Friday, July 1, 2016

அன்புள்ள ஜெயமோகனுக்கு

Image result for ஜெயமோகன்

நான் சமீபத்தில் ஜெயமோகனுக்கு எழுதிய மின்னஞ்சல்களின் தொடர்ச்சியான ஒரு கடிதம் இது. முதல் மின்னஞ்சலுக்கு அவர் எனக்கு அளித்த கனிவான பதிலை இதில் நான் இணைக்கவில்லை.
 நான் ஜெயமோகனிடம் முரண்பட்டிருக்கிறேன். விமர்சித்திருக்கிறேன். நிறைய கசப்பை கக்கியிருக்கிறேன். கடந்த சில வருடங்களாய் இவையெல்லாம் அபத்தம் என எனக்கு தோன்றியவாறு இருந்தது. என்னைக் குறித்து நான் நடத்திய உள்விசாரணை தான் இக்கடிதம். ஜெயமோகன் குறித்த என் இதுவரையிலான பதிவுகளுக்கு மற்றொரு பக்கத்தை இக்கடிதம் அளிக்கும் என நம்புகிறேன்.


அன்புள்ள ஜெயமோகன்
ஈரமான விழிகளுடன் இதை எழுதுகிறேன். எனக்கு உங்கள் மீது இருக்கும் மிதமிஞ்சிய பிரியமும் possessivenessஉம் தான் பிரச்சனை. என் ஆளுமை உங்களை சார்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பொருட்படுத்தவில்லை எனும் கற்பனை என்னை கட்டற்ற ஏமாற்றத்துக்கும் கசப்புக்கும் இட்டுச் சென்றது. உங்களை பழிசொல்லியும் விமர்சித்தும் மறுத்துமே நான் அதை கடக்க முயன்றேன். ஒரு சந்தர்பத்தில் விஷம் கக்கி கக்கி நானே ஓய்ந்து விட்டேன் என நினைக்கிறேன்.
 அது மட்டுமல்ல உங்கள் ஆளுமையின் கடும் வெளிச்சத்தின் அருகாமையில் கருகி விடுவேனோ என என் உள்மனம் அஞ்சியிருக்கலாம். உங்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகனின் மனதின் பகுதியாகவே நீங்கள் மாறி விடுவீர்கள். உங்களை மீறி அவனால் யோசிக்கவே முடியாது. எனக்குள் அந்த முரண் இருளோடு மோதும் சுடரைப் போல் துடித்துக் கொண்டே இருந்தது. என்னை உங்களிடம் இருந்து விலக்கிக் கொள்ள என்னை அறியாது நானே நடத்திய நாடகமோ இந்த தாக்குதல்கள் என நான் பலதடவை என்னிடம் கேட்டதுண்டு.
 உங்களிடம் முரண்பட்டு தான் நான் என் சுயமான பார்வையை அமைத்துக் கொள்ள முடியுமா? ஆனால் நான் இதை இன்னும் கண்ணியமாய் செய்திருக்க வேண்டும் அல்லவா!
போன வருடம் கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷ்ரினியிடம் போனில் உரையாடும் போது அவர் உங்களைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு நிமிடம் கடுங்கோபத்தில் தொடர்பை துண்டிப்பீர்கள். ஆனால் மறுநிமிடம் குழந்தை போல் இணக்கமாகி விடுவீர்கள் என்றார். அவர் உங்களிடம் மிக குறைவாகவே உரையாடி இருக்கிறார். ஆனால் உங்களை துல்லியமாய் அவதானித்திருக்கிறார். நான் ஒப்பிடுகையில் உங்களிடம் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். உங்களைக் குறித்து சதா யோசித்து அலசி இருக்கிறேன். ஆனால் உங்கள் ஆதார இயல்பை தவறாகவே புரிந்து வைத்திருந்தேன் என எனக்கு அப்போது தோன்றியது.
உங்களை மட்டுமல்ல நான் பொதுவாக மனிதர்களை புரிந்து கொண்டிருந்த விதமே தவறானது தான்.
சமீபத்தில் கவிஞர் குமரகுருபரன் மறைந்த போது அவரது மூர்க்கமான அன்பு பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனிதர்களை அப்படித் தான் அணுக வேண்டும் எனப் பட்டது. என் சிக்கல் நான் மனிதர்களை என் அறிவால் நேசிக்கிறேன் என்பது. நான் என்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றியது.
என் உடல் நிலை எப்போதும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்கள் அமைதியாய் இருக்கும். திடீரென பாதாளத்தில் போய் விழுவேன். இரண்டு முறை மரணத்தை அருகில் பார்த்து விட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆயுள் சராசரியாகவே குறைவு தான். இன்னும் பத்திருபது வருடங்கள். இந்த குறைந்த காலத்தில் இன்னும் மகிழ்ச்சியாக திறந்த அன்புடன் வாழ ஆசைப்படுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட ஒழுங்கு ஒரு பழக்கமாய் எனக்குள் மாற சற்று காலம் ஆகலாம். ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
எழுத்து குறித்து நீங்கள் சொன்னது உண்மையே. ஒருவேளை எழுத்து இல்லாமல் இருந்திருந்தால் நான் முழுக்க சீரழிந்திருப்பேன். எனக்குள் நொதிக்கும் தீமையை அது வடிகட்டி எனக்கே அருந்த தருகிறது. நான் எழுத வேண்டாம் என முடிவெடுத்த பின் நான் மிக அதிகமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னை தடுக்கவே முடியவில்லை. சிலநேரம் வண்டி ஓட்டும் போதோ காரில் நண்பர்களுடன் பயணிக்கும் போதே எழுத வேண்டிய சொற்களில் என்னில் இருந்து பீறி வழிகின்றன. கோர்வையாய் வரிகள் மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நான் கையாலாகாமல் அவற்றை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் மகனுக்கு 11 மாதங்கள் ஆகின்றன. ஊரில் இருந்திருந்தால் உங்கள் கைப்பற்றி அவனை அரிசியில் முதல் எழுத்து எழுத வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இவ்வளவு வருடங்களும் நடைமுறையில் வாழ்க்கையை வீணடித்து விட்டேனோ என தோன்றுகிறது. நான் திடீரென போய் விட்டால் என் மகனுக்கு ஒன்றுமே இராது. வெறும் புத்தகங்கள். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். எழுதப்பட்ட என் சொற்கள். அவனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு நிழலாக நான் எஞ்சி விடக் கூடாது. பொருள் சேர்க்க வேண்டும். நிலைப்பட வேண்டும். நான் மறையும் முன் அவனுக்கு ஒரு அடித்தளம் அமைத்து தர வேண்டும்.
இன்னும் தெளிவாய் திறந்த மனதுடன் மனிதர்களை அணுக வேண்டும். காரண காரியம் பார்க்காத அன்பை காட்ட வேண்டும். வேறுவிதமாய் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
உங்களுடைய நேரத்தை அதிகமாகவே எடுத்துக் கொண்டு விட்டேன். நன்றி.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


No comments: