Wednesday, June 15, 2016

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது:

அன்புள்ள நண்பருக்கு
ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே சாத்தியமாகும். அப்போது அந்த உறவில் ஒரு சின்ன ஜொள்ளு, வழிதல், கலாட்டா, கேலி எல்லாம் இருக்கும்.
ஒரு பெண்ணை காதலிப்பது இன்னும் சுலபம். ஆனால் பெண்கள் ஏன் சில ஆண்களிடம் நட்பாகக் கூட பழக தயங்குகிறார்கள்? ஏன் நான் கயவன் எனும் நினைக்கும் ஒரு ஆணிடம் மனதை பறி கொடுக்கிறார்கள்? அது உண்மையில் ஒரு புரியாத புதிர். ஆனால் பெண்களுக்கு எப்படியான ஆண்களை பிடிக்கும் என்பதை மெலிதாய் கோடிட்டு இங்கு காட்ட முடியும்.
பெண்களுக்கு தம்மை சிரிக்க வைக்கும் ஆண்களைப் பிடிக்கும்
பெண்மை நுண்ணுணர்வு கொண்ட ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனை பாணியில் பெண்மை இருக்கும். மென்மையானவர்களாய், உணர்ச்சி பிழம்புகளாய் இருப்பார்கள். நெகிழ்வார்கள், கோபிப்பார்கள், கண்ணீர் சிந்துவார்கள், கெஞ்சுவார்கள், பெண்களிடம் பிரியமாய் இருக்கும் போதே அலட்சியமாய் புறக்கணிக்கவும் செய்வார்கள். இப்படியான ஆண்களுக்கு நிறைய தோழிகள் அல்லது ”பொழுதுபோக்கு” காதலிகள் இருப்பார்கள்.
ஆண்கள் தமக்குள் புறவயமான, தர்க்கரீதியான விசயங்களை பேசி பேசி ஒருவகையான முரட்டு மொழியை பழகி இருப்பார்கள். இப்படி பேசுகிறவர்களை கண்டாலே பெண்கள் தெறித்து ஓடுவார்கள்.
ஒரு ஆண் பெண்மை உளவியல் கொண்டிருந்தாலும் அவன் வெளியே கம்பீரமாய், உள்ளுக்குள் வலிமையானவனாய், அதிகாரம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அதாவது ஆணிடம் அதிகாரமும் வலிமையும் இருக்க வேண்டும், ஆனால் அவற்றை பெண்கள் இடத்து திணிக்காமல் நுட்பமாய் வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
இறுதியாய், பெண்கள் ஒன்று தாம் ஆதிக்கம் செலுத்தப்படுவதையோ அல்லது பிறரை ஆதிக்கம் செலுத்துவதையோ உள்ளூர விரும்புவார்கள். இதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட. அதனால் ஒரு வலுவான ஆண் தம் மீது அதிகாரம் செலுத்துவதை அவர்கள் ரசிப்பார்கள். அதே போல ஒரு வலுவான ஆணை தன் பெருவிரல் கீழ் கட்டுப்பாட்டில் தாம் வைத்திருப்பதையும் விரும்புவார்கள்.
இறுதியாய் சுருக்கமாய்: ஒரு பெண்ணின் மதிப்பை பெற ஒரு ஆண் அவளை விட அதிகாரமும் வலிமையும் கொண்டவனாய் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அலப்பறை பண்ணாமல் கண்ணியமாய் நடந்து கொள்ள வேண்டும். அவளிடம் தன் அத்தனை அதிகாரத்தையும் துறந்து மண்டியிடுவதாய் பாவிக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்கும். அதே போல் மனம் தழுதழுக்க அவர்களிடம் பேச வேண்டும்.
கிரிக்கெட்டில் ரன் அடிக்க ஆட்டநிலை (form) முக்கியம் என்பார்கள். பெண்களிடம் பிரபலமாய் இருக்கும் ஆண்கள் தினமும் ”நெட் பிராக்டீஸ்” செய்வார்கள். அவர்கள் தொடர்ந்து பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் formஇல் இருப்பார்கள். அனுபவம் மூலம் அதில் ஒரு நளினத்தை, flairஐ அடைந்திருப்பார்கள். பெண்களிடம் எளிதில் அணுக்கம் பாராட்டுகிறவர்களுக்கு ஆண் நண்பர்களை விட தோழிகளே அதிகம் இருப்பார்கள். இது அவர்கள் பெண்கள் விசயத்தில் out of touch ஆகாமல் இருக்க உதவுகிறது.
இதெல்லாம் நடைமுறை ஆண் பெண் உறவின் விதிமுறைகள். ஆனால் நடைமுறையை கடந்த காதல்களும் உண்டு. நான் மேற்சொன்ன எந்த திறனும் இல்லாமல் தான் வெற்றிகரமாய் காதலித்து மணம் புரிந்தேன்.
ஆண்களைப் போன்றே பெண்களிலும் ஆயிரம் வகைகள் உண்டு. ஒவ்வொருவரின் ரசனையும் வேறு வேறு. ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் கலாச்சார பின்னணி அவர்கள் ஆணை எதிர்கொள்ளும் முறையை தீர்மானிக்கக் கூடும். உதாரணமாய், தமிழ் நாட்டு பெண்களை விட கேரள பெண்களிடம் எளிதில் பழகவும் உறவாடவும் முடியும். அவர்கள் உறவு விசயத்தில் முற்போக்காய், ஒருவித துணிச்சல், துடுக்குத்தனத்துடன் இருப்பார்கள். இஸ்லாமிய பெண்களில் சிலர் பர்தா அணிந்து ஒடுங்கி வாழ்ந்தாலும் கூட அவர்களிடம் பிற மதத்து பெண்களை விட துணிச்சல் அதிகம் என்பதை கவனித்திருக்கிறேன். ஆக எல்லோரிடமும் செல்லுபடியாகும் ஒரு பார்முலா இல்லை. உங்களுக்கான பார்முலாவை உங்கள் அனுபவம் மூலம் நீங்களே கண்டுபிடிக்கலாம்.

ஒரு disclaimer: நான் மேலே குறிப்பிட்ட பொது குணநலன்கள், நியதிகள் எளிய புரிதலுக்கானவை மட்டுமே.

No comments: