Friday, June 24, 2016

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: வாசக சாலை விமர்சனக் கூட்டம்
நேற்று வாசக சாலை சார்பில் நடந்த எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கான விமர்சனக் கூட்டம் ஒரு எழுத்தாளனாய் எனக்கு மிகவும் நிறைவளித்தது. வேலை நாள் என்பதால் கூட்டம் சேருமா என எனக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம் இருந்தது. ஆனால் தான் போய் சேருமுன்னரே பதினைந்து பேர் அரங்கில் காத்திருந்ததாய் நிகழ்ச்சியின் அமைப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சொன்னார். சற்று நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது.

 முதலில் அருள் ஒரு ஆழமான செறிவான உரையை தந்தார். நாவலை ஐரோப்பிய நாவல் பரப்பில் வைத்து, அதன் பல அடுக்குகளை விளக்கினார். எப்படி இந்நாவல் துப்பறியும் வகைமையில் எழுதப்பட்டாலும் அது அவ்வகைமையை கடந்து இலக்கிய நாவலாய் உருவாகி உள்ளதை குறிப்பிட்டார்.
 அடுத்து பேசிய கவிஞர் மனுஷி முழுக்க வேறொரு பார்வையை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்து அளித்தார். எப்படி தொடர்ந்து பெண் உடல் இங்கு பலியாக்கப்படுகிறது என்பதையும், நாவலில் தன்னை கவர்ந்த கவித்துவமான இடங்களை சுட்டிக் காட்டி அபாரமாய் பேசினார்.
 அடுத்து பேசிய சரஸ்வதி காயத்ரியின் உரையில் இருந்து ஒரு வாசகரின் கண்ணோட்டத்தை என்னால் துல்லியமாய் அறிய முடிந்தது. சகஜமாய் நேர்மையாய் தன்னை அந்த நாவல் எப்படி பயமுறுத்தவும் தொந்தரவு படுத்தவும் செய்தது எனப் பேசினார்.
 இயக்குநர் ராம் இந்த நாவல் சரளமாகவும் படிக்கத்தக்கதாகவும் உள்ளதை குறிப்பிட்டார். பாலியல் குற்றங்களுக்கு பலியாகும் ஒரு பெண் குழந்தையின் மனம் எப்படியானது என இந்நாவல் கேட்கும் இடம் முக்கியம் என்றார். ஒரு குழந்தை பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே தன்னை வளர்ந்த ஒருவளாக கருதக் கூடும். இந்த கோணத்தில் இருந்து நாவலில் தமிழ்ச்செல்வன் பாத்திரம் வைக்கும் வாதமான, தான் பலாத்காரம் செய்ததாய் கூறப்படும் பெண் உண்மையில் தன்னை தூண்டி அந்த உறவுக்குள் ஈடுபடச் செய்தாள் எனும் கருத்து, நாவலுக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது என்றார்.
 இதை அடுத்து பேசிய எழுத்தாளர் விஜய மகேந்திரனும் நாவல் தனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்ததையும், பத்மராஜன் படங்களையும் நினைவுபடுத்தியதையும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. என் மீதுள்ள பிரியத்தால் அங்கு வந்த நண்பர் முரளி, கவிஞர் பிரியதர்ஷினி, பிரவீன், மொழிபெயர்ப்பாளர் ஆனந்த்ராஜ், கவிஞர் பா.சரவணன், நண்பர்கள் டேவிட் வெஸ்லி, ஜெய்தினேஷ் என பலரையும் குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும்.
 இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் தமிழில் என்றுமே ஒரு குடும்பமாகத் தான் இருந்து வருகிறோம். கூட்டங்கள் ஒரு குடும்ப சந்திப்புக்கான ஒரு சந்தர்ப்பமும் தான். அது அளிக்கும் மகிழ்ச்சியே தனி!

கூட்டத்தை ஏற்பாடு செய்த, அபாரமாய் ஒருங்கிணைத்த வாசகர் சாலையின் கார்த்திக் வெங்கட்ராமன், பார்த்திபன், ராஜராஜன் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.

No comments: