”மூன்றாம் நதி”

Image result for மூன்றாம் நதி
நேற்று ”மூன்றாம் நதி” படித்தேன். நிறைய இடங்கள் சரளமாக சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு இந்த நாவல் நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை” போன்ற நாவல்களை ஏனோ நினைவுபடுத்தியது. அதே போல அழகிய பெரியவனின் ஒரு குறுநாவல் (தலைப்பு மறந்து விட்டது) நினைவு வந்தது. அந்நாவலில் ஒரு இளம் பெண் கிராமத்தில் இருந்து சென்னையில் ஒரு சேரியில் வசிப்பாள். கணவன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இறந்து விடுவான். பிறகு அவள் தன் கணவனின் முதலாளியான ஒரு அரசியல்வாதிக்கு இரையாவாள். பிறகு மெல்ல மெல்ல அவள் ஒரு விபச்சாரியாக்கப்படுவாள். ஒரு காட்சி பயங்கரமாக இருக்கும். அவளை ஒரு தெருவில் அரைமயக்கமாய் படுக்க வைத்து ஒருவன் வரிசையாக வாடிக்கையாளர்களை அழைத்து வந்து பணம் பண்ணுவான்.


ஒப்பிடுகையில் வா.மணிகண்டனின் நாவல் சற்று மென்மையானது.
எனக்கு அவர் பவானி பாத்திரத்தை நீர்மையின் உருவகமாய் பயன்படுத்தி இருந்தது பிடித்திருந்தது. பஞ்சம் பிழைக்க நகரம் தேடி வரும் அமாசையின் மகளான அவள் ஒரு தலைமுறையின் கனவின் உருவகம். நீர் இல்லாது தானே அவர்கள் கிராமத்து வாழ்வை துறக்கிறார்கள். பின்னர் நீரை விற்கும் வணிகப் போட்டியின் வன்முறையில் அவள் வாழ்வும் சிதைகிறது. ஒரு நதி நகரத்தில் வந்து கவனிப்பாரற்று சீரழிகிறது. அசுத்தமாகிறது. குறுகி வறண்டு போகிறது. பவானியின் முதலாளி பால்காரர் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளுக்கு நீர் போதாமல் போகும் போது போர் கிணறு தோண்டுகிறார். பூமிக்குள் நீரோட்டம் அவருக்காய் திறந்து கொள்கிறது. சுத்தமான இனிப்பான ஏராளமான தண்ணீர். அதை வைத்து அவர் ஏக்கர் கணக்காய் விவசாயம் செய்யலாமே என ஒருவர் கூறுகிறார். ஆனால் பால்காரர் தன் மனதுக்குள் நீரை எப்படி விற்பது என கணக்கு போடுகிறார். விவசாயம் ஒரு வியாபாரம் அல்ல. அது மண்ணுடனான உறவு. ஒரு வாழ்க்கை முறை. நகரத்தில் இந்த விழுமியங்களுக்கு மதிப்பில்லை. அங்கு எதுவும் விற்க வேண்டிய / வாங்க வேண்டிய ஒரு பண்டம் மட்டுமே. ஆனால் நகரத்தில் வந்து அந்த வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னை கரைத்த பின்னரும் பவானிக்கு தண்ணீருடன் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது. குழாய் கிணற்றில் முதன்முதலாய் நீர் பொங்கும் போது பால்காரர் உற்சாகமாய் அதை அள்ளி பவானியிடம் “பார் காவிரி தண்ணீர்” என்பார். அப்போது பவானி “இது காவிரி இல்லை” என்பாள். காவிரி என்றால் அது வேறொரு ஒரு இருப்பு. அது மக்கள் வாழ்வில் ஊடுருவும் ரத்த நாளம். அதை கூறு போட்டு விற்க முடியாது.
 அதே போல ஒரு இடத்தில் மரங்களை வெட்டி சாய்த்திருப்பார்கள். அங்கே ஒரு கிளையில் இருந்து சிதறிய கூடும் முட்டைகளும் கிடக்கும். அருகில் தத்திச் செல்லும் கொக்குக்குஞ்சை அவள் தூக்கிக் கொள்வாள். வீட்டுக்கு கொண்டு போய் வளர்க்கலாம் என நினைப்பாள். இந்த இடங்களை மிகவும் ரசித்தேன். அந்த நீரும் அந்த கொக்குக்குஞ்சும் அவளையும் அவள் அப்பாவையும் போன்ற மனிதர்களே!
அதே போல அவள் பத்து பாத்திரம் தேய்க்கும் வீட்டில் உள்ள கணவன் ஒருநாள் அவளை பார்க்கும் அலட்சியமான காமப் பார்வை, அது அவளுக்கு தரும் அருவருப்புணர்வு, அவள் பாத்திரம் தேய்த்து வீட்டை சுத்தம் பண்ணும் பொட்க்ஹு அவளை பொருட்டாகவே கருதாமல் வீட்டில் வசிக்கும் தம்பதியினர் தமக்குள் கொஞ்சுவது – நல்ல அவதானிப்புகள். எனக்கு அந்த நகரத் தம்பதியினரை ஒரு தனி டிராக்காக கொண்டு போயிருக்கலாம் என பட்டது. நாவலில் இன்னும் ஒரு ஐம்பது பக்கங்கள் எழுதியிருக்கலாம். குறிப்பாய் நகரத்தின் சிதைவுகள் பற்றி.
இறுதியில் பவானியின் கணவன் கருகி இறந்து போகிறான். அவன் பாதி கருகிய உடலை பார்க்கையில் அவளுக்கு இளமையில் கிராமத்தில் சுட்டுத் தின்ற சிட்டுக்குருவி நினைவு வரும். அந்த அபத்தம் நன்றாய் உள்ளது.
நாவலில் மிகச்சிறந்த காட்சி இரண்டாம் அத்தியாயத்தில் வருகிறது. பவானியின் அப்பாவான அமாசையும் அவர் முதலாளி சின்னச்சாமியும் கறவை மாட்டை விற்று விட்டு ஊருக்கு திரும்பும் இடத்தை அபாரமாய் சித்தரித்திருக்கிறார் மணிகண்டன். எனக்கு அது “பாஸ்கர பட்டேலருடன் எனது வாழ்வு” நாவல் நினைவு வந்தது.
அப்போது எனக்கு அமாசை தான் நாவலின் உண்மையான நாயகன் என தோன்றியது. அவன் பங்களூருக்கு வந்து சின்னசாமி போல் மற்றொருவருக்கு கீழ் துணிச்சலாய் செயல்பட்டு எப்படி ஒரு சீரழிவு வாழ்க்கைக்கு பயணிக்கிறான், ரெட்டி போன்றவர்கள் எப்படி நகரத்தை கூறு போட்டு விற்று முழுக்க அந்நியமாக மாற்றுகிறார்கள், அவருடன் எப்படி அமாசையும் வளர்கிறான், பிறகு எப்படி தன் பணம், அதிகாரத்தை இழந்து வீழ்கிறான் என ஒரு தனிமனித வீழ்ச்சியின் சித்திரத்தை நகரத்தின் வீழ்ச்சியுடன் இணைத்து காட்டியிருக்கலாம் என தோன்றியது. அப்போது நாவல் இன்னும் வலுவாக வந்திருக்கும். பவானியை பின்னணியில் வைத்திருக்கலாம். ஜெயமோகனின் “ரப்பர்” நாவலின் டெம்பிளேட் இது போன்ற படைப்புகளுக்கு கச்சிதமாய் பொருந்தக் கூடியது. சின்ன திருகல்களுடன் அதை இந்நாவலுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
ஆனால் இது வா.மணிகண்டனின் நாவல். அவன் தன் விருப்பப்படி, தீர்மானங்களின் படி இதை எழுதுவதே நியாயம்.
இந்த நாவல் நகரமயமாக்கலின் ஒரு வரலாற்று சித்திரத்தை அளிக்கும் நோக்கம் கொண்டது என ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பிற்பாடு அது பவானியின் அவல வாழ்வின் கதையாக சுருங்கி விட்டது. அதற்கு காரணம் அவளுக்கு அந்த வரலாற்றில் பங்கு இல்லை என்பதே. வரலாற்றுக்கும் தனிநபர் இழப்புக்கும் நடுவில் நாவல் மாட்டிக் கொண்டு விட்டது.
ஒட்டுமொத்தமாய் நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. அங்கங்கே சுஜாதா தென்படுகிறார். ஒருவேளை பங்களூர் பின்புலம் என்பதாலா வா.மணிகண்டனின் ஸ்டைலினாலா எனத் தெரியவில்லை. அடுத்த முறை பிடிவாதமாய் அவர் சுஜாதாவின் ஆவியை துரத்தி விட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
வாழ்த்துக்கள் மணிகண்டன்


Comments

அழகிய பெரியவனின் “தீட்டு”எனும் குறுநாவல் தான் அது.அந்த கதைக்களம் வேலூர் மாநகரையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது.தமிழக அரசின விருதை பெற்றது.
நல்ல விமர்சனம்! நன்றி!