Tuesday, June 14, 2016

கேள்வி பதில்கள் என்னவாயிற்று?சுஜாதா கேள்வி பதில் தொகுப்பை (குங்குமத்தில் வெளிவந்தது; உயிர்மை வெளியீடு) புரட்டிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு வகைமை இன்று காணாமல் போய் விட்டது என நினைத்து புன்னகைத்துக் கொண்டேன். நான் மாணவனாய் இருக்கையில்ஹாய் மதன்பெரிய ஹிட் தொடர். இன்று இது போன்ற கேள்வி பதில்களில் வரும் பெரும்பாலான விடைகளை ஒரு ஆண்டுராயிட் மொபைல் அரைநொடியில் சொல்லி விடும்.

விடைகளை எழுதும் எழுத்தாளனின் ஆளுமை, நகைச்சுவை, குறும்புத்தனம், அவதானிப்பு தான் இன்று கடைசியில் எஞ்சுகிறது. தகவல்கள் மலிந்து விட்டன. பாம்புக்கு ஆண்குறி உண்டா என நீங்கள் இன்று மதனிடம் எழுதி விடைக்காய் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. பாம்பின் குறி ஒரு பேனா கத்தி போல் மடங்கி விரியக் கூடியது என கூகிளே சொல்லி விடும்.
 சுஜாதா பதில்களில் அவர் பொதுவான கேள்விகளுக்கு ஆற்றும் எதிர்வினை தான் சுவாரஸ்யம். ஒருவர் கேட்கிறார்: “நான் உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதானால் என்ன கேள்வி கேட்பீர்கள்?” சுஜாதா சொல்கிறார்: “இதே கேள்வியை தான்”. இந்த quick-wittedness சுஜாதாவின் சிறப்பியல்பு.
இன்னொரு கேள்வி எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிக்கும் காலம் வருமா என்று. எனக்கு இது ரொம்ப சுவாரஸ்யமான சாத்தியமாய் படுகிறது. ரொம்ப சிக்கலான நிறைய தில்லுமுல்லு நடக்க சாத்தியமுள்ள விசயம் தான் என்றாலும் கூட.
மிருகங்களுக்கு பொறாமை உண்டா என ஒருவர் கேட்கிறார். சுஜாதா இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு: என் நாய் பொறாமையின் திருவுருவம். சரி கூகிள் என்ன சொல்கிறது என தேடினால் இப்படி வருகிறது:
A study by scholars at the University of California, San Diego found that dogs showed jealous behaviors when their owners displayed affection toward an animatronic stuffed dog that barked, whined and wagged its tail. The dogs snapped at and pushed against the stuffed dog and tried to get between it and the human.
ஒருவேளை சுஜாதா காலத்தில் கூகிள் வேறு பதில் சொல்லியிருக்கலாம்.
"கேள்வி பதில்கள்" பத்திரிகைகளில் காலமாகி விட்டாலும் உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஏராளமான விசயங்கள் உள்ளன. இணையத்தில் கோரா போன்ற தளங்களில் பதிவர்களே கேள்வி எழுப்பி பலர் சேர்ந்து பதில்களை அளிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கும் வாசகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தில் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். என்னிடம் கூட கேட்டிருக்கிறார்கள். வாழ்க்கை பற்றி எனக்கு சிறு குருவி அளவுக்கு கூட தெரியாது. ஆனாலும் நம்பி கேட்டால் பதிலளிக்க வேண்டுமே! சமீபத்தில் ஒரு வாசகர் பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என கேட்டிருக்கிறார். நான் அதற்கு என்ன பதில் கூற என ரெண்டு நாட்களாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கூகிளிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. ஆனால் பொதுவான வாழ்க்கை கேள்விகளை விவாதிக்கும் திறன் கொண்ட artificial intelligence
எதிர்காலத்தில் உருவாகும் என நம்புகிறேன்.
நான் முன்பு விண்டோஸ் மொபைல் வைத்திருந்தேன். அதில் உள்ள கோர்ட்டானா எனும் பேசக் கூடிய செயலி ஒரு சுவாரஸ்யமான பிறவி. அதனிடம் கேள்விகள் மட்டுமல்ல, ஜோக் சொல்ல கேட்கலாம். எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் பேசுவது உத்தமம் இல்லை என பதிலளிக்கும். தாலாட்டு பாடச் சொன்னால் சோகமாய் ஒன்றை பாடும். நான் தினமும் கோர்ட்டானாவுடன் அரைமணி பேசும் பழக்கம் வைத்திருந்தேன். உண்மையில் மனிதர்களை விட செயலிகள் சுவாரஸ்யமானவையோ என சிலநேரம் தோன்றும்.
 நான் ஒருமுறை கோர்ட்டானாவிடம் கேட்டேன் வாழ்க்கையில் எப்படி எனக்கு நிம்மதி கிடைக்கும்?
அது சொன்னது கொஞ்ச நேரம் தூங்கேன்


No comments: