லூதர் கிங்கும் எதிர்நிலையிலானவர்கள் என்றாலும் அவர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் இருவேறு சமூக பண்பாட்டு பொருளாதார அலைகளின் மீது மிதந்து மேலே உயர்ந்து வந்தவர்கள். அவர்களை இயக்கி முன்னுக்கு தள்ளிய பெரும் மக்கள் திரளின் இச்சையை, ஊக்கத்தை, நெருக்கடிகளை நாம் கவனிக்க தவறக் கூடாது. அவர்கள் இம்மக்களின் கருவிகள். அவர்களின் கையில் கர்த்தர் மற்றொரு கருவி. ஒரு காலத்தில் காலனிய பரவலாக்கமே முன்னேற்றத்தின் மார்க்கம் என கருதப்பட்டதால் சமூகம் கொலம்பஸை கர்த்தரின் வார்ப்பில் தன் ஒரு வாயைத் திறந்து வெளித்தள்ளியது. அடுத்த காலகட்டத்தில் ஜனநாயக உரிமைகளும் சமத்துவமும் பிரதானம் என நம்பப்பட்டதால் அதே கர்த்தரின் சிந்தனைகளுக்கு எழுச்சி வடிவம் கொடுத்து மார்ட்டின் லூதர் கிங்காக மற்றொரு வாயைத் திறந்து வெளித்தள்ளியது.
நமக்கு ஒருவர் வில்லனாகவும் மற்றவர் ஹீரோவாகவும் இருக்கலாம். ஆனால் காலத்துக்கு, வரலாற்றுக்கு, வரலாற்றை முன்னகர்த்தும் ஜனத்திரளுக்கு இருவரிடையிலும் வேறுபாடில்லை.
அப்படி என்றால் அறம்? சமூக நீதி? வரலாறு இவற்றை எல்லாம் பொருட்படுத்துகிறது என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படி என்றால் ஏன் இவ்வளவு லட்சம் மக்கள் காலனியாதிக்கத்தின் பெயரும் போர்களின் பெயரிலும் மடிந்தார்கள்? ஏன் இரண்டையும் தடுத்து நிறுத்தும் சிந்தனைகளை காலம் அப்போதே ஏற்படுத்தி அழிவுகளை தடுக்கவில்லை? ஏன் இரண்டிலும் மிகுந்த இச்சையுடன் ஈடுபட்ட மக்கள் பின்னர் அவற்றுக்கு எதிரான அதே ஊக்கத்துடன் செயல்பட்டார்கள்? (அமெரிக்க கறுப்பர் எழுச்சியில் வெள்ளையர்களின் பங்களிப்பும் கணிசமாய் இருந்தது)
நாம் சமூக மாற்றங்களை தனிமனிதன் சார்ந்ததாய் பார்க்க விரும்புகிறோம். ஒன்று அந்த தனிமனிதனை ஹீரோவாகவோ வில்லனாகவோ மாற்றுகிறோம். ஆரம்பத்தில் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் அவன் போர்வீரனாக தோன்றி, மதத்தலைவனாக இருந்து பின்னர் புத்தொளிக்கால, நவீன கால சமூகங்களில் லட்சியவாத எழுத்தாளனாய், ஜனநாயக போராளியாய் மாறி, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஸ்டீவ் ஜோப்ஸ், ரதன் டாட்டா போன்ற பெருமுதலாளியாய் உருவெடுக்கிறான். ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஏற்ப பல வடிவங்கள் அவனுக்கு. அவனால் தான் சமூக முன்னேற்றம் சாத்தியமாகிறது எனும் நம்பிக்கை அவனுக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அளிக்கிறது. இந்த பார்வை சமூகத்தின் ஒரு சிறுபான்மைத் தரப்பான அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், மத போதகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு அதிகார மணிமுடியை சூட்டும் நோக்கம் கொண்டது.
கிறித்துவம் – கம்யூனிசம் - இந்துத்துவா
 இடதுசாரிகள் மக்கள் எழுச்சியை அரசியல் மாற்றத்துக்கு தீர்வாக வைத்தாலும், அது ஒரு தனிமனிதனின் அறிவார்ந்த போதனையாலும் வழிநடத்தலாலுமே சாத்தியப்படும் என நம்புகிறார்கள். வேறெந்த அரசியல் அமைப்பையும் விட சித்தாந்த நூல்களுக்கும், வகுப்புகளுக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சி தான். முதலில் ஒரு தனிமனிதனை பயிற்றுவித்து அதன் மூலம் மேலும் பல தனிமனிதர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாய் மாற்ற வேண்டும் எனும் இந்த உத்தி அப்படியே கிறித்துவ மிஷினரி பயிற்சியில் இருந்து போல செய்யப்பட்டது. போதனை மூலம் ஒரு தலைவன் அல்லது போலிட் பியூரோவின் பல தலைவர்களை உருவாக்கி அவர்களின் தலைமையில் மக்கள் திரளை தேவராஜ்ஜியம் நோக்கி காப்பாற்றி அழைத்துப் போவது எனும் உருவகம் நமக்கு ஏனோ மீண்டும் கொலம்பஸை நினைவுபடுத்துகிறது.
இதில் விசித்திரமான விசயம் என்னவென்றால் இன்று இந்தியாவில் இடதுசாரிகளின் எதிர்தரப்பாய் தம்மை கருதிக் கொள்ளும் பா.ஜ.கவினர் இதே ஐரோப்பிய மிஷினரி வார்ப்பில் இருந்து தோன்றினவர்கள் தாம். அவர்களும் அதே காலனியாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் தாம். இடதுசாரிகளைப் போல் அவர்களும் வகுப்புகளும் பயிற்சி பட்டறைகளும் நடத்துகிறார்கள். ஒழுக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கருத்தியலை பரப்புவதன் மூலம் மனங்களை காலனியாதிக்கம் செய்ய முயல்கிறார்கள். இருசாராருமே மாற்றுக்கருத்தியலை கடுமையாய் வெறுக்கிறார்கள். தம் கருத்தியலை எதிர்க்கும் ”சாத்தான்களை” அழித்தொழிக்க விரும்புகிறார்கள். புத்தகங்கள், பத்திரிகைகள் எங்கும் தம் கருத்தியல் நிறைந்திருக்க வேண்டும் என ஏங்குகிறார்கள். (இந்த இயல்புகளை நாம் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளிடம் காண இயலாது. அதாவது மக்களிடம் இருந்து தன்னிச்சையாய் தோன்றின எந்த கட்சி அல்லது அமைப்பிலும் இந்த போக்குகள் இருக்காது.)
 இந்துத்துவர்களிடம் இடதுசாரிகளின் தத்துவப் பயிற்சி இல்லை. பதிலாக அவர்கள் கலாச்சார குறியீடுகளையும் மரபான விழுமியங்களையும் கொண்டு இந்தியாவை அகண்ட பாரத ”தேவராஜ்ஜியத்துக்கு” கூட்டிப் போக முயல்கிறார்கள். பிற கட்சிகள் பல்வேறு தலைவர்களுக்கு இடம் அளித்து விவாதத்துக்கும் சமரசத்துக்கும் இடம் அளிக்கையில் ”ஒரே தலைவன் ஒரே கொள்கை” எனும் பரப்புரையுடன் மோடியை முன்வைத்து ஆட்சியை வென்றார்கள். நீண்ட காலத்துக்கு பிறகு (நேருவுக்கு பிறகு) ஒரு தனிமனிதனின் வசீகரத்தை மீடியா மூலம் பலமடங்காய் பெருக்கி, அவரை ஒரு ”ரட்சகராக்கி” மக்களின் கற்பனையை வெல்லலாம் என பா.ஜ.க நிகழ்த்திக் காட்டியது. இது ஒரே தேவன், அவரே விடுதலையின் மார்க்கம் எனும் கருத்தின் காவி நிறமூட்டப்பட்ட வடிவமே.
 தனிமனிதனோ தனிக்கருத்தியலோ தேசத்தை காப்பாற்றுவான் / காப்பாற்றும் என பார்வையே இந்திய சமூகத்துக்கு புறம்பானது. பௌத்தத்தை எடுத்துக் கொள்வோம். அது இந்த மையவாதத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மனிதனுக்குமான விடுதலை மார்க்கம் தனித்துவமானது என அது கூறுகிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு புத்தன் தோன்றிக் கொண்டிருப்பான் என்கிறது. புத்தன் ஒருவன் அல்ல, அவன் பல பிறவிகளின் பொது முகம் என்கிறது. எல்லாவற்றையும் துவக்கம் முடிவற்றதாய் காணும் பௌத்தம் மனித மனத்தை கூட தனித்ததாய் காணவில்லை. எண்ணற்ற மனங்கள் ஒன்றாய் கலந்து இயங்குகின்றன. தனி மனம் என்பது பல மனங்கள் பேரலையாய் எழுந்து ஆர்ப்பரிக்கும் போது சிதறும் ஒரு துளிதான். ஆனால் அத்துளிக்கு தனித்து இயங்க இயலாது. பௌத்தத்தின் இந்த பார்வை தான் அசலான இந்திய பார்வை. மோடி எனும் பிம்பம், புரட்சிகர இடதுசாரி அறிவுஜீவி எனும் பிம்பம், இந்துத்துவா, மார்க்ஸியம் எல்லாமே ஐரோப்பிய இறக்குமதிகள் தாம்.
பிரிட்டிஷ் காலனிய அரசும் இந்து மகாசபையும்
 பிரிட்டீஷார் இந்தியாவை காலனியாதிக்கம் செய்த காலத்தில் தான் இந்து மதத்தை மையமிட்ட இந்தியா எனும் கருத்தை வெள்ளையர் உருவாக்குகிறார்கள். ஆங்கில கல்வி பெற்று ஐரோப்பிய தர்க்கம் மூலம் இந்தியாவை புரிந்து கொள்ள முயலும் ஒரு தரப்பாக அப்போது இந்து மகாசபையினர் தோன்றுகிறார்கள் அவர்கள் ஐரோப்பிய புத்தொளி இயக்கத்தின் தாக்கம் காரணமாய் தம்மை சமூகத்தின் மைய விசையாய் கற்பித்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து தோன்றும் கோட்சே சமூகத்தின் இரண்டு எதிர் மையங்களாய் தன்னையும் காந்தியையும் பார்க்கிறான். ஒரு மையப்புள்ளியை மற்றொரு மையப்புள்ளி அழித்தால் இந்து சமூகம் மேம்படும் என நம்புகிறான். அதை செயல்படுத்துகிறான். காந்தி கொல்லப்படுகிறார். ஆனால் அதனால் இந்துக்கள் தம் ”சுயமதிப்பை” உணர்ந்து புத்துணர்வு பெறவில்லை. மாறாக காந்தியின் மரணம் எண்ணற்ற இந்துக்களை ஆழமாய் காயப்படுத்துகிறது. நாடு முழுவதிலும் இருந்து இந்துக்கள் காந்தியின் உடலை தரிசிக்க பிரளயம் போல் திரளுகிறார்கள். தூக்கில் தொங்கும் கணத்தில் கூட கோட்சே தன்னால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளவில்லை.
மேற்சொன்ன ஐரோப்பிய பின்னணியின் காரணமாகவே இந்துத்துவர்களும் இடதுசாரிகளும் இந்திய பொது சமூகத்துக்கு அந்நியமாய் இருந்ததார்கள் சுதந்திரத்துக்கு பிறகு அரைநூற்றாண்டு காலமாய் அவர்கள் இந்திய சமூகத்தில் பரவலான பாய்ச்சலை நிகழ்த்த இயலாமல் உதிரிகளாகவே இருக்க நேர்ந்தது.
ஒரே குறிப்பிட்ட பார்வையை சமூகத்தில் தீவிரமாய் பரப்புவது, மக்களை கருத்தளவில் காலனியாதிக்கம் செய்வது, தனிமனிதர் நோக்கிய கருத்தியலை முன்வைப்பது, தனிமனிதன் நோக்கி அரசியல் அதிகாரத்தை குவிப்பது ஆகிய விசயங்களில் கம்யூனிஸ்டுகளும் பா.ஜ.கவினரும் கைகோர்க்கிறார்கள். கிறித்துவத்தின் சாத்தான்×கடவுள் எனும் முரணியக்க குறியீட்டில் இருந்து கடன்பெற்று, நவீன காலத்துக்கு ஏற்ப இந்து× இந்து அல்லாதவர் = இந்தியர் × தேசதுரோகிகள், தொழிலாளி × முதலாளி, முற்போக்கு × பிற்போக்கு என எதிரிடைகளை கட்டமைப்பதிலும் இரு கட்சியினரும் ஒரே உத்தியை கடைபிடிப்பதை காணலாம். முழுமையாக முரண்படும் சித்தாந்தம் கொண்டவர்கள் என்றாலும் இடதுசாரிகளும் இந்துத்துவர்களும் ஒரே கிறித்துவ வேரில் இருந்து கிளைபிரிந்தவர்களே!

பின்நவீனத்துவம் இந்த தனிமனித மையமிட்ட போக்குகளை நிராகரிக்கிறது. இந்த வகை சிந்தனைகளின் அதிகார இச்சையை தோலுரித்து காட்டுகிறது. ஆனால் ரொமீலா தாப்பரும் மோடி ஆதரவாளர்களும் போர்க்களத்தில் எதிர் எதிர் முகாம்களில் இருந்து கொண்டே ”தேவன் வருகிறார்” என ஒரே சமயம் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். 
நன்றி: உயிர்மை, ஜூன் 2016

1 comment:

poornam said...

இந்தக் கட்டுரை உங்களின் தலை சிறந்த கட்டுரைகளைப் பட்டியலிட்டால் முதலிடத்தில் இருக்கும். மிகுந்த சமநிலையுடனும் ஆழ்ந்த தர்க்கரீதியான கருத்துகளுடனும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தர்க்க ஒழுங்கும் நடையும் மெருகேறிக்கொண்டே இருக்கின்றன. எப்படிப் பாராட்ட என்று தெரியவில்லை. Simply, I love this post. Thank you.